25
“இனி இந்தப் பேச்சை விட்டு விடுவோம்.” முடிவாகச் சொல்லிவிட்டு மேலே வந்த கார்த்திகேயன் ஒருபோதுமில்லாதவாறு தனதறைக்குள் அடைந்து கொண்டான்.
பெற்றவர்களை இழந்தபின் இறுக்கமாக படிந்திருந்த துக்கத்திரையை இலகுவாக விலக்கியிருந்தாள் மதுரா.
‘அதை அவள் ஒருபோதும் உணரவில்லை என்றாலும் அதுதானே நிஜம்!’ எண்ணியவன் உள்ளமோ, மீண்டும் வெறுமையை நாடி தலைதெறிக்க ஓடியது.
அங்கிருந்த சோஃபாவில் தொப்பென்று விழுந்தவன் மிகவும் ஆயாசமாக உணர்ந்தான்.
சோஃபாவை ஒட்டியிருந்த சிறு அலுமாரியின் லாச்சியை எட்டித் திறந்து அதனுள் இருந்த சிறுபுகைப்பட ஆல்பத்தை எடுத்தவன் சிறிது நேரம் அதை மென்மையாக வருடிக் கொண்டிருந்தான்.
அன்று தங்கையிடம் காட்டி தன்மனதை வெளிப்படுத்திய அச்சிறு ஆல்பம், மொத்தமாகப் பத்துப் புகைப்படங்களையே தன்னுள் அடக்கியிருந்தது.
ஆனால், அவை ஒவ்வொன்றும் சொல்லும் பாவனைகளை, பல பக்கங்களில் இரசனையான கவிதைகளாய் வடித்திடலாம்.
அதுவரை வெறுமையில் நனைந்தவனின் உள்ளத்தில் மெல்லிய தென்றலடிக்க, ஆல்பத்தைத் திறந்தவனின் பார்வை முதலிருந்த படத்தில் கனிவும் நேசமுமாய் நிலைத்தது.
முதல் புகைப்படத்தில் குழந்தைகள் இருவரையும் தாங்கிக்கொண்டு தன்னையே பார்த்திருந்த மதுராவை அணைத்தபடி இருந்தான் கார்த்திகேயன்.
‘என்வாழ்வில் இப்படியொரு தருணம் மீண்டும் எப்போதாவது வருமா!?’ நினைத்தவன் விழிகளில் கலக்கம் தாராளமாகவே எட்டிப் பார்த்தது.
அப்புகைப்படத்தைப் பார்த்த எவருமே அது ஒரே குடும்பத்தினர் இல்லை என்றால் துளியும் நம்ப மாட்டார்கள்.
காத்திருந்த அற்புத தருணத்தை துளித்துளியாக அனுபவிக்கும் பரவசம் கலந்த ஆச்சரியமும் அன்பும் போட்டிபோட, அழகாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். ஒரு தந்தையாக, கணவனாக இதைவிட ஒருவனால் தனது உணர்வுகளைத் துல்லியமாகக் காட்ட முடியாது.
மதுராவோ, குழந்தைகளை ஒரு கரம் அணைத்தபடி இருக்க, அவர்களைப் பாராது இவனைத்தான் பார்த்திருந்தாள். அவள் முகபாவனை இன்னதென்று கூற முடியாதவகையில் உணர்வுக் குவியலாக இருந்தாலும் அதையும் மீறி, அந்நிமிடத்தின் அழகும் கசியவே செய்தது.
டப்பென்று ஆல்பத்தை மூடியவன் அதை கரங்களுள் அழுந்தப் பொத்திக் கொண்டான்.
‘இவளை மறந்துவிட என்னால் முடியுமா?’ பெரும் வினா எழ, ‘குழந்தைகளை விட்டுவிட முடியுமா? அவர்கள் என் குழந்தைகள் என்பதைத் தவர என் மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லவே இல்லை என்பதை அவள் கொஞ்சமும் புரிந்துகொள்ள மறுக்கிறாளே!’ விழிகளை மூடிக்கொண்டு அப்படியே சாய்ந்தான்.
