“இப்போ ஏன்மா அழுகிறீங்க? முடிந்தவை முடிந்ததாகவே இருக்கட்டும். இனி எனக்கு, இவர்களை நன்றாக வளர்த்தெடுக்க வேண்டும்; அது ஒன்றுதான் குறிக்கோள்!” என்று சொல்லி, தாயைக் கலங்கடித்தாள் மதுரா.
“பிறகு என்னம்மா, ஒருதரம் குழந்தைகளின் பயணம் பற்றி விசாரித்துவிட்டு டிக்கெட் போடுவோம்.”
“இல்லை மதுரா; யோசிக்காமல் இப்படிச் சட்டுப்புட்டென்று முடிவெடுக்காதே!”
“இதில் யோசிக்க என்னம்மா இருக்கு! என் முன்னால் இருக்கும் ஒரே ஒருவழி இது தான். அதா இதா என்ற யோசைனைக்கு இங்கு இடமில்லை.” மகளின் குரலின் உறுதியில் சற்று நிதானித்தார் தாய்.
“இல்லை, நான் என்ன சொல்கிறேன் என்றால்” மென்று விழுங்கினார்.
பின் ஒரு முடிவுக்கு வந்தவர், “மது, உன் விடயத்தை முதல் முதல் எங்களிடம் சொன்னாயே, அப்போது அழுத உன்னிடமிருந்து ஃபோனை வாங்கிய தம்பி…” மகளின் பார்வையின் தீவிரத்தில் அதைத் தவிர்த்தவர், சின்னப் பேத்தியை மடியில் போட்டுக் கொஞ்சியவாறே தொடர்ந்தார்.
“தம்பி, அதுதான் கார்த்தி…என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?” மதுராவின் உள்ளமும் உடலும் விறைப்புடன் நிமிர்ந்தது.
‘அப்போ, அந்தாள் அம்மாவிடமும் ஏதோ உளறி இருக்கு. ஆனால், அன்றைக்கேவா?’ அன்றைய நாள் இவள் நினைவில் பளிச்சிட, அவன் பேசிக்கொண்டே வெளியில் சென்றதும், பிறகு தன் தாய் அவனைக் கைகூப்பிக் கும்பிட்ட நினைவும் வர, “என்னம்மா சொன்னார்? உங்க வாழ்விழந்த மகளுக்கு நான் தியாக மனதோடு வாழ்வு கொடுக்கிறேன் என்றாரா?” சீறலாகக் கேட்டாள்.
“ச்சா..ச்சா அப்படியெதுவும் சொல்லவில்லை மது.” அவசரமாக மறுத்தார் கமலா.
“அன்றைக்கு, சுதா இப்படி நடந்துவிட்டது என்று சொல்லும் போது…ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப் போனேன் குஞ்சு.
அதிர்ச்சியில் நெஞ்சு வெடித்து, போய்ச் சேர்ந்திருவேனோ என்ற பயமும் வந்திட்டுது. நீ இங்கே அந்தரிச்சுப் போய் நிற்கிறாய் என்றால், அங்கே உன் தங்கச்சிகள்.
நான் என்னவெல்லாம் நினைத்துப் பயந்தேன் என்று உனக்கு விளங்குமா மது?” படபடத்தவாறே தாய் அழ, கட்டுப்படுத்த முடியாது தானும் சேர்ந்து கண்ணீர் விட்டாள் மதுரா.
“வீட்டில் போய்ச் சொல்ல உன் தங்கச்சிகள் கதறத் தொடங்கி விட்டார்கள். அந்த வேகத்தில் உனக்கு எடுத்தால்…” கண்களைத் துடைத்துவிட்டு, மகளை நேராகப் பார்த்தார் கமலா.
“தம்பி என்னோடு கதைக்கவேண்டும் என்கிறார் என்று விதுஷா என்னிடம் தர, ‘இங்க பாருங்க ஆன்ட்டி, நடந்தது ஏதோ நடந்து முடிஞ்சிட்டுது. அதை நினைத்தால் கஷ்டம் தான். ஆனால், எதுக்குமே ஒரு தீர்வு இருக்கு! உங்க மகள் அவன் வாழ்கையில் இருந்து விலகி வந்தது நல்லதுக்கு என்று நினைத்துக் கொள்ளுங்க. மதுராவின் வாழ்க்கை நிச்சயம் நல்லபடி அமையும்.
