27
“இங்கிருந்து என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்?”
“சும்மாதான்ணா. அம்மா அப்பாவினது அறையை இடைக்கிடை க்ளீன் பண்ணுவது வழக்கம் தானே! இன்றைக்கு ஃப்ரீயாக நிற்பதால் க்ளீன் பண்ண வந்தேன்.”
விழிகளைச் சுழற்றி அவ்வறையைப் பார்த்தவனின் நாசிகளில் பெற்றோரின் வாசம் இதமாகத் தாக்க, அவர்களின் நினைவுகளோ பலமாக முட்டி மோத மௌனமாக அங்கிருந்த பெரிய கட்டிலில் அமர்ந்து கொண்டவன், முன் சுவரில் மாட்டியிருந்த தம் குடும்பப்படத்தையே பார்த்திருந்தான்.
கைவேலையை அப்படியே போட்டுவிட்டு வந்த நித்தியும், தமையனருகில் அமர்ந்து கொண்டாள்.
அதேவேகத்தில், அவள் பார்வையும் தம் குடும்பப்படத்தைத் தழுவ, கனத்த நெஞ்சோடு தமையனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
தங்கையின் கரத்தை இறுகப் பற்றிய கார்த்திகேயன், ஒத்த வார்த்தை பேசவில்லை என்றாலும், அண்ணன் தங்கை இருவர் நினைவுகளும் பெற்றோர்களையே சுற்றிச்சுற்றி வந்தது.
மெல்ல விசும்பிய தங்கையை அணைத்துக் கொண்டவன், “இப்போ ஏன்மா அழுகிறாய்? இந்த நிமிடம் அம்மா அப்பா நம்மோடு இல்லையென்றாலும் இந்த வீடு முழுவதும் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள்; நம்முள்ளே இருந்து நம்மை வழி நடத்துகிறார்கள்; இந்த நினைவில் தான் நாளாந்தம் எழுந்து கொள்வேன்!” என்றவன்,
“நாம் மகிழ்வாக இருப்பது ஒன்றுதான்மா அவர்களை திருப்திப்படுத்தும்; எப்போதுமே அதைச் செய்வதில் நாம் தயக்கம் காட்டக் கூடாது.” தமையன் சொல்லச் சொல்ல அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள், சரேலென்று நிமிர்ந்து அவனை நோக்கினாள்.
“நீங்க சொல்வது சரிதான்ணா. அதனால் தான் உங்க கல்யாணத்தைப் பார்க்க விரும்புகிறேன். நீங்க, அண்ணி, குழந்தைகள் என்று இந்த வீட்டில் அம்மா, அப்பா வாழ்ந்தது போல வாழ வேண்டும். அதைவிட அவர்களுக்கு வேறென்ன மகிழ்வு இருக்கும் சொல்லுங்க.” என்ற தங்கையை, விரிந்த முறுவலோடு பார்த்தான் தமையன்.
“சும்மா சொல்லக் கூடாது டீச்சர்…நல்லா கதைக்கப் பழகி இருக்கிறீங்க!”
“அது! அந்த விடயத்தில் எப்போதுமே நாங்க கில்லாடிண்ணா!” கண்களைத் துடைத்துக்கொண்டு தன்னைத் தானே தட்டிக் கொடுத்தாள் நித்தி.
“நீங்க எங்க வாறீங்க என்று விளங்கவில்லை என்றால் உங்களையெல்லாம் எப்படிச் சமாளிப்பது சொல்லுங்க பார்ப்போம்.” தொடர்ந்து கேலி பேசியவள் முகம் கணத்தில் தீவிரமானது.
“அண்ணியும் நீங்களும் சகஜமாகக் கதைத்துப் பேச, நானும் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன்ணா.” ஆரம்பித்த தங்கையின் பார்வையை மெல்லத் தவிர்த்தான் கார்த்திகேயன்.
“அது பார்த்தால் திரும்பவும் பழைய நிலையை விட மோசம் போலிருக்கே! கிட்டத்தட்ட இரண்டு கிழமையாக அண்ணியும் நீங்களும் வேறு வேறு பக்கம் திருப்பிக்கொண்டு திரிவதை நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். எத்தனை தடவைகள் என்ன நடந்தது என்று கேட்டுவிட்டேன்; பதில் இல்லை.” தமையனை முறைத்தாள்.
மதுரா விடயத்தில் தன்னை நிற்க வைத்துக் கேள்வி கேட்கும் தங்கையை மெல்லிய முறுவலோடு பார்த்தவன், “ஏன், உன் அண்ணியிடம் கேட்க வேண்டியது தானே?” வம்பு செய்தான்.
