Skip to content
“எப்படி அவன் கைக்கு போதை மருந்து போச்சு”
“அதுதான்மா இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு இருக்கோம்”
“இந்த அளவுக்கு அவனுக்கு சரக்கு கிடைச்சிருக்குன்னா நமக்கு நல்லா அறிமுகமான நபராலதான் அது நடந்திருக்கும். யாரது?”
“அதுதான்…. விசாரிச்சுட்டு இருக்கேன்மா” தயக்கத்துடன் வெளிவந்தது அவினாஷின் குரல்.
“குரலில் ஏன் இத்தனை தயக்கம்? இது நீ இல்லையே அவி. யாரா இருக்கும் ஒரு வேளை செம்பருத்தியோ?” அவன் அம்மாவிடம் எதையும் அவனால் மறைக்க முடிந்ததில்லை.
“தெரியலைம்மா… “ அவன் குரலில் ஒரு கலக்கம். இப்படி ஒரு குரலை அவர் கேட்டதே இல்லை. சோ அவனுக்கு ஒரு சப்போர்ட் இப்போது கட்டாயம் தேவை.
“அபிராமை கேர்புல்லா பாத்துக்கோ. நான் இன்னைக்கு நைட்டே கிளம்பி அங்க வரேன்”
அவர் எதிரே அமர்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்த ராதிகா அப்படியே திகைத்து நிமிர்ந்தாள். அது சரியாக மங்கையர்க்கரசியின் கண்களில் பட்டது. அவர் மனதில் மின்னல் வெட்டியது. உடனே ஒரு முடிவிற்கு வந்தார்.
“அந்த அளவுக்கு அவசியமில்லைம்மா… “
“அவி… எத்தனை நாள் அபிராமைப் பொத்திப் பொத்தி பாதுகாப்ப? அவன் ரியல் லைஃபை பேஸ் பண்ண வேண்டாமா? அவன் வெளிய வரணும். அவனோட வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்கணும். அதுக்கு நான் அங்க வந்தாகணும்”
“அம்மா… அவன் உங்களை அவமானப் படுத்துவான்மா?”
“உன்னை அவமானப் படுத்தல? நீ எதுக்காக அதை எல்லாம் தாங்கிக்கணும்? அதே காரணத்துக்காகத்தான் நானும் தாங்கிக்கணும்”
“சரி, நீங்க என் சூட்டில் தங்கிக்கோங்க. நான் அபியோட உடம்பு சரியாகுற வரை இங்கதான் அவன் வீட்டில்தான் தங்குவேன்”
“நான் மட்டும் சூட்டில் இருந்து என்ன பண்ணப் போறேன். அங்கேயே உன் ரூமில் நானும் தங்கிக்கிறேன்”
“அம்மா புரிஞ்சுதான் பேசுறிங்களா? இந்த வீடு?”
“எஸ், அதே வீட்டில் அரேஞ் பண்ணு. ரொம்ப ஆர்ப்பாட்டம் எல்லாம் வேண்டாம். நம்ம இன்னும் மும்பைல ஒரு பிளாட்டில் தான் இருக்கோம்னு நினைவு வை. அப்படியே என் கூட இன்னொரு பொண்ணு வருவா… அவளுக்கும் ஒரு அறை ரெடி பண்ணு” அவர் உறுதியாக சொன்ன பின் அவினாஷால் எப்படி மறுக்க முடியும்.
“அம்மா… அவன் என்னை அவமானப் படுத்தினால் கூடப் பொறுத்துக்குவேன். உங்களை ஏதாவது சொன்னா தாங்கிட்டு நிக்கணும்னு எதிர் பார்க்காதிங்க” மகனும் அதே உறுதியுடன் நின்றான்.
வைத்ததும் அதற்காகவே காத்திருந்தாற்போல “மேம் அந்த அபிராம் கொச்சி தானே… மாரத்தான் ஓடுவாரே… அவருக்கு என்னாச்சு?” பட படவெனெக் கேட்டாள்.
