உயிரைத் திருடும் அழகியே 5 – 1

அத்தியாயம் 5

 

 

காட்சி ஒன்று:

 

 

நுவரெலியாவின் மலைச்சரிவில் வட்டமாகத் தண்டவாளம் அமைக்கப்பட்டு, ஒளிப்பதிவாளர் இன்றித் தானாக நகரும் டிராலியில் பொருத்தப்பட்டிருந்த கிரேன், கேமராவுடன் உயரத்தில் நின்று சுற்றிச் சுழன்று அந்த இடத்தின் அழகு குன்றாமல் தன் கண்களுக்குள் அடக்கத் தொடங்கியது!

 

இராமாயணத்தில் சொன்னதுபோல, இராவணன் சீதையைக் கடத்திவந்து சிறைவைத்த இடம் அசோகவனம். அதே இடத்தில் பத்தினிக் கடவுளாக அருள்புரிந்துகொண்டிருந்தாள் சீதை. அதனாலேயே சீதாஎலிய என்று பெயர் பெற்றிருந்த கிராமம். சூரியனின் உக்கிரம் தாக்கிவிடாமலிருக்க, பனிப்போர்வை போர்த்தித் தன் மகளின் அழகு கெடாமல் பாதுகாக்கும் இயற்கை அன்னை. இராமன் கொடுத்துவிட்ட கணையாழியை அனுமன் சீதைக்கு வழங்கும் காட்சியைப் பிரதி செய்திருந்த சிலை, அதற்குக் கீழே கிடந்த அனுமாரின் பாதச் சுவடுகள் என்று அனைத்தையும் சிறைப்பிடித்தபடி இறங்கிய கமரா, ஒரு நடுத்தர வர்க்கத்தின் வீட்டினை உயரத்திலிருந்து தன் கண்ணுக்குள் மெல்ல மெல்லக் கொண்டுவர ஆரம்பித்தது.

 

சுற்றியிருந்த கிராமம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய அந்த வீடு மட்டுமே மையப்புள்ளியாகிய வேளையில், “ஆக்க்ஷன்!” என்று மைக் வழியே இரைந்த விக்ரமனின் குரலில், அந்தந்தப் பாத்திரமேற்றவர்கள் நடிக்கத் தொடங்கினர்!

 

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துவிட்டு இருள் சூழும் வேளையில் உடலின் மொத்தச் சக்தியையும் வடித்துக் கொடுத்துவிட்டு வெறும் உடலமாகத் திரும்பி வந்துகொண்டிருந்தார் கொடிமலர். மெல்லிய உடல், நலுங்கிய சேலை, வறுமையைக் காட்டும் முகம், கலைந்த கேசம் என்று உழைத்துத் தேய்ந்து ஓடாகிப்போயிருந்தார் அவர்.

 

கேட்டினைத் திறக்கும்போதே அவரின் விழிகள் மூத்தவனின் சைக்கிளைத் தேடி, அது இல்லாததில் அவன் இன்னும் வரவில்லை என்று கணித்துக்கொண்டது. சின்னவர்கள் இருவரும் படித்துக்கொண்டிருப்பதிலேயே மகள் உள்ளேதான் இருக்கிறாள் என்று அறிந்து மனம் அப்படியே ஆசுவாசப்பட்டதில் அவர் முகம் நிம்மதியைக் காட்டிற்று!

 

மகள் வரப் பிந்தினால் மாலை உணவையும் அவர்தான் கவனிக்க வேண்டும். ஓய்வுக்குக் கெஞ்சும் உடலை இழுத்துப் பிடித்துச் செய்து முடிப்பதற்குள் மொத்தமாக உடைந்துபோய்விடுவார் கொடிமலர். மீண்டும் காலையில் கொழுந்து பறிக்க ஓடவேண்டுமே!

 

“கருப்பட்டியும் தேத்தண்ணியும் தரவாம்மா?”

 

அந்தச் சின்ன வீட்டின் சமையலறையில் இருந்து, காந்தக் கண்களில் கனிவைத் தேக்கி எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தாள், பருவப் பெண்ணொருத்தி!

 

கமரா அவளிடமே தேங்கிற்று! அவள்தான் இத் திரைப்படத்தின் நாயகி, பிருந்தா!

