மலருமோ உந்தன் இதயம் 30 – 1

30

 

“ஹாலிங் பெல் அடித்தால் பின்னுக்கு கிளினிக்கில் நிற்பவருக்கு கேட்காது அண்ணா; பின்னால் போய்த் தான் கூப்பிட வேண்டும்.” மெல்ல முணுமுணுத்தாள் மதுரா.

“ஓ! அப்படியா? சரி, இந்தப்பக்கமாகப் போக முடியுமா?” நகர்ந்த கணவனை, “கொஞ்சம் நில்லுங்கப்பா!” தடுத்தாள் உஷா.

“ஏன்டி, இது உன் வீடு தானே? போ, உள்பக்கமாக வந்து கதவைத் திறந்து உன் ஃப்ரெண்டை உள்ள கூப்பிட மாட்டாயா? முதல் முதல் வந்திருக்கிறேன்!” புருவம் உயர்த்தி கேலி போல் கேட்ட தோழியை பரிதாபமாகப் பார்த்தாள் மதுரா.

“ஸ்ஸ்…உஷா சும்மா இரும்; நான் போய் கார்த்தியோடு பேசி அழைத்து வருகிறேன்.” தோட்டத்தால் இறங்கி பின்புறமாகச் சென்று மறைந்தான் உஷாவின் கணவன்.

தங்கையின் திருமணத்தின் பின், வேலையொன்றே மூச்சென மாறிப் போயிருந்தான் கார்த்தி. அது அவனுக்கு மிகவும் தேவையாகவும் இருந்தது.

சிந்தையை அங்குமிங்குமாக தளம்ப விடாது தொழிலில் ஆழ்ந்தவன் மனமும் வைராக்கியத்தில் இறுகி விட்டிருந்தது. ஒருவகையில், இயந்திரம் போல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தவன், அப்போதான் ஒருவரை பார்த்துவிட்டு நிமிர, “உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்.” வரவேற்புப் பெண்மணியின் குரலில் வெளியே வந்தான்.

அங்கே நின்றவனை எங்கோ பார்த்த மாதிரி இருந்தாலும் சட்டென்று அடையாளம் தெரியவில்லை இவனுக்கு! யோசித்துக்கொண்டே உஷாவின் கணவரை நெருங்கியவன், “ஹேய்…நீங்க… நீங்க…அஷோக் அண்ணா தானே? அக்காவின் ஃப்ரெண்ட்!” ஓரெட்டில் நெருங்கி, கரங்களைப் பற்றிக் குலுக்கினான்.

“ம்ம்…சாட்சாத் நானேதான் கார்த்தி. பரவாயில்லையே நல்லாவே நினைவு வைத்திருக்கிறீங்க! சிலவருடங்களுக்கு முதல் உங்க அக்காவின் முதல் குழந்தை பிறந்திருந்த போது அங்கு வந்திருந்தீங்க இல்லையா?” சிநேகமாக முறுவலித்தான் உஷாவின் கணவன்.

“லீவுக்கு வந்தீங்க போல!” என்ற கார்த்திகேயன், அப்போதுதான் நினைவில் வந்தவனாக, “உங்க அம்மா அப்பாவும் இங்கு எங்கோதானே இருக்கிறார்கள்?” என்றவாறே,

“வாங்களன், வீட்ட போய்ப் பேசுவோம்!” உள்ளே திரும்பி வரவேற்பில் எதையோ சொல்லிவிட்டு வீடு நோக்கி நகர, “என் வைஃப், பிள்ளைகள், அம்மா, அப்பா எல்லோரும் வந்திருக்கிறார்கள்.” என்றவாறே, பின் தொடர்ந்தான் உஷாவின் கணவன்.

“கால் பண்ணாது வந்து தொந்தரவு செய்துவிட்டோம்; அதுவும், வேலை நேரத்தில்.” சிறுசங்கடத்தோடு சொன்னவனை முறுவலோடு பார்த்தான் கார்த்திகேயன்.

“அப்படியெல்லாம் எதுவுமில்லை; வாங்க. அக்கா எப்படி இருக்கிறார்? பிள்ளைகள், அத்தான் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் தானே?” கேட்டுக்கொண்டே போய் வாசலைத் திறந்தவன், முதலில் நின்ற பெரியவர்களைப் பார்த்ததும் மின்னலாக முகம் மாறினான்.

