அத்தியாயம் 4
என்ன மனிதன் இவன், அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாமல்? அறிமுகம் செய்துகொள்ளப் போனது அவ்வளவு பெரிய தப்பா? கோபத்தில் மூச்சு வாங்கியது அவளுக்கு.
கை கொடுத்த போதும் தரவில்லை. பதிலுக்குத் தன்னை அவன் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை. கடைசியாக அவளை டிஸ்போஸ் பண்ணச் சொன்னானே! என்ன ஒரு திண்ணக்கம். காலடியில் கிடந்த கல்லை எடுத்து ஒரே போடாக அவன் தலையில் போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குமேல் ஒன்றாக நடிக்கப் போகிறார்கள். அதுவும் நாயகனும் நாயகியுமாக. ஒரு அழகான நட்பு இருந்தால் தானே இயல்பாக ஒன்றி வேலைசெய்ய முடியும். இவனுக்கும் அவளுக்கும் கெமிஸ்ட்ரி அல்ல மேத்தமேட்டிக்ஸ் கூட வேலை செய்யாது!
அதுவும் அவன் குரல். இப்போதும் அவளுக்குள் ஊடுருவி என்னவோ செய்தது. விறுவிறு என்று காட்டேஜின் பின்புறமாக வந்தவள் மலையின் பள்ளத்தாக்கைப் பார்த்தபடி நின்றுவிட்டாள்.
துள்ளித்துள்ளி ஓடும் மான் குட்டிகளைப்போல தெரிந்த தொடர் மலைமுகடுகளும், பசுமை குன்றாத இயற்கையும், படிக்கட்டுகளைப்போலே படர்ந்துநின்ற தேயிலைச் செடிகளும் அவளுக்குள் மெல்ல மெல்ல இதத்தைப் பரப்பின.
உடனேயே ஷியாம் கண்ணுக்குள் வந்து நின்றான். இப்போது அவன் இருந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும். பார்த்து ஒரு ஆறு வருடங்கள் இருக்குமா? அந்த இடைவெளியில் வறண்டுபோயிருந்த இதயம் பெரிதும் அவனை எதிர்பார்த்தது.
அதற்குப்பிறகு அந்த அவன் இருந்த இடத்துக்கே அவள் போகவில்லை. விக்ரமனும் அழைக்கவில்லை எனும்போது, அருமையாகக் கிடைத்த ஓய்வுப்பொழுதை அழுத்தங்கள் எதுவுமில்லாமல் கழித்ததும் மனதுக்கு நன்றாக இருந்தது.
அடுத்தநாள் காலை காட்டேஜின் வெளியே வந்தவளின் முன்னால் வந்து குதித்தான் ஷியாம்!
“சிட் சிட் சிட்டுக்குருவி!” என்றபடி.
ஒரு வினாடி நம்பமுடியாமல் திகைத்து, மறுநொடியே, “ஷியாம்!” என்று ஆனந்த சந்தோசத்தில் கூவியவளை அப்படியே அள்ளிக்கொண்டு சுற்றினான் ஷியாம்!
“எப்படி இருக்கிறாய் டார்லிங்?” சுற்றுவதை நிறுத்தாமல் சுகம் விசாரித்தவனிடம், “நீ சுத்துறத நிறுத்தினாத்தான் இனியும் நல்லாருப்பேன். நிப்பாட்டுடா, தலை சுத்துது!” என்றாள் அவள்.
காணும்வரை அவனிடம் சொல்ல ஓராயிரம் விசயங்களும் கேட்டுத் தெரிந்துகொள்ள இன்னுமொரு ஓராயிரம் கேள்விகளும் இருந்தது. கண்ட கணத்தில் இருவரும் மற்றவரைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தனரே தவிர கதைக்க எதுவுமே வரவில்லை.
“பிறகு.. சொல்லுடா லைஃப் எப்படி போகுது?” அவனை உபசரித்துவிட்டு விசாரித்தாள்.
“சூப்பரா போகுது. உனக்கு?”
“பாத்தா எப்படித் தெரியுது? நல்லாத்தான் போகுது.”
“கண்ணுக்குத் தெரியிறத வச்சுக் கணிக்கிறது சரியா இருக்கும்னு சொல்றியா?” அமைதியாகக் கேட்டவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் சட்டென்று எழுந்துவிட்டாள் அனன்யா.
