நீ வந்து தங்கிய நெஞ்சில் 5.2

நிரோஜனும் அதைக் கவனித்தான்தான். நடந்தவற்றை நண்பர்களிடம் பகிர்ந்துவிட்டு, அந்த புகைப்படத்தையும் காட்டினான்.

அதைப் பார்த்ததும், “யாமினி உன்னை துரத்தி துரத்தி அடிக்காம விட்டிருக்கிறாள் எண்டு நினச்சுச் சந்தோசப்பட்டு. எங்களுக்கே திடீரெண்டு பாக்க பக்கென்று ஆயிட்டுது. அப்ப அவளுக்கு எப்பிடி இருக்கும்பி? உன்னில் பிழை இல்லை எண்டுறதுக்காக இது சரி எண்டு அர்த்தமில்லை மச்சான்.” என்றான் நவீன்.

அவனுக்கும் அது புரிந்ததால்தானே அவளோடு கதைக்க முயன்றுகொண்டிருக்கிறான். திலினியைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. இப்போதுதான் பல்கலை முடித்துவிட்டு புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள். ஒரு முறை சொன்னால் போதும். பிடித்துக்கொள்வாள். அதைவிட மனத்தில் எதையும் வைத்துக்கொள்ளாமல் எல்லோருடனும் பழகுவாள். இன்று முகமெல்லாம் கூம்பிப்போய், இவர்களைப் பார்க்கும் பொழுதுகளில் கண்ணை எட்டாத பொய் முறுவல் ஒன்றைச் சிந்திவிட்டு, சாப்பிடுவதில் கவனம் செலுத்துவதுபோல் காட்டிக்கொண்டிருந்தாள்.

“தில் தில் தில்லானா! எழும்பி இஞ்ச வா!” என்று அழைத்தான் நிரோஜன்.

“இல்ல அது…” அவளை முடிக்க விடாமல், “அப்ப வரமாட்டாய்? இனி எங்களோட கதைக்க மாட்டாய்? இனி அவளா வந்தாலும் சேர்க்கிறேல்ல சரியா?” என்று அவன் சொல்லி முடிக்க முதலே எழுந்து வந்து அவர்களோடு அமர்ந்துகொண்டாள் திலினி.

“சொறி, அப்போத நான் கொஞ்சம் நிதானமா இருந்திருக்கலாம். லைட்டா கோவப்பட்டுட்டன். ஆனா ஃபிரெண்ட்ஸ் எண்டா அப்பிடித்தான். பெருசா எடுக்காத ஓகே!” என்று அவன் ஒற்றைக் கரத்தால் பாதி இதயத்தைப் பிடிக்க, அவளும் மறு கரத்தால் மிகுதி இதயத்தைப் பிடித்துக் காட்டிச் சமாதானமாகிக்கொண்டாள்.

உணவு முடிந்து போகையில், “நீ பிழையா எதையும் செய்யேல்ல எண்டு நிருக்குத் தெரியும். ஆனா அவன்ர லவ்வர யோசிச்சுப் பார். அவளுக்குக் கோபமாம். அவள் இவனைப் பேசின கோபத்தில இவன் உன்னட்ட பாஞ்சிருக்கிறான். இனி ஃபோட்டோ போடுறதா இருந்தா என்னை மாதிரி சிங்கிளோட மிங்கிளாகி ஃபோட்டோ எடுத்து போடு ஓகே!” என்று அவள் தலையைப் பிடித்து ஆட்டிச சொல்லிவிட்டுப் போனான் நவீன்.

அப்போதுதான் அவளுக்கு விடயமே பிடிபட்டது.

இங்கே யாமினிக்கு இருப்புக்கொள்ளவேயில்லை. ஒரே வளாகம் என்றாலும் இருவரினதும் அலுவலகங்களும் வேறு வேறு. சிற்றுண்டிச் சாலைகளும் அந்த வளாகத்தில் வேறு வேறு பக்கங்களில் மூன்று இருந்தன.

