மலருமோ உந்தன் இதயம் 22 – 2

ஆனாலும், அவளுக்கு, மதுராவில் மட்டும் மனஸ்தாபம் விலகிய பாடில்லை!

 

“அண்ணா நீங்க ரெடியா? நானும் வாறேனே!” கோரிக்கையுடன் வந்த நித்தி தானும் வெளியில் செல்லத் தோதாகப் புறப்பட்டிருந்தாள்.

“இல்லம்மா; நீ வேண்டாம். கொஞ்சநேரத்தில் குழந்தைகள் இருவரும் எழுந்து விடுவார்கள். ஒன்றாக எழுந்து உன் அண்ணியை உண்டு இல்லை என்று ஆக்குவார்கள்; நீ நின்று உதவி செய்யேன்!” என்றவன், தங்கையின் முறைப்பில் சுதியைக் குறைத்தான்.

“போங்கண்ணா; எவ்வளவுதான் சொன்னாலும் உங்களுக்கு விளங்குதில்லையே! ‘குழந்தைகள் மட்டும் என் வாழ்க்கைக்குப் போதும்.’ என்பவரை…பச்..” வெகுவாகச் சலித்துக்கொண்டாள் அவள்.

“இந்த அண்ணி என்றது மட்டும் காதில் விழுந்திருந்தால், தேத்தண்ணியா போட்டுத் தந்தார்! சுடுதண்ணியைக் கொதிக்கவைத்து உங்க தலையில் ஊற்றுவார். எப்படிண்ணா? முதல் ஏன்?” என்றவள், தமையனின் முகம் இலேசாக நிறம் மாறுவதை அவதானித்ததும் நிறுத்திவிட்டு, “நான் டீ போடப் போகிறேன்.” சட்டென்று நகர்ந்துவிட்டாள்.

‘உங்களுக்குப் புத்தி சொல்ல எனக்கு வயதில்லைதான்; அதற்கென்று..’ மனதில் சிலுப்பியபடியே சமையலறைக்குள் நுழைந்தாள் நித்தி.

‘இப்படியெல்லாம் பிரச்சனைப்பட்டு கல்யாணம் செய்ய வேண்டுமா? அம்மா அப்பா இருந்திருந்தாலும் இதைத்தான் சொல்லி இருப்பார்கள்.’ நினைத்த நித்திக்கு, மதுராவில் இருந்த இரக்கம், பரிவு, பாசம் இதையெல்லாம் கடந்து கோபமே ஏற்பட்டது.

‘உங்க வாழ்வில் ஒருவன் கெட்டது செய்தான் என்றால் அன்பைத் தர நினைப்பவனை தூக்கி எறிய முடியுமா?’ மதுராவின் மனதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதையும் விட, மதுராவின் மனம் நினைப்பதில் நியாயம் சிறிதும் இருப்பதாக அவள் உணரவில்லை.

‘இலகுவில் கிடைத்தால் அதன் மதிப்பு எப்போதுமே குறைவாகத்தான் பார்க்கப்படும்; அதுதான் என் அண்ணா விடயத்திலும் நடந்துவிட்டது; அது அண்ணாவுக்கு விளங்குதில்லை!’ தொடர்ந்த மனச் சலசலப்போடு தேநீரை தயாரித்தெடுத்தவள், புறப்பட ஆயத்தமாக நின்ற தமையனுக்கு விடை கொடுத்துவிட்டு தேநீரைப் பருகத் தொடங்கினாள்.

“சுதா சித்திக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. அக்காவோ போனை எடுத்தால் எந்தநேரமும் திட்டும் பேச்சும். நான் சம்மதித்ததே மதுராவின் குணத்தையும் கடந்து, நீங்க விரும்புவதால்தான். ஆனால் அவரோ, உங்களைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. அதனால் பேசாமல் விட்டுங்க அண்ணா. தாய் வந்த பின் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளட்டும்.” இதுதான் நித்தியின் இறுதி வாதம்.

அவள் தமையனோ ‘அவள் தான் என் வாழ்வு!’ என, பிடிவாதம் கொள்கிறானே!

