அத்தியாயம் – 6
அன்று திவ்யதர்ஷினிக்கு நிறைய வேலைகள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருந்தன. எப்படியாவது அனைத்தையும் மதியத்திற்குள் முடித்துவிட்டு விரைவாக வீட்டிற்குச் செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தாள்.
அன்று அவள் தம்பி சசிதரனின் பிறந்தநாள். அவன் கல்லூரியில் இருந்து திரும்பி வருவதற்கு மாலையாகிவிடும். அதற்குள் வீட்டிற்குச் சென்று வீட்டைத் தயார்படுத்தி அவனுக்குப் பிடித்த உணவு வகைகளைச் சமைக்க வேண்டும்.
வருடா வருடம் இது நடக்கும். சசிதரன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறானோ என்னவோ சந்தோஷ் இந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பான். ஓசியில் விருந்தென்றால் சும்மாவா?
சசிதரனுக்குப் பிடித்த கேக் வாங்கிக் கொண்டு வருவதாக ஏற்கனவே சந்தோஷ் சொல்லியிருந்தான். ஆகவே அந்த வேலை அவளுக்கு மிச்சம். அன்று காலையில் சசிதரனுக்காகக் கோவிலுக்குச் சென்று அவன் கனவுகள், லட்சியங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும் என வேண்டுதல் வைத்துவிட்டு வந்தாள்.
சசிதரன் மிகவும் நன்றாகப் படிப்பான். தற்சமயம் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் வருடத்தின் இறுதியில் இருக்கிறான். அவளுக்கு அவள் தந்தை உழைத்துப் படிக்க வைத்தார். அதைப் போல் அவள் தம்பிக்காக அவள் உழைத்துக் கல்லூரி கட்டணத்தைக் கட்டுகிறாள்.
வாங்கும் சம்பளத்தில் சிக்கனமாகச் செலவு செய்து எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்கிறார்கள். அது ஒன்றும் பெரிய விஷயமாகப்படவில்லை அவர்களுக்கு. சசிதரனுக்குச் சதுரங்க ஆட்டத்தில் மிகவும் நாட்டம் உள்ளது. சிறுவயதிலிருந்தே தமக்கையுடன் விளையாட ஆரம்பித்து அதில் ஆர்வம் தோன்றி மேலும் மேலும் எனப் படிப் படியாக முன்னேறிவிட்டான்.
இதுவரையில் படிப்பு பாதிக்காத வகையில் சிறு சிறு போட்டிகளில் உள்ளூர்களிலும் வெளியூர்களிலும் கலந்துகொண்டு பல வெற்றிவாகை சூடியிருக்கிறான் சசிதரன்.
அவன் திறமையை வெளிப்படுத்த அடுத்தக் கட்டதுக்கு நகர வேண்டுமென்றால் தேசிய, ஆசிய, மற்றும் உலக அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அவன் செல்ல வேண்டும். அதில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் பல வருடங்களாகக் காத்திருக்கிறான்.
முதலில் அதற்காக அவன் தன்னைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு அவன் பயிற்சி முகாம்களில் பங்கு கொண்டு பயிற்சி பெறவேண்டும். அதற்குப் பணம் செலவாகும்.
தன் தமக்கைக்கு ஏன் வீண் செலவு வைக்க வேண்டும் என அதைப் பற்றி திவ்யதர்ஷினியிடம் எதுவும் சொல்லவில்லை. ஆனால் புத்திசாலியான திவ்யதர்ஷினி அதைப் பற்றி அறிந்து கொண்டாள். அதுவுமில்லாமல் எந்த நிறுவனமாவது தனக்கு ‘ஸ்பான்சர் பண்ணுவார்களா என விசாரித்துக் கொண்டிருந்தான் சசிதரன்.
ஸ்பான்சர்கள் கிடைக்கும் பொழுது கிடைக்கட்டும். முதலில் அவன் பயிற்சி முகாமில் சேர்ந்து கொள்ளட்டும் என திவ்யதர்ஷினி தான் சேமித்து வைத்திருந்த பணத்திலிருந்து சிறிது தொகையை எடுத்து பிறந்த நாள் பரிசாக அவனுக்குக் கொடுக்க எண்ணியிருந்தாள்.
