மதிய உணவுக்கான இடைவேளையில் அவளருகில் வந்து அமர்ந்துகொண்டார் விக்ரமன். கண்டும் காணாததுபோல் அவள் உணவருந்த, “அம்மா அப்பாகிட்ட பேசலையா?” என்று மெல்லக் கேட்டார்.
வாய்க்குப்போன உணவு அப்படியே ஒருகணம் நின்றது அவளுக்கு. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் அந்த மனிதரை வேகமாகத் திரும்பிப் பார்த்தவளின் விழிகள் அப்படியே வெறுப்பை உமிழ்ந்தன.
செய்வதையெல்லாம் செய்துவிட்டு, இப்படிக் கேட்பதற்கு எத்தனை துணிச்சல் இருக்கவேண்டும் என்று கேட்டது அவள் விழிகள்.
அதை உணர்ந்தாலும் பதில் சொல்லாமல், “நீ பேசறாயா இல்ல நான் பேசவா?” என்று கேட்டார் அவர்.
கையை உதறிவிட்டு வேகமாக எழுந்துகொண்டாள் அனன்யா.
“உங்க வேலை எதுவோ அத மட்டும் பாருங்க மிஸ்டர் விக்ரமன். தேவையில்லாததுகளப் பாத்து கேவலப்பட்டுறாதீங்க. இப்ப மாதிரியே எப்பவும் பொறுமையா போகமாட்டேன் சொல்லிட்டேன்!” என்றுவிட்டு அந்த இடத்தைவிட்டே வேகமாக அகன்றாள் அவள்.
முகம் கறுத்துப்போனது அவருக்கு. ஆயினும், அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்று தெரியாதா அவருக்கு.
காட்சி மூன்று:
பாவாடையை இரண்டு கையாளும் தூக்கிப் பிடித்தபடி இரட்டை ஜடை ஆட, வெற்றுப் பாதங்களை வைத்து மலை உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் பிருந்தா.
மலையின் உச்சியில் இருந்து எப்போதும் வீழ்ந்துகொண்டிருக்கும் அருவி, பள்ளம் பாய்ந்து நீரோடையாக மாறி கற்பாறைகளிலும் மரங்களிலும் மோதியபடி ஓடிக்கொண்டிருக்க, பாவடையைத் தூக்கிப் பிடித்தபடி பட்டென்று நீருக்குள் பாய்ந்தாள் பிருந்தா! கால்களை நனைத்து விளையாடினாள். தெறித்த நீர்த்திவலைகளைக் கண்டு பூவெனச் சிரித்தாள். அப்படியே இரண்டு கைகளாலும் அள்ளி முகத்தில் அடித்துக் கழுவிவிட்டு நிமிர, கிழக்கில் வீழத்தொடங்கியிருந்த சூரியனின் பொன்மஞ்சள் ஒளியில் பளிங்கு முகத்தில் வைரத் துளிகள் என மின்னின தண்ணீர்த் துளிகள்.
சீதை அங்கேதான் நீராடினாளாம்! சீத்தாராமனின் கதை தெரிந்த நாளிலிருந்து அவளும் அங்கேதான் நீராடுவாள். அவளின் கற்பனை உலகில் அவளும் ஒரு சீதாதேவி தான். அந்த சீதாவைப்போலவே பவித்திரமானவள் தான். அவளின் இராமனுக்காகக் காத்திருக்கும் சீதா! அது அவளுக்கு மட்டுமே தெரிந்த அவளின் இரகசியமான இரகசியம்.
அருவியின் ஓசையைக் கேட்டபடியே கோயிலுக்குள் நுழைந்தாள். சீதையம்மனைப் பார்க்கையில் அவள் நெஞ்சில் காதல் ததும்பிற்று! கண்களில் கனவு மின்னியது!
“அம்மாச்சி! உன்னைப்போல, என் மனம் கவர்ந்த ராமனுக்காகத்தான் இந்த அசோகவனத்தில நானும் காத்திருக்கிறன்! அவர் வரவேணும்! அவரோட இதே மலையில, ஆடி ஓடி விளையாடி சந்தோசமா நாங்க வாழவேணும்! எப்படியும் அவர் எனக்கு முதல் பிறந்திருப்பார். கெதியா வரவை!” மனதார வேண்டிக்கொண்டவளின் கண்ணோரங்களில் மலர்ந்த கண்ணீர் பூக்கள் அன்னையின் காலடிக்குக் காணிக்கையாயிற்று!