“சொல்றேன்… ராதிகா நீ ஸ்போர்ட்ஸ் ஸ்கூலில் படிச்சேன்னு சொன்னேல்ல… அபிராமை அங்கதான் பார்த்தியா?”
“எஸ் மேம். அவரு நல்லாருக்காருல்ல” அவள் கண்களில் சற்று கலக்கம்.
“அதான் நேரில் பார்க்கப் போறியே… “
“நானா?”
“நீயே தான். உனக்கு சப்போர்ட் பண்ண ஆள் வேணும்னு சொன்னேல்ல… அதுக்கு ஒரு சான்ஸ் வந்திருக்கு. அதை உபயோகிக்கிறதா வேணாமான்னு நீதான் முடிவெடுக்கணும்”
“வரேன் மேம்”
“மத்தியானம் பிளைட். வந்துடு” வேலை முடிந்தது என்பது போல எழுந்தார்.
எப்படி இது நடந்தது என்றே புரியவில்லை செம்பருத்திக்கு. காவ்யா அடித்து சொல்கிறாள் செம்பருத்திதான் ட்ரக் சப்ளயர் என்று. ஏதேது விட்டால் ரோலெக்சின் தங்கச்சி இவள்தான் பிடிச்சுட்டுப் போங்க என்று ஏஜென்ட் விக்ரமிடம் பிடித்துத் தந்துவிடுவாள் போலிருக்கிறது.
எதுவாக இருந்தாலும் அவளது கவனக்குறைவுதான் காரணம். அதுவும் அவினாஷின் முன்பு கடமை தவறியதாகக் கூனிக் குறுகி நின்றதை இப்போது நினைத்தாலும் தன்னைத் தானே திட்டிக் கொள்ளத்தான் தோன்றுகிறது.
கடற்கரை ஈர மணலில் அவினாஷ் பதித்து சென்ற காலடித் தடத்தை வேகவேகமாக வந்த அலை அழித்துச் சென்றதைப் போல அவளது கன்னி மனம் துடித்தது.
சொல்லு அவினாஷ் நீ இதை நம்புறியா? நீ சொல்லுற வார்த்தையில்தான் என்னோட உயிரே இருக்கு.
ஆனால் அவினாஷின் பார்வையோ எதையும் கணிக்க முடியாததாய் இருந்தது. ஒரு ஜட்ஜ் குற்றம் சாட்டப்பட்டவரை எந்த ஒரு தீர்மானமும் இல்லாமல் பிளாட்டாய் ஒரு பார்வை பார்ப்பாரே அது போல.
எனக்கு நானேதான் வாதாடவேண்டும். காவ்யா இந்த அளவுக்கு உறுதியாக இருந்தால், எனக்குத் தெரியாதது ஏதோ அவளுக்குத் தெரிந்திருக்கிறது.
“எப்படி நான்தான் ட்ரக் சப்ளை பண்ணேன்னு உறுதியா சொல்றிங்க காவ்யா?”
“நீதானே அபிராம் கிட்ட க்ளோசா பழகுற. உன்னைத் தவிர வேற யாரா இருக்க முடியும்?”
“இல்லையே… நான் சாதாரண செக்கரேட்டரி, ஹெல்பர்ன்னு வேணும்னா சொல்லலாம். அபிராம் சாருக்கும் எனக்கும் இருக்கும் காண்டாக்ட் அவர்ஸ் அதாவது வேலை நேரம் 8-10 மணி நேரம் மட்டுமே”
“அதுக்கப்பறம் அவரை யார் பாக்க வராங்க. டின்னர் யாருகூட போறார் இதெல்லாம் உனக்குத்தான் தெரியும். நீதானே அபியோட அப்பாய்ண்ட்மெண்ட்ஸ புக் பண்ற? ”
“ஒத்துக்குறேன். அதெல்லாம் முறைப்படி அபிஷியலா நான் அப்பாயிண்ட்மெண்ட் தந்திருந்தால், என்ட்ரி போட்டிருந்தால் எனக்குத் தெரியும். இந்த மாதிரி போதை மருந்து தரவங்க முறையா என்ட்ரி போட்டுட்டா வருவாங்க?”