அதிர்வலைகளின் ஆக்ரோஷ ஆக்கிரமிப்பில் தடுமாறிய பார்வை நகர்ந்து உஷாவின் கணவனைத் தொட்டது.

“இவர்கள்தான் என் அம்மாவும் அப்பாவும்.” அவன் சொல்ல, அவனுள் கொந்தளித்த உணர்வுகள் சட்டென்று இறுகிவிட்டது. முகத்தை முயன்று சகஜமாக்கினான் கார்த்திகேயன்.

“வாங்க, உள்ளே வாங்க.” சமாளித்து வரவேற்க, பெரியவர்களைத் தொடந்த பிள்ளைகளின் பின்னால் ஆரணியைப் பற்றியவாறே உள்ளே வந்த உஷாவிடம் முறுவலை வழங்கியவனின் பார்வை கீழே குழந்தையிடம் இறங்கி, மீண்டும் அதிர்வால் ஆட்கொள்ளப்பட்டு மீள முடியாது தடுமாறியது.

பெரியவர்களைக் கண்டதும் மனதில் தோன்றிய ஐயம் ஊர்ஜிதமானாலும், கண்முன்னே நின்ற சிறுமொட்டை வைத்த விழிவாங்காது பார்த்து நின்றான் அவன்.

‘என் செல்லமே…அப்பாவை யாரோ மாதிரி பார்க்கிறாயேடா!’ அரற்றிய மனதுக்கு, நான்கு மாதத்தில் தன்னிடம் வந்தால் தாயிடம் போக மறுக்கும் குழந்தைகள் தான் நினைவில் வந்தார்கள்.

‘இவள் சின்னவளா பெரியவளா?’ அடையாளம் காண முடியாது திண்டாடினான் அவன்.

புது இடம், உஷாவின் காலை ஒட்டிக்கொண்டே உள்ளே வந்த சிறுமியோ, கார்த்திகேயனின் பார்வையில் இலேசாக மருண்டாள்.

அடுத்தநொடி, “ம்மா!” மின்னலாக உஷாவின் கரத்தை உதறிவிட்டு பின்னால் ஓடி, ஆரபியை நெஞ்சோடு அணைத்தவாறு, உள்ளே நுழையும் துணிவின்றி, வாயிலில் சிலையென நின்ற மதுராவின் காலைக் கட்டிக் கொண்டவள், “ம்மா தூக்கு…ங்க!” சிணுங்கவும் செய்தாள்.

குழந்தையைத் தொடர்ந்தவனின் விழிகள் மூவரையும் கண்ட கணம் இயக்கத்தை மறந்து, அவர்களை வெறித்தது.

‘சொல்லாமல் கொள்ளாமல் போகத் தெரிந்தவள், நாயாய்த் தேடி அலைய வைத்தவள், இத்தனை மாதங்களின் பின் எதற்காக வந்தாய்? சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறோமா என்று பார்த்துப் போக வந்தாயோ? கடைசியில், உன்னில் நான் வைத்த அன்பையே கேலி செய்து விட்டாய் அல்லவா? தியாகிப் பட்டம் கட்டிவிட்டா சென்றாய்! சின்னப் பெண் நித்தி, உன்னைத் தேவதை என்று தாங்கியவளின் மனதில் வலிக்க வலிக்க அடித்துவிட்டுச் சென்றாய் அல்லவா? போய்விடு; என் முன்னால் நிற்காதே போய்விடு!’ என, வாய்விட்டு இரைய முயன்றவன் அது முடியாது போகவே, அவளையே வெறித்தவாறு நின்றான்.

‘இத்தனை பேரோடு வந்திருக்கிறாய்; தனியாக வந்திருந்தால் இன்று உன்னை என்ன செய்திருப்பேனோ தெரியாது.’ கைமுஷ்டிகளை இறுக்கிக் கொண்டு தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான் அவன்.

“என்னதான் வாழ்வில் பிரச்சனைகளைச் சந்தித்தாலும் பெற்ற தாய்க்கும் சொல்லாது விவாகரத்துக்குத் துணிந்த பெண், இப்போ, தன் வாழ்க்கையைத் தனக்குப் பார்க்க முடியும் என்று போய் விட்டாள்.

விடு தம்பி; நீ உன் வாழ்வைப் பார். நான் ஏற்கனவே சொன்னதுதான், அவள் உனக்குச் சரிப்பட்டு வரமாட்டாள். நல்ல பிள்ளைதான்; பார், தன்மூப்புக்கு எல்லாத்தையும் செய்கிறாள்.” ஏற்கனவே விருப்பின்றி இருந்த சிறியதாய் அன்று சொன்னதுதான் அவன் நினைவில் மின்னியது.