அந்தப் பணத்தை அவள் அவசரகால நிதிக்கு என்று ஒதுக்கி வைத்திருக்கிறாள். அதைத் தொடக் கூடாது என்று அவள் முடிவு செய்திருந்தாள். கூடிய விரைவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டாள்.
அன்று அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருந்தாள். கோவிலுக்குச் சென்றுவிட்டு, நேராக வங்கிக்குச் சென்றாள். அங்கு சேமிப்பில் வைத்திருந்த பணத்தில் சிறிது எடுத்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் மெதுவாக வந்து கொண்டிருந்தாள்.
அப்போது பள்ளி செல்லும் அவசரத்தில் இருந்த ஒரு சிறுவன், அவள் வருவதற்குள் சாலையைக் கடந்துவிடலாம் என எண்ணி தடாலெனக் குறுக்கே பாய்ந்துவிட்டான்.
எங்கே அவன் மேல் இடித்துவிடுவோமோ என்ற பயத்தில் தன் இருசக்கர வாகனத்தை அப்படியே இடது பக்கமாக வளைத்தாள். அவளது போதாத நேரம் அதே சமயத்தில் ஒரு கார் ரிவர்ஸ் கியரில் சட்டெனப் பின்னால் நகர்ந்தது.
சற்று குறுகலான தெரு என்பதால் காரை பின்னால் எடுத்துக் கொண்டிருந்த ஓட்டுநரும் அவளை கவனிக்கவில்லை. இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் வாகனத்தை நகர்த்த, இரண்டுமே உரசிக் கொண்டன.
காரில் அமர்ந்திருந்த மித்ரனுக்கு எரிச்சல் அதிஉச்சத்தில் இருந்தது. அவன் சித்தியின் பையனின் கார் ஷோரூம் திறப்புவிழாவுக்குச் செல்ல நேரமாகிவிட்டது. ரதிப்ரியா வெறும் கையாக எப்படிச் செல்வது எனப் பூங்கொத்து ஒன்றை வாங்கிச் செல்லலாம் என்றாள்.
அதற்காகவே அந்தப் பூக்கடையில் வண்டியை நிறுத்தியிருந்தான். பூங்கொத்தை வாங்கிக் கொண்டு கிளம்புகையில் தான் இந்த அக்கப்போர்.
மித்ரன் கடையின் திறப்பு விழாவுக்குச் செல்கிறான் எனத் தெரிந்ததும் ரதிப்ரியாவும் உடன் வருவதாகத் தெரிவித்தாள். அவளுக்கு பி. எம். டபிள்யூ. காரொன்று வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாய் ஆசை என மித்ரனை நம்ப வைத்தாள்.
மித்ரனும், ‘இங்கே பார், நான் ஒன்றும் நீ அழைத்தற்காக வரவில்லை. உன் வியாபாரத்துக்கு ஆள் பிடித்து வந்திருக்கிறேன்” என வத்சனிடம் மறைமுகமாகச் சொல்ல நினைத்தான். அதனால் ரதிப்ரியா உடன் வருகிறேன் என்றதும் அவன் மறுப்புத் தெரிவிக்கவில்லை.
வண்டி ஓட்டத் தெரியாதவர்களுக்கு முதலில் யார் லைசன்ஸ் தருகிறார்கள் எனச் சுறுசுறுவென்று கோபம் ஏறியது மித்ரனுக்கு. கடுகடுவென்ற முகத்துடன் கீழே இறங்கி வந்தான்.
திவ்யதர்ஷினி மோதியதில் அந்தப் புத்தம் புதிய காரில் கீறல் விழுந்து, பின்னால் வலது பக்கம் இருந்த ‘லைட்’ கண்ணாடி உடைந்து போயிருந்தது. கூடவே அவளது இருசக்கர வாகனத்தில் இருந்த கண்ணாடியும் உடைந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது.