“நல்ல அண்ணிதான்! இப்படிச் சொன்னேன் என்றாலே என் முகத்தையும் பார்க்க மாட்டார்.” அவள் முகம் கோபத்தைக் காட்டினாலும் குரலில் வருத்தமே மேலோங்கி நின்றது.
அவளைப் பொறுத்தமட்டில், வீம்பும் பிடிவாதமும் பிடிக்கும் மதுரா தன்னையும் வருத்தி, சுற்றியுள்ளவர்களையும் வருத்துகிறாள் என்றே எண்ணினாள்.
“நீதான் அவளைப் பார்ப்பது, கதைப்பதை விட்டுவிட்டாயே!” தமையன் குரலில் சிறுவருத்தம் கண்டு நன்றாக முறைத்தாள் நித்தி.
“போங்கண்ணா. அதில் எனக்கு மட்டும் சந்தோஷமா சொல்லுங்க. இதைவிடவும் நன்றாகக் கோபப்பட வேண்டும் என்றுதான் நினைப்பேன். அவர் முகத்தைப் பார்த்தால் முடிவதில்லை. என்றாலும், இந்தளவு பிடிவாதம் ஆகாதண்ணா; உடம்பு முழுதும் பிடிவாதம்.”
“சரிதான்; பிடிவாதம் என்றால் என்ன கலர் என்று கேட்பாய் இல்லையா?” தங்கையை கேலியாக நோக்கினாலும் அவன் மனதில் தீவிரம் வந்திருந்தது.
“நேற்றும் யோகம் ஆன்ட்டி கதைத்தார்.” ஆரம்பித்த தமையனைப் பாராது எழுந்து கொண்டாள் நித்தி.
“எங்கே விசுக்கென்று எழுந்து போகிறாய்? என்ன சொல்ல வருகிறேன் என்று பொறுமையாகக் கேள் நித்தி!”
தமையனின் குரலில் தென்பட்ட கண்டிப்பில் முகம் சுளித்தாலும் பட்டென்று அமர்ந்து கொண்டாள்.
“அவள், கொஞ்ச நாட்களுக்கு முன்தான் வாழ்க்கையில் மிகவும் அடிபட்டு எவ்வளவோ கஷ்டங்களைப் பார்த்து, இப்போதான் நிமிர்ந்து நிற்க முயல்கிறாள்.
அவளிடமிருந்து நம் அவசரத்துக்கு எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.
யாருக்காகவும், எதையும் காரணமாக வைத்து அவளைக் கல்யாணம் செய்ய எனக்கும் விருப்பம் இல்லையம்மா.
என்னை நம்பி முழுமனதாக கல்யாணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். அது..” சொல்லி நிறுத்தி சில கணங்கள் மௌனம் காத்தான்.
மீண்டும் கதைக்கத் தொடங்கியவன் முகத்தில் அவ்வளவு உறுதி!
“நிச்சயம் ஒருநாள் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கும்மா. ஆனால். நம் அவசரத்துக்கு அவள் மனம் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா சொல்லு பார்ப்போம்.
எனக்குமே அவளில் கோபம் வருகுதுதான். அதெல்லாம், என்னைப் பற்றி, உன்னைப் பற்றி, உன் கல்யாணத்தைப் பற்றி என்று சுயநலமாக யோசிக்கும் பொழுது. அப்படி அன்றைக்கு கதைத்துவிட்டேன். அதுதான் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறாள்.” சொல்லி நிறுத்தி மீண்டும் அமைதியானான்.
“இதற்கும் மேல் உனக்கு எப்படி விளக்கிச் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை நித்தி. தயவுசெய்து என் கல்யாணத்தையும் உன் கல்யாணத்தையும் சேர்த்து முடிச்சுப் போடாது…” தொடர்ந்த தமையனை வெட்டும் பார்வை பார்த்தவாறே கைகாட்டித் தடுத்தாள் அவன் தங்கை.
“இங்க பாருங்கண்ணா, உங்க மதுரா எப்படி சொன்னாச் சொன்னது என்று இருக்கிறாரோ, நீங்க எப்படி இதுதான் ஒரே முடிவு என்று இருக்கிறீங்களோ, அதேமாதிரித்தான் நானும்; உங்க கல்யாணம் முடிந்தால் தான் என் கல்யாணம்.” தீர்மானமாகச் சொன்னாள்.
