உயிரைத் திருடும் அழகியே 7 – 2

காட்சி எட்டு

 

“இந்தியா என்ன பெரிய தூரமா. பிளைட்ல ஒரு மணித்தியால பயணம் அப்பா! ஒரு காலத்தில இலங்கையும் இந்தியாவும் இணைஞ்சுதான் இருந்தது.”

 

அவர் அசையவில்லை.

 

“என்னில உங்களுக்கு நம்பிக்கை இல்லையாப்பா.” கடைசியாகக் குரலடைக்கக் கேட்டவளைத் திரும்பிப் பார்த்தார் ராசப்பு.

 

கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேலாக அவரோடு போராடுகிறாள். முன்னர் போன்று சிரிப்பதில்லை, விளையாடுவதில்லை, உற்சாகமில்லை, அவரைச் சீண்டுவதும் இல்லை. கலங்கிய கண்களோடு நடமாடும் மகளை அவரும் மனத்தில் பாரத்தோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்று முற்றிலுமாக உடைந்து கண்கள் கலங்கி ஏமாற்றத்தோடு தன்னைப் பார்த்த மகளைக் கண்டு அவர் நெஞ்சில் வேதனை படர்ந்தது.

 

அவள் கேட்பதை எல்லாம் கொடுக்கத்தான் ஆசை. ஆனால், அவ்வளவு தூரத்துக்கு வயதுப்பெண்ணை எப்படி அனுப்புவார்? அழகே உருவான மகளிடம் அதைச் சொல்ல முடியாமல் தடுமாறினார்.

 

“உன்னில இருக்கம்மா. என்னை விட உன்ன நான் நம்புறன்! நம்பாம இப்ப நீ பாக்கிற வேலைக்கு அனுப்புவனா? ஆனா இந்த உலகத்தில நம்பிக்கை இல்ல. உன்னை மாதிரியே எல்லாரும் நல்லவையா இருப்பீனம் எண்டு இல்ல. என்ன இருந்தாலும் நீ பொம்பிளப் பிள்ளை. நாளைக்கு உன்னைப்பற்றி ஒருத்தன் குறையாக் கதைக்கக்கூடாது. பிறகு உன்ர அப்பாவை மனுசனா பாக்கமாட்டாய். வாழ்ந்தால் மானம் மரியாதையோட வாழவேணும். இல்லாட்டி வாழக்கூடாது. உனக்கு விருப்பமான எல்லாத்தையும் செய். ஆனா, இங்க எங்கட கண்ணுக்கு முன்னால இருந்துகொண்டு செய்!”

 

“நான் பிழை விட்டாத்தானே அப்பா யாராவது என்னைப்பற்றிப் பிழையாக் கதைப்பீனம். அப்ப நான் பிழை விடுவன் எண்டு சொல்லுறீங்களா? பத்திரிகைத் துறையிலும் கூடுதலா வேலை பாக்கிறது ஆம்பிளைகள் தான். அங்க ஒரு கெட்ட பெயர் எடுத்திருக்கிறனா இதுவரை? அதேமாதிரி அங்கேயும் இருந்திட்டு வரப்போறன் அப்பா.யாருக்கும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதப்பா. ”

 

“நீ பாக்கிற அந்த வேலையும் இந்த ஊரும் இல்ல செல்லம் உலகம். அது மிகப் பெருசு. குளத்துல நீந்தின மீன்குஞ்சு கடல்ல நீந்துறது கஷ்டம்.”

 

“கடலா குளமா எண்டுறது முக்கியமில்லை. அங்க எனக்கு நீந்தத் தெரியுமா எண்டுறதுதான் முக்கியம். பிறகு என்னப்பா?”

 

அவள் என்ன சொல்லியும் அவரால் சம்மதிக்க முடியவில்லை.

 

மூத்தவன் வேலை என்று போனாலும், அவனால் அவர்களின் குடும்பம் நிமிர்ந்தது என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், அவள் அப்படியல்ல. வேலை செய்து கொண்டுவரும் காசை குடுமபத்துக்கு மட்டுமே கொடுப்பாள். அவரதும் கொடிமலரதும் சம்பளம் நாளாந்த செலவுக்கு என்று போக, அவளின் சம்பளம் தான் அவர்கள் வீட்டுக்குத் தொலைகாட்சி முதல் கொஞ்சமாவது நல்ல உடு புடவைகளையும் கொண்டுவந்து சேர்ப்பது. ஒவ்வொருவருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்வாள். வயதுக்கு மீறிய பொறுப்பு. மூத்த மகனின் மீது வைக்க வேண்டிய அத்தனை நம்பிக்கையையும் அவர் மனம் அவரை அறியாமலேயே அவள் மீது வைத்திருந்தது. அந்தளவுக்குப் பொறுப்பாக நடந்து, தானே அந்தக் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றவள். அவள் கலங்கி நிற்பதைத் தாங்க முடியவில்லை அவரால். சம்மதிக்கவும் முடியவில்லை.

