நீ வந்து தங்கிய நெஞ்சில் 3.2

என்றாலும் அவளுக்கு அவள் மட்டும்தான் இருக்கிறாள் என்பது பாரமாய் நெஞ்சுக்குள் இறங்குகையிலேயே இல்லையே, அவளின் நிரோ இருக்கிறானே என்று ஓடிற்று அவளுக்கு.

திரும்பி அவனைப் பார்த்தாள். இன்னுமே நல்ல உறக்கத்தில் இருந்தான். இவன் போதுமே அவளுக்கு. நெஞ்சம் நெகிழ்ந்துவிட கையை நீட்டி, திரும்பவும் அவன் கேசம் கோதினாள்.

அதனாலோ என்னவோ இலேசாகப் புரண்டு மல்லாந்து படுத்தான் அவன். அப்படி அவன் படுக்கிற வரை தலையைத் தூக்கி வைத்திருந்தவள், திரும்பவும் தனக்கு ஏற்றாற்போல் அவன் மீது தலையைணையைப் போட்டுக்கொண்டு படுத்தாள்.

இப்போது அவன் முகம் நன்றாகத் தெரிந்தது. அவனையே பார்த்தபடி தானும் உறங்க முயன்றாள். உறக்கம் வரவேண்டுமே. கண்களை மூடினாலே தந்தையின் இழப்பும், அன்னை பேசியவைகளும், தமக்கையின் குணமும் வந்து நின்று அவளை அலைக்கழித்தன. அவன் பக்கத்தில் இருந்தும் இப்படித் தான் தனக்குள்ளேயே அல்லாடுவது பிடிக்கவில்லை.

அவன் மீதே உருண்டுபோய், அவன் மார்பின் மீது தலை வைத்துப் படுத்தாள். அதில் உறக்கம் கலைந்து விழித்துப் பார்த்தான் நிரோஜன். அவள் படுத்திருக்கும் விதம் கண்டு அவனுக்கு ஆச்சரியமாயிற்று. தலையைத் தூக்கி அவளை நன்றாகப் பார்த்தான். அவள் குறுக்காகப் படுத்திருக்கவும் அவளை இழுத்துத் தன்னிடம் கொண்டுவந்துவிட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.

“உடம்பெல்லாம் அலுப்பா இருக்கு.” அவன் முகம் பார்த்து மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

“படுத்து எழும்பு. நாளைக்கு மாறிடும்.” உறக்கம் கலையாக் குரலில் சொன்னான் அவன்.

“அதுக்கு நித்திரை வரோணுமே.”

“கண்ணை மூடு. வரும்.” அவள் இடுப்பின் மீது கையைப் போட்டுக்கொண்டு சொன்னான்.

அவளும் முயன்று பார்த்தாள். முடிய வேண்டுமே. அவன் மட்டும் அப்படி உறங்குவது கடுப்பை உண்டாக்கிற்று. அடர்ந்த மீசை, இரண்டு நாட்களாக வழிக்காத தாடி, உறக்கம் சுமந்த கவர்ச்சியான முகம் என்று கண்ணையும் மனத்தையும் கவர்ந்தான் அவன்.

அவனோடு விளையாடிப் பார்க்கும் ஆசை எழுந்ததில் அவன் புறம் திரும்பி, பற்கள் பதிகிற அளவுக்குக் கன்னத்தில் நன்றாகக் கடித்தாள்.

“ஆ!” என்று அலறியபடி விழித்தவனுக்கு என்ன நடந்தது என்று புரிந்துகொள்வதற்கே சில நொடிகள் பிடித்தன. கன்னத்துத் தசைகள் வேறு வலியிலும் அவள் பற்கள் பட்ட கடுப்பிலும் துடித்தன. “உயிர் போகுதடி விசரி!” என்றான் கன்னத்தை அழுத்தித் தேய்த்துவிட்டபடி.

“நல்லா போகட்டும். காதலி பக்கத்தில இருக்கிறாள். எந்த மொக்கனாவது(மக்கு) நித்திர கொல்லுவானா?” என்று கடுகடுத்தாள் அவள்.

“வேற என்ன செய்யோணு உனக்கு?”

“வெளில கூட்டிக்கொண்டு போகோணும். சாப்பாடு வாங்கித் தரோணும். படத்துக்குப் போகலாம். இந்த இரவு நேரம் பீச் நல்ல வடிவா இருக்கும். அங்க போகலாம். இப்பிடி எத்தின இருக்கு…” என்று அவள் அடுக்கிக்கொண்டு போனாள்.

“இது எல்லாத்தையு விட சிறப்பான பல காரியங்கள் செய்யலாம்.” என்றவன் அவளை வளைத்துப் பிடித்துக் கண்டபாட்டுக்கு கடித்து வைத்தான்.

சத்தியமாக இப்படி ஒரு தாக்குதலை அவள் எதிர்பார்க்கவில்லை. முகத்தில்தான் அத்தனை கடிகளும் விழுந்தன. ஆனால், தப்பித்துப் போக விடாமல் அவளை அவன் வளைத்துப் பிடித்ததில் உண்டான நெருக்கத்தில் அவளுக்குப் பதறிப்போயிற்று.

விழுந்தடித்துக்கொண்டு அவனிடமிருந்து தப்பித்து ஓடியவளுக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது.

ஒற்றைத் தலையணையில் கூட அவர்கள் ஒன்றாகப் படுத்ததுண்டு. தோள்கள் உரசினாலும் மெல்லிய கோடாக ஒரு இடைவெளி இருக்கும். ஆனால் இன்று? மேலே யோசிக்கக் கூட முடியாமல் தொண்டையெல்லாம் உலர்ந்துபோயிற்று.