 

இராவண தேசத்தின் அற்புத அழகி! மஞ்சள் மேனி. ஒடிசலான தேகம். நிலத்தைத் தொட்டு நிற்கும் ஒரு பாவாடையும் சட்டையும் அணிந்திருந்தாள். இரட்டைப் பின்னல். விற்புருவங்கள் இரண்டுக்கும் நடுவே, வெற்றிலை வடிவில் பொட்டு. பொட்டின் மேலே சின்னக் கீற்றாய் திருநீறு. கவிபாடும் கருவண்டு விழிகள். செயற்கையின் பூச்சுக்கள் எதுவுமே தேவைப்படாத இயற்கை எழிலி!

 

தன் களைப்பு உணர்ந்து கேட்ட மகளின் மீது பாசம் பெருக்கெடுக்க, “போடன! அதுக்கிடையில உடம்பை ஒருக்கா நனைச்சுக்கொண்டு வாறன்!” என்றுவிட்டு வீட்டின் பின்பக்கமாய் நகர்ந்தார் கொடிமலர்!

 

“கட் கட்!” விக்ரமனின் அறிவிப்போடு அந்தக் காட்சி முடிவுக்கு வந்தது!

 

“சூப்பர் அனன்யா! அந்தப் பாத்திரமாவே மாறிப் போய்ட்ட!” யாரையும் இலகுவில் பாராட்டி அறியாத விக்ரமன் தன் முத்துக்களைச் சிதறவிட்டிருந்தார்.

 

படத்தின் ஆரம்பக் காட்சியே அதுதான். பூஜை போட்டு அவர் எடுத்த முதல் ஷாட்டும் அதுதான். தான் எதிர்பார்ப்பது போன்ற பாவத்தைக் காட்டி அதிலே நடிப்பவர்கள் நடித்து, முதல் காட்சியை முதல் டேக்கிலேயே எடுத்துவிட்டால் அந்தப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்பது யாருக்கும் தெரியாத அவரின் ஆழ்மனத்தின் நம்பிக்கை.

 

அதற்கு ஏற்ப, கள்ளம் கபடு அறியாத, அறியாமை நிறைந்த இளம் பருவத்து மங்கையின் சாயலை அந்தச் சின்னக் காட்சியிலேயே நடித்து அனன்யா அசத்திவிட்டிருந்ததில் அவருக்கும் பாராட்டுவதைத் தவிர்த்து வேறு வழியிருக்கவில்லை.

 

என்ன இருந்தாலும் திரையுலக ஜாம்பவானின் வாயிலிருந்து கிடைத்த பாராட்டில் மனம் குளிர்ந்துபோனாலும் காட்டிக்கொள்ளவில்லை அனன்யா.

 

அடுத்த காட்சியையும் நன்றாக இருட்டிவிடமுதல் எடுக்கவேண்டும் என்பதில் வேகமாக விளக்கத் தொடங்கினார் விக்ரமன்.

 

“கொடிமலருக்கு நான்கு பிள்ளைகள். கணவன் ராசப்பு தேயிலை தொழிற்சாலைல வேலை. நல்ல உழைப்பாளி என்றாலும் குடிகாரன். ஆனா, சுயமரியாதை நிறையவே இருக்கிறவன். என் காசுல நான் குடிக்கிறன். என்னை எவண்டா கேள்வி கேக்கறது? என்று சொல்லுற ஆள். அடுத்தவன் ஒரு சொல்லுச் சொன்னா பிடிக்காது. பிள்ளைகளையும் அப்படித்தான் வளக்கிறான். அவனுக்குப் பிருந்தா என்றால் உயிர். சீதையின் இன்னொரு வடிவம் தான் தன்னோட மகள் என்று சொல்லுவான். அவளும் அப்படித்தான். அப்பாவில உயிரையே வச்சிருக்கற ஒருத்தி. மிச்சத்தைப் பிறகு சொல்லுறன், அடுத்த காட்சி அனன்யா, ராசப்பு, கொடிமலர் மூன்றுபேர் மட்டும் தான் நடிக்கணும். இதே காஸ்ட்டியும் தான். ரெடியா?” என்று அவளில் கொண்டுவந்து முடித்தார் அவர்.

 

அவளும் எழுந்துகொள்ள அவர் கேட்டதுபோல தண்டவாளம் மாற்றியமைக்கப்பட்டு அதன் மேல நிறுத்தப்பட்டது டிராலி. கண்முன்னே நடக்கும் காட்சியை ஒளிப்பதிவு செய்யப்போவதால் கிரேன் அகற்றப்பட்டது. டிராலியில் ஒளிப்பதிவாளரும், கமரா இயக்குபவரும் அமர்ந்துகொள்ள, விக்ரமன் சொன்னவற்றை உள்வாங்கிக்கொண்டு நடிக்கத் தயாரானாள் அனன்யா.

