மலருமோ உந்தன் இதயம் 23 – 1

23

 

அதிவேகமாக மோதிய ஆச்சரியம் கணத்தில் மறைய, இதயம் விம்ம, உடல் நடுங்க, “அம்மா!” கேவியவாறே ஓடிச்சென்று ஒற்றைக் கரத்தால் தாயின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள் மதுரா.

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த தன் செல்லப் பேத்திகளின் அழகை விழிகளால் அள்ளிப் பருகி, அவர்களைத் தடவிக் கொடுத்து, சிதைந்து கிடந்த தன் மனதை ஆற்ற முயன்ற கமலா, மகளின் குரலில் சுதாகரிக்க முன், பின்புறமிருந்து கழுத்தை வளைத்திருந்தாள் அவள்.

குழந்தைகளில் இலயித்திருந்த நித்தி, அவளின் மறுகரத்திலிருந்த உடுப்புக்கூடையை வாங்கிக்கொள்ள, “அம்மா! அம்மா!” அரற்றியபடி அன்னையை இறுக்க அணைத்துக்கொண்டே குமுறி அழுதுவிட்டாள் மதுரா.

தனக்கே தனக்கான உற்ற பந்தம்! தன் உயிர் நொந்தால் வலியை உணர்ந்து கொள்ளும் ஒரே உறவு! பலத்த அக்கினிச் சூறாவளியாக சுழன்றடித்த வாழ்வில் சிக்கி, திக்கித் திண்டாடி மூச்சுத் திணறியபோதெல்லாம் இந்த ஸ்பரிசத்துக்காக, அது தரும் ஆறுதலுக்காக அவள் ஏங்கிய ஏக்கத்தை அவளின் நைந்த உள்ளம் மட்டுமே அறியும்!

நேரில் கிடைக்கவில்லை என்றாலும் தன் உயிர் அன்னை தந்த பலத்தால் அல்லவா இந்தளவுக்கென்றாலும் மீண்டாள்! முகத்தில் அறைந்த சோகங்களை, கஷ்டங்களை எல்லாம் இவரின் நினைவுகள் தந்த பலத்தில் அல்லவா எதிர்க்கவும், சுமக்கவும் முயன்றாள்!

உடல் தள்ளாட, தன்மீது சாய்ந்தழும் மகளை அணைத்துக்கொண்ட கமலாவின் தேகம் உள்ளும் புறமும் தளம்பித்தான் போனது!

‘உனக்கா ராஜாத்தி இப்படியெல்லாம் நடக்க வேண்டும்! எப்படி அந்த படுபாவியால் அது முடிந்தது!’ மனதுள் ஓலமிட்டவர் தொண்டைக் குழியால் சத்தம் வர மறுக்க, விழிகளால் தன் துயரை வெளியேற்றினார்.

கணவரை, ஒரே செல்ல மகனை ஒன்றாக இழந்து நின்ற போது வெடித்துச் சிதறிய மனதை, கடினப்பட்டு ஒட்டி, நிமிர்ந்து நின்றவர் அல்லவா? யாருக்காக அதற்கு முயன்றார்? அவரின் செல்வங்களுக்காகத்தானே! இப்போது, தன் உயிர் கலங்கி வதங்க, தானும் சேர்ந்து கலங்குவதா? அதுவும், அவள் வாழ்வில் வசந்தம் மலரும் என்னும் அசையாத நம்பிக்கை உள்ளத்தில் முட்டி நிற்கையில்!

சுதாகரித்துக் கொண்டார் கமலா.

“ராஜாத்தி…அம்மாடி இங்க பார்; இப்போ ஏன் இப்படி அழுகிறாய்? பார், உன் செல்வங்கள் இரண்டு பேரும் எழுந்துவிட்டார்கள்.” சொன்னவர் குரலில் வருத்தம் மறைத்த மகிழ்வு!

“இரண்டு ரத்தினங்களை பெற்றுத் தந்திருக்கிறாய்; உனக்கு என்ன கவலை!? என்ன குறையென்று இப்படி அழுகிறாய்?” அவள் வதனத்தை நிமிர்த்தி விழிகளை அழுந்தத் துடைத்துவிட்டார் .

மதுராவின் விழிகளோ இலேசில் நிற்போமா என அடம் பிடித்துக் கசிந்தன!

“ஹ்ம்ம்…சொல்லாமல் கொள்ளாமல் வந்தால், பார்த்ததும் என் மகள் சந்தோஷப்படுவாள் என்று நினைத்தேன் நித்திம்மா!” மகளைத் தேற்ற, உரமாக நிற்க முயன்றாலும் குரல் ஒத்துழையாது கரகரத்தது.

