“அப்ப என்ர ஒரு படத்தில நடிச்சு தா. அந்த லாபத்தை நான் கட்டட நிதிக்கு போடுறேன்.” என்றார்.
கூட்டத்தினர் பரபரப்பாயினர். அவரின் வாய்ப்புக்காகக் காத்திருந்த நாயகிகளின் மனதில் பொறாமைத்தீ பற்றத் தொடங்கிற்று!
எங்கு சுற்றி எதற்கு வந்து நிற்கிறார் என்று அறிந்துகொண்ட அனன்யா கொதித்துப்போனாள். மீண்டும் மீண்டும் தூண்டில் வீசும் மீனவனைப்போல, தன்னை அவரின் சூழ்ச்சிக்குள் இழுக்கப்பார்க்கும் அந்த மனிதனை வெறுப்புடன் நோக்கினாள்.
“முடியாது. உங்கட படத்தில என்னால நடிக்க முடியாது. உங்களால என்ன செய்ய முடியுமோ செய்ங்க. நியாயமில்லாத எதுக்கும் நான் தயாரில்லை.”
விசயம் சூடேறிக்கொண்டு போவது அவள் பதில் கொடுத்த தொனியிலேயே புரிந்துபோயிற்று!
விக்ரமனின் முகம் இறுகத் தொடங்கியது. என்ன இருந்தாலும் அவையில் வைத்து அவரின் பேச்சை ஒருத்தி புறம் தள்ளப்பார்ப்பதா?
“காசும் தரமாட்டன் நடிக்கவும் மாட்டன் எண்டால் என்ன நினைச்சுக்கொண்டு இருக்கிறாய் நீ? உச்சத்தில இருக்கிற மமதை பேசவைக்குதா? மக்கள் நினைச்சா ஒரே நிமிசத்தில உன்னை தூக்கி எறிஞ்சிடுவாங்க. செய்யவா செய்ய வைக்கவா?” அத்தனைபேரின் முன்னே அவ்வளவு உறுதியாக அவள் காட்டிய எதிர்ப்பு, அவரின் பதவியை அவருக்கான மரியாதையைச் சீண்டிப்பார்த்ததில், அதனை ஏற்றூக்கொள்ள முடியாமல் உறுமினார், தேவராஜ்.
அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள் அனன்யா. அவரால் அது முடியும். அவர் சொன்னால் பொய்யாக இருக்குமா என்றே மக்கள் யோசிக்க மாட்டார்கள். அதைவிட, இந்த மக்கள் எதை நம்புவார்கள் எதை நம்ப மாட்டார்கள் என்று தெரியாது. என்ன இருந்தாலும் இந்தச் சினி உலகில் அவர் பழுத்த பழம். நல்ல பெயரும் மரியாதையும் உண்டு. அப்படியிருக்க, ஒரு விபரீத விளையாட்டை விளையாடிப்பார்க்க அவள் நினைப்பதே முட்டாள் தானம்.
ஏற்கனவே ஒருமுறை விளையாடிப் பட்டதெல்லாம் போதாதா? அந்த அவளுக்கு அனுபவமும் இல்லை நெளிவு சுளிவும் தெரியாது. இந்த இவள் கற்றுத் தேர்ந்தவளாயிற்றே! எனவே நிதானித்தாள்.
“ஏன் உனக்கு என்ர படத்தில நடிக்க விருப்பமில்லை? எத்தனையோ தரம் கேட்டுட்டன். நீ பிடி தரவேயில்லை. அந்தளவுக்கு என்னோட உனக்கு என்ன பிரச்சனை? கோபம்? அல்லது வன்மம்? ஆத்திரம்?” கண்களில் பளபளப்போடு காரமாகக் கேட்ட அந்த மனிதரை அப்படியே எரிக்கும் கோபம் அவளிடம்.
அவரோ அவளைச் சிந்திக்கவே விடாமல் சிறைசெய்ய முனைந்துகொண்டிருந்தார்.