 

காட்சி ஒன்பது

 

இரண்டு வாரங்களாகியும் ராசப்புவின் அசையாத உறுதி பிருந்தாவுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது.

 

“நான் உன்ன நம்புறன் எண்டு நீங்க சொல்லுறது எல்லாம் பொய்! உங்களுக்கு என்னில நம்பிக்கையே இல்ல. நீங்க என்ன நம்பேல்ல!” ஆற்றாமையோடு வெடித்தவளின் அழுகை அவரை அசைத்தது.

 

“அப்படி இல்லம்மா…” என்றவரின் பேச்சை அவள் கேட்கவேயில்லை.

 

“நீங்க விடாட்டி அதுதான் அப்பா காரணம். மற்ற ஆட்கள் எவ்வளவு கெட்டவையா வேணுமெண்டாலும் இருக்கட்டும். உங்கட மகளை நீங்க நம்பினா எந்த இடத்திலையும் என்ர மகள் என்ர மகளா இருந்திட்டு வருவாள் எண்டு சொல்லி அனுப்பி இருப்பீங்க. நான் என்ன ஊர் சுத்தவா கேக்கிறன். ‘நான் யார்’ எண்டு புரூப்ஃ பண்ண கிடைச்சிருக்கிற நல்ல சான்ஸ், அதை மிஸ் பண்ணக்கூடாது என்றுதானே கேக்கிறேன். உங்களுக்கு என்னில நம்பிக்கை இல்ல. எல்லாம் பொய். சும்மா வாய் வார்த்தையாத் தான் சொல்லுறீங்க. நீங்க இப்படிச் செய்வீங்க எண்டு நான் நினைக்கேல்லப்பா. இனி என்னோட கதைக்காதீங்க அப்பா!” அறைக்குள் அடைந்துகொண்டு அழுகையில் குலுங்கிய மகளைக் கண்டு தவித்துப்போனார் ராசப்பு! எவ்வளவு சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. இரவு சாப்பிடவும் இல்லாமல் அழுதபடியே கிடந்தாள்.

 

அவள் மிகவுமே ஆசைப்படுகிறாள் என்று தெரிந்தும், இல்லாமல் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கமாட்டாள் என்று உணர்ந்தும் சம்மதிக்க மனம் வராமல் தூக்கமின்றித் தானும் அந்த இரவைக் கழித்தார் தகப்பன்.

 

இரண்டு நாட்களாகியது. அழுகை குறையவே இல்லை. சாப்பிடவும் இல்லை. எல்லாவற்றையும் விட கொடுமை அவள் அவரோடு கதைக்கவே இல்லை. துடித்துப்போனார் தகப்பன்.

 

ஒரு கட்டத்தில் பிருந்தாவின் பிடிவாதத்திற்கு முன் தகப்பனின் பாசம் மண்டியிட்டது. அவர்தான் இறங்கி வந்தார்.

 

“உன்னை நம்பி அனுப்புறன்! எப்படி என்ர மகளாப் போறியா அப்படியே திரும்பி வரவேணும்! இல்லையோ, அப்பா பொல்லாதவனா மாறிடுவன்.”

 

அவரைக் கட்டியணைத்துக்கொண்டவள், “உங்கட மகள் நான் எண்டு பெருமையா சொல்லுற மாதிரி நடந்து காட்டுவன் அப்பா!” என்று, வாக்குக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டாள் பிருந்தா.

 

அதோடு அன்றைய ஷூட்டிங் முடிந்திருந்தது.

 

“என்ன நடிப்பு! என்ன நடிப்பு! ராசப்புவோட மகளாவே மாறிட்ட போ!” அவளை மெச்சியபடி அருகில் வந்து அமர்ந்தான் ஷியாம். அவன் புறமாக ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு முகத்தின் வியர்வையை ஒற்றி எடுத்தாள் அனன்யா.

 

அன்று காலையில் இருந்தே அவளுக்கும் ராசப்புவாக நடித்தவருக்கும் மட்டுமே காட்சிகள் இருந்ததில் முற்றிலும் களைத்துப் போயிருந்தாள் அவள்.

 

“நீ ரெஸ்ட் எடு! நான் இப்படியே சுத்திக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு, அதற்குமேல் தொந்தரவு செய்யாமல் எழுந்து போனான் ஷியாம்.

 

விக்ரமன் இருக்க நிற்க நேரமின்றி மிகுதி வேலைகளில் தன்னைத் தொலைத்திருந்தாலும் அவள் புறமாக அடிக்கடி பார்வையை வீசிக்கொண்டிருந்தார். உணர்ந்தும் உணர்ந்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை அனன்யா.