இப்போ, இங்கே மதுரா தனியாக இருப்பதாக ஒரு கணமும் நினைக்க வேண்டாம். நானும் நித்தியும் எங்களுள் ஒருத்தியாகத்தான் அவரைப் பார்த்துக்கொள்கிறோம். அதில் உங்களுக்குத் துளியும் சந்தேகம் வேண்டாம்.
நாங்க இருக்கிறோம் ஆன்ட்டி; இனி நடப்பது எல்லாம் நல்லபடியே நடக்கும்.’ என்று, எனக்கு வார்த்தைகளால் நம்பிக்கை தந்தார்மா.” என்றவரின் விழிகள் மீண்டும் கலங்கி விட்டன.
அமைதியாக இருந்தாள் மதுரா. ‘ஹப்பாடா! அம்மாவிடம் எதையும் உளறவில்லை.’ மனதில் தோன்றிய ஆசுவாசம், தொடர்ந்த தாயின் பேச்சில் இருந்த இடம் தெரியாது மறைந்தது.
“தம்பி அப்படி என்னதான் ஆறுதல் சொன்னாலும் இங்கே உன்னைத் தனியாக விட்டுவிட்டு நிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டிருந்தேன் மது. அடுத்து என்ன என்று பைத்தியம் பிடித்துத் திரிந்தேன். அப்போதான் ஸ்பொன்சர் செய்கிறேன் என்றார். சரி வந்திட்டு, பிள்ளைகள் பிறக்க உன்னையும் கூட்டிக்கொண்டு போவோம் என்று தான் நினைத்திருந்தேன்.”
“ஆமாம்மா; நானும் அதைத்தான் சொல்கிறேன்.” அவசரமாக இடையிட்டாள் மதுரா.
அதைக் காதில் போட்டுக் கொள்ளாது தொடர்ந்தார் கமலா.
“பிறகு, குழந்தைகள் பிறந்துவிட்டார்கள் என்றதைச் சொல்ல எடுத்த போது…” என்று ஆரம்பித்தவர் மகளின் இருண்ட முகத்தில் பார்வையை பதித்து, “தம்பி என்ன சொன்னார் தெரியுமாம்மா?” மகளின் வெறித்த பார்வையைத் தாங்கியவாறே தொடர்ந்தார்.
“தான் உன்னை விரும்புவதாகச் சொன்னார். உன்னைக் கல்யாணம் செய்ய விருப்பம் என்றும் எனக்குச் சம்மதமா என்றும் கேட்டார்.
பார்த்துப் பார்த்துக் கட்டிவைத்தவன் ஒரு நச்சுப்பாம்பு. அன்றைக்கு, விவாகரத்து என்று கேள்விப்பட்டதில் இருந்து திக்குத் தெரியாது தவித்த எனக்கு தம்பியின் இந்த வார்த்தைகள் எவ்வளவு ஆறுதல் தந்தது என்று உனக்குச் சொன்னால் விளங்காதும்மா.” என்ற கமலாவின் குரலிலும் உறுதி தொனித்தது.
ஒருபோதுமின்றி தன் அன்புத்தாயை முறைத்தாள் மதுரா.
“அப்போ, அந்தாள் சொன்னதில் உங்களுக்கு நெஞ்சு குளிர்ந்துவிட்டதாம்மா?! நான் ஒரு மனிதப்பிறவிதானே? எனக்கென்று ஒருமனம் இருக்கென்று நீங்க யாருமே நினைக்கவில்லையா?” அவள் குரல் சன்னமாக உயர்ந்திருந்தது.