அவளின் மனது கடிவாளம் பூட்டப்பட்டது. அவள் இறுக்கமானவள். அது வெளி உலகுக்கு. அவளிடம் காதலை வேண்டி நின்றவர்களுக்கு. ஆனால், அவளுக்கு மட்டுமே தெரியும் தன் மனத்தைச் சொல்லாமல் கொள்ளாமல் பறித்துப் போகப்போகிற அந்தக் கள்வனுக்காக அவள் காத்திருக்கிறாள் என்று!
யாரவன்? அவள் வாழ்வின் மிகப்பெரிய இரகசியம் அந்தக் கேள்வியில் தான் மறைந்துகிடந்தது.
கோயில் மண்டபத்தில் இராமாயணக் காட்சிகள் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்க, அவற்றைப் பார்த்தபடியே மெல்ல நகர்ந்தவளின் விழிகள் தன் கசிவை நிறுத்தவேயில்லை. பார்க்கும் ஒவ்வொரு முறையும் அவள் சீதையாகவே மாறி, காதலில் கசிந்து பிரிவில் வாடி, முடிவில் மகிழ்ந்து என்று ஒரு கனவு வாழ்க்கையை வாழ்ந்துவிடுவாள்!
அதுவும் வில்லில் அம்பை ஏற்றி எய்யத் தயாராக நின்ற இராமனின் கைகளுக்குள் சீதை நின்றிருக்கும் அந்தக் காட்சியைக் காட்டிலும் சிறப்பான காதலையும் வீரத்தையும் சொல்லும் காட்சி இவ்வுலகில் வேறொன்று இல்லை என்று அடித்துச் சொல்வாள் பிருந்தா.
வில்லைப் பற்றியபடி நீண்டிருந்த கரத்தில் தன் தலையைச் சாய்த்து இராமபிரானைப் பார்க்கும் சீதையின் விழிகளில் வழிந்த நேசத்தைக் கண்டு அங்கேயே உறைந்தாள் பிருந்தா.
என்ன விதமான காதல் இது? காடுமேடெல்லாம் அலைந்த போதிலும், கொடிய பிரிவொன்று வந்து கடல் தாண்டிக் கொண்டுபோன போதிலும் தன் தலைவனுக்காகவே வாழ்ந்தவள் நேசம் எத்தகையது?
அவளைப் போல் அல்லவோ காதலிக்க வேண்டும்!
தேகமெல்லாம் சிலிர்த்துப் பூரித்தது. அந்தச் சீதா பிராட்டியாரின் பொற்பாதங்கள் பதிந்த பூமியில் அவள் வாழ்கிறாள். அவளைப்போலவே பவித்திரமான பெண்ணாக! அவளின் இராமன் எங்கிருக்கிறான்? எப்போது வருவான்? எப்படி அவளைக் கவர்ந்து செல்வான்? இதயத்திலிருந்து அட்சய பாத்திரமாய் நிறைந்து வழியும் காதலை ஏந்திக்கொள்ளப் போகிறவன் எங்கே? தன் ஏக்கத்தை அப்படியே விழிகளில் காட்டித் தன் இராமனைத் தேடிச் சுழன்ற விழிகள் ஓரிடத்தில் அப்படியே நிலைக்க, அவள் இதயம் ஒருமுறை குலுங்கிற்று!
நடித்துக்கொண்டிருக்கிறோம், தன்னைக் கமராக் கண்கள் பதிவுசெய்துகொண்டு இருக்கிறது என்பதையே மறந்து உறைந்து நின்றாள்.
“கட் கட்!” என்று கத்திய விக்ரமனின் குரலிலும் மெல்லிய கரகரப்பு!
