சதிராடும் சித்திரமே 6 – 3

இப்போதெல்லாம் இது போல் நிறைய பணம் பறிக்கும் சம்பவம் நடக்கிறது. ஒருவேளை இவளும் அப்படித் திட்டமிட்டு வந்திருக்கிறாளோ என அவளைக் குற்றவாளியைப் போல் பார்த்தனர்.

 

கூட்டத்தின் நாடியைப் பிடித்துவிட்டான் தேர்ந்த தொழிலதிபனான மித்ரன். “அப்போ இந்த டேமேஜை சரி பண்ண எனக்கு நிறையச் செலவாகும். உன்கிட்டே இருந்து வந்த பணம் கண்டிப்பா பத்தாது. ஆனால் உன் தப்புக்கு தண்டனையா அதை வச்சுக்கிறேன்” என மளமளவென்று பேசினான்.

 

பளபளவென்று இருந்த புதிய காரில் அவளது வாகனம் உரசியிருந்தது உண்மையே. ஆனால் சேதாரம் அவனுக்கு மட்டுமா? அவளுக்கும் அல்லவா? இருவரின் தவறும் அதில் அடங்கியிருக்கிறதே. இவனைச் சும்மா விடக்கூடாது என அவளின் கோபம் சீண்டப்பட்டது.

 

“அப்படிப் பார்த்தா என் கண்ணாடியும் உடைஞ்சிருக்கு. நீங்களும் தான் உங்க காரை பின்னாடி எடுத்தீங்க” என நிலைமையை விளக்க முயன்றாள். உடன் அவள் கையைப் பற்றி மேலே உயர்த்தியவன், தன் சட்டைப் பையிலிருந்து இரண்டு ரூபாய்த் தாள்களை எடுத்து அவள் கையில் வைத்தான்.

 

“இந்தா உன் வண்டியைச் சரி செய்ய இது போதும். உன்கிட்டே நின்னு வம்பு வளர்த்துட்டு இருக்க நேரமில்லை. நான் இப்போ கிளம்பனும். வண்டியை எடு, இல்லை, இடிச்சுத் தூக்கிட்டுப் போயிட்டே இருப்பேன்” என அவளிடம் சொல்ல, அவனின் கம்பீரமான தோரணையில் அவன் தப்பு செய்திருக்க மாட்டான் என்று மற்றவர்கள் அனைவரும் நம்பினர்.

 

“ஏம்மா, இடிச்சதும் இல்லாம, இப்படிச் சண்டைக்கு நிக்கிற?” என மித்ரனுக்குச் சாதகமாக மக்கள் பேச, “வா, ரதி கிளம்பலாம்” என அதற்குமேல் தாமதிக்காமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டான் மித்ரன்.

 

அவனைப் பின்பற்றி ரதிப்ரியாவும் காரில் ஏறினாள்.

 

அவசர அவசரமாகக் காரின் எண்ணை அலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்ட திவ்யதர்ஷினி, காரின் உறுமலில் சுயநினைவுக்கு வந்தாள். இவன் தன்னை இடித்துவிட்டுச் சென்றாலும் செல்வான் என உயிர் மேல் அக்கறை கொண்டு, வண்டியுடன் அவசரமாக ஒதுங்கி நின்றாள்.

 

காரை விருட்டெனப் பின்னால் எடுத்தவன் புழுதியை அவள் மேல் வாரி இறைத்துவிட்டுக் கிளம்பினான். செல்லும் காரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் திவ்யதர்ஷினி.

 

அவளுக்கு அந்தப் பணம் கட்டாயம் தேவைப்படும் என்று யோசிக்கவில்லை மித்ரன். அவனைப் போல் அனைவரும் பணத்தில் புரள்வார்கள் என்று தவறாக எண்ணிக் கொண்டான்.