ஒரு திருமணம் ஆகாத இளைஞனுக்கு, ஏற்கனவே திருமணமாகி வஞ்சிக்கப்பட்ட, அதுவும் குழந்தைகளைச் சுமந்து கொண்டிருக்கும் ஒருத்தி மீது காதலா? ஹா..ஹா…நல்ல கற்பனை!
சரி…சரி அப்படியே என்றாலும், அவள் நிலைகண்ட இரக்கத்திலும் பரிதாபத்திலும் உருவான நேசமிது? எத்தனை நாட்களுக்கு!
எவனோ ஒருவனின் குழந்தைகள் அவர்கள்; அவர்களை உன்னுடையவர்களாக எண்ணுவது ஹா..ஹா…சுத்த ஹம்பக்!
இன்றைய பரிதாபத்தில் எடுக்கும் முடிவுகள் நாளை உன்னையே பரிதாபத்துக்குள்ளாக்கியும் விடும்!
‘இப்படி, என்னைச் சுற்றியுள்ளவர்களாலும் என் நேசத்தை கணக்கில் எடுக்க மறுக்கும் மதுராவாலும் என் அன்பு விமர்சிக்கப்படுகின்றது என்றதற்காக அது உண்மையில்லை என்றாகி விடுமா?’ மனதின் எதிரொலியைக் கேட்டவன் விழிகள் மெல்லத் திறந்தன.
அதேநேரம், “மதுராவின் அம்மா சுகயீனமுற காரணம் என்னவென்று தெரியுமா அண்ணா.” என்ற தங்கை, தன்னைக் கேட்ட கேள்விகளை நினைத்துக் கொண்டவன், அவற்றுக்குத் பதில் சொல்ல முடியாது திண்டாடியதை எண்ணி மிகவும் வெட்கியும் போனான்.
தங்கையின் முன்னால் தான் சிறுவனாகிப் போனதாக மனம் வெட்கியவனுக்கு ‘ஏன் அவளை நான் பார்த்தேன்? சரி, என் மனம் ஏன் அவள்பால் சென்றது?’ தன்னைத் தானே மிகவும் கடிந்து கொள்ளவே முயன்றான்.
“அண்ணா, சீரியசாகத் தான் சொல்கிறேன். இன்றைக்கே சுதா சித்தியிடமும் அக்காவிடமும் பெண் பார்க்கும் படி சொல்லப் போகிறேன். உங்க கல்யாணம் முடிந்த பிறகுதான் என் கல்யாணம் பற்றிய பேச்சே எடுக்க வேண்டும்!” கட்டளையே இட்டுவிட்டாள் நித்தி.
சதீஷை, தனக்குச் செய்வதில் தமையனின் ஆர்வமும் சதீஷ் வீட்டினரின் விருப்பமும் அறிந்தவள் ஒரு போடு போட்டுவிட்டாள்.
“இல்லையோ, நான் கல்யாணமே செய்து கொள்ளப்போவதில்லை. நீங்களும் நடவாததை எண்ணிக்கொண்டு இப்படியே அமர்ந்திருங்க.” சற்றுமுன், இயலாமையோடு சீறிச்சென்ற தங்கையின் பிடிவாதக்குரல் ரீங்காரமிட மீண்டும் கண்ணை மூடி சோஃபாவில் சாய்ந்திருந்தவன், கதவு மெல்லிதாகத் தட்டுப்படவே, “யார்? நித்தியா? திறந்துதான் இருக்கு வாடா.” என்றவன், ‘இப்ப வந்து என்ன புதிதாகச் சொல்லப் போகிறாள்?!’ என நினைத்தவனுக்கு, தங்கையோடு தர்க்கம் செய்யும் எண்ணம் சிறிதும் இருக்கவில்லை.
கதவு திறந்து ஆள் உள்ளே நுழைந்த அரவம் கேட்டும் அமைதி நிலவவே, “கொஞ்ச நாளைக்கு இந்தப் பேச்சை விட்டுவிடுவோம் நித்தி; ப்ளீஸ்.” என்றவாறே விழிகளைத் திறந்தவன், சட்டென்று எழுந்தான்.
“என்ன மதுரா? ஆன்ட்டி…ஆன்ட்டி நன்றாக இருக்கிறார் தானே?”