நடிப்புத்தான்! அதையும் அவர்தான் சொல்லிக்கொடுத்தார்! ஒரு இளம் மங்கையின் எதிர்காலக் கணவனின் மீதான ரகசிய எதிர்பார்ப்பை, தேடலை, கனவை முகத்தில் கொண்டுவா என்றுதான் சொன்னார். அவளோ, அந்தப் பாத்திரமாகவே மாறிப்போனாளே! கனவு மிதக்கும் அந்த விழிகள் ஏக்கத்துடன் பாடிய கவியில் தொலைந்துபோய் நின்றிருந்தார் அப்பெரும் கலைஞன்!
எத்தனை அற்புதமான நடிகை இவள்?
எவ்வளவு தத்ரூபமாய் நடிக்கிறாள்!
அவளின் அழகுக்காக மட்டுமே தமிழ் சினியுலகு அவளைக் கொண்டாடவில்லை என்பதற்கு இந்தச் சின்னக் காட்சியே போதுமாயிருந்தது.
அனன்யா அப்படியே கோயில் வாசலிலேயே அமர்ந்துவிட்டிருந்தாள். என்ன என்று ஓடிவந்த ஷியாமிடம், “வெறும் காலோட ஓடினது கால் பாதம் நோகுதுடா!” என்று அவன் முகம் பாராமல் சொல்லிச் சமாளித்துக்கொண்டாள்.
அன்றைய ஷூட்டிங் அதோடு முடிந்ததில், அந்த இடமே பேக்கப் ஆனது.
“டின்னர் அரேஞ் பண்ணியிருக்கேன். ரெண்டுபேரும் வாங்க!” இருவருக்கும் பொதுவாக விக்ரமன் சொல்ல, அவர் முகம் பாராமல், “எனக்கு வேற புரோகிராம் இருக்கு!” என்று, பட்டென்று சொன்னாள் அனன்யா .
“எல்லாருக்கும் பொதுவாக் கதை சொல்லப்போறேன். கட்டாயம் நீ வரணும்!” அழுத்தி அவர் சொன்னபோது, ‘நீங்க சொன்னா நான் வரனுமா!’ என்று வீம்புடன் நிமிர்ந்தவள், அவர் அந்த இடத்தில் இயக்குனராக நிற்கிறார் என்று உணர்ந்து, ஒன்றும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
‘அவளை கூட்டிட்டு வா’ என்பதுபோல, கண்ணசைவில் ஷியாமிடம் சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றுவிட்டார் விக்ரமன்.
“சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டது தொழில் சிட்டு!” என்று எடுத்துச்சொன்னான் ஷியாம். “அதைவிட அவர் எவ்வளவு பெரிய இயக்குனர். அவர்கிட்டப்போய் எல்லாரும் இருக்கிற இடத்துல கோபத்தைக் காட்டாத. அது மரியாதையில்ல.” என்று கடியவும் தவறவில்லை அவன்.
ஒருகணம் முகம் கன்றிப்போனாலும், “வாழ்க்கையோ தொழிலோ எதுலயும் அவரோட சம்மந்தப்பட நான் விரும்பல ஷியாம். வலுக்கட்டாயமாப் பிடிச்சு இழுத்துக்கொண்டு வந்தது அவர். அவர்தான் தன்னைப்பற்றியும் தன்னோட மரியாதையைப் பற்றியும் யோசிக்கனும்!” என்றாள், அவளும் அவன் முகம் பார்த்து.
மீண்டும் அவன் என்னவோ ஆரம்பிக்க, கை நீட்டித் தடுத்தாள். “விடு ஷியாம்! இனிக் கவனமா இருக்கேன்.” அவன் முகம் மலரவும், “அவருக்காக இல்ல. எனக்காக. சுத்தி இருக்கிற ஆக்கள் என்னையும் பாத்துட்டுத் தானே இருக்காங்க. அந்த ஆளுக்காக என்னோட மரியாதைய நான் எதுக்காக கெடுத்துக்கணும்?” என்று முடித்து வைத்தாள் அவள்.
“தட்ஸ் மை கேள்!” என்று அவன் பாராட்ட, மனதை மறைத்துப் புன்னகைத்தபடி அவனோடு நடந்தாள் அனன்யா. மெய்யாகவே கால் பாதாமிரண்டும் புண்ணாக நொந்தது.

