நீ வந்து தங்கிய நெஞ்சில் 3.1

அத்தியாயம் 3

அந்த நிமிடமே அவனைத் தட்டி எழுப்பி, சம்பளப் பணத்தை என்ன செய்து வைத்திருக்கிறாய் என்று கேட்கும் கோபத்துடன்தான் வந்தாள். அடித்துப் போட்டது போன்று ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தவனைக் கண்டபோது எழுப்ப மனமில்லை.

போய் அவனருகில் அமர்ந்தாள். கேசத்தை ஒழுங்காகத் துடைக்காமலேயே உறங்கியிருந்தான். எப்போதுமே அப்படித்தான். மேலோட்டமாகத்தான் துடைப்பான். கைகளைக் கேசத்துக்குள் கொடுத்து உதறிவிட்டு, தலையையும் நான்கைந்து முறை சிலுப்பிக்கொண்டான் என்றால் சரி.

ஆசியரின் சொல் கேட்கும் மாணவர்கள் போன்று, அவனின் கருங்குழல்கள் ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் படிந்து நின்றுவிடும். அவனும் ஜெல்லை எடுத்துத் தடவிவிட்டு அப்படியே விட்டுவிடுவான்.

இதனாலேயே அடிக்கடி அவனுக்குச் சளி பிடித்துக்கொள்ளும். ஆனாலும் திருந்தியபாடில்லை. அன்னையோடு கதைத்துக்கொண்டிருந்ததில் அவளும் கவனிக்கவில்லை.

அவன் உறக்கம் கலையா வண்ணம் விரல்களை நுழைத்துக் கேசம் கோதினாள். நல்லவன். மிக மிக நல்லவன். அதுதான் இங்கே பிரச்சனையே. இந்த உலகில் நல்லவனாக இருப்பது வேறு. ஏமாளியாக இருப்பது வேறு.

இந்த நல்லவன் பண விசயத்தில் ஏமாளியாகவும் இருக்கிறானோ என்று அவளுக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது. அவன் தந்தை அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர். நல்ல சம்பளம். சொந்த வீடு வாசல் என்று அவள் வீட்டைப் போலவே மத்தியதரக் குடும்பம். அவனுக்கு ஒரு தங்கை இருக்கிறாள். இவளை விட ஒரு வயது குறைவு. இவளுக்கு 25. அவளுக்கு 24. அன்னை இல்லத்தரசி. இவன் சம்பளம் வந்துதான் அங்கே ஏதும் காரியமாகவேண்டும் என்று எதுவுமில்லை. அவன் தகப்பனும் அப்படிக் கேட்டு வாங்குகிறவரும் இல்லை.

இவன் மாதம் மாதம் கொடுக்கும் தொகை, தங்கை காவ்யாவின் திருமணத்திற்காகச் சேர்கிறது. பிறந்த நாள், திருமண நாள் என்று வீட்டில் யாருக்கு என்ன நல்லது வந்தாலும் நகையோ பொருளோ அவர்கள் விரும்பும் பெறுமதி மிக்க ஏதோ ஒன்றை வாங்கிக் கொடுப்பான். அதனாலேயே தான் பொறுப்பான மகன், அண்ணா என்கிற நினைப்பு அவனுக்கு.

உண்மைதான். பொறுப்பானவன்தான். ஆனால் அவன் வாங்குகிற சம்பளத்தோடும், செய்கிற வீண் செலவுகளோடும் ஒப்பிடுகையில் அவன் இன்னுமே பொறுப்பாக இருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றும்.

அவ்வப்போது பிடிவாதமாக நின்று அவள் கொடுத்தது தவிர்த்து, இன்றும் நேற்றும் அவர்கள் எல்லோரும் செய்த முழுச் செலவும் அவனதுதான். இந்த விடயத்தில் அவளுக்கு அவன் நண்பர்களைப் பிடிக்கவே பிடிக்காது.

அவன் செலவளிக்கத் தயங்குவதில்லை என்பதாலேயே அவர்களும் பேசாமல் இருந்துவிடுவார்கள். இவனும் ஒரு முறை நான் கொடுத்தால் அடுத்த முறை அவர்கள் கொடுக்கட்டும் என்று நினைக்க மாட்டான். கார்ட்டையோ பணத்தையோ முதல் ஆளாக நீட்டிவிடுவான்.

