உயிரைத் திருடும் அழகியே. 1 – 1

அத்தியாயம் 1

 

 

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் அந்தப் பெரிய மண்டபத்தில் கூடியிருந்தது. வட்ட மேசைகைளைச் சுற்றியிருந்த கதிரைகளில் அமர்ந்தபடியும், நின்றபடியும் நடந்தபடியும் இருவர் மூவராக வட்டமமைத்துப் பேசியபடியும் என்று கலைத்துவிடப்பட்ட தேனீக்கள் போல, திரும்பும் பக்கமெல்லாம் மனிதத்தலைகள் நிறைந்திருந்தது.

 

உதவித் தலைவர், செயலாளர் பொறுப்பாளர் என்று சங்கத்து முக்கிய உறுப்பினர்கள் புடைசூழ அந்த இடத்துக்குச் சம்மந்தமே இல்லாதவர் போன்ற தீவிர முகபாவத்துடன் நடுநாயகமாக நடந்து வந்துகொண்டிருந்தார் இயக்குனரும் சங்கத் தலைவருமான தேவராஜ்.

 

சற்றே நெடிய தேகம், மெலிதாக வயிறு உப்பியிருந்தபோதிலும் கம்பீரம் குலையாத தோற்றம். காதோரம் நரைத்திருந்த ஒன்றிரண்டு முடிகள் கூட நிமிர்வாகக் காட்ட, கூரிய விழிகளை அந்தக் கூட்டத்தைச் சுற்றி அம்பெனச் சுழற்றியபடி வந்துகொண்டிருந்தார்.

 

சினிமா உலகத்தின் பழம் பெரும் காய். ஒன்றல்ல இரண்டல்ல பல வெற்றிப்படங்களை இந்தா இந்தா என்று லட்டைக் கொடுப்பதுபோலக் கொடுத்தவர். சென்றவருடம் வெளியான அவரின் ‘அவள் எங்கே?’ யின் கதையின் கருவின் தாக்கத்திலிருந்து இன்னுமே வெளிவராமல் தவித்துக்கொண்டிருப்பவர்கள் பலர்.

 

தொலைந்துபோன அந்த அவளைத் தங்களுக்குள்ளேயே தேடத்தொடங்கியிருந்தனர் மக்கள். அதுதான் அவரின் வெற்றி. யாரோ ஒருத்தியல்ல அவள். அவள் உனக்குள் இருக்கிறாள். கண்டுபிடி. ஆழ்மனதை அலசு. ஆணின் மனதுக்குள்ளும் அவள் இருக்கிறாள் என்று உணர்த்தியவர். அங்கிருக்கும் அவளை வெளிக்கொண்டுவா என்று மனங்களைக் கிளறிவிட்டவர். அவரின் வெற்றியின் சூத்திரமே அதுதான்.

 

தன் படங்களின் பார்வையாளர்களை என்றுமே அவர் மூன்றாம் நபராகப் பிரித்து வைத்ததில்லை. தன் கதாபாத்திரங்களின் ஒருவராகத் திரைக்குள்ளேயே இழுத்துவிடுவார். அவன் அழுவான், சிரிப்பான், அந்தப் பாத்திரம் என்னவெல்லாம் செய்தானோ அத்தனையையும் பார்வையாளன் செய்துவிட்டு வந்து, கடவுளே இப்படி ஆகிப்போயிற்றே என்று துடித்துப்போவான். துடிக்க வைத்துவிடுவார்.

 

பார்வையாளனின் நாடித்துடிப்பை வாசிப்பதில் அவரை விஞ்சியவர்கள் எவருமில்லை. மனங்களைப் படிப்பதில் சாணக்கியன். அந்த மனங்களைத் தன் விருப்புக்கு ஏற்ப திசை திருப்பிவிடுவதில் மிகப்பெரும் சாணக்கியன். அவரின் ‘அவள் எங்கே?’ திரைப்படம் ஒரு வருடம் கடந்தும் தியேட்டர்களில் இன்னுமே தன் வெற்றிக் கொடியை நாட்டிக்கொண்டிருக்கிறது. அவரின் அடுத்த படம் என்ன என்று அறிந்துகொள்ள, சினி உலகம் மட்டுமல்ல, தமிழ் பேசும் மக்கள் அனைவருமே காத்துக்கொண்டிருந்தனர்.