“என்னம்மா இப்படிக் கேட்கிறாய்? உன் மனதைப் பார்க்காமல் அப்படி எதைச் செய்து விட்டேன். ஏதோ போதாத காலம் நம் தலையில் இப்படியொரு இடி விழுந்துவிட்டது. இனி நடந்ததையே நினைத்துக்கொண்டு எதிர்காலத்தைச் சூன்யமாக்கிக் கொள்வதா மது?
‘என் எதிர்காலம் இனித்தான் சூன்யமாக வேண்டுமா?’ விரக்தியாக நினைத்தது அவள் உள்ளம்.
“அதெப்படிம்மா சூன்யமாகும்? என் குழந்தைகளின் வாழ்வுதான் எனக்கு இனி எதிர்காலம்.” உறுதியாக உரைத்தன அவளிதழ்கள்.
“இது பேச்சுக்கு நல்லா இருக்கும் மது. நடைமுறைக்கு எவ்வளவு கடினம் என்று அனுபவப்பட்டவள் சொல்கிறேன் கேட்டுக் கொள்.”
“அப்போ, நீங்களும் எங்களை வைத்துக் கொண்டு…” என்ற மகளை, “எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறாய்?” கோபம் எட்டிப் பார்க்க இடையிட்டார் கமலா.
“உன் அப்பா என்னைத் தவிக்கவிட்டு விட்டுப் போகும் பொழுது நீங்க ஒன்றும் கைக்குழந்தைகள் இல்லையே! நானும் அவரோடு வாழ்ந்த காலம் முழுதும் சிறப்பாகவும் நிறைவாகவும் தான் வாழ்ந்தேன். அதுவே, இன்றுவரை துணிந்து நிமிர்ந்து நிற்க எனக்கு உறுதுணை செய்யிது மது. உன் கதை வேறு.” கமலாவுக்கு நல்ல கோபம்!
“ஐயோம்மா இந்தப் பேச்சே வேண்டாம். எவ்வளவு கெதியா முடியுமோ அவ்வளவு கெதியா இங்கிருந்து போகவேண்டும்; அது ஒன்றுதான் என் எண்ணத்தில் இப்போது இருக்கு.” பேச்சுக்கு முற்றுப்புள்ளி போட அவசரம் கொண்டாள் மகள்.
“அப்படியென்றால், இந்தப் பிள்ளைகள் வாழ்வையும் உன் வாழ்வோடு சேர்த்து வீணாக்கத்தான் போகிறாயா? ஒரு தகுதியில்லாத மிருகத்தின் நினைவில் உன் வாழ்வை அழித்துக் கொள்ளப் போகிறாயா?” கடினத்தோடு வினவினார் தாய்.
அன்னையின் பார்வையும், தான் இன்னமும் அந்த ஏமாற்றுக்காரனை மனதில் பூஜிப்பதாக இருக்கவே, சினந்து விட்டாள் மதுரா.
“நான் எவனையும் மனதில் வைத்து என் வாழ்வை வீணாக்கவில்லையம்மா!
என் மீதி வாழ்வுக்கு குழந்தைகள் போதும் என்கிறேன்! அவருக்கு ஏதோ மறை கழன்று உளறுகிறார் என்றால், அதைக் கேட்டு நீங்களும்…ச்சா… உங்களிடம் இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைம்மா.” விருட்டென்று எழுந்து குழந்தையைத் தொட்டிலில் போட்டவள், அதே வேகத்தில், தாயிடம் இருந்த சின்னவளை வாங்கிக்கொண்டு வந்தமர்ந்தாள்.
மகளின் சிடுசிடுப்பில் சிறிதும் அசரவில்லை கமலா.
“அப்போ, அவன் நினைவு உன் மனதில் இல்லவே இல்லை. அப்படித்தானே? உனக்கிப்போது எத்தனை வயது மதுரா? இந்த சின்ன வயதில் குழந்தைகள் தான் என் வாழ்வென்றிருந்தால், தகுதியே இல்லாத அந்த கழிசடைக்கு உன் மிச்ச வாழ்வைத் தியாகம் செய்வதாகத்தான் பொருள்படும். என் அறிவுக்கு அப்படித்தான் தோன்றுது.
