செம்பருத்தி 25- 2

செம்பருத்திக்கு இட்டிலிகளைப் பரிமாறியவாறு கணவனிடம் சொன்னார். 

“இப்ப ராதிகா வந்ததும் அவன் முகத்தில் தெளிவு வந்திருக்குன்னு செய்தி வந்தது. நீ ஏன் இப்படி மனசைக் குழப்பிக்கிற?”

“இல்லைங்க… அபிராம் அம்மா அவனுக்கும் காவ்யாவுக்கும் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டாங்க. அபிக்கும் இதில் இஷ்டம்தான்னு சுகுமாரன் பேசினதை நம்பி நான் வேற காவ்யாகிட்ட அபியைக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டதை என்ன சொல்ல… “

தான் ஒருத்தி இருப்பதை மறந்துவிட்டு இருவரும் குடும்ப விஷயங்களைப் பேச ஆரம்பித்ததைக் கண்டு ‘க்கும்’ என்றாள் தொண்டையை சரி செய்வதைப் போல. 

“இந்தா தண்ணி எடுத்துக்கோ செம்பருத்தி” என்று அவளை கவனித்துக் கொண்டே கணவருக்கும் ஒரு தட்டில் உணவினை பரிமாறி நீட்டினார் மங்கை. 

“காப்பி டேஸ்ட் மாறிடுமே… “ என்றார் நாகேந்திரன் மறுபடியும்.

“சாப்பிடுங்க. உங்களை சாப்பிட வச்சுட்டு நான் அபிராமைப் பாக்கக் கிளம்பணும்”

அப்போதுதான் தன்னை அவினாஷ் அனுப்பிய காரணம் நினைவுக்கு வர, “இன்னைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க மேடம்” என்றாள். 

கண்களை சுருக்கி செம்பருத்தியைப் பார்த்த மங்கை “அவினாஷ் சொல்லி அனுப்பினானா?” என்றார். 

அவள் பதில் பேசத் தெரியாது விழிக்க, 

“அவன் ஏதாவது காரணமாத்தான் சொல்லிருப்பான். நீ இன்னைக்கு இங்க தங்கி ரெஸ்ட் எடுத்துக்கோயேன்” மங்கி கேப்பை ஒரு வழியாகக் கழற்றிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார் நாகேந்திரன். 

அவரது முகத்தை முதல் முறையாகப் பார்த்த செம்பருத்தி அதிர்ந்து போனாள். இது இது உண்மையா… 

“சாப்பிடு செம்பருத்தி.. இன்னும் ஒரு இட்டிலி வைக்கவா?” 

“போ… போ..து..ம்ம்… நான் கிளம்பணும்”

“அதுக்குள்ளயா… “

“அவினாஷ் உங்களை பத்திரமா விட்டுட்டு சீக்கிரம் திரும்ப வரச் சொன்னார்” என்றாள் திக்கலுடன். 

“நான் கிளம்பவா மேம்… “

அவளை தீர்க்கமாகப் பார்த்தவர்கள் “கிளம்பும்மா… போனதும் இந்த டிபனை நீயே நேரில் பார்த்து அவினாஷ் கைல தந்துடு. எங்க அவினாஷை நீதான் அங்க பத்திரமா பாத்துக்கணும். உங்க அபி சாரால அவி மனசு உடைஞ்சுடாம பாத்துக்கோ” சொல்லி அனுப்பினார் மங்கை. 

காரில் தான் லங்கைக்கு செல்கிறாள். இருந்தும் கால்களை நகர்த்தக் கூட முடியாது பெரிய பாராங்கல்லைக் கட்டியதைப் போன்றதொரு பாரம். 

“அவி… இது உண்மையா… அபிராம் சாரை நான் எப்படி நேருக்கு நேர் பார்ப்பேன். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் மாட்டி விட்டுட்டிங்களே” ஆயிரம் கேள்விகளையும் ஆதங்கத்தையும் சுமந்து கொண்டு பயணமானது செம்பருத்தியின் மனம். 