“எத்தனையோ தரம் கேட்டாச்சு. இருக்கிற அத்தனை பெரிய இயக்குனர் எல்லாரிட்டையும் நடிச்ச உனக்கு என்னட்ட மட்டும் ஏன் நடிக்க முடியாது? அவனவன் நான் ஒரு சான்ஸ் தரமாட்டனா எண்டு அலையிறான். ஆனா நீ.. நானா கேட்டும் மறுக்கிறாய். இது நீ என்ன அவமானப் படுத்துறதுக்குச் சமன்.”
உன்மைதானே என்று எல்லாரும் பார்த்தனர். அவர் கேட்டு அவள்தான் மறுக்கிறாள் என்று அவர்களுக்கும் வெளிப்படயாகவே தெரியும். ஏற்கனவே அவருக்கும் அவளுக்கும் ஏதோ பிரச்சனை இருப்பது போலத்தான் கிசுகிசு புகைந்துகொண்டிருந்தது. அதை உறுதிசெய்வது போல அவரும் கேள்விகளை அடுக்க, சினி உலகமும் அப்படியே அவளைக் கணிக்கத் தொடங்கியதும் உஷாரானாள் அனன்யா.
இந்த நாளுக்காகவே காத்திருந்த அவரும் விடுவதாயில்லை. “இதுதான் சொல்லுறது, ஈஸியா எது கிடைச்சாலும் அதுன்ர அருமை தெரியாது எண்டு.”
சட்டென்று வலியில் சுருண்டுபோயிற்று அவளிதயம்! உண்மைதான். அவர் சொன்ன அத்தனையும் உண்மைதான். இலகுவாகக் கிடைத்த எதனதும் அருமை தெரிவதில்லை தான். அவளுக்கும் ஒருமுறை பொக்கிஷம் ஒன்று கிடைத்ததுதான். அது பொக்கிஷம் என்று உணரும் முன்னே தொலைத்துவிட்டாள். இன்று அதை மீட்டுவிட்டாள் தான். அதற்காக அவள் தொலைத்தவை நிறைய.. நிறைய!
ஆனால், ஒருவன் விழவைக்க என்றே அவளுக்கு அடிக்கிறான். அவளும் சுருண்டுவிடுவதா? நடக்காது! அவளின் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று நேராக அவரை நோக்கினாள்.
“நேரம் இல்ல. அடுத்த மூண்டு வருசத்துக்கு நான் பிசி. டைம் இல்ல. அதனாலதான் மறுத்தன். மற்றும்படி கோபமா? நீங்க யார் எனக்கு கோபப்பட? வன்மம் வளர்க்க. என்ன கதை இது?” என்றவள் நளினமாகத் தோள்களைக் குலுக்கிவிட்டுச் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பில், தன் தோள் சாய்ந்து சிரித்த பெண்ணொருத்தி கண்களுக்குள் மின்னி மறைய அவர் முகம் இயல்பைத் தொலைத்தது. ஆயினும் வேகமாகச் சுதாகரித்து நிமிர்ந்து அமர்ந்தார். காரியம் சாதித்துவிடப்போகும் கடைசி நொடிகள் வந்துவிட்டதாய் அனுபவம் சொல்ல, நிதானமாக வார்த்தைகளை உதிர்த்தார்.
“அப்ப நீ ஃபிரீயா இருந்தா நடிப்பாய். அப்படித்தானே?”
எதற்கு இந்தக் கேள்வி என்று விளங்காதபோதும், அடுத்த மூன்று வருடங்களுக்கு அவள் பிசி என்பது மெய்தான். அவள் நினைத்தால் கூட அதை மாற்ற முடியாது எனும்போது அவரால் எதுவுமே செய்ய முடியாது.
“சொல்லு. பிசி என்றுதானே மறுக்கிறாய்.”
“எஸ்!”
அப்ப நீ ஃபிரீ எண்டால் நடிப்பாய்.”