எத்தனையோ முறை அப்படி இருக்காதே என்று சொல்லியிருக்கிறாள். கேட்க வேண்டுமே. அது போதாது என்று அவ்வப்போது கைமாற்றாக வாங்குகிறவர்கள் திருப்பிக் கொடுப்பதில்லை.

எப்படிக் கேட்பது, இருந்தால் தருவார்கள்தானே என்று இவனும் அசட்டையாக இருந்துவிடுவான். ஒருமுறை இது குறித்து இருவரும் பேசி, நீ என்ன ஏமாளியா என்று அவள் கோபத்தில் கேட்டு, அவர்களுக்குள் பெரும் சண்டை ஒன்றே வந்து போயிருக்கிறது.

கிளிநொச்சியில் இருக்கிறவரை அவள் ஒரு வீட்டுப்புறா. இங்கே வந்து, அவனோடு சேர்ந்து இடங்களைச் சுற்றி பார்க்க ஆரம்பித்த பிறகுதான், இப்படி ஒரு உலகமும் உண்டு என்று அவளுக்குத் தெரிய வந்ததே.

விதம் விதமான உணவுகளை ருசித்துப் பார்ப்பது, டேட்டிங் போகிறோம் என்று சொல்லிக்கொண்டு கஃபே அருந்தப் போவது, நெடுஞ்சாலையில் நல்ல வேகத்தில் பயணிப்பது, நடுக்கடலில் மீன் பிடித்து நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது, பஸ் ரெஸ்டொரண்டில் பயணிப்பது, கண்டி நுவரெலியா போன்ற மலை உச்சிகளில் கேம்பிங் போவது என்று அவன் காட்டித் தந்த உலகம் மிகுந்த அழகானது.

உணவில் இத்தனை ரகங்கள் உண்டு என்று அறிந்துகொண்டதும் அவனால்தான். வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறோம் என்கிற உணர்வைத் தந்தவனும் அவன்தான். அதனாலேயே அவனிடம் அவளால் ஒரு அளவு தாண்டிக் கோபிக்க முடிவதில்லை. கூடவே அவன் நல்ல மனதிற்குக் கெட்டதாக எதுவும் நடக்காது என்று ஒரு நம்பிக்கை.

அவனோடு சுற்றிய இடங்களை வாகனம் பிடித்துத் தன் குடும்பத்தினரை அழைத்து வந்து காட்டியிருக்கிறாள். அவளின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

இதே இலங்கை நாட்டில்தான் பிறந்து வளர்ந்தார்கள். அத்தனை வருடங்களாக அவர்கள் வாழ்ந்ததும் அங்கேதான். கோயில் குளங்களுக்கு என்று போய் வந்திருந்தாலும் இப்படி எல்லாம் வந்து பார்த்ததில்லை என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு அவள் மகிழ்ந்திருக்கிறாள்.

அப்படியானவனின் முகத்தைப் பார்க்க பார்க்க நேசம் பெருகிற்று. அவனோ நல்ல உறக்கத்தில் இருந்தான்.
இப்படி அவன் அவள் வீட்டுக்கு வருவதும், சில நேரங்களில் இங்கேயே தங்கிவிட்டுப் போவதும் நடப்பதுதான். என்றாலும் எல்லை தாண்டியதில்லை.

அவனும் அணைப்பு, முத்தங்கள் என்பதைத் தாண்டி அத்து மீறுகிறவன் இல்லை. அதனாலேயே ஆரம்ப நாள்களில் அவன் வந்து போவது மெல்லிய படபடப்பைத் தந்திருந்தாலும் பிறகு பிறகு அவளும் இதைப் பழகிக்கொண்டிருந்தாள்.

அவன் குடும்பத்தினரையும் அவளுக்குத் தெரியும். அவன் அப்பாவிற்கு 60 வயது பூர்த்தியானதை ஒட்டி, அவனுடைய அன்னை தந்தைக்கு மணிவிழா செய்திருந்தார்கள். அதற்கு இவர்கள் எல்லோரும் போய் வந்திருந்தார்கள். அதைவிட ஊர் சுற்றுகிற புகைப்படங்களை அவன் இன்ஸ்டாவில் ஏற்றுவதாலும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும்.