பெருமூச்சுடன் எழுந்து தேநீர் கப்பை அலம்பி வைத்துவிட்டு, நேரத்தைப் பார்த்தவள், ‘பிள்ளைகள் எழ இன்னும் நேரமிருக்கு!’ என எண்ணியவாறே சோபாவில் சுருண்டுவிட்டாள்.

கல்லூரி இறுதிப்பரீட்சையை எழுதி முடித்திருந்த நித்தி, இறுதிவருடத்தில் பயிற்சிக்குப் போன பாடசாலையிலேயே வேலையும் கிடைத்திருக்கவே மிகவும் ஆறுதலாக உணர்ந்தாள்.

புதிதாகத் தொடங்கும் கல்வியாண்டிலிருந்து வேலைக்கு போகவேண்டும் என்பதால் இடையில் கிடைத்த நாட்களை குழந்தைகளோடும் தன்னிஷ்டப்படியும் கழித்துக் கொண்டிருக்கிறாள்.

சோஃபாவில் சாய்ந்தவள் எப்படிக் கண்ணயர்ந்தாளோ தெரியாது, அரைவாசி திறந்திருந்த மதுராவின் அறையிலிருந்து சிணுங்கிக் கேட்கவே சட்டென்று எழுந்தவள், “குட்டீஸ் எழுந்து விட்டீர்களா?” மதுராவின் அறைக்குள் நுழைந்தாள்.

மதுரா குளியலறைக்குள் என்பதற்குச் சாட்சியாக அங்கிருந்து நீர் விழும் ஓசை வர, குழந்தைகள் இருவரும் ஒன்றாக அருண்டுவிட்டு கண் மூடியிருந்தனர்.

ஒருவர் மாற்றி ஒருவரை பார்த்தவளுக்கு தூக்கிக் கொஞ்சும் ஆவல் தான் வந்தது.

“குட்டிகள், எப்போதடா வளர்ந்து வருவீங்க? இன்னும் கொஞ்சம் வளர வேண்டும். அப்போதான் நாம ஃப்ரியா பழக முடியும். இப்போ, அங்க சுளுக்கும், இங்க பிடிக்கும், அப்படி இப்படி என்று கவனிப்பதில் ஒரே டென்சன்.” வாய்விட்டுப் பேசியவளைப் பார்த்தவாறே குளியலறையிலிருந்து வந்தாள் மதுரா.

“என்ன நித்தி, நீரும் எங்கேயாவது போகப் போறீரா?”

“இல்ல…அண்ணாவோடு போகலாம் என்றுதான் வெளிக்கிட்டேன்; அவர் ..” என்றவள், மதுராவை ஒருகணம் பார்த்துவிட்டு, “பிறகு போகவில்லை. பிள்ளைகள் எழும்பியது போல சத்தம் கேட்டு வந்து பார்த்தேன்; நல்ல நித்திரை.” வெளியில் செல்லத் திரும்ப, அவள் கரம் பற்றி நிறுத்தினாள் மதுரா.

“ஏன் நித்திம்மா, இப்படி என்னோடு முகம் திருப்பினால் எனக்கு இங்கிருக்க எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?” கேட்டவள் குரல் கம்மி விட்டது.

“நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன் மதுரா. உங்களிடம் முகம் திருப்பி எனக்கு என்ன வரப் போகுது! முதல் அதுக்குத் தேவை என்ன?” கறாராகவே பதில் வந்தது.

“நீங்க தான் உங்க அம்மா வந்ததும் போய் விடுவீங்களே! என்னவோ எங்களோடு தொடர்ந்து இருப்பது போலச் சொல்லுறீங்க.” தொடர்ந்து, முகத்துக்கு நேரே முறைத்தவளைப் பார்த்து முறுவலித்தாள் மதுரா.

“நித்திம்மாவுக்கு இப்படியெல்லாம் கோபப்படத் தெரியும் என்று எனக்கு இப்ப தானே தெரியுது.” கேலிபோலத் தொடர, “பின்ன! உங்களுக்கு மட்டும் தான் கோபம் சொந்தமா? எங்களுக்கும் அது நெருங்கிய சொந்தம் தான்.” சிடுசிடுத்தாள் அவள்.