அவர் கேட்டவிதமே இந்த விடயம் தனக்கு அனுகூலமாக முடியப்போவதில்லை என்று உணர்த்த, வருவதை எதிர்கொள்ளத் தயாராகிக்கொண்டாள் அனன்யா.
“எஸ்!” முதலை விடவும் அழுத்தமாகச் சொன்னாள்.
“பேச்சு மாறக்கூடாது.”
இந்தக் கேள்வியை யார் யாரைக் கேட்பது.
சில கேள்விகள் அவளைக் கொதித்தெழச் செய்துவிடும். அப்படியான ஒரு கேள்விதான் கடைசியாக அவர் கேட்டது.
இதழோரம் ஏளனத்தில் வளைய, “சொன்ன சொல்லையும் குடுத்த நம்பிக்கையையும் காப்பாத்தாம விட்டதே இல்லை நான். தெரியாதா உங்களுக்கு?” என்று காரமாகவே வார்த்தைகளை உதிர்த்தாள்.
ஒன்றும் சொல்ல முடியாமல் அவளைப் பார்த்தார் தேவராஜ். அவளின் பார்வை வீச்சு நேர்கோட்டில் அவரை மோதி நிற்க,
‘ம்க்கும்’ தொண்டையை செருமிக்கொண்டு தன்விழிகளை விலகிக்கொண்டார்.
தன் முன்னே இருந்த பேப்பர்களை ஒதுக்கியபடி, “சக்திவேல்! உன்ர படத்துக்கு புக் பண்ணி இருக்கிற அந்த டேட்ஸ் அப்படியே எனக்குத் தா. இந்தப்படம் முடிஞ்சதும் நீ தொடங்கு!” என்றார், அங்கிருந்த இன்னொரு இயக்குனரான சக்திவேலிடம்.
இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து திரும்பி சம்மதித்துவிடாதே என்று கண்ணசைவில் அவள் உணர்த்தியபோதும், சங்கடமாக அவளிடம் ஒரு பார்வையைச் செலுத்திவிட்டு, “ஓகே சேர்.” என்று விட்டுக் கொடுத்திருந்தான் சக்திவேல்.
அவன் அனன்யாவின் நண்பனும் கூட. ஆனால், என்ன அவரிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனரக உருவாகியவன். குருநாதரின் பேச்சை அந்த அவையில் வைத்து மறுக்க முடியாமல் தடுமாறிப்போய் சம்மதித்துவிட்டிருந்தான்.
அவனை முறைத்தாள் அனன்யா. என்ன மனிதன் இவன். ‘நானே அவளை பெரும் சிரமப்பட்டு புக் பண்ணினான். தரமாட்டன்’ என்று நிமிர்ந்து சொல்வதற்கு என்ன?
ஆனால், ஆட்டுவிக்கிறவன் மேலிருக்கையில் அவனை நொந்து என்ன பயன்?
“இப்பவே அக்ரிமெண்ட் சைன் பண்ணுவோம். கதை சொல்லித்தான் சைன் பண்ணோணும் எண்டு இல்லை தானே என்ர நிலமை. என்னட்ட நடிக்க குடுத்து வச்சிருக்க வேணும்.” நினைத்தது நடந்துகொண்டிருக்கும் உற்சாகத்தில் அவளைச் சீண்டினார் அவர்.
ஆக திட்டமிட்டே நடத்தியிருக்கிறார். மீண்டுமொருமுறை அவரிடம் தோற்றதுபோன்று துடித்தது அவளிதயம். அதுவும் ஒருகணம் தான்.
‘நினைச்சதை நடத்தின திமிர் ஆடவைக்குதா. பாப்போமே அப்படி என்னதான் நடக்கப்போகுது என்று.’ அவளும் ஒன்றும் உலகைப் படிக்காதவள் அல்லவே. அவளின் நிமிர்வு அவளிடம் மீண்டிருந்தது.