நிறைய நேரமாக அமர்ந்தே இருந்தவளுக்கு அந்தத் தனிமை அலுப்பைத் தந்தது. அவனை எழுப்பவும் மனமில்லை. தலை வைத்துப் படுத்திருந்த தலையணையைக் கட்டிக்கொண்டு, ஒற்றைக் காலை மடித்து வைத்துக்கொண்டு, குப்புறக் கிடந்து ஆழ்ந்து உறங்குகிறவனின் வயிற்றுப் பகுதி மீது தலையணையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு படுத்தாள்.

அவன் கட்டிலில் நேராகப் படுத்திருக்க, அவன் வயிற்றில் தலை வைத்து, கால்களைக் குறுக்கிக்கொண்டு இவள் குறுக்கே கிடந்தாள்.

இதுவரையில் நிரோஜனிடம் கூட அவள் கை மாற்றாகப் பணம் பெற்றதில்லை. இப்போது அவனிடமும் இல்லை என்கையில் அஜந்தாவிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்றிற்று.
கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைத்தாள். அவள் உடனேயே எவ்வளவு வேண்டும் என்று கேட்டு, அப்போதே அனுப்பிவிட்டாள். பணப்பிரச்சனை தீர்ந்துபோனதில் மனம் இலகுவாகிற்று. கொஞ்ச நேரம் அவளுடன் வீட்டில் நடந்தவற்றைப் பற்றிப் பகிர்ந்துகொண்டாள்.

“இதத்தான்டி தாயும் பிள்ளையுமா இருந்தாலும் வாயும் வயிறும் வேற வேற எண்டு சொல்லுறது போல. ஆனா யமி நீ கொஞ்சம் கவனமா இருக்கப் பார். இது அங்கிளின்ர விசயம். அவர் உன்ர அப்பா. எமோஷனலா யோசிச்சு, முழுச் செலவையும் நானே பாக்கிறன் எண்டு நீ சொன்னதில ஒரு குறையும் இல்ல. அது உன்ர கடமையும்தான். ஆனா, இதையே ஒரு பிடியா வச்சு, உன்ர அக்கா இனி வாற எல்லா செலவையும் உன்ர தலைலயையே போடப் பாப்பா. நீயும் இப்ப மாதிரியே ரோசப்பட்டு நானே எல்லாத்தையும் பாக்கிறன் எண்டு வெளிக்கிடாத.” என்று அவள் சொன்னபோது, தான் அப்படியான ஒருத்திதான் என்று அவளுக்கே தோன்றிற்று.

“இனி உனக்கு அங்கிளும் இல்ல. என்ன நடந்தாலும் அன்ட்ரி உன்ர அக்காவோட சமாளிச்சு இருக்கத்தான் நினைப்பா. பேரனை விட்டுட்டு வர மனம் வராது. அவே மனுசன் மனுசி ரெண்டு பேரும் வேலைக்கு போற ஆக்கள், அவேக்குத் தன்ர துணை வேணும் எண்டுதான் யோசிப்பா. சோ உனக்கு நீ மட்டும்தான் இருக்கிறாய். நிரோஜனைப் பற்றிக் கதைக்கேக்க அடிக்கடி சொல்லுவியே ஏமாளியா இருக்கிறார் எண்டு. அப்பிடி நீ இருந்திடாத.” என்று சொல்லிவிட்டு வைத்தாள் அவள்.

அஜந்தாவோடு பேசியது நிறையத் தெளிவை அவளுக்குத் தந்திருந்தது. இனி அப்பா இல்லை என்பது திரும்பவும் பெரும் இழப்பாய் அவளுக்குள் இறங்கிற்று. அன்னையையும் அவள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அவளையும் அவள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவளின் அத்தான் ஆதவன் நல்ல மனிதன். என்ன, மாதங்கியின் இந்தக் குணங்கள் அவனுக்குத் தெரிந்திருக்கும் என்று அவள் நினைக்கவில்லை. மாதங்கியும் கணவன்வரை இதையெல்லாம் கொண்டு போகவும் மாட்டாள். ஒரு வகையான கெட்டித்தனம் அவளிடம் எப்போதுமே இருக்கும்.

error: Alert: Content selection is disabled!!