அவள் முகத்தில் பலவித உணர்வுகளின் கலவைகள். அது கோபமா, ஆத்திரமா, வேதனையா, வலியா, அல்லது இயலாமையா.. அல்லது எல்லாமா.. அவள் மனம் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
அவள் எதுவும் சொல்வாளோ என்று அவன் பார்க்க, அவளோ அவனைத் திரும்பியும் பாராமல் நின்றாள்.
ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “ஒருமாத லீவில் தான் போனேன். ஆனால், உன்னை மறக்கமுடியாமல், மறந்துதான் ஆகவேண்டும் என்கிற பிடிவாதத்தில் மூன்று மாதங்கள் அங்கேயே சுற்றினேன். என் முடிவில் நானே உறுதியாக நிற்க வேண்டாமா என்கிற பிடிவாதம் ஒருபுறம். ஆனால் எவ்வளவு முயன்றும் என்னால் உன்னை மறக்க முடியவே இல்லை. உன்னை மறக்கவேண்டும் என்று நினைத்து நான் செய்த அத்தனை காரியங்களிலும் நீதான் இருந்தாய். எந்தளவுக்கு என்னில் நீ இரண்டறக் கலந்துவிட்டாய் என்பதை நானே உணர்ந்துகொண்ட நாட்கள் அவை.” என்றவனின் விழிகள், ஆசையோடு அவளைத் தழுவியது.
அவன் உயிரில் உறைந்துவிட்டவளை, நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டவனின் கண்கள் அவளைக் களவாடியது.
அதை உணராமல், அசையாமல், கல்லாக சமைந்து நின்றாள் சனா. அவளை மறக்க முயன்றானே என்று எண்ணித் துயர் கொள்வாளா? அல்லது அதில் தோற்றுவிட்டான் என்று எண்ணி ஆனந்தம் கொள்வாளா? இனம் காணமுடியா உணர்வுகளின் தாக்கங்கள் அவள் மனதில்!
அவனுடைய தன்னிலை விளக்கம் தொடர்ந்தது.
“எதிலும் உறுதியாக நிற்பவன் நான். முதன்முதலாக என்னைத் தடுமாற வைத்தவள் நீதான். எனக்கே என்னைப் பிடிக்காமல் போனது. மறுபடியும் உன்னிடமே வந்து உன்னை என்னவளாக்கிக் கொள்ள வேண்டும் என்று உள் மனம் துடித்துக்கொண்டே இருந்தது. என் மனதோடு நான் போராடிக்கொண்டு இருந்தபோதுதான், ஒரு சம்பவம் என் கண்ணில் பட்டது. அன்றுதான் எனக்குப் பெரும் கண்திறப்பு என்று கூடச் சொல்லலாம்…” என்றான்.
அப்படி என்ன பெரிய கண்திறப்பு என்கிற கேள்வியோடு அவள் அவனை விழியுயர்த்திப் பார்க்க, அவன் முகத்தில் சின்னப் புன்னகை ஒன்று தோன்றியது.
அதில் அவள் மனம் பலகீனப் படுவதை உணர்ந்தவள், வேகமாகத் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். எவ்வளவு பட்டும் இந்த பாழாப் போன மனது அவனிடமே மயங்குகிறதே!
“அங்கே எப்போதும் உன் நினைவாக இருந்தது. பாட்டி வேறு, எப்போது ஜெர்மனி போகலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தார். வீட்டில் இருக்க முடியாமல், வெளியேறி, கண்ணில் பட்ட ஒரு பூங்காவுக்குள் புகுந்துகொண்டேன். அங்கே நம்மைப் போலவே ஒரு அழகான ஜோடி…” என்று சொல்லிக்கொண்டு இருந்தவன், அவள் முறைப்பதை உணர்ந்து புரியாமல், “என்ன..?” என்று கேட்டான்.
ஜோடியாக இருந்த நம்மை நீயே பிரித்துவிட்டு பிறகென்ன நம்மைப்போல என்கிறாய் என்று கேட்கத் துடித்த நாவை அடக்கி, “ஒன்றுமில்லை. உங்கள் கதையைச் சொல்லுங்கள்..” என்றாள் சனா.
“அவர்களிடமிருந்து என்னால் கண்ணை எடுக்கவே முடியவில்லை. பார்ப்பது தவறு என்று தெரிந்தாலும்.. அவ்வளவு அழகாக இருந்தது அவர்களைப் பார்க்க. என் கண்தான் பட்டதோ தெரியவில்லை. கொஞ்சத் தூரத்தில் இரண்டு பெண்கள் வந்துகொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் அந்த ஆணுக்கு தெரிந்தவள் போல. அவள் இவனைப் பார்த்துச் சிரித்தாள். இவனும் சிரித்து, தலையை ஆட்டினான். அவ்வளவுதான் நடந்தது. அதுவரை அவன் கையோடு கை கோர்த்தபடி நின்ற அவன் காதலி, கையைப் பறித்துக்கொண்டு சென்றுவிட்டாள்.” என்றவனுக்கு, அதை நினைத்துச் சின்னப் புன்முறுவல் பூத்தது.
“எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது சனா. தெரிந்த பெண்ணைப் பார்த்துச் சிரிப்பதில் என்ன இருக்கிறது? அதற்கே அந்தப் பெண் அப்படி முறுக்கிக் கொண்டாள். அவன் எவ்வளவு கெஞ்சியும் கதைக்கவில்லை. சைக்கிளை எடுத்துக்கொண்டு போய்விட்டாள். ஏதோ ஒரு நம்பிக்கையில் அடுத்த நாளும் அங்கு போனேன். நான் எதிர்பார்த்தது போலவே வந்திருந்தார்கள். அன்றும் அவன் கெஞ்ச, ‘நான் இருக்கும் போதே இன்னொரு பெண்ணைப் பார்த்து நீங்கள் எப்படிச் சிரிக்கலாம். நீங்கள் எனக்கு மட்டும்தான். என்னைப் பார்த்து மட்டும்தான் சிரிக்க வேண்டும்.’ என்று அந்தப் பெண் அவனை ஒரு வாங்கு வாங்கிவிட்டாள். அவனும் காலில் விழாத குறையாகக் கெஞ்சி சமாதானப் படுத்தினான். முதலில் இதென்னடா கொடுமை என்று எனக்குச் சிரிப்பாக இருந்தது.” என்றவனின் முகத்தில், அந்தச் சிரிப்பு இப்போதும் ஒட்டியிருந்தது.
“நடந்ததை பாட்டியிடம் சொன்னபோதுதான், அவர்கள் சொன்னார்கள். நம் பெண்கள் எதையும் விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் காதலன் அல்லது கணவன் மேல் காட்டும் அன்பில் மட்டும் அவர்கள் சுயநலவாதிகள். அதில் சின்னச் சறுக்கலைக் கூட அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்று. அப்போதுதான் உன் அன்பும் புரிந்தது எனக்கு. உன் அக்கா வீட்டு விசயங்களில் கூட ஒதுங்கிப் போகும் நீ, என்னுடைய எல்லா விசயத்திலும் தலையிட்டாய் என்றால், என்னை உன் சொந்தமாக நினைத்திருக்கிறாய்.
அது புரியாமல் நான் என்னென்னவோ உளறிவிட்டேன்…” என்றவன், அத்தோடு அதை நிறுத்திக்கொண்டான். அவனுக்குமே இப்போது அன்று சொன்னவைகளைத் திருப்பிச் சொல்லப் பிடிக்கவில்லை.
“ உனக்கு முன் எத்தனையோ பெண்கள் என்னை அணைத்திருக்கிறார்கள். நான் அணைத்திருகிறேன். அப்போதெல்லாம் உன் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பது இப்போது புரிகிறது. ஆனாலும் நீ அதை என்னிடம் ஒருநாள் தன்னும் காட்டிக்கொண்டதில்லை. அப்போதுதான் புரிந்தது உன் அன்பு எவ்வளவு பெரியது என்று. அது புரிந்த உடனேயே தாத்தா பாட்டியையும் இழுத்துக்கொண்டு உன்னைப் பார்க்கும் ஆவலில் இங்கு ஓடி வந்துவிட்டேன்..”
என்றவனைத் தீர்க்கமாகப் பார்த்தது சனாவின் விழிகள்.
“அந்த அன்புதானே உங்களுக்கு விலங்காக இருந்தது. அதில் மூச்சு முட்டித்தானே என்னை உதறிவிட்டு ஓடினீர்கள். இப்போது வந்து கதை அளக்கிறீர்கள்.” என்றாள், குறையாத ஏளனத்தோடு.
“அதுதான், நான் பேசியது எல்லாம் தப்பு என்று சொல்கிறேனே சனா. இன்னும் அதையே பிடித்துக்கொண்டு தொங்குவாயா..? இனி உன்னை என்னிடமிருந்து யாராலும்.. ஏன் என்னாலும் கூட பிரிக்க முடியாது.” என்றவனின் பேச்சை, “என்னால் முடியுமே..” என்று இடை வெட்டினால் சனா.
“ஏன் இப்படிச் சொல்கிறாய் சனா? என்னைப் புரிந்துகொள்ளவே மாட்டாயா?”
“புரிந்துகொள்ளாமல் என்ன, உங்களை மிக நன்றாகப் புரிந்துகொண்டேன். அதனால்தான் இதைச் சொல்கிறேன். புதிதாக ஒன்றும் இல்லை. அன்று நீங்கள் சொன்னதுதான். எனக்கும் உங்களுக்கும் என்றும் சரியாக வராது…” என்றாள் கடினப்பட்ட குரலில்.
“அப்படியானால் என்னை மறந்துவிட்டாயா நீ..?” அன்று ஜெயன் கேட்ட அதே கேள்வியை, இன்று சூர்யா கேட்டான்.
‘ஆமாம். உன்னை மறந்துவிட்டேன்..’ என்று சொல்லு என்று அவள் மனம் துடித்தாலும், அன்று போலவே இன்றும் அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
அவளின் மௌனத்தில் அவன் முகம் மலர்ந்தது. “இல்லைதானே! என்னைப் போலவே உன்னாலும் என்னை மறக்கமுடியாது. எனக்குத் தெரியும். நான் உன்மேல் வைத்த காதலை விட நீ என்மேல் கொண்ட அன்பு ஆழமானது. அந்த நம்பிக்கையில் தான் உன்னிடம் திரும்ப வந்திருக்கிறேன். நான் பேசியவைகள் அனைத்தும் மூடத்தனமானவை. இன்று அதை உணர்ந்துவிட்டேன். என்னை மன்னித்து மறுபடியும் ஏற்றுக்கொள்வாயா லட்.. சனா” என்று, ஆழ்ந்த குரலில் ஆவலோடு அவன் வேண்டியபோது, ஒருநொடி அவளும் தடுமாறித்தான் போனாள்.
ஆனால், இதுநாள் வரை அவள் பட்ட பாடுகள் கண் முன்னால் வலம்வர, ஆவேசம் கொண்டது அவள் மனது.
“இல்லை! முடியாது! என்னால் உங்களை ஏற்றுக்கொள்ள முடியாது! அன்று சொன்னதை இன்று தவறென்று சொல்கிறீர்கள். இன்று சொன்னதை நாளை தவறென்று சொல்ல மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?” என்று, கிட்டத்தட்ட ஆத்திரத்தில் கத்தினாள் சனா.