 

அவர் மேடையேறி அமர்ந்துகொண்டதும், அங்கே நிசப்தம் சப்தமில்லாமல் வந்து அமர்ந்துகொள்ள, ஏற்கனவே சரிபார்க்கப்பட்டிருந்த மைக் செட்டிங்கில் இருந்து அனைத்தும் மீண்டுமொருமுறை பரபரப்பாக சரிபார்க்கப் பட்டது! ஏற்கனவே தயாரிக்கப்பட்ட, நிகழ்ச்சிநிரல் மற்றும் பேசவேண்டிய முக்கிய விடயங்கள் எல்லாம் அடங்கிய கோப்பு அவர் முன்னே பிரசன்னமாகிற்று!

 

கையில் நேரத்தைப் பார்த்துவிட்டு ஆரம்பிக்கலாமா என்பதுபோல், தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் பார்வையை அவர் சுழற்றிய வேளையில் மண்டபத்தின் பின் பக்கமாக இருந்த தலைகள் வெளிப்புறம் நோக்கித் திரும்பின.

 

அடுக்கிவைத்த சீட்டுக்கட்டின் கடைசிக் கார்ட் விழ ஆரம்பித்ததும் அதன் தாக்கு விசையில் வரிசையாக விழும் கார்ட்டுகள் போன்று, அந்தப் பக்கமாகத் தலைகள் ஒவ்வொன்றாகத் திரும்புகையில் அவரின் விழிகளும் கண்ணாடிச் சுவரின் வழியே வெளிப்புறத்தை நோக்கிற்று!

 

தன் பிரசன்னத்தில் அடங்கிப்போன கூட்டம், தன்னைவிட்டு விலகி வேறெங்கோ சிந்தையைக் குவிக்கிறது என்பதிலேயே வருவது யார் என்று உணர்ந்துகொண்டவர் நிமிர்ந்து அமர்ந்தார்.

 

வழுக்கிக்கொண்டு வந்துநின்ற காரின் பின்பக்கக் கதவை ஒருவன் திறந்துவிட, அவள் இறங்கினாள். கண்களில் இருந்த கூலர் தலைக்குக் குடியேற, தன்னைச் சுற்றி நின்றவர்களிடம் ஒற்றைப் புன்னகையை வீசினாள்.

 

ஓராயிரம் நட்சத்திரங்கள் ஒளிவீசிக்கொண்டிருந்தாலும் சூரியன் வந்ததும் அவையெல்லாம் ஒன்றுமில்லாமல் மறைந்துவிடுவது போல, அணிந்திருந்த ஹீலின் தாள லயத்துக்கு ஏற்ப இடையசைய, தன் நளின நடையில் அங்கிருந்த அழகிகளை எல்லாம் ஒன்றுமில்லாமல் பொலிவிழக்கச் செய்துகொண்டு, சைகையாலும், சத்தத்தாலும் அவளை வரவேற்ற ஒவ்வொருவருக்கும் ‘லிப் க்ளோஸ்’ ஸில் நனைந்திருந்த செவ்விதழ் புன்னைகையை வீசியபடி வந்து அவளுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

 

சம்பிரதாய விசாரிப்புகள், குசலங்கள், அணைப்புகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு நிமிர்ந்தவளின் பார்வையில் பட்டார் தேவராஜ்.

 

அவரின் விழிகளும் அவளைச் சந்தித்தபோதிலும், அவள் அதனைப் பொருட்படுத்திக்கொள்ளவில்லை. முகம்மன் செலுத்தும் விதமாகத் தலையசைவைக் கூடக் கொடுக்காமல், அருகிலிருந்த முன்னாள் நடிகை ஒருவரின் கேள்விக்குச் சிரித்தமுகமாகப் பதிலளித்துக்கொண்டிருந்தாள்.

 

அவரின் பார்வை விலகாமல் தன்னைத் துளைப்பதை உணர்ந்தும் லட்சியம் செய்யவில்லை. நேரமாகிவிட்டதை உணர்த்துவதைப்போல, ஒருமுறை தன் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்துவிட்டு, அரசவையைத் தன் ஆளுகைக்குள் அடக்கிவிடும் ஒருத்தியின் கம்பீரத்தோடு கால்மேல் கால் போட்டு நிமிர்ந்து அமர்ந்துகொண்டாள்.

 

அவள் அனன்யா ஆதிரையன்!