அவினாஷின் கண்களில் சுவாரஸ்யம் தெரிந்தது.
“குட்டையைக் குழப்ப ட்ரை பண்ணாதே. என்ட்ரி போடாதவங்க அபியைப் பார்க்க முடியாது. முன்னாடி வேலை பார்த்த நிகிதாதான் இந்த போதை மாத்திரையைத் தந்து அபிராமை மயக்குனா. உன்கிட்டல்லாம் அவன் மயங்க வாய்ப்பில்லை. அதனால அதே போதை மாத்திரையைத் தான் நீயும் செஞ்சிருக்க?”
ஆச்சிரியமாக கண்களை விரித்துப் பார்த்த செம்பருத்தி “காவ்யா நீங்க படிச்சவங்க, புத்தியோட சிந்திச்சுப் பார்ப்பிங்கன்னு தப்பா நினைச்சுட்டேன். நிகிதான்னு யாரோ ஒரு பொண்ணு செஞ்சா அதே போஸ்டில் வேலை பாக்குற நானும் செஞ்சிருப்பேன்னு நீங்க நம்புறது உங்க தனிப்பட்ட விஷயமா இருக்கலாம். ஆனால் நான்தான் செஞ்சேன்னு சாதிக்கிறிங்க பாருங்க அது சிறுபிள்ளைத்தனமான முடிவு. செக்கரேட்டரி எல்லாரும் போதை மருந்து தந்து மயக்கப் பார்ப்பங்கன்னு நீங்க சொல்றது வெள்ளையா இருக்குறவனெல்லாம் பொய் சொல்ல மாட்டான்னு சொல்ற மாதிரி இல்ல”
அவினாஷுக்கும் காவ்யா எதையோ மறைக்கிறாள் என்றே தோன்றியது. ஆனால் அது என்ன என்று தெரிய வேண்டும். ஆனால் செம்பருத்திக்கு அவன் சப்போர்ட் பண்ண தேவை அங்கு இருக்கவில்லை. அவளே வாளை எடுத்து சுழற்றுகிறாளே. சிறுபிள்ளைத்தனம், புத்தி இல்லை என்று அவளது பதிலில் இருந்த ஊசிகள் காவ்யாவுக்குத் தேவையே…
“நான் சிறுபிள்ளையா? புத்தி கெட்டவளா எவ்வளவு தைரியம்டி உனக்கு. இப்ப சொல்றேன் நீதான் தினமும் அவினாஷுக்கு கூல்ட்ரின்க்ஸ் வாங்கிக் கொடுத்த, அதில்தான் ட்ரக்ஸ் கலந்து தந்திருக்க”
“அதை எப்படி உறுதியா சொல்ற காவ்யா?” என்றான் அவினாஷ்.
“வந்து… அபிராம் நிறைய கூல்ட்ரின்க்ஸ் குடிச்சுட்டு பாட்டிலை போட்டு வச்சிருந்தார். கூல்ட்ரின்க்ஸ்ல போதை மருந்து கலக்குறதுதான் ஈஸி. அதைத்தான் இவ செஞ்சிருக்கா”
“எது? இந்த ப்ராண்டா?” தனது கைப்பையில் எடுத்துச் சென்றிருந்த குளிர்பானத்தைக் காட்ட
“இதேதான்… இப்ப மாட்டிக்கிட்டியா… அவி இப்பயாவது இவதான் அபிராமோட இந்த நிலைமைக்குக் காரணம்னு சொல்லி கழுத்தைப் பிடிச்சு வெளில தள்ளுங்க”
“நான்தான் அந்த கூல்ட்ரிங்சை அபிராமுக்கு வாங்கிட்டு வந்து தந்தேன். அவினாஷ் நான் செஞ்ச தப்பை முழு மனசோட ஏத்துக்குறேன்”
அவினாஷ் திகைத்துப் போய் பார்க்க, காவ்யாவின் முகத்தில் வெற்றிச் சிரிப்பு.
error: Alert: Content selection is disabled!!