“உனக்குத் தெரியாத எதுவும் என்கிட்ட இல்ல ஷியாம்!”
முகம் காட்டாமல் பதில் சொன்னவளையே பார்த்தான் ஷியாம்! மென்மையான இதயமும், சுட்டித்தனமும், குறும்பும் நிறைந்த பெண்ணொருத்தி இன்றைக்கு அனைத்தையும் தனக்குள் மூடி வைக்கப் பழகிக்கொண்டிருக்கிறாள். சந்தோசமாகச் சிரித்துக் கதைத்தாலும் அந்த விழியோரங்களில் நிரந்தரமாகத் தங்கிவிட்டிருந்த அடிபட்ட வலி அவளை உள்ளும் புறமும் அறிந்தவர்களால் மட்டுமே கண்டுணர முடியும்! அவன் வந்த கணமே அதைக் கவனித்துவிட்டான்.
ஆனால், அதைப்பற்றிக் கதைக்கும் பொழுது இதுவல்ல!
“சவிதாக்கா எப்படி இருக்கா?” அந்தக் கேள்வியில் அவனை முறைத்தாள் அவள்.
“இத்தனை நாளா இருக்கோமா இல்லையா என்றே விசாரிக்காம இருந்திட்டு இப்ப மட்டும் என்னடா அக்கா?”
அவன் முகம் கன்றியது. “என்னத்த சொல்ல? மனசு முழுக்க குற்றவுணர்ச்சி சிட்டு. நானாவது சொல்லியிருக்கலாமோன்னு. அப்போல்லாம் அவ்வளவு சீரியஸா அது போகும்னு நினைக்கல. போனப்போ என்ன செய்றதுன்னு தெரியல. அதுதான்.. எந்த முகத்தை வச்சிட்டு பேசுறதுன்னு இருந்துட்டேன்..” என்று தன் மனத்தைச் சொன்னான்.
“இங்க வர்ற வரைக்கும் எப்படி உன் முகத்தை பாப்பேன்னு தோணிட்டே இருந்தது. இப்போ, உன்னைப் பாத்ததும் மத்தவங்க எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சிக்கணும் போல இருக்கு.” அவளைப்போலவே தடுமாறியிருக்கிறான். காரணமே இல்லாத ஒரு தயக்கம்; ஒரு குற்ற உணர்ச்சி.
“விடு! எல்லாம் நடக்கணும்னு இருந்திருக்கு போல!” என்றாள் ஆறுதலாக. உடனேயே, “அக்காகிட்ட பேசுறியா?” என்றவள், பதிலை எதிர்பாராமலேயே ஃபேஸ்டைமில் சவீதாவை அழைத்திருந்தாள்.
“என்னடி திடீர்னு அக்கா நினைவெல்லாம் வந்திருக்கு?” அழைப்பை ஏற்றதுமே கேள்விதான் பறந்து வந்தது.
இதுதான் சவீதா! செல்லம், கண்ணு என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டிருக்க மாட்டாள். அதிரடி சரவெடிதான்! ஆண் துணையும் குடும்பத்தின் ஆதரவும் இல்லாமல் தன் காலில் நிமிர்ந்து நிற்கும் ஒரு பெண்ணை அச்சொட்டாய் அவளில் காணலாம். அந்தத் தைரியம் தான் அனன்யாவையும் நிமிர வைத்தது!
“உன்ன நான் நினைக்கலக்கா. இன்னொருத்தன் தான் நினைச்சிருக்கான்.” சவிதாவோடு பேசினாலே போதும். உற்சாகம் எப்படித் தொற்றிக்கொள்ளும் என்று தெரியாமலேயே தொற்றிக்கொண்டுவிடும் அனன்யாவுக்கு.
“யாரடி அது? அதுவும் என்னை நினைக்கிற ‘அவன்?’”
“நான் தான்! அது நான்தான்! அது நானேதான்!” என்று பாடிக்கொண்டு கமெராவின் முன் வந்து நின்றான் ஷியாம்!
“டேய் ஷியாம்! எப்படிடா இருக்க? கல்யாணம் ஆச்சா? உன் பொண்டாட்டி எங்க? எத்தனை பசங்க? என்னடா, அப்ப பாத்த மாதிரியே இருக்க!”