“பரவாயில்லை, மதுராவின் மனம் மெதுவாக மாறட்டும்; நானும் காத்திருக்கிறேன்.” நகர்ந்து வேலையைத் தொடர்ந்தவள், கோபமாகப் பார்க்கும் தமையனைத் திரும்பிப் பார்த்தாள்.
“நீங்க என்னதான் சொன்னாலும் மதுராவின் மனம் கல்யாணம் என்றளவுக்கு மாறுமா என்று யோசனையாகவே இருக்கு. அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்குதோ என்றிருக்குது! எது எப்படியோ, மதுராவோ அல்லது எந்த ‘ரா’வோ உங்களுக்கு ஒரு மனைவி வந்த பிறகுதான் உங்க தங்கச்சிக்கு கல்யாணம் நடக்கும்.” என்றபடி, தன் வேலைகளில் ஆழ்ந்தாள்.
“எப்படியும் பேசி அவளைச் சம்மதிக்க வைத்து கல்யாணத்தை முடித்துவிடுவோம் ஆன்ட்டி.” என, யோகத்திடம் நம்பிக்கையாகச் சொல்லியிருந்தவன், அவளின் உறுதியான பதிலில் யோசனையோடு அமர்ந்திருந்தான்.
குழந்தைகளின் துணிகளை அயர்ன் பண்ண மேலே கொண்டு வந்த மதுராவின் செவிகளில், அனுமதியின்றி நுழைந்தது நித்தி கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்.
அடுத்த நொடி, அயர்ன் பண்ணும் எண்ணமின்றி விறுவிறுவென்று கீழே இறங்கினாள்.
அறைக்குள் நுழைந்து கையிலிருந்த துணிகளை கட்டிலில் வைத்துவிட்டு ஓய்ந்து போய் அமர்ந்தவளுக்கு, வரவர தன் போக்கே புரியாத புதிராகத் தோன்றியது.
“குழந்தைகளுக்கும் ஐந்து மாதங்கள் ஆகப் போகின்றதே! அவர்களின் வயதைக் காரணம் காட்டித்தானே இலங்கைப் பயணத்தை நிறுத்தினாய்?”
‘ம்ம்’
“எப்படியும் இந்த வீட்டை விட்டுப் போயே தீருவேன் என்று இருந்தவள், வேறு இடம் பார்த்துத் தரலாம் என்றதையும் விரும்பாது இங்கு இருக்கின்றாயே! அதுவும் உன் சொந்த வீட்டில் போல்.”
‘கொஞ்ச காலத்துக்காக இருந்த வீட்டை விட்டு புதிய இடத்தில்…ஏன் அந்த வீண் வேலை என்று அப்படிச் சொன்னேன். கார்த்தியும் நித்தியும் என்னை வேற்று ஆளாகக் கருதவில்லை. அதனால், எனக்கும் இது சொந்த வீடு என்கின்ற உணர்வு தன்னாலேயே வந்திருக்கும்; அதில் என்ன தப்புக் கண்டாய்?’
“சரி அதைவிடு; எப்போதும் போல அம்மா கதைக்கிறார் இல்லையே. குறுகிய காலத்தில் மிகவும் நெருக்கமான நித்தி முகம் திருப்புகிறாளே என்பதில் ஆரம்பித்து, குழந்தைகளின் தும்மல் வரை ஏகப்பட்ட விஷயங்களிற்காகக் கவலை கொள்ளும் நீ, என்றாவது இலங்கை போவதைப் பற்றியோ உன் எதிர்காலம் பற்றியோ யோசித்துப் பார்த்தாயா?”
மனசாட்சியின் தீர்க்கமான கேள்விகளுக்கு, ‘குற்றவாளி போலவே கேட்கிறாய்!’ என, சுணக்கத்தோடு எண்ணினாலும் நிமிர்வாகவே பதில் சொல்ல ஆரம்பித்தவள், இக்கேள்வி வந்ததும் முகம் சுளித்தாள். மிகவும் தடுமாறிப் போனாள்.
சட்டென்று வறண்ட நாவை எச்சில் கூட்டி நனைத்தவள், ‘அது வந்து ஆறுமாதங்களுக்குப் பிறகுதான்…’ மனதில் திக்கினாள்.
அப்போதும் வீம்புடன் சுதாகரித்துக் கொண்டவள், “எதிர்காலமா? அதற்கென்ன! இந்த நிமிடம் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் தெரியுமா? கடவுள் ஏன் என்னைத் தண்டிக்க நினைத்தார் என்று எத்தனையோ நாட்கள் கண்ணீர் விட்டுக் கதறிய நான், அவரின் கருணையைப் பார்த்து வாயடைத்துப் போயிருக்கிறேன்.