 

இன்றைய சினிமா உலகத்தின் கனவுக்கன்னி. முன்னணி நடிகை. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அழகிகள், அடுத்த பத்து வருடத்துக்கான இளைஞர் கூட்டத்தினது இதயங்களை வசியம் செய்து கொள்ளை கொண்டிருப்பார்கள். இந்த நிகழ் காலத்தின் பெரிய வசியக்காரி அவள். சின்ன வாண்டுகளில் இருந்து இளமையைத் தொலைக்கும் தறுவாயில் இருப்பவர்களின் இதயங்களைக் கூட விட்டுவைக்காமல் ரகசியமாகப் படபடக்க வைத்துக்கொண்டிருந்தாள்.

 

அவளை அப்படியே சினி உலகம் வாரி அணைத்துக்கொண்டிருந்தது.

 

சிறந்த இயக்குனராகத் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளப் போராடும் ஒவ்வொருவரும் அவளை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தனர். புகழின் உச்சியில் இருந்தாள். அவள் நடித்தாலே போதும், அந்தப் படங்கள் நூறு நாட்களைத் தாண்டி ஓடும் என்று கண்ணை மூடிக்கொண்டு நம்புவார்கள். நடக்கும் அது!

 

அவளின் கதைத் தேர்வுகளும் அப்படித்தான், நடிப்பும் அப்படித்தான்.

 

அந்த அவளின் நிமிர்வு, செய்கை அவரை எங்கோ இழுக்க, மனதை அடக்கி அன்றைய நிகழ்ச்சியை ஆரம்பித்தார்.

 

தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதிகாலம் தொட்டு இயங்கி வந்தாலும் அதற்கென்று முறையான கட்டடம் இல்லாமையால், தான் தலைவராக இருக்கும் காலத்தில் கட்டடம் எழுப்பிவிடவேண்டும் என்பதில் உறுதிகொண்டிருந்த தேவராஜ், எப்போதும் பிசியாக ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவராகப் பேசி நிதி சேர்ப்பது நடவாத காரியம் என்று உணர்ந்து போனவருடம் அவர் தலைவரானதுமே முதன் முதலில் செய்த விடயம் நடிகர், நடிகையர், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பின்னணியில் இயங்குபவர்கள் என்று சினிமாவுக்காக உழைக்கும் அனைவருக்கும் பொருந்தக்கூடிய வகையில், இந்தக் கூட்டத்துக்கான ஒரு நாளை நிர்ணயித்ததே. அப்போது, ஒருவருடத்துக்குப் பிறகே அந்தநாள் அமைந்திருந்தது.

 

ஆனால், அன்றிலிருந்து இந்த நாளுக்காக அவர் கத்திருந்த காத்திருப்பு பெரும் காத்திருப்பு. அந்தக்காத்திருப்பின் பலன் அவரின் முன்னே கால் மேல் கால்போட்டு அமர்ந்திருந்தது. கட்டம் போட்டுக் காரியம் சாதிக்க ஒரு வருடம் முதலே அவர் போட்ட திட்டத்தின் கடைசிநாள் இன்று. இந்த நாள் அவருக்கு வெற்றியான நாளாக அமைந்ததே ஆகவேண்டும்!

 

பெரிதாக விளக்கத் தேவையில்லாமல் எதற்கான ஒன்றுகூடல் என்று தெரிந்ததால், புகழின் உச்சியில் இருந்து நல்ல சம்பளம் பெறுபவர்கள், இடைப்பட்ட நடிகர் நடிகையர், முன்னாள் நடிகை நடிகர்கள், துணை நடிகர்கள் என்று அவரவரின் வருமானங்களைக் கணித்து அவர்களால் முடியக்கூடிய தொகையினை அன்பளிப்பாகத் தரவேண்டும் என்று அறிவித்தார்.

 

அவரின் இந்தச் சாதுர்யம் எல்லோராலும் புகழப்பட்டது. அனன்யா மட்டும் இதழை ஏளனமாக வளைத்துக்கொண்டாள். இந்தளவுக்கு அவர் திட்டமிடாவிட்டால் தான் அதிசயப்பட்டிருப்பாள்.

 

எல்லோரும் சம்மதித்தார்கள். அவளுக்கும் உடன்பாடுதான். எனவே அவ்வளவுதானே என்பதுபோலப் பார்த்துவிட்டு எழுந்துகொள்ள முயல, “இரு அனன்யா. என்ன அவசரம்!” என்றார், தேவராஜ் மைக்கின் வளியே.