“நீங்க உங்க வேலையைப் பாருங்க; இவர்கள் எழுந்ததும் வருகிறேன்.” கரத்தை விடுவிக்கவும் முயன்றாள்.

மனதில் அடிவாங்கிய தோரணையில் அவளைப் பார்த்தாள் மதுரா.

சின்னவளுக்கு உள்ளே உருகினாலும் அதை காட்டவோ வளர்க்கவோ விரும்பவில்லை; சட்டென்று வெளியேறிவிட்டாள் .

‘என் மனதை கொஞ்சமேனும் புரிந்து கொள்ள மறுக்கிறாளே!’ மதுராவின் மனதின் முணுமுணுப்பு விழிகளால் வெளிப்பட்டது.

“என் அண்ணாவைப் பார்த்தால் எப்படித் தெரியுது?” என, அன்று இவள் தன்னிடம் சீறியதை நினைத்ததும் இன்றும் கவலையே சுரந்தது.

‘அவரை நான் மதிக்கவில்லையா? அல்லது குறைவாக நினைத்துவிட்டேனா? இரண்டு குழந்தைகளோடு நிற்கும் இந்த ராசியற்றவள் மீதா அவருக்கு நேசம் வர வேண்டும்? முதல், அந்த நேசத்தை என் மனம் ஏற்க மறுக்கின்றதே! அவருக்கு ஏற்ற பெண்ணாகப் பார்த்து, கல்யாணம் செய்து சந்தோஷமாக இருங்க என்று தானே சொல்கிறேன்.’ இவள் வாதம் இது.

‘தனியாக, குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு பிரயாணம் செய்வது சிரமம் என்ற ஒன்றுக்காகவே அம்மா வரட்டும் என்று காத்திருக்கிறேன். அம்மா வந்ததும் நான் இலங்கை சென்று விடுவேன்.’ தன் முடிவில் உறுதியாக நின்றாள் மதுரா.

எண்ணங்கள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ள, ‘இவர்கள் எழமுன் இந்த உடுப்புகளை அயர்ன் பண்ணிவிடுவோம்.’ என்றெண்ணிக்கொண்டே குழந்தைகளின் உடுப்புகளை எடுத்துக்கொண்டு அயர்ன் பண்ணும் அறையை நோக்கி மேலே சென்றவள், அங்கே தொலைக்காட்சியில் இருந்த நித்தியிடம், “அயர்ன் பண்ணிவிட்டு வாறேன் நித்தி, அவர்கள் எழுந்தால் என்னைக் கூப்பிடும்.” சொல்லிவிட்டு மாடியேறினாள்.

நித்தியிடம் சொல்லி விட்டே வந்திருந்தாலும் குழந்தைகளின் உடைகளை அயர்ன் பண்ணிக் கொண்டிருந்தவளின் செவிகள் கீழேதான் இருந்தன!

திடீரென்று யாரையோ வரவேற்கும் நித்தியின் பேச்சுக் குரலோடு இணைந்து கார்த்திகேயனின் குரலும் ஒலிக்க, “எங்கேயோ போனாரே; யாரும் வந்திருக்கிறார்களோ!? இல்லை, அண்ணாவும் தங்கையும் பேசிக் கொள்கிறார்களோ!’ என, எண்ணியவாறு கீழே இறங்கியவளை, ஆற அமர பார்வையால் வருடித் தடுமாற வைத்தான், சற்றுமுன் நித்தி இருந்த இடத்தில் அமர்ந்திருந்த கார்த்திகேயன்.

‘எவ்வளவுதான் சொன்னாலும் இவருக்கு உறைக்குதில்லையே! இந்த மனிதனா நான் வந்த புதிதில் அவ்வளவு சாதுவாக நடந்து கொண்டது!?’ இப்போதும் அவனைக் கெட்டவன் என்று சொல்ல சற்றும் பிரியப்படாது தடுமாறினாலும், இந்த நினைவையும் அவளால் தவிர்க்க முடியவில்லை.

நித்தியின் குரல் தனதறைக்குள் இருந்து வரவே, கார்த்திகேயனின் பார்வையை அசட்டை செய்து நகர்ந்து அறைக்குள் நுழைந்தவள் அப்படியே நின்றுவிட்டாள்.

 

error: Alert: Content selection is disabled!!