“நான் ஒன்றும் அவளை நினைத்துக் கொண்டில்லை!” வீராப்பாகச் சொன்னாலும், ‘வாழ்வு முழுவதும் தனிமையின் கொடுமையில் கழிக்க நேரிடுமோ!’ ஏங்காமலும் இருக்கவில்லையே!
அவள் எங்கிருக்கிறாள் என அறிந்த பின்னரும், குழந்தைகளின் பிரிவைத் தாங்க முடியாது துடித்த போதும், வந்துவிடு என்று போய் நிற்க அவன் சிறிதும் விரும்பவில்லை; சற்றும் முனையவில்லை.
தன் அப்பழுக்கற்ற நேசத்தை, சற்றும் உணராது ‘தியாகம்’ எனும் அகன்ற சட்டத்தினுள் அடக்கி, ‘பரிதாபம்’ எனும் தடித்த கண்ணாடியால் அலங்கரித்தவளாச்சே!
அதுமட்டுமா? ‘முதல் வாழ்வு என் மனதிலிருந்து அழியாது!’ என்று சொல்லி, ‘நீ வேறு; நாங்கள் வேறு.’ என நெத்தியடியாகச் சுட்டிக்காட்டியவளிடம் பேச்சு வைத்துக்கொள்ளவே அவன் விரும்பவில்லை.
அதேநேரம், அவள் உறைந்த மனதை சுத்தமாக கழுவித் துடைத்திட வைராக்கியத்தோடு முயலாமலும் இருக்கவில்லையே! அதிலும் ஜெயம் பரிதாபகரமாகத் தோல்வியையே தழுவிக் கொண்டது.
ஒருபுறம், அலைக்கழிக்கும் அவள் நினைவுகள்! மறுபுறமோ, தன்னுள் தந்தை எனும் உணர்வைத் தோற்றுவித்த பச்சிளம் பாலகர்களின் ஸ்பரிசங்கள்! இந்த இருவருடங்களும் தட்டுத் தடுமாறி திக்குமுக்காடிப் போனானே இவன்.
‘குழந்தைகள் என்றாவது கண்ணில் படுவார்களா?’ நெஞ்சில் முட்டிய ஏக்கத்தோடு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அத்தூரம் போய்க்காத்து நின்றிருக்கிறான். எப்போதாவது தூரத்தில் நின்று அரையும் குறையுமாகப் பார்த்துவிட்டு வந்திருக்கிறான்.
நாட்கள் செல்லச் செல்ல எவ்வளவோ போராட்டத்தின் பின் சம்மதிக்க வைத்து நித்தியின் திருமணமும் முடிய, மதுரா திரும்பி வருவாள், தம் வாழ்வு மலரும் என்கின்ற நம்பிக்கை மறையைத் தொடங்கியிருந்த வேளையில் அவள் திடீரென்று வந்து நிற்க, அவ்வதிர்வைத் தாங்க முடியாது தள்ளாடியது அவன் இதயம்!
அவள், அவ்வளவு உரிமையாக சமையலறைக்குள் நுழைந்ததைப் பார்த்ததும், விசனத்தில் பொங்கிய நெஞ்சம் பலத்த சத்தத்தோடு இரைந்தது.
இத்தனைநாள் பட்ட காயத்துக்கு மருந்தாக அவளிடம் காரமாகப் பேசவும் முனைந்தது. அவ்வெண்ணத்தில் சமையலறையை நாடி, பின், தன்னைக் கட்டுப்படுத்தி இங்கு வந்து நிற்கிறான்.
அவளைக் கண்ட நாளிலிருந்து அவள்பால் நிறைந்திருந்த கனிவும் பாசமும் நேசமும் ஆத்திரப் போர்வை போர்த்து நிற்க, ‘அவளைச் சாடி அந்த ஆத்திரத்தை தணித்துவிடு!’ என்ற மனதின் உரத்த கட்டளையை ஏற்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது தடுமாறி நிற்கிறான் கார்த்திகேயன்.
தேநீர் தயாரிக்கச் சென்ற மதுராவின் பார்வை சமையலறையை அணுவணுவாக ஆராய்ந்தது.
‘இவர் சமையலே செய்வதில்லையா?’ என்று எண்ணும் வண்ணம் புழக்கத்தில் இருக்கும் எந்த அடையாளமுமின்றி, கழுவித் துடைத்து பளிச்சென்றிருந்தது சமையலறை.
அரைவருடங்களுக்கு மேலாக தான் இங்கிருந்த நாட்களை, சின்னச் சின்ன அழகிய தருணங்களை நினைத்தவளின் மனம் மெல்ல மெல்ல அமைதியடைந்தது.
‘அவர் கோபத்திலும் நியாயம் உண்டே! அவரின் அன்பை நான் அல்லவா தட்டிக் கழித்தேன். இப்போதும், உஷாவின் முயற்சி இல்லையோ இங்கு வந்திருப்பேனா? இல்லைதானே. அது அவருக்கு எவ்வளவு மனத்தாங்கலைத் தரும். குழந்தைகளை அவர் பார்த்த பார்வையில் எவ்வளவு வலி இருந்தது.’ எண்ணியவளின் விழிகள் கலங்கின!