அப்படி ஒரு தியாகத்துக்கு அந்த நாதாரி தகுதியில்லாதவன். அவனைக் கல்யாணம் செய்த ஒன்றுக்காக என் மகள் காலம் முழுவதும் தனியாளாக இரண்டு குழந்தைகளோடு கஷ்டப்பட வேண்டுமா?” கோபமாகச் சீறினார்.
“கொஞ்சம் பொறுமையாக யோசித்துப் பாரம்மா. நாமாகத் தேடிப் போகாமல் அருமையான உறவு நம்மைத் தேடி வரும் போது…உன் குழந்தைகளை தன் குழந்தையெனும் போது, கார்த்தி தம்பியையே கல்யாணம்…” தொடர்ந்தவரை மதுராவின் கீரீச்சிடல் இடைநிறுத்தியது.
“போதும்மா போதும்; இதோடு நிறுத்துங்க. இதற்கு மேலே நீங்க சொல்வதை கேட்கும் அளவுக்கு என் மனதில் தெம்பில்லை.
ஒருதரம் நீங்க பார்த்துப் பார்த்து ஒரு கல்யாணம் செய்து வைத்ததே சாகும் வரைக்கும் போதும். இந்த அழகில் இன்னொன்று பார்க்கச் சொல்லி நான் கேட்டேனா?
அங்க வந்திருப்பதில் உங்களுக்குத் தலைகுனிவு என்றால், தங்கச்சிகள் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை என்றால் அதை நேராகச் சொல்லுங்க. நானும் என் பிள்ளைகளும் எங்காவது கண்காணாது போய் வாழ்ந்திட்டுப் போறோம். என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள எனக்குத் தெரியும்; வேறு யார் துணையும் தேவையே இல்லை.”
மகளின் ஆவேசப்பேச்சில் அப்படியே சமைந்து போனார் கமலா.
‘தன் வாழ்வின் அவலத்துக்கு நான்தான் காரணம் என்று சொல்லிவிட்டாளே என்மகள்!’
அடுத்த நொடி, அப்பேச்சை ஜீரணிக்கும் திரணற்றவராக அப்படியே மயங்கிச் சரிந்தார் அவர்.
“அம்மா…அம்மா என்னம்மா செய்யுது? அய்யோ!” அலறியவாறு ஒரே பாய்ச்சலில் குழந்தையைத் தொட்டிலில் போட்டவள், தாயை நெருங்கித் தட்டி எழுப்பினாள்.
“அம்மா! ஐயோம்மா! கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டேன்மா. அம்மா இங்க பாருங்கம்மா.” அரற்றி, கணப்பொழுது என்ன செய்வதென்று தெரியாது தடுமாறி, அடுத்த நொடி, கார்த்திகேயனின் க்ளினிக்கை நாடி ஓடினாள்.
“கார்த்தி எங்கே?” மூச்சிரைக்க வந்தவளைப் பார்த்த வரவேற்பில் இருந்தவள், “அவர் ஒருவரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்; அவசரமா மதுரா? முடிந்ததும் சொல்கிறேன்.”
“இல்லை இல்லை; அவசரம்.” சொல்லிக்கொண்டே அவனது அறைக்கதவைத் திறந்து உள்ளே சென்று, “கார்த்தி…கார்த்தி… அம்மா அம்மாவுக்கு.” தொடர்ந்து கதைக்க முடியாது கேவியவளைப் பார்த்து, “ராது என்னம்மா?!” அதிர்வோடு நெருங்கினான் அவன்.
அவளோ, “அம்மா அம்மா மயங்கிட்டார்..” அரட்டியவாறே அவன் கரத்தைப் பிடித்திழுத்துக் கொண்டு விரைய, “என்ன மயக்கமா? நல்லாத்தானே இருந்தார்.” ஓடியவன், அங்கே கமலாவைப் பார்த்து அரண்டு விட்டான்.
“தண்ணி எடுத்து வா ராது.” என்றவன், அவசர பகுதிக்கு அழைத்துவிட்டு , “ஆன்ட்டி ஆன்ட்டி..” தண்ணீர் தெளித்து எழுப்ப முனைந்தான்.