மித்ரன் எதிரில் நின்றிருந்த அந்த தர்ஷியை சற்றும் அங்கே எதிர்பார்க்கவில்லை. அவளைப் பார்த்த மாத்திரத்தில் அவனையும் அறியாமல் அவன் மனதில் குப்பென மகிழ்ச்சி பொங்கியது. ஆனந்தக் களிப்பில் மனம் கூத்தாடியது.
என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்பதைச் சில கணங்கள் மறந்து போனான்.
புத்துணர்ச்சியுடன் காணப்பட்ட திவ்யதர்ஷினியைப் பார்த்ததும் அதுவரையில் மனதில் நிரவியிருந்த புழுக்கமும் அவசரத்தன்மையும் முற்றிலும் மறைந்து போனது. அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆவல் கிளர்ந்தது.
அவள் கருவிழிகளில் தழும்பிய கருணைப் பார்வையா, அல்லது, அவள் முகத்தில் குடிகொண்டிருந்த அமைதியான அழகா எதுவென்று தெரியவில்லை அவனை அவள் பால் ஈர்த்தது. ஏனோ மனமெல்லாம் தித்திப்பைத் தத்தெடுத்துக் கொண்டது.
எல்லாம் ரதிப்பிரியா வெளியில் வரும் வரையில் மட்டுமே இந்த நிலை தொடர்ந்தது. வெளியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என உள்ளே அமர்ந்திருந்த ரதிப்ரியாவுக்குத் தெரியாததால் காரிலிருந்து இறங்கி அங்கே வந்தாள்.
அங்கே நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும் , “நீயா? உனக்கு என்ன இதே வேலையாப் போச்சா? எப்ப பாத்தாலும் எங்களோட பிரச்சினை பண்ணிட்டு இருக்க? யாராவது உனக்குப் பணம் கொடுத்து எங்ககிட்ட பிரச்சனையை வளர்க்கச் சொன்னாங்களா? உண்மையைச் சொல்லு” என எடுத்த எடுப்பிலேயே கத்தினாள் ரதிப்ரியா.
அதுவரையில் மித்ரனைச் சூழ்ந்திருந்த ரம்மியமான மனநிலை பச்சோந்தி இடத்துக்கு ஏற்ப நிறம் மாறுவதைப் போல் மாறியது. அவனுக்கும் சந்தேகம் முளைவிட ஆரம்பித்தது.
‘அது எப்படி எங்கே சென்றாலும் அவனையே குறி வைத்துத் தாக்குகிறாள்? ஒருவேளை திட்டமிட்ட சதியோ ?’ எதிரில் நின்றிருந்தவளை கூரிய விழிகளால் ஆராய்ச்சிப் பார்வையில் அலசினான்.
குற்றம் செய்பவர்களிடத்தில் மட்டுமே கடுமை விரவியிருக்கும் என்று நம்புபவன் மித்ரன். அதுவும் திவ்யதர்ஷினி வாய் திறந்து பேசியது அவனுக்கு எரிச்சல் உண்டு பண்ணியது. அவள் பேசுகையில் குரல் தேனில் முக்கியதைப் போல் இனிமையை வாரி இறைத்தாலும் வார்த்தைகளை என்னவோ தீம்பிழம்பில் நனைத்துவிட்டாளே. மித்ரனால் அதைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அதுவும் கருணை கொட்டும் அவளது முகம் இப்போது கடுகைப் போட்டால் படபடவென்று பொரியும் நிலையில் இருந்தது.
அந்த இளைஞனைப் பார்த்தால் மட்டும் தான் முகம் குழைவாகிப் போய்விடும் போல. அவனைப் பார்த்தால் மட்டும், ‘ஈ’ என்று இளித்துக் கொண்டு நிற்கிறாளே என அந்த நேரத்திலும் எங்கோ இருக்கும் சந்தோஷைப் பிடித்து இழுத்து அவனைத் தூற்றிக் கொண்டிருந்தான்.