 

அன்று மாலை, தனிமையில் காட்டேஜில் அடைந்து கிடந்தவள் மனதளவில் மிகவுமே தொய்ந்து போயிருந்தாள். சவீதாவோடு கதைக்கவேண்டும் போலிருந்தது. ஆனாலும் அழைக்காமல் இருந்தாள். ஷியாமை அழைத்தால் ஓடி வருவான், ஊரைச் சுற்றிக்கொண்டு வரலாம். அதுவும் பிடிக்கவில்லை.

 

புதிர்போடும் தன் மனநிலையை வெறுத்தபடி கிடந்தவளின் காட்டேஜ் கதவைத் தட்டிவிட்டுத் திறந்துகொண்டு வந்தார் விக்ரமன். அதிர்ந்துபோய் எழுந்து அமர்ந்தாள் அனன்யா.

 

தன்னை எதிர்பார்க்கவில்லை அவள் என்பதை உள்வாங்கியபடி நிதானமாக நடந்துவந்து அவளெதிரில் அமர்ந்துகொண்டார் அவர்.

 

‘எதற்கு இங்கே வரவேண்டும்?’ தன் விருப்பமின்மையை வெளிப்படையாகவே காட்டி முகம் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள் அனன்யா.

 

“என்னவிட்டு தள்ளித்தள்ளி ஏன் போற லி..” அவள் சரக்கென்று திரும்பி முறைக்க, “அனன்யா?” என்று கேட்டார் விக்ரமன்.

 

“முடிஞ்சுபோன விசயத்தை எல்லாம் ஏன் திரும்பத் தூசு தட்டுறீங்க நீங்க?”

 

“எதுவுமே முடியல. அதனால!” என்றார் அவர்

 

பழசை கிண்டிக்கிளறி என்ன காணப்போகிறாராம்? இதழ்கள் ஏளனமாக வளைந்தது அவளுக்கு. அதற்கு வேறு யாரையும் பார்க்கவேண்டும்!

 

“நான் படம் நடிக்க மட்டும்தான் உங்களோட வந்திருக்கேன். அதுக்குமேல எதையும் ட்ரை பண்ணாதீங்க!” அவளும் அழுத்தமாகவே சொன்னாள்.

 

“ஆனா நான் அதுக்கு வரலன்னு சைன் பண்றப்போவே சொல்லிட்டேன். எனக்கு நீ வேணும்! பழைய மாதிரியே நீ வேணும்!”

 

அவள் தேகம் நடுங்கியது ஒருமுறை!

 

“ஒரு நாளும் நடக்காது!”

 

“ஏன் நடக்காது? அப்படி என்ன செய்தேன்னு என்னை வெறுக்கிற?”

 

தோட்டத்தில் கிடந்த மலரைக் கதறக் கதறப் பிடுங்கிப் பாலைவனத்தில் எறிந்துவிட்டு என்ன செய்தேனாம்?’ ஆத்திரத்தில் வார்த்தைகளை விட்டு விடுவோமோ என்று பயந்து பதில் சொல்லாமல் முகம் திருப்பி அவள் நிற்க, நெருங்கி வந்தார் விக்ரமன்.

 

“சரி, நான்செய்தது உன் வரைல பிழையாவே இருந்தாலும் மன்னிக்கக் கூடாதா? மறக்கக் கூடாதா? ஆறு வருசமாச்சு அனன்யா! இன்னுமா என்னை தண்டிக்கப்போற? சிலநேரங்கள்ல இருந்து எல்லாத்தையும் யோசிச்சா வாழ்க்கையே வெறுத்துப்போகுது!” என்றவர் தன் நிலையை எண்ணியே வறட்சியாகச் சிரித்தார்.

 

‘வாழ்க்கையே வெறுத்துப்போகுது’ என்கிற வார்த்தை அவளை அதிரச் செய்ய, தன்னை மறந்து விரிந்த விழிகளால் அவரைப் பார்த்தாள்.

 

“வெளி உலகத்துக்கு வெற்றி இயக்குனர். எத்தனையோ விருதை வாங்கின பெரிய மனுஷன். அந்தாளிட்ட இல்லாத காசா பணமா புகழா என்று ஊர் சொல்லும். ஆனா, உள்ளுக்கு? கரையான் அரிக்கிற மாதிரி செய்த தப்பு எல்லாம் நெஞ்சுக்க கிடந்து என்னைக் கொஞ்சம் கொஞ்சமா கொல்லுது. புரிஞ்சுக்கோ.” என்றவர், அப்போதும் அசையாமல் நின்றவளை சற்றுநேரம் விரித்துவிட்டு, “தோல்வி எனக்குப் பழக்கமே இல்லாத ஒன்னு அனன்யா!” என்றுவிட்டுச் சென்றார்.

 

அதை அவர் எதற்காகச் சொன்னாலும், அவரது ஒரு காலத்து வெற்றியும் அவளின் படு மோசமான தோல்வியும் நினைவில் வந்து அவளை அப்படியே பொசுக்கிப் போட்டது!

 

error: Alert: Content selection is disabled!!