சோபாவில் அமர்ந்திருந்தவளின் பக்கத்தில் வந்து அவனும் அமர்ந்தான். அவள் திரும்பாமல் இருக்கவும் தோளால் இடித்தான்.

“ஏய் ஜும்க்கா!”

“யம்மு”

“யமி”

“அடியேய் நான் கட்டப்போறவளே!” என்றவனைத் திரும்பிப் பார்த்து, “இன்னும் எத்தின பெயர் வைக்கப்போறீங்க?” என்று கோபப்பட்டாள்.

ஆனால், அவள் மனத்தின் படபடப்பு அவள் கன்னத்தின் சிவப்பிலும் பார்வையில் இருந்த பதற்றத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

காரணம் தெரியாமல் இல்லையே. விளையாட்டாகத்தான் செய்தான். என்றாலும்… அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்தான் நிரோஜன். அதற்கும் அவளுக்கு நடுங்கிற்று. அவன் முகம் பார்க்க முடியவில்லை. பார்வை அவள் மீதே இருக்க, பற்றியிருந்த கரத்தை எடுத்து உதடுகளைப் பதித்தான் அவன்.

“நிரோ ப்ளீஸ்!” உணர்வுகளின் தத்தளிப்பில் அவள் குரலில் மெல்லிய நடுக்கம்.

“வெளில போவமா?”

“இல்ல. நீங்க போய்ப் படுங்க.”

அவள் முகம் பற்றித் தன்னைப் பார்க்க வைத்து, “என்னில நம்பிக்கை இல்லையா?” என்றான் அவன்.

“நிரோ” தவிப்புடன் அவன் பெயரைச் சொன்னாள்.

“நீயும் வா!” என்று அழைத்துப்போனான்.

அவளைத் தன் மார்பில் தாங்கித் தலையை வருடிக்கொடுத்தான். வேறு பேச்சில்லை. அவனின் அந்தப் பண்பு அவள் உள்ளத்தைத் தொட்டது. என்னவோ அவனை இன்னுமின்னும் பிடிக்கும் உணர்வு. தலையைத் தூக்கி அவன் முகம் பார்த்தாள். அவனும் அவளை பார்க்க, அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டுக் கண்களை மூடிக்கொண்டாள்.

*****

இரண்டு நாள்களில் அந்தியேட்டி வர இருந்ததில் கிளிநொச்சிக்குப் புறப்பட்டாள் யாமினி. காலையிலேயே வந்து புகையிரத நிலையத்துக்கு அழைத்துப்போனான் நிரோஜன்.

“காசு இருக்கா? இல்ல அனுப்பிவிடவா?” புகையிரதத்தில் ஒரு இடம் பார்த்து அவள் அமர்ந்ததும் வினவினான்.

அன்று கேட்க நினைத்துக் கேட்காமல் விட்ட அந்தக் கேள்வியை அதன் பிறகு யாமினி அவனிடம் கேட்கவில்லை. ஏற்கனவே சரியில்லாத மனநிலையோடுதான் இருந்தாள். அப்படியிருக்க இன்னொரு பிரச்சனை இப்போதைக்கு வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.

இப்போது அவனாகவே அந்தப் பேச்சை எடுக்கவும், “எனக்குத் தாறதுக்கு உங்களிட்ட இருக்கா?” என்றாள் அவனை நேராகப் பார்த்து.

ஒரு கணம் அவளையே பார்த்துவிட்டு, “இந்த மாதம் பெரிய சிலவு ஒண்டும் எனக்கு வரேல்லையே.” என்று மழுப்பலாகப் பதில் சொன்னான் அவன்.

“ஓ! அப்ப உங்களிட்ட இருக்கு?”

“ப்ச் யமி! உனக்கு வேணும் எண்டா சொல்லு, அனுப்பி வைக்கிறன்.”

“நான் அஜந்தாட்ட வாங்கிட்டன்.”

“அவாட்ட என்னத்துக்கு… நான் இருக்கேக்க உன்னை ஆர் அவாட்ட வாங்கச் சொன்னது?” என்று கோபப்பட்டான் அவன்.

“உங்களிட்ட இல்ல. அதாலதான் அவளிட்ட வாங்கினனான்.” அவளும் பட்டென்று சொன்னாள்.

அது எப்படித் தெரிந்திருக்கும் என்று ஊகிக்க முடிந்ததில், “கடனாத்தானே குடுத்தனான். உனக்கு வேணும் எண்டு சொல்லியிருந்தா கேட்டு வாங்கித் தந்திருப்பன்.” என்று சொன்னான் அவன்.

அவனைக் கண்டிப்புடன் பார்த்தாள் அவள். “கடன் வாங்கினா அவேயா திருப்பித் தரோணும் நிரோ. நீங்க கேக்கிற வரைக்கும் வச்சுக்கொண்டு இருக்கக் கூடாது.”

“ப்ச்! நீ முதல் அஜந்தான்ர காசைத் திருப்பி அனுப்பு.”

“நீங்க முதல் எனக்கு அனுப்புங்க. அதுக்குப் பிறகு அவளின்ரய நான் குடுக்கிறன்.”

இதற்குள் அவளின் புகையிரதம் புறப்பட ஆயத்தமாயிற்று. இருவர் மனத்திலும் மற்றவர் மீது மெல்லிய மனத்தாங்கல். ஆனாலும் அதைத் தமக்குள்ளேயே வைத்துக்கொண்டு விடைபெற்றுக்கொண்டனர்.

அடுத்த நாளே அவன் அவளுக்குப் பணம் போட்டிருந்தான். கொடுத்த நண்பனிடம் இருந்து வாங்கிப் போடவில்லை. வீட்டுக்கு என்று கொடுத்த பணத்திலிருந்து எடுத்துப் போட்டிருந்தான்.

error: Alert: Content selection is disabled!!