அவள் அவரின் அருகில் செல்ல, மற்றவர்கள் விலகினார்கள்.
“நான் நடிச்சாலே நூறு நாள் ஓடும். என்னை வச்சு படம் எடுக்க நீங்க தவம் இருக்கவேணும். ஆறு வருசமா தவம் தானே இருந்தீங்க. இப்பவும் ஒரு இக்கட்டான இடத்தில என்ன நிறுத்தித் தானே இதை சாதிச்சீங்க மிஸ்டர் தேவராஜ்?”
அவள் வாயில் அவரின் பெயர் வெகு இயல்பாக நுளைந்ததில் ஒருகணம் அவரின் விழிகள் அவளிடமே நின்றுவிட்டன.
‘மிஸ்டர் தேவராஜ்? இதுவும் நல்லாத்தான் இருக்கு!’ உதட்டோரம் சின்னதாய் வளைந்தது.
“எஸ் மை டியர் டார்லிங். இது தவம் தான். எனக்கு இது ஒரு சான்ஸ் தான். மிஸ் பண்ண மாட்டன்.” தன்னை மீட்டுக்கொள்ளும் அவரின் வேகத்தில் அவள் உள்ளம் கொந்தளித்தது.
“நீங்க நினைச்சதை சாதிச்ச நினைப்பா? அவ்வளவு ஈஸியா எல்லாமே உங்களுக்குத் சாதகமா நடந்திடாது! ஆனா, மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாட உங்களுக்கு சொல்லியா தரவேணும்? நீங்க உங்க இஷ்டம் போல மற்றவர்களை இயக்கிறதுல மன்னன் தான். ஐ நோ.. என்னைத்தவிர உங்களை பற்றி அறிஞ்ச ஆட்கள் வேற யாரும் இருக்கினமா என்ன?” குத்தினாள் அவள்.
தேவராஜின் முகம் இறுகிப்போயிற்று! அதைக்கண்டு அவளுக்குள் ஒரு சந்தோசம் முகிழ்த்தது.
சைன் பண்ணீனார்கள். கதையே தெரியாமல். சம்பளத்தைப் பார்த்தவள் கேள்வியாக அவரைப் பார்த்தாள். அவள் வாங்குவதைக் காட்டிலும் மூன்று மடங்கு. தயாரிப்பும் அவரே என்பதில் சம்பளத்தில் தாராலமே காட்டினார்.
“இந்தக் காசை வச்சு கட்டிடமே கட்டி இருக்கலாம் நீங்க.”
“இன்னமும் இந்தக் காசுக்காகத்தான் உன்ன மடக்கி இருக்கிறன் எண்டு நினைக்கிரியா நீ.” அவருக்கே சொந்தமான சிரிப்போடு கேட்டார் மனிதர்.
ஒருகணம் திகைத்தாள் அவள். அடுத்தகணம் ஏளனமாய் ஒரு சிரிப்பை சிந்திவிட்டுச் சொன்னாள். “நீங்க வேணுமெண்டால் மாறாம இருக்கலாம். ஆனா நான் பழைய அனன்யா இல்ல. என்னட்ட எவனும் வாலாட்ட முடியாது!” அந்த, ‘எவனும்’மில் நன்றாகவே அழுத்தம் கொடுத்து அவள் சொன்னபோது அவளை வெறித்தார் தேவராஜ்.
அவரிடம் விடைபெறாமலே அவள் நடக்க, “நல்லா மரியாதை குடுக்க பழகிட்ட.” என்றார் வறண்ட குரலில்.
நின்று திரும்பினாள் அனன்யா. அவள் விழிகளில் மிகுந்த ஏளனம். “மரியாதை கொடுக்கப்பட வேண்டிய மனிதர் தானா நீங்க?” வாளாக கேள்வியை வீசிவிட்டுச் சென்றவள் மறையும்வரை பார்த்தது பார்த்தபடி நின்றுவிட்டார் தேவராஜ்.