அழுது வீங்கிய முகத்தையும் கன்றிக் கிடந்த விழிகளையும் ஊன்றிப் பார்த்தவாறே கேட்டவனின் பதற்றம் அவள் விழிகளை நிறையச் செய்தன!
‘இப்போதும் என்னில் கொஞ்சமும் கோபம் வரவில்லையா? என்னை என்னை…நான் ஏன் மறுக்கிறேன் என்று கொஞ்சம் சரி உங்களால் விளங்கிக் கொள்ள முடிகின்றதா? உங்கள் கரிசனையை அனுபவித்த என்னால் உங்களோடு வாழ்வில் பங்கு கொள்வதை நினைத்தும் பார்க்க முடியவில்லையே! அந்தப் பாக்கியம் எனக்கு இல்லவே இல்லை.’ ஏக்கத்தோடு மனதுள் முனகினாள் அவள்.
‘நாம் ஏன் முதலே சந்தித்திருக்கக் கூடாது? இன்னொருத்தனின் மனைவியாக வாழ்ந்த அடையாளத்துடனா உங்களைச் சந்திக்க வேண்டும்!
அப்படியிருந்தும் என்னை உங்களால் எப்படி நேசிக்க முடியும்? என் குழந்தைகளை உங்கள் குழந்தைகள் என்று மார்தட்டிக் கொள்ள முடியும்! அதில் எந்தளவு நிஜம் உள்ளது !? பரிதாபத்தினால் உருவாகும் உறவு பலமாக இருக்குமா?’ அவளால் மனதுள் தான் அரற்ற முடிந்தது.
ஆனால், விடையாக அவளுக்கு புரிந்தது என்னவோ அது அவ்வளவு சுலபம் இல்லையென்பதே!
அவனை நேராகப் பார்த்தாள் மதுரா.
“அம்மா…அவருக்கு ஒன்றுமில்லை; என் மீது நல்ல கோபத்தில் இருக்கிறார்.” முகம் கன்றச் சொன்னவள், “உங்களோடு…கொஞ்சம் கதைக்க வேண்டும்.” தடுமாறினாள்.
“ஓ! அதற்கென்ன வாங்க.” வாயிலை நோக்கி நகர்ந்தவன், “இங்கே இருந்தே கதைக்கலாமே!” என்றவள் குரலில் சட்டென்று திரும்பினான் .
“இல்ல நித்தி…நித்தி வெளியே இருக்கிறாள்; நான் இங்கு வந்ததையும் கண்டாள் தான்; என்னைப் பார்த்தால் சிரிப்பதையே அவள் மறந்துவிட்டாள்.” என்ற மதுராவின் விழிகள் பளபளத்தன.
முக்கால் பகுதி திறந்திருந்த கதவால் எட்டிப் பாரத்த கார்த்திகேயனுள் அத்தனையையும் மீறி நகைப்பு உதிக்கப் பார்த்தது; அப்படி ஒரு முறைப்போடு இங்கேயே பார்த்திருந்தாள் நித்தி.
‘இப்போ என்னவாம்? இங்கே ஏன் வந்திருக்கிறார்? அதுதான் எல்லாம் பேசி முடித்தாயிற்றே!’ நித்தியின் விழிகள் தமையனையும் சுட்டன!
“சின்னக்குட்டி நன்றாக வளர்ந்துவிட்டாள்; என்னையே முறைக்கிறாள்!” வாய்விட்டே சொன்னவன், “அவள் என்னோடும்தான் முறைக்கிறாள் மதுரா. வாங்க, பால்கனியில் இருந்து கதைப்போம்.” பால்கனி நோக்கி நகர, அமைதியாகப் பின் தொடர்ந்தாள்.
கதைக்க வேண்டும் என்றவள், சிறிது நேரம் பேச்சைத் தேடியவாறு அமைதி காத்தாள். தோட்டத்தையும் பக்கத்து வீடுகளையும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடந்த பசுமையையும் வெறுமையாகத் தழுவி வந்தன அவள் விழிகள்.
கார்த்திகேயனும் அமைதியாகவே நின்றான். ‘இப்போ என்ன சொல்லப்போகிறாள்?’ அவன் மனதில் சிறு பரபரப்பு இல்லாமலில்லை.
“கார்த்தி!”