அங்கு, லங்கையில், பக்கத்து அறையில் காவ்யா இருப்பதைக் கண்டு கொண்டான் அபிராம். அவனது ப்ரெஷர் எகிறிவிடும் போலிருந்தது. சே துன்பத்துக்கு மேலே துன்பம். 

செம்பருத்தி சேர்ந்த சில வாரங்களில் நடந்த நிகழ்ச்சி அது. 

செம்பருத்திக்கு செல்போன் உபயோகம் என்பது புதிது போல. எங்காவது வைத்துவிடுவாள். அப்படித்தான் அன்று வேலை நேரம் முடிந்ததும் அபிராமின் அறையில் வைத்துவிட்டு சென்றுவிட்டாள். இரவு நேரத்தில் அலைபேசியின் அழைப்பைக் கேட்டு எரிச்சலோடு நிறுத்தப் போக அது எக்குத்தப்பாக ஆன் ஆனது. 

“என்ன செம்பருத்தி போன் பண்ணா எடுக்க மாட்டியோ.. உனக்கு வேலை, தங்க இடம், சாப்பாடுன்னு பிச்சை போட்டது நான் தெரிஞ்சுக்கோ. உனக்கு இருக்குற ஒரே தகுதி அந்த யானை உடம்பும், அசிங்கமான மூஞ்சும்தான். அதுக்கு இவ்வளவு பெரிய வேலை தந்தத்துக்கு நீ காலம் முழுக்க நாயாட்டம் என் காலை சுத்தி வரணும். அந்த அபிராம் என்ன செய்றான், யாரை மீட் பண்ணுறான் இந்தத் தகவல் எல்லாம் தினமும் எனக்கு மெயிலில் அனுப்பல, அந்த வீட்டை விட்டு போன வேகத்தில் வெளிய வருவ. 

அபிராம் நீ போனதில் இருந்து உன்னை விரட்டி விட்டுட்டு இருக்கான்னு எனக்குத் தெரியும். ஏன்னா நீ நிகிதா மாதிரி அவனைக் கைக்குள்ள போடுற வித்தை தெரிஞ்சவ இல்லை. அவனோட டேஸ்ட்டுக்கு முன்னாடி நீயெல்லாம் வேஸ்ட் பிகர். இந்த மூணுவேளை சாப்பாடு வேணும்னா நீ இதை செய்” என்று சொல்லிவிட்டு பதில் எதிர்பார்க்காமல் அலைப்பேசி அணைக்கப் பட்டது. 

அன்று முடிவு செய்தான் செம்பருத்தி உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்ப மாட்டேன். அனுப்பினால் உன்னால் சொந்தக் காலில் நிற்கக் கூடிய அளவுக்கு பயிற்சி கொடுத்தே அனுப்புவேன். 

அதன் பின்னரே நடனத்தில் ஆர்வம் கொண்ட ஓவியாவும் அவன் கண்ணில் பட்டாள். அவர்கள் இருவரின் வாழ்க்கைப் பயணத்திற்கும் அடித்தளம் போட்டான். ஓவியாவை தேர்ச்சி பெறும் அளவிற்கு கல்வி கற்க வழி செய்தான். செம்பருத்திக்கு அக்கவுன்டெண்சி, கம்யூனிகேஷன், மற்றவர்களுடன் பழகும் தன்மை இவை எல்லாம் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தான். குழந்தைகள்  கண்ணில் படுமாறு பல விளையாட்டு பொருட்கள். அதில் ஓவியா சிலவற்றைத் தேர்ந்தெடுத்தாள். செம்பருத்தி சிலவற்றைத் தேர்ந்தெடுத்தாள். அவர்கள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அடுத்தபடி செல்வதைக் கண்டு ரசிக்கும் மன நிலையில் அவன். இதற்கு கைமேல் பலனாக அவனது போதைப் பழக்கமும், தாழ்வுணர்ச்சியும் கொஞ்சம் குறைந்திருந்தது. 

error: Alert: Content selection is disabled!!