 

தன்னிடம் நேரடியாக அத்தனைபேரின் முன்னும் பேசுவார் என்று எதிர்பார்க்காத அனன்யா அவரைக் கேள்வியாக ஏறிட்டாள்.

 

“மற்ற நடிகைகளும் நீயும் ஒன்னா? ஹீரோக்கு சமனா சம்பளம் வாங்கிறவள் நீ. அதனால ஹீரோக்கள் தருகிற அளவு நீயும் தரலாம். இது என்னுடைய விருப்பம் தான். மறுக்க மாட்டாய் என்று நினைக்கிறன்.” என்றவர், சின்னச் சிரிப்போடு கூட்டத்தைப்பார்த்து, “என்னப்பா, நான் சொல்லுறது சரிதானே.” என்றார், நகைச்சுவை போல.

 

அவரே சிரித்துவிட்டபிறகு மற்றவர்கள் விடுவார்களா. அந்த வருடத்தின் மிகப்பெரிய நகைச்சுவையே அதுதான் என்பதுபோல, “உண்மைதான். அனன்யா தரலாம். தரவேணும்.” என்றது கூட்டம்.

 

இது எதற்கான ஆரம்ப அடி என்று கணிக்க முடியாதபோதும், பணமல்ல அவரின் தேவை என்பது மட்டும் தெளிவு. ஆயினும், எதுவந்தாலும் எதிர்கொள்ளும் துணிவு உண்டே!

 

“மற்ற ஆட்கள் எவ்வளவு தருகிறார்களோ அதேயளவு நானும் தருவன்!” என்றாள் தெளிவாக.

 

“மற்ற நடிகைகளும் நீயும் ஒன்றில்லை. இன்றைய முன்னணி ஹீரோக்கள் வாங்குற அளவு நீயும் சம்பளம் வாங்குறாய். அதனால அவே தார அளவு நீயும் தரலாம். தனியா இருக்கிறாய், காசைச் சேர்த்து என்ன செய்யப்போறாய்.” உதட்டுக்குள் ஒளிந்திருந்த விசமச் சிரிப்புடன் கேட்டார் தேவராஜ்.

 

‘அவள் தனியா?’ கணத்தில் காயப்பட்டுவிட்ட உள்ளம் கொதித்தது! ஆனாலும் அசரவில்லை அவள்.

 

“இந்தச் சங்கத்து உறுப்பினர் எல்லாருக்கும் ஒரேமாதிரியான விதிமுறைகள் தான். எனக்கும் அதேதான். மற்ற ஹீரோயின்ஸ் தாற அளவு காசு நானும் தாறன். தனியா ஒருத்தியை மட்டும் நெருக்க நினைக்கிறது நியாயமில்ல. அதுவும் தலைவராக இருந்துகொண்டு இப்படிச் சொல்லுறது முறையில்ல.”

 

காயப்பட்டும் கலங்காமல் எதிர்வாதம் புரிந்தவளைத் தனக்குள் மெச்சிக்கொண்டார் தேவராஜ். அவரையே பதவியிலிருந்து அசைக்கப்பாக்கிறாளே!

 

“நம்பர் வன் நாயகி நீ. உனக்கு இதெல்லாம் ஒரு காசு கிடையாது! அப்படியிருந்தும் செலவு செய்யாம பொத்திவச்சு என்ன செய்யப்போறாய்? எங்களுக்குத் தந்தா அந்தக் கடடடமாவது கெதியா உருவாகும்.” அவரும் விடாமல் நின்றார்.

 

மீண்டும், ‘கொடுப்பதற்கும் செலவு செய்வதற்கும் உனக்கு யாருமில்லை’ என்கிறார். மனம் கடுத்துப் போயிற்று. அவர் விடாமல் கேட்டதாலேயே என்ன ஆனாலும் சரி கொடுக்கக்கூடாது என்கிற எண்ணம் அவளுக்குள் உருவாயிற்று! எனவே, தன் மறுப்பை மீண்டுமொருமுறை தெளிவாகவும் உறுதியாகவும் அவளும் சொல்ல, விசயம் தீவிரமாக மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்து கூட்டம் வேடிக்கை பார்க்கத் தொடங்கியது.

error: Alert: Content selection is disabled!!