 

‘அப்போ கூட மன்னிச்சிடுங்கன்னு சொன்னாளா? திமிர். உடம்பு முழுக்கத் திமிர்’ என மனதுக்குள் உறுமிக் கொண்டிருந்தான் மித்ரன்.

 

‘பிளீஸ்.. எனக்கு அந்தப் பணம் வேணும். கொடுத்திடுங்க’ என்ற அவளின் மன்றாடல் காதில் லேசாக உரசிச் சென்றது.

 

‘ஒருவேளை அவளுக்கு அந்தப் பணம் தேவைப்பட்டிருக்குமோ?’ என நினைத்த மறுநொடியே, ‘மயங்க அங்க ஒன்னுமில்லை’ என்ற அவளது சீண்டல் தீண்டிச் சென்றது.

 

‘அவளுக்கு இருக்கிற கொழுப்புக்கு …’ என அவன் மனதுக்குள் அவளை வறுத்தெடுத்தான்.

 

‘கார் எண்ணைப் புகைப்படம் எடுத்தாளே. வரட்டும். வந்து நன்றாக மண்டை காயட்டும்” என எண்ணினான் மித்ரன்.

 

அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு நஷ்டத்தை அவனுக்கு உண்டாக்கி விடுகிறாள். அதாவது போகட்டும். பணத்தை வைத்துச் சரி செய்துவிடலாம். ஆனால், அவன் அவளைத் தீண்டிய மூன்று முறையும், தீயாய் அவனுள் உணர்வுகள் பற்றிக் கொண்டனவே. நெஞ்சிற்குள் பொங்கும் உணர்வுகள் சதிராட்டம் போடுகின்றதே.

 

அதை என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. ஒருதரம் அப்படி நடந்தால் பரவாயில்லை. மூன்று தடவையும் அதே கதை தான். ‘அவள் என்ன அவ்வளவு அழகாகவா இருக்கிறாள்?’ எனத் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.

 

“மித்ரன்…” என்ற ரதிப்ரியாவின் குரல் எங்கோ கிணற்றுக்குள் இருந்து கேட்பதைப் போல் கேட்டது.

 

தலையை உலுக்கிக் கொண்டு அருகில் அமர்ந்திருந்தவளைப் பார்க்க, “என்ன மித்ரன், யாரோ ஒரு பெண் சொன்னதைக் கேட்டு இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கீங்களா?” என ரதிப்ரியா கேட்க, ‘ஆமாம்’ என எப்படிச் சொல்வான்?

 

“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. அவளுக்கு உங்க அருமை தெரியலை. விடுங்க” என ரதிப்ரியா கிடைத்த சந்தர்ப்பத்தை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டாள்.

 

‘அதானே.. அவன் இருக்கும் உயரம் என்ன, அவள் இருக்கும் லட்சணத்துக்கு அவனுடன் போட்டிக்கு வருகிறாள். அவள் தலைகீழாக நின்றாலும் அவளால் தன்னை எதிர்த்து வெற்றி கொள்ள முடியாது’ என்ற இறுமாப்பு தோன்றியது.

 

இதே திவ்யதர்ஷினி கூடிய விரைவில் அவனுக்குப் போட்டியாகத் தொழிலில் இறங்குவாள் என்றும் அவனையும் மிஞ்சி வெற்றி பெறுவாள் என்றும் இப்போது யாராவது இவனிடம் சொல்லியிருந்தால், ‘போடா லூசு’ என்று கண்டிப்பாகத் திட்டியிருப்பான்.

 

காரின் வேகத்தைக் கூட்டிய மித்ரன், வத்சனின் கார் ஷோரூமில் போய் நிறுத்தினான்.

 

ஜோடியாக வந்து இறங்கியவர்களைப் பார்த்ததும், “என்ன மித்ரன், இந்த ரதிப்ரியா தான் எனக்கு அண்ணியா?” எனக் குசுகுசுவென்று பேசியது ரதிப்ரியாவின் காதுகளில் விழ, அவளுக்குக் குப்பென்று உள்ளுக்குள் மலர்ந்தது.