“அதுதானே ஆன்ட்டி, நானும் அண்ணாவும் எவ்வளவு பிளான் போட்டு எல்லாம் செய்ய…கடைசியில் இந்த அழுகையைக் காணவா? உப்ஸ்..” உதடுகளைப் பிதுக்கிய நித்தி, கலங்கிய தன்விழிகளை மதுராவுக்கு மறைத்தவாறே குழந்தையைத் தூக்கினாள்.

“குட்டிம்மா உங்க அம்மம்மா வந்திருக்கிறார். வாங்க…வாங்க; ஒரு ஹாய் சொல்வோம்.” குழந்தையோடு கமலாவை நெருங்க, “என் தங்கங்களை கைகால் கழுவிட்டு தூக்குறேன்மா.” என்றார் கமலா.

“ஆன்ட்டி களைத்துப் போய் வந்திருக்கிறார்; முதல் அவரை ஃப்ரெஷ்ஷாக விடுங்க!” ஹாலிலிருந்து, திறந்திருந்த மதுராவின் அறையையே பார்த்திருந்த கார்த்திகேயன் குறுக்கிட்டான்.

சட்டென்று அவனைப் பார்த்த மதுராவின் விழிகள் நன்றியின் கனத்தோடு மின்னின!

‘ஸ்பொன்சர் செய்ததிலிருந்து இதோ அம்மா இங்கு வந்து நிற்பது வரை, அத்தனையையும் பார்த்துக் கொண்டவர் இவர் மட்டும் தானே!’ எண்ணியவாறே, அவன் பார்வையில் மோதிய இவள் பார்வை, அதன் வீரியம் தாங்காது சட்டென்று தழைந்து தடுமாறி இடம் மாறியது.

எவ்வளவுதான் ஒதுங்கினாலும், அவனை ஒதுக்கினாலும் தான் கொண்ட எண்ணத்திலிருந்து சிறிதும் பிசகாது அவன் செயல்படுவதை உணர்ந்திருந்தவளுள், இப்போ, இக்கணம், நன்றியுணர்ச்சியின் கனத்தோடு தடுமாற்றக் குமிழிகள் தான் உற்பத்தியாயின! அவற்றை பலவந்தமாக ஊதி அழித்தவாறே மீண்டும் அவனை நாடிய விழிகளை அனுமதியாது தாயிடம் திருப்பினாள் மதுரா .

“விஸா கிடைத்ததைக் கூடச் சொல்லவில்லையேம்மா. நேற்று வீட்டுக்கு எடுக்க நீங்க எங்கோ வெளியில் போய்விட்டதாக சொன்னார்கள். என்னடா இரண்டு மூன்று நாட்களாக இதையே சொல்கிறார்கள் என்று கூட நான் சந்தேகப்படவில்லை.” மீண்டும் தாயை இறுகக்கட்டிக் கொண்டாள்.

 

கமலா நெதர்லாந் வந்து ஒருகிழமை கடந்திருக்கையில் குழந்தைகளின் முப்பத்தியோராம் நாள் வந்தது.

“ஐயரை அழைத்து வீட்டில் வைத்து தொடக்குக்கழிவு செய்வோம்.” என்று சொன்ன கார்த்திகேயன் அதற்கான ஆயத்தங்களைக் கவனித்தான்.

“அண்ணா, குட்டிப்பெண்களுக்கு நகைகள், உடுப்புகள் வாங்க வேண்டும்; யோகம் ஆன்ட்டியோடு போயிட்டு வாறேன்.” தன்பங்குக்கு புறப்பட்டாள் நித்தி.

மதுராவோ ஒரேயடியாக மறுத்தாள்; ஆர்வமாகத் திட்டமிட்ட தாயிடம் முணுமுணுத்தாள்.

“அதெல்லாம் தேவையில்லை. கண்டறியாத சாத்திரம் சம்பிரதாயம். அதை இதையெல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்த கல்யாணமே..” தன்னையறியாது சொல்லிக்கொண்டு வந்தவள், தாயின் முகம் கன்றியதைப் பார்த்து அரைவாசியில் நிறுத்தினாள்.

‘குழந்தைகளின் அப்பா இறந்து சிலநாட்களில் இதெல்லாம் எதற்கு?’ தன்னையும் மீறி எண்ணிக்கொண்டவள், அதை வெளியில் சொல்லத் துணியவில்லை.