‘அப்படிச் சொல்ல வைத்தது நீ தானே! எல்லாம் முடிந்து விட்டது என்று என்பாட்டில் இருக்க, இப்போ ஏன் வந்தாய்?’ மீண்டும் மனதில் சீறியவன்,

“கார்த்தி ப்ளீஸ், மதுராவை உள்ளே வரச் சொல்லுங்க.” மெல்லச் சொன்ன உஷாவின் கணவனின் குரலில் திடுக்கிட்டு சுயநிலைக்கு வந்து சட்டென்று உள்ளே திரும்பி, உள்ளே வந்தவர்களும் அமராது நிற்பதைப் பார்த்ததும், “வாங்க, ஏன் நிற்கிறீங்க? வந்திருங்க ஆன்ட்டி அங்கிள்.” அவர்களை வரவேற்பதில் முனைந்தவன் மீண்டும் மதுராவைத் திரும்பியும் பார்க்கவில்லை.

அவன் செயலில், மதுரா உட்பட அனைவருமே அதிர்ந்து போனார்கள்.

‘இப்போ என்ன செய்வது?!’ விழிகளால் மனைவியிடம் ஆலோசனை கேட்டான் உஷாவின் கணவன்.

‘பச்! சும்மா இருங்க!’ பதில் பார்வையால் கணவனை அமைதிப்படுத்திவிட்டு நன்றாக சாய்ந்தமர்ந்து கொண்டாள் உஷா.

“கார்த்தி அண்ணா, என்னையும் நினைவிருக்குத் தானே?”

“ம்ம்… நல்லா நினைவிருக்கு!” முறுவலித்தான்.

“நான் இவரின் வைஃப் என்றுதானே உங்களுக்குத் தெரியும்; அதையும் விட நாம நெருக்கம் அண்ணா.” அழகாக முறுவலித்தாள் உஷா.

கார்த்திகேயனோ, மனப் புகைச்சலை அடக்க முடியாது திண்டாடினான். ‘உள்ளே வா என்றால் தான் வருவாளாம்; பார், அப்படியே நிற்கிறாள். குழந்தை சிணுங்குவதைக் கூட பொருட்படுத்தவில்லை.’ எல்லையில்லா எரிச்சலில் இருந்தவனுக்கு உஷாவின் முறுவலுக்கு பதில் முறுவல் செய்யவோ, என்ன விதத்தில் நெருக்கம் என்று கேட்கவோ மனம் இருக்கவில்லை. அவளும் அதற்காகக் காத்திருக்கவில்லை.

“எந்த விதத்தில் நெருக்கம் என்று கேட்க மாட்டீங்களா அண்ணா?” மீண்டும் கேட்டவளை, அடக்கிய எரிச்சலோடு பார்த்தான் கார்த்திகேயன் .

“உங்க வைஃப், ஹ்ம்…இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்ன? சரி, உங்க வருங்கால வைஃப் மதுவின் திக் ஃப்ரெண்ட் நான். அப்போ, நாம நெருக்கமானவர்கள் தானே?” கேட்டவளைப் பார்க்காத கார்த்தியின் விழிகளோ, இன்னமும் வாயிலில் வேரோடி நிற்கும் மதுராவை துளைத்துத் திரும்பியது.

‘இத்தனை பேருக்கும் முன்னால் வைத்து நான் இவளிடம் கெஞ்ச வேண்டுமா? ஒரு அளவுக்குத்தான் மனிஷன் இறங்கி நடக்கலாம். இலங்கை போனால் பின்னால் வரமாட்டேன் என்று முன்னரே சொல்லி இருக்கிறேன்; அப்படித்தான் இதுவும். நான் வேண்டும் என்று நினைத்தால் நீயாகவே வா. நான் வா என்று ஒத்த வார்த்தை சொல்லப் போவதில்லை.’

அவளைக் கண்டதும் கடும் ஆத்திரத்தில் கொந்தளித்த மனமோ தன்னையும் அறியாது இந்தளவுக்கு தழைந்தது!

சுறுசுறுவென்று சினம் ஏற, மீண்டும் ஒரு தீப்பார்வை பார்த்தான் கார்த்திகேயன்.