நிரோஜன் குழு பெரும்பாலும் போகும் கேண்டீனுக்கு அஜந்தாவையும் இழுத்துக்கொண்டு வந்தாள். கைப்பேசியில் வீம்பு கட்டியவளால் அப்படியே இருக்க முடியவில்லை. நேரில் பார்த்தால் வந்து கதைப்பான், அப்படியே சமாதானமாகலாம் என்று நினைத்தாள்.

ஆனால், இவள் போன நேரத்திற்கு திலினிதான் இன்னொரு பெண்ணுடன் அமர்ந்திருந்தாள். இவர்களைக் கண்டதும் உற்சாகமாகக் கையைத் தூக்கி ஆட்டியவளின் பார்வை தயக்கத்துடன் யாமினியைத் தொட்டு வர, வேகமாக உயர்ந்து ஆடிய கையும் மெதுவாகக் கீழிறங்கிப் பதுங்கிக்கொண்டது.

“இவள் ஏன்டி உன்னை ஒரு மாதிரிப் பாக்கிறாள்?”

“நானும் அதைத்தான் யோசிக்கிறன்.” என்ற யாமினிக்கு அவளுக்கும் நிரோஜனுக்குமிடையில் நடந்த சண்டை அவளுக்குத் தெரிய வந்திருக்குமோ என்று ஒரு கணம் தோன்றிற்று.

ஆனால், நிரோஜன் அப்படிச் சொல்ல மாட்டான் என்று நம்பினாள்.

இரண்டு கோப்பி, சீஸ் கேக்கில் இரண்டு துண்டு என்று வாங்கிக்கொண்டு வந்து, தனி மேசையில் அமர்ந்துகொண்டார்கள்.

பின் பக்கக் கழுத்தை தேய்த்துவிடுவதுபோல் செய்தபடி பார்வையைச் சுழற்றி, அந்த வளாகம் முழுக்க நிரோஜன் நிற்கிறானா என்று அலசினாள் யாமினி.

“இதுக்கு நீ ஒரு மெசேஜை போட்டுட்டே வந்திருக்கலாம்.” அவளைக் கவனித்திருந்த அஜந்தா மெல்லிய கேலி இழையோடச் சொன்னாள்.

“நான்தான் கோவமா இருக்கிறனே.” சிரித்துக்கொண்டு பதில் சொன்னாள் யாமினி.

“பிறகு ஏதுக்கடி இஞ்ச வந்து குந்தியிருக்கிறாய்?”

“சமாதானமாக.”

அற்ப ஜந்துவைப் பார்ப்பதுபோல் அவளைப் பார்த்து வைத்தாள் அஜந்தா. யாமினிக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.

“இதெல்லாம் விளங்குறதுக்கு நீ காதலிக்கோணும் குஞ்சு.” என்று சிரித்தாள் யாமினி.

“ஆளை விடு சாமி. காதலும் வேண்டாம், நான் உன்னை மாதிரி அரை பைத்தியமா அலையவும் வேண்டாம்.” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் அவள்.

கேக் சாப்பிட்டு, கோப்பியையும் அருந்தி முடித்ததும் அஜந்தா பணம் செலுத்தச் சென்றாள். அந்த இடைவெளிக்குள் யாமினியிடம் வந்த திலினி, “யாமினி உங்களோட கொஞ்சம் கதைக்கோணும்.” என்று சொன்னாள்.

புருவங்களை இலேசாகச் சுருக்கிக் கேள்வியாகப் பார்த்தாள் யாமினி. என்னவோ ஆரம்பம் முதலே அவளால் திலினியோடு இயல்பாகப் பேசவோ பழகவோ முடியவில்லை. இன்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிறகு ஒரு ஒவ்வாமை உணர்வே வந்திருந்தது.

ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், பார்வையில் சின்ன நட்புணர்வையும் காட்டாமல் கேள்வியாக ஏறிட்டாள்.