“இங்கபார் மதுரா, எதிலும் ஒரு முறையிருக்கு. தொடக்குக்கழிவு செய்யத்தான் வேண்டும்.” உறுதியாகச் சொன்னவர், “நீங்க ஐயருக்குச் சொல்லுங்க தம்பி.” என்றவர், அவர்களோடு சேர்த்து ஆயத்தங்களில் ஈடுபட்டு மதுராவின் மனதைச் சுருங்க வைத்தார்.

தாய், வந்த சிலநாட்களில் அண்ணன் தங்கையோடு இயல்பாக ஒன்றிவிட்டதையும், சொந்தவீட்டில் தன் சொந்தப்பிள்ளைகளோடு அளவளாவுவது போல் அவர்களோடு நடந்து கொள்வதையும் வியப்புடன் கவனித்தாள் மதுரா.

அவள் அன்னை பெரும்பாலும் யாருடனும் இப்படி ஒட்டிக்கொள்வதில்லை.

‘நித்தியின் ராசியே அதுதான்!’ மனம் கனியத்தான் செய்தாள்.

அதேநேரம், பெற்ற தாய் வந்தபின், முன்னரை விட அதிகமாகத் தனிமையை உணரத் தொடங்கினாள் மதுரா.

அந்தளவுக்கு, அண்ணனும் தங்கையுமாக, கமலா குழந்தைகளையும் சேர்த்துக்கொண்டு சமா வைத்து இவள் உள்ளத்தில் எரிச்சலை மூட்டிவிட்டனர்.

அவர்களோடு இயல்பாக ஒன்றவும் முடியாது அவர்களின் ஒட்டுறவை சகிக்கவும் முடியாது மிகவும் தடுமாறினாள் மதுரா.

இடைக்கிடை தன் தாயோடு வரும் சதீஷ் அவர்கள் பங்குக்கு கூட்டணியில் சேர, பலவேளைகளில் ஏகாந்தம் அவளை ஆசைதீர பந்தாடியது.

இப்படியிருக்கையில், குழந்தைகளின் முப்பதித்தியோராம் நாளும் முடிந்திருந்தது.

இவள் வீடு வந்ததிலிருந்து குழந்தைகளைப் பராமரிக்க என்று வந்துகொண்டிருந்த பெண்ணும் இப்போதெல்லாம் வருவதில்லை.

அன்று காலையில் மூத்தவள் ஆரணியை குளிப்பாட்டிய மதுரா, தாயிடம் கொடுத்துவிட்டு ஆரபியை குளிப்பாட்டத் தொடங்கினாள்.

அப்போது அங்கே வந்தாள் நித்தி.

“ஹே..ஹே ஆரணிம்மா குளித்து விட்டீங்களா?!” குழந்தையின் கன்னத்தில் செல்லமாகத் தடவி, அவள் விழியசைத்துப் பார்க்க, செல்லங்கொஞ்சி சிறிதுநேரம் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தவள், “ஃப்ரெண்ட் வீடுவரை போய்ட்டு வாறேன் மதுரா. அப்படியே ஷாப்பிங் போய்ட்டு வருவேன். உங்களுக்கு, குட்டிகளுக்கு ஏதாவது வேண்டுமா?” வினவினாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம் நித்தி; கவனமாகப் போயிட்டு வாங்க. சாப்பிட வந்திடுவீங்க தானே!”

“பின்ன! ஆன்ட்டியின் சமையலை யாராவது மிஸ் பண்ணுவார்களா? இன்றைக்கு அரைச்ச மீன்குழம்பு வைக்கப் போவதாகச் சொன்னாரே! அம்மாவும் நல்ல ருசியாகச் வைப்பார். அதற்குப் பிறகு…” சட்டென்று வாயிலை நோக்கித் திரும்பியவள், “போயிட்டு வாறேன் ஆன்ட்டி; வாறேன் மதுரா; குட்டிம்மாக்கள் பை..பை.” வெளியேறினாள்

தன் தாயின் நினைவில் அவள் கலங்கிச் செல்வதைக் கண்ட கமலாவின் விழிகளும் கலங்கிவிட்டன!

“ஹ்ம்…எத்தனை காலம் போனாலும் அந்த வடு மறையாது. பாவம் குழந்தை; கலங்கிக்கொண்டு போறாள்.” என்றவர், ஆரணிக்கு உடைமாற்றி தொட்டிலில் போட்டுவிட்டு, அடுத்த பேத்தியை துடைத்து உடைமாற்றத் தொடங்கினார்.