சற்றும் அறிமுகமற்ற அவனின் கடுமையும் கோபப்பார்வையும் அவளை ஊடுருவிச் சென்று சல்லடையாகத் துளைத்தது.

கரத்தில் ஏந்தியிருந்த மகளைச் சுமக்க முடியாது கனப்பது போலிருக்கவே இறக்கிவிட முயன்றாள்; அவளோ, இறங்க மாட்டேன் என அடம் பிடித்தாள்.

அடுத்தவளோ, “தூக்குங்கம்மா…தூக்குங்க!” இராகம் இழுத்தாள்.

இப்போ, தோழியை சுட்டு விடுவது போல் முறைத்த உஷா, “உள்ள வாவன் மது, அதில் ஏன் நிற்கிறாய்?” அதட்டினாள்.

“அப்போதும் சொன்னேன், உன் வீட்டுக்கு வந்த ஃப்ரண்டை அழைத்து ஒருவாய் தேத்தண்ணி தந்து அனுப்ப உனக்கு மனமில்லையாடி?” கேலி கலந்த கண்டிப்போடு சொன்னாலும் கார்த்தியின் இறுக்கத்தில் உஷாவின் உள்ளே நடுக்கம் பரவத் தொடங்கியிருந்தது.

‘அவளையும் அழைத்துக்கொண்டு எல்லோரும் வெளியே போங்க என்று சொல்லி விடுவாரோ! தோழிக்காக என் மொத்தக் குடும்பத்தையும் அழைத்து வந்து அவமானப்படுத்தப் போகிறேனோ!’ மெல்லிய நடுக்கத்தோடு தன் மாமா மாமியைப் பார்த்தாள் அவள் .

அதுவரை, தம் சுபாவப்படி அமைதியாக இருந்தவர்கள், “மதும்மா என்னடா இது? பார், பிள்ளைகள் அழப்போகிறார்கள்; உள்ளுக்கு வாம்மா.” கண்டிப்போடு அழைத்தார் உஷாவின் மாமியார்.

மெல்ல அடியெடுத்து வைத்து உள்ளே நுழைந்தவளின் விழிகளில் மோதியது, நடுஹாலில் பெரியளவாக மாட்டப்பட்டிருந்த புகைப்படம்! அதிலிருந்த கார்த்தியும் குழந்தைகளும் தன்னையே பார்ப்பது போலிருக்க, விழிகள் முட்ட, “கார்த்தி!” எழும்பாத குரலில் தடுமாறினாள்.

அவனோ, அதைக் காதிலும் வாங்காது, “என்ன குடிக்கிறீங்க? டீயா? காஃபியா?” சமையலறை நோக்கி நகர முயன்றான்.

“நான்…நான் போடுகிறேன்.” எங்கிருந்து குரல் வந்ததென அங்கிருந்தவர்கள் உணரும் முன், விறுவிறுவென்று சமையலறை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் மதுரா.

குழந்தைகள் இருவரும், தம் மொட்டுப்பாதங்கள் நிலத்தில் மோத அவளின் இருபக்கமும் ஒரே ஓட்டமாகச் சென்று கொண்டிருந்தனர் .

அக்கணம், வந்திருந்தவர்கள் முன்னிலையில் விழிகள் தளம்பியதை சிறிதும் மறைக்க முனையாது நின்றான் கார்த்திகேயன்.

“ராட்சஷி!” தெளிவாக முணுமுணுத்தவாறே அவர்களிடம் திரும்பியவன், “ஒரு நிமிடம் இருங்க, இதோ வாறேன்.” சொன்ன வேகத்தில் சமையலறை நோக்கி விரைந்தவன், வாயிலை அணுகிய வேகத்தில் மனதை மாற்றி, க்ளினிக் செல்லும் காரிடாரினுள் புகுந்து மறைந்தான்.

அன்று அவள் எழுதி வைத்து விட்டுச் சென்ற கடிதத்தைக் கையில் வைத்துக்கொண்டு தானும் நித்தியும் பட்ட பாடுகள், அதனைத் தொடர்ந்து அவள் எங்கு இருக்கிறாள் எனத் தெரிந்துகொள்ளும் வரை தாம் அனுபவித்த மனவேதனைகள் என, ஒன்றொன்றாக நினைவில் வந்து மோத, அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டான் அவன்.

இத்தனை கொந்தளிக்கும் உள்ளத்தோடுயாரையும் ஏறிட அவன் சற்றும் விரும்பவில்லை.

error: Alert: Content selection is disabled!!