அவளின் கேள்விகளில் கலகலத்துச் சிரித்தான் ஷியாம். “இன்னும் கல்யாணம் ஆகலக்கா. எவள பாத்தாலும் லவ் வர்ற மாதிரியே இல்ல. நீ யாரையாவது பாத்துத் தா, நான் கட்டிக்கறேன்!” என்றான் அவன்.
“விடுடா விடுடா! அந்த மகராசி இன்னும் கொஞ்ச காலத்துக்கு நல்லா இருக்கட்டும்!”
“பாத்தியாக்கா, என்னையே கலாய்க்கிற!” என்று அவனோடு வளவளத்துக்கொண்டிருந்தாலும், உதட்டில் ஒட்டவைத்த சிரிப்புடன் அமர்ந்திருந்தவளைக் கவனிக்கத் தவறவில்லை அவள்.
“நீ எப்படி இருக்க?” என்றாள் அனன்யாவிடம்.
ஷியாமிடம் போன்று, ‘நல்லாருக்கேன்’ என்று அவளின் கூர்மையான பார்வைக்குப் பதிலளிக்க முடியாமல், “இருக்கேன்கா!” என்றாள் அனன்யா.
“இருக்கணும்! நீ நிமிர்வா தெளிவா இருக்கணும்! நம்மளோட சந்தோசமும் நிம்மதியும் அடுத்தவனால நமக்கு கிடைக்கவே கிடைக்காது. நம்மகிட்டத்தான் இருக்கு. நாமதான் கண்டு பிடிக்கணும். நீ சந்தோசமா இல்லனா அதுக்குக் காரணம் நீ மட்டும் தான்!” என்றாள் அழுத்தமாக.
இதுதான் சவீதா. வண்டி வண்டியாக புத்திமதி எல்லாம் சொல்லமாட்டாள். நெற்றியடிபோல் ஒரு வாக்கியத்தில் முடித்துவிடுவாள். அப்படித்தான் இன்றும். என்ன நடந்தது என்று சொல்லாமலேயே அவள் மனநிலையைக் கணித்துச் சொன்னவளின் அன்பில் சட்டென்று கண்ணீர் துளிகள் இரண்டு அவள் விழிகளுக்குள் உருண்டு திரண்டது! ஆயினும் வெளியே விடாமல் உள்ளிழுத்துக்கொண்டாள் அனன்யா!
“கண்டிப்பாக்கா! நான் சந்தோசமா இருப்பேன்கா!”
சவீதா வைத்துவிட்ட பிறகும் அவளின் பேச்சின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை அனன்யாவாள். தனக்குள்ளேயே சுய அசலில் இறங்கியிருந்தாள்.
‘அதுதானே. நான் எதுக்குத் தடுமாறனும்? துடிதுடிக்கணும். இதோ இந்த ஷியாம எப்படி பாக்கப்போறேன்னு கூடத்தான் தடுமாறிட்டு இருந்தேன். ஆனா அவனைப் பாத்தப்போ சந்தோசம் தானே முதல்ல வந்திச்சு! இப்பவரைக்கும் சந்தோஷமாத்தானே போயிட்டு இருக்கு. பிறகு எதுக்கு பயப்படணும்? அதது வர்றப்போ எதிர்கொள்ளுறது தான் புத்திசாலித்தனம். அதை விட்டுட்டு, நடக்கமுதலே நடக்கப்போறதைப் பத்தி, அது நடக்குமானே உறுதியில்லாம சும்மா நினைச்சு பயந்து தடுமாறி என்னோட சந்தோசத்தை நானே ஏன் கெடுத்துக்கணும்? அக்கா சொன்னதுபோல எல்லாமே நம்ம கண்ணோட்டத்திலதான் இருக்குபோல!’ சிந்திக்கச் சிந்திக்க கலங்கிய நீராயிருந்த அவள் மனது தெளிவுபெறத் தொடங்கியது!
ஷியாமும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு அவளிடம் கேட்கப் பலவிசயங்கள் இருந்தன. கேட்கமுடியாமல் அவள் முகம் தடுத்தது. கலக்கம், குழப்பம், சிந்தனை, தெளிவு என்று வரிசையாக மாறிக்கொண்டு போன அவள் முகபாவத்தில், தெளிந்துவிட்டாள் என்று தெரிந்து, “வர்றியா? விக்ரமன் அண்ணாவப் பாத்துட்டு வரலாம்.” என்றபடி எழுந்தான் அவன்.