“என்னால உங்க ரெண்டு பேருக்கையும் சண்டையாம் எண்டு கேள்விப்பட்டன். நிருவில பிழையே இல்ல. அந்த போட்டோவை நான் எடுத்ததே அவருக்கு தெரியாது. இப்ப இன்ஸடா, என்ர கேலரி எண்டு எல்லா இடத்தில இருந்து அந்த போட்டோவை மொத்தமா டிலீட் பண்ணிட்டன். நிருவ சந்தேகப்படாதீங்க ப்ளீஸ். அவரோட சண்டை பிடிக்காதீங்க. நிரு எனக்கு நல்ல ஃபிரென்ட், ஃபிரெண்டிலியான டிஎல். அவ்வளவுதான்.” என்று அவள் சொல்லிவிட்டுப் போகவும் இவளுக்கு முகம் ஜிவுஜிவு என்று சிவந்துபோயிற்று.

நெற்றிப்பொட்டை அழுத்திவிட்டுத் தன்னைச் சமாளிக்க முயன்றாள். இதற்குள் இவளிடம் வந்து திலினி பேசியதையும் இவள் முகம் மாறிப்போனதையும் கவனித்துக்கொண்டிருந்த அஜந்தா, பணத்தைச் செலுத்திவிட்டு வேகமாக இவளை நெருங்கினாள்.

அவள் எதுவும் கேட்க முதலே, “நீ போ அஜந்தா. நான் வாறன்.” என்றுவிட்டுத் தனியாகச் சென்று நிரோஜனுக்கு அழைத்தாள் யாமினி.

ஆர்வமாக ஏற்றவனிடம், “உங்களை நான் சந்தேகப்பட்டனானா நிரோ. ஏன் இப்பிடி என்ர பெயரைக் கெடுக்கிற வேலை பாக்கிறீங்க. உங்களிட்ட நான் இதை எதிர்பாக்கவே இல்லை.” என்றவள் பேச்சில் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அன்று முழுக்க அவன் அழைத்தபோது ஏற்காமலும், அனுப்பிய குறுந்தகவல்களுக்குப் பதில் போடாமலும் இருந்தவள் அழைக்கிறாள் என்றதும் உள்ளம் துள்ள அழைப்பை ஏற்றிருந்தான்.

அவளானால் அன்று காலையில் போலவே அவன் செய்யாத ஒன்றுக்கு அவனைக் குற்றம் சாட்டுகிறாள்.

“யமி, திரும்பவும் அவசரப்பட்டு எதையும் கதைக்காத. இப்ப என்ன பிரச்சினை உனக்கு? அதச் சொல்லு முதல்.” காலையில் போன்று நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்கிற கவனத்துடன் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி வினவினான் அவன்.

“என்ன பிரச்சினையா? நீங்கதான் பிரச்சினை. என்னத்துக்கு திலினிட்ட எல்லாத்தையும் சொன்னனீங்க. அவள் வந்து எனக்குப் பாடம் எடுக்கிறாள். அவளும் நீங்களும் நல்ல பிரெண்ட்ஸாம். என்னை சந்தேகப்பட வேண்டாமாம் எண்டு.

அவளுக்கு எப்பிடி தெரியும்.

என்னை கேட்டா நீங்கதான் சொல்லியிருக்கோணும்.

ஏய் லூசாடி நீ நீயும் நானும் சண்டை பிடிச்சதை நான் ஏன் அவளிட்ட சொல்லுறன்

அத நீங்கதான் சொல்லோணும். எனக்கு என்ன தெரியும்?
ஒட்டிக்கொண்டு பைக் ரைட் போனது நீங்க ரெண்டு பேரும். கடைசில கெட்ட பெயர் எனக்கு. நல்லாருக்கு நிரோ. உங்களுக்காக அவள் வந்து என்னட்ட கதைக்கிறாள். அந்தளவுக்கு உங்க ரெண்டு பேருக்கையும் நல்ல பழக்கம் போல.”

அதுவரை நேரமும் திலினிக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்று யோசித்துக்கொண்டிருந்தவன் கொதித்துப்போனான். “காணும் நிப்பாட்டு யாமினி. இதுக்கு மேல ஒரு வார்த்த… ஒரு வார்த்தை எண்ணெய் பற்றி பிழையா உன்ர வாயில வந்துது… என்னை மனுசனா பாக்க மாட்டாய்!” எண்றுவிட்டுப் பட்டென்று அழைப்பைத் துண்டித்திருந்தான் அவன்.

error: Alert: Content selection is disabled!!