“இரண்டு பேருமே அருமையான பிள்ளைகள் இல்லையாம்மா? இங்கு பிறந்த பிள்ளைகள் என்று நம்பவே முடியவில்லை; நம்மூரில் வளர்ந்த பிள்ளைகள் போல் பழக்க வழக்கங்கள்.” என்றதும், ஈரக்கையைத் துடைத்துவிட்டு தொட்டிலில் கிடந்தவளை பசியாற்றும் நோக்கில் தூக்கிய மதுரா, தாயைப் பார்த்து முறுவலித்தாள்.

“அதென்ன நம்மூர், வெளிநாடு? எங்கே இருந்தாலும் இப்படித்தான் என்று பழக்க வழக்கங்களைச் சொல்லிக்கொடுத்து, நாமும் பின்பற்றினால் அதையே பிள்ளைகளும் செய்யப் போகிறார்கள்.

நித்தியின் அம்மா அந்த விடயத்தில் மிகவும் கண்டிப்பு என்று சொல்லி இருக்கிறாள். வாழும் சூழலை விட்டு ஒரேயடியாக விலகவும் முடியாது; அதேநேரம், நமது அடையாளத்தையும் விட்டுக்கொடுக்க முடியாது. அப்படிப் பார்த்தால் இங்கு வளரும் பிள்ளைகளுக்கும் முறையாக வளர்க்க நினைக்கும் பெற்றோர்களுக்கும் அது சவாலான வேலைதான்!” தொடர்ந்தாள்.

“அதென்றால் உண்மைதான்மா. ஆரணி ஆரபியை நம்ம பழக்க வழக்கங்கள் சொல்லி முறையாக வளர்க்க வேண்டும் ராஜாத்தி.” என்ற தாயை நிமிர்ந்து பார்த்தாள் மதுரா.

“என்னம்மா சொல்லுறீங்க!? நானே இதைப்பற்றிக் கதைக்க வேண்டும் என்றுதான் இருந்தேன். ஒருமாதக் குழந்தைகளை விமானத்தில் அவ்வளவு தூரம் கூட்டிக்கொண்டு போக முடியுமா? ஒருதரம் விசாரித்தால் நாம் ஊருக்குப் புறப்படலாம்மா.” என்ற மகளை, சலனமின்றிப் பார்த்தார் கமலா.

“பச்சைக்குழந்தைகளை…விமானத்தில்…ஊருக்கா!? என்னம்மா சொல்கிறாய்?!” கேட்கவும் செய்தார்.

“இருவரையும் எப்படிம்மா தனியாக அழைத்து வருவது? அதுதான், நீங்களும் வர சேர்ந்து போகலாம் என்று முடிவு செய்திருந்தேன்.” என்றவள், தாயின் முகத்திலோடிய அதிர்வைப் படித்துவிட்டு, “இங்கிருந்து நான் என்னம்மா செய்யப் போகிறேன்! அதுவும் தனியாக இருவரையும் வளர்ப்பது எவ்வளவு கஷ்டம்!” அவள் வதனத்தில் கசந்த முறுவல் நெளிந்து மறைந்தது.

“அதுக்காக இலங்கைக்கு வரப் போகிறாயா?” தாயின் குரலின் வேறுபாட்டில் திடுக்கிடலோடு அவரைப் பார்த்தாள் மதுரா.

“ஏன்மா? நான் வேறு எங்கே போவது? அங்கு வரக் கூடாதா?” கேட்டவள் குரலைப் போலவே வதனமும் இறுகியிருந்தது.

“என் கதைதான் ஊருக்கே தெரியுமே!” கசப்பாகச் சொன்னவள், தாயின் மௌனத்தில் நெற்றி சுருங்கினாள்.

“நான் அங்கு வருவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையாம்மா?” கேட்ட மகளை, தீர்க்கமாகப் பார்த்தார் கமலா .

“நீ என் மகள் மது. நீ அங்கு வருவதில் எனக்கு விருப்பமில்லாமல் போக என்னம்மா இருக்கு! என்னோடு நீயும் குழந்தைகளும் இருக்கும் சந்தர்ப்பம் வந்தால் அதைவிடச் சந்தோஷம் வேறென்ன இருக்கு!

உன் தங்கச்சிகளும் மிகவும் சந்தோசப்படுவார்கள். உன்னை வெளிநாடு அனுப்பி நான் பட்டபாடு…” படபடவென்று சொல்லிக்கொண்டு வந்தவர், பேச்சைநிறுத்தி வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்.

error: Alert: Content selection is disabled!!