 

 

 

காட்சி இரண்டு:

 

களைத்திருந்த உடலில் மதுவின் வியர்வைகள் அரும்பியிருக்க, மெல்லிய தள்ளாட்டத்துடன் வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தார் ராசப்பு. அவரைக் கண்டதுமே, “அப்பா, அம்மாச்சியை பாத்திட்டு ஓடிவாறன்!” என்றுவிட்டு, நின்றால் தடுத்துவிடுவார் என்பதில் நிற்காமல் கோயிலை நோக்கி ஓடத்தொடங்கினாள் பிருந்தா.

 

“இருட்டுர நேரம் போகாத எண்டு எத்தனை தரம் சொல்லுறது? குட்டிக் கழுதை சொல்பேச்சுக் கேக்கவே மாட்டியா நீ. இண்டைக்கு வா கால முறிக்கிறன்!” அதட்டலாகக் குரல் கொடுத்தவரின் பேச்சை என்றும்போல இன்றும் காதில் வாங்கவில்லை அவரின் பெண்.

 

“நீங்க ஒவ்வொரு நாளும் முறிச்சு முறிச்சு, இப்ப எனக்கு காலே இல்ல ராசப்பு!” குறும்புத்தனம் கொப்பளிக்கும் அந்தக் குரலும் அவளைப்போலவே தேய்ந்து மறைந்திருந்தது.

 

“பாத்தியா கொடி, உன்ர மகளின்ர வாய! அப்பன் கைவைக்க மாட்டான் எண்டுற தைரியம்! வரட்டும் இண்டைக்கு!” குரல் என்னவோ முரட்டுத்தனமாகத்தான் வெளிவந்தது. முகம் மட்டும் கனிந்துபோய் மகளின் சுட்டித் தனத்தில் உண்டான சிரிப்பில் மலர்ந்திருந்தது.

 

“இப்ப இப்படித்தான் சொல்லுவீங்க. அவள் வந்ததும் அம்மாச்சி சாப்பிட்டியா குடிச்சியா எண்டு குழைவீங்க! சும்மா என்னட்ட குரலை உயத்துறதை விட்டுட்டு பாக்கிற வேலையை பாருங்கோ!” கணவரை அறிந்தவராகச் சொன்னார் கொடிமலர்.

 

“அவள் என்ர சீதையம்மாடி! என்ர சாமி! அவளின்ர வயசில அதது கல்யாணத்தை கட்டி இடுப்பில ஒண்டு வயித்தில ஒண்டு எண்டு அலையுதுகள். என்ர மகள் படிச்சு ரிப்போட்டராகி, போராடி இந்த ஊருக்கே சம்பளத்தை கூட்ட வச்சிருக்கிறாள். அவள் எடுத்த வீடியோவை பாத்துத்தானே அரசாங்கமே சம்பளத்தை உயத்தினது. எங்கபோனாலும், எனக்கு மதிப்பையும் மரியாதையையும் தேடித் தந்தது என்ர மகள்தான். அவளைக் கொஞ்சாம உன்னையே கொஞ்சுறது?” மகளின் பெருமை பாடுவதில் விவஸ்தை இல்லாமல் பேசிய கணவரை முறைத்துவிட்டு, “சின்னதுகள் ரெண்டும் இருக்கு. கதைக்கிறதைக் கவனிச்சுக் கதைங்கோ!” என்றுவிட்டு எழுந்து உள்ளுக்குப் போனார் கொடிமலர்.

 

அத்தோடு அந்தக் காட்சி முடிந்துவிட, ‘தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் உயர்த்தித் தரச்சொல்லிக் கேட்பதும், முதலாளி வர்க்கம் மறுத்ததோடு அல்லாமல் இனிமேலும் இவர்கள் வாயைத் திறக்கவே கூடாது என்பதற்காக, சில எளிய தொழிலாளிகளை கட்டிவைத்து அடித்துச் சித்திரவதை செய்ததை எல்லாம் பிருந்தா மறைந்திருந்து வீடியோவாக எடுத்து சானலுக்குக் கொடுத்து, அது மிகப்பெரிய பூதாகரமாக வெடித்து, அந்தச் சர்சசையில் மலையக மாந்திரியே முன்னின்று சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பது போல் அமையும் ஒரு காட்சியை கொடிமலர் தனக்குள் தன் மகள் செய்ததை எண்ணிப்பார்ப்பதுபோன்று எடுக்கப்பட்டது.

 

error: Alert: Content selection is disabled!!