சட்டென்று திரும்பினான் அவன்; மனதிற்கினியவளின் உச்சரிப்பில் தன் பெயர்ச் சுருக்கம் மிகவும் கம்பீரமாகத் தோன்றியது அவனுக்கு!
சற்று முன்வரை மனதில் அடைந்திருந்த கனத்தவேதனை அடித்துப் பிடித்துகொண்டு வெளியேற முயல, முகம் இளக, பார்வை கனிய அவளையே பார்த்திருந்தான் அவன்.
“தத்தளித்து நின்ற எனக்கும் என் குழந்தைகளுக்கும் பரிவும் பாசமுமாக எவ்வளவோ செய்து இருக்கிறீங்க. இது என் வீடில்லை என்று நான் உணராத அளவுக்கு என்னையும் உங்களில் ஒருத்தியாக நடத்தி இருக்கிறீங்க. உங்களையும் நித்தியையும் நான் இருக்கும் வரை என்னால் மறக்க முடியாது.
உங்களால் நம்ப முடியவில்லை என்றாலும் பரவாயில்லை; நீங்கள் இருவருமே எனக்கு..” வேகமாகச் சொல்லிக் கொண்டு வந்தவள், அவனை நேராகப் பார்த்தாள்.
அவள் இதழ்களில் அழகிய முறுவல் ஒன்றும் நெளிந்து மறைந்தது. அவள் வதனமோ குழப்பம் மறைந்து நிமிர்வில் மலர்ந்திருந்தது.
“நீங்கள் இருவரும் எனக்கு மிகவும் நெருங்கியவர்கள்.” சொல்லும் போதே விழிகள் முத்தாக நீர் மணிகளை உதிர்த்தன!
“என்னால் இந்த வீட்டில் சிறு சஞ்சலத்தையும் நான் விரும்பவில்லை கார்த்தி.”
“உங்கள் விருப்பம் பிழையா? சரியா? என்றோ, நிஜமா? பிரேமையா? என்றோ..” கனிந்துகிடந்த அவன் முகம் கடினப்பட்டதைப் பார்த்து விழிகளைத் திருப்பிக் கொண்டவள், “என் அநாதரவான நிலைமையைக் கண்டு பரிதாபத்தில் வந்த ஒன்றா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையே இல்லையென்று நினைக்கிறேன்.”
“உங்களுக்குப் பொருத்தமான பெண்ணைக் கல்யாணம் செய்து ஆரணி ஆரபி போல குழந்தைகளோடு சந்தோஷமாக இந்த வீட்டில் வாழவேண்டும்.
ஆரணி ஆரபி போலத்தான் எனக்கு நித்தியும். அவளும் சந்தோஷமாக வாழவேண்டும். என்னைக் காரணமாக வைத்து உங்களிடையே சிறு பிரச்சனையும் வேண்டாம். என்னையும் என் நினைவுகளையும் அப்படியே உதறிடுங்க. அது உங்களுக்கு என்றைக்கும் நிம்மதி தராது.” கடகடவென்று சொன்னவளை வார்த்தைகளால் வெட்டினான் கார்த்திகேயன்
“போதும் மதுரா; இதைச் சொல்லவா வந்தாய்? உன்னளவில் உன் முடிவைச் சொல்லி என் முடிவையும் சொல்லி விட்டுத்தானே மேலே வந்தேன். அதற்குப் பிறகு, இந்த வீண் பேச்சு எதற்கு? நான் என்ன செய்ய வேண்டுமென்பதையோ, என் வாழ்வு எப்படி இருக்க வேண்டுமென்பதையோ நீ சொல்லத் தேவையில்லை.” என்றுமில்லாதவாறு குரலை உயர்த்தி உறுத்து விழித்தான்.
“இந்த வீடு, இங்கிருந்த நாட்கள், நான், நித்தி இந்த நினைவுகளை எல்லாம் நீ உதறிவிடு மதுரா. அதுதான் உனக்கு நல்லது. உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு. இதோடு இந்தப் பேச்சையும் நிறுத்திக் கொள்!” கடினமாகவே சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தவன், அங்கே, சுவரோரமாக கண்ணீரோடு நின்ற தங்கையைக் கண்டு அசையாது நின்று விட்டான்.