 

ரதிப்ரியாவை ஏற்கனவே வத்சனுக்கு தெரியும். அவர்கள் இருவரும் படித்த அதே கல்லூரியில் தான் வத்சனும் இளங்கலை படித்தான்.

 

“வெட்டிக் கதை பேசாம எங்களை உள்ள விடறியா, இல்லை, இப்படியே கிளம்பட்டுமா?” என அவளின் கற்பனையை அங்கேயே பட்டாக்கத்தி வைத்து வெட்டிவிட்டான் மித்ரன்.

 

“ம்ம்ம்… கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து ஆகணும் இல்லை” என்ற வத்சன் அப்பொழுதே பளபளவென்று முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன் காரை நன்கு கவனித்தான்.

 

“பரவாயில்லையே நான் சொன்ன மாதிரியே இந்தக் கார்ல வந்துட்டியே. நண்பேன்டா” என அவனை வம்புக்கு இழுக்க, “எனக்கு வேற வழியில்லை. என் கார் கண்ணாடி உடைஞ்சு போய் வொர்க் ஷாப்ல நிக்குது” என்றான் மித்ரன்.

 

“இப்படி ஒரு சாக்குச் சொல்லி இந்தக் கார்ல வந்தியே அதுவே எனக்கு போதும்” என்றவனிடம், “இந்த டப்பா வண்டியை எல்லாம் ஓட்டிட்டு வர்றேன். எல்லாம் என் தலையெழுத்து” என மித்ரன் சலித்துக் கொண்டான்.

 

“என்னது டப்பா வண்டியா?” எனக் காரின் மேல் கையை வைக்க, ஏற்கனவே திவ்யதர்ஷினியின் வண்டி இடித்து உடைந்து போயிருந்த பின்பக்க கண்ணாடி பொலபொலவென்று உதிர்ந்து கீழே விழுந்து சத்தம் எழுப்பியது. அப்போது தான் கீறலும் அவன் கண்களுக்குப் பட்டது.

 

வத்சனுக்கு லேசாக நெஞ்சில் வலி ஏற்பட்டது. “டேய்… உண்மையிலேயே டப்பா ஆக்கிட்டு வந்துட்டியா? உன் ஈகோவுக்கு அளவே இல்லையா? இப்படி வேணும்னே காரை இடிச்சுட்டியே” என அவன் குறைப்பட்டுக் கொள்ள,

 

“இடிச்சது நானில்லை. வேணா இடிச்ச பொண்ணோட வண்டி நம்பர் தர்றேன்” என திவ்யதர்ஷினியின் வண்டி எண்ணை அவனுக்கு அனுப்பி வைத்தான் மித்ரன்.

 

அவர்கள் பேசுவதையே கேட்டுக் கொண்டிருந்த ரதிப்ரியாவுக்கு, ‘இவன் எப்போது அந்தப் பெண்ணின் வண்டி எண்ணை மனப்பாடம் செய்தான்?’ எனப் புருவம் சுருக்கினாள்.

 

“நீயே பேசி முடிச்சிட்டு வர்றதை விட்டுட்டு எனக்கு வேலை கொடுக்கிறயா? நீயெல்லாம்…” என அவன் கழுத்தை நெறிப்பதைப் போல் அவனை நெருங்க, அப்போது முக்கிய விருந்தினர்கள் சிலர் அங்கே வந்தனர்.

 

கையை கீழே இறக்கிய வத்சன், “நல்லா வருவடா நீ” என அவனை முறைத்தவாறு திரும்பினான்.

 

ஏற்கனவே தன் அன்னை மீனாட்சி அங்கே வந்திருக்க அவரைப் பார்த்துக் கையசைத்தவாறே உள்ளே சென்றான் மித்ரன்.

 

error: Alert: Content selection is disabled!!