‘நான் செய்த செயலை நானே தான் சீராக்க வேண்டும். இனியும் என் மனதை ஏமாற்றி, அவரையும் துன்படுத்தும் எந்த செயலையும் நான் செய்யமாட்டேன்.’ என்கின்ற உறுதியோடும், ‘எப்படியும் அவரைச் சமாதானம் செய்து கொள்ளலாம்.’ என்கின்ற நம்பிக்கையோடும், பிள்ளைகளுக்கு குளிர்பாணமும் பெரியவர்களுக்கு தேநீரையும் தயாரித்து எடுத்துக் கொண்டவள், மறக்காது கார்த்திகேயனின் கப்பில் காஃபியை தயாரித்து எடுத்துக்கொண்டு, அதுவரை காலைச் சுற்றிச்சுற்றி நின்ற குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஹாலை வந்தடைந்தாள்.
“எடுத்துக்கொள்ளுங்க.” அனைவருக்கும் பரிமாறியவளின் விழிகள் கார்த்திகேயனை காணாது அலைபாய்ந்தது.
“அவர் எங்கே உஷா?” தோழியிடம் விசாரிக்க, அவளோ விழிகளில் குறுநகையோடு, “உன் பின்னால் வேகமாக வந்தார்டி; நானும் என்னவோ ஏதோ என்று நினைத்தேன்!” என்றவளின் நகைப்பு, உதடுகளிலும் நெளிந்தது.
சட்டென்று, சன்னமாகச் சிவந்தது மதுராவின் வதனம். அவதியாக பெரியவர்களைப் பார்க்க, அவர்களும் முறுவலோடு அமர்ந்திருந்தார்கள்.
“பிறகு, நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்று நினைத்து விட்டார் போல! அந்தப் பக்கமாகப் போனார்டி.” கேலி முறுவலோடு தொடர்ந்தாள் உஷா.
‘இவர்களை இருத்தி வைத்துவிட்டு அப்படிப் போக மாட்டாரே!’ நினைத்தவள், “ஆரணி, ஆரபி, அண்ணா அக்காவோடு இருந்து டிரிங் குடியுங்க!” எனக்கூறி, பிள்ளைகளைத் தோழியின் பிள்ளைகள் அருகில் அமர்த்திவிட்டு,
“நான் போய்ப் பார்த்துவிட்டு வாறேன்; கிளினிக்கில் அவசர வேலையை விட்டு விட்டு வந்தார் போல!” சமாளித்தவாறே விரைந்தவள், காரிடார் சுவரில் அவன் சாய்ந்து நின்ற நிலை பார்த்ததும் உடல் உறைய அப்படியே நின்றுவிட்டாள்.
சுவரில் சாய்ந்து நின்று, விழிகள் மூடி, முகம் கசங்க அவன் நின்ற கோலத்தில் இவள் இதயம் வலியை மிகையாக உணர்ந்து முனகியது.
‘அவரின் இந்த கோலத்தின் மொத்த உரிமையும் உனதல்லவா? அப்படி என்ன பிழை செய்தார் அவர்?’ மனம் இவளிடமே கேள்வி கேட்க, அவளையும் அறியாது அவனை நெருங்கியவள், “கார்த்தி.” மெல்ல அழைத்தவாறே கரத்தை அவன் தோளில் வைத்தவள், நடுங்கிய தன் விரல்களை அழுத்தினாள்.
“ஸாரி என்று ஒத்த வார்த்தை சொல்லி நான் செய்ததை நியாயப்படுத்த மாட்டேன் கார்த்தி; ப்ளீஸ்!”
பட்டென்று அவள் கரத்தைத் தட்டியவாறே திரும்பியவனின் இரத்தச் சிவப்பில் மின்னிய விழிகளைக் கண்டு, இவள் நெஞ்சம் ஒருகணம் துடிப்பை மறந்தது.
“அப்போ, என் மீதுள்ள கோபம் போகவே போகாதா? குழந்தைகளோடும் பேச மாட்டீங்களா?” தளுதளுத்தவளை நெருப்பாகச் சுட்டவன் வாய்திறக்க எத்தனிக்க,
“ப்ளீஸ் கார்த்தி, எதுவென்றாலும் அவர்கள் போகவிட்டு பேசிக் கொள்ளலாம். இப்படி அவர்களை இருத்திவிட்டு இங்கு வந்து நிற்பது சரியில்லை.” இடையிட்டவள், “வாங்க..” அவன் கரம் பற்றி இழுத்தாள்.
அடுத்தநொடி அவள் கரத்தை உதறியவனின் முகம் அடங்கா சினத்தையே அவளுக்குக் காட்டியது.
‘குமுறும் இதயம் எதையாவது சொல்லி இவளைக் காயப்படுத்தி தானும் காயப்பட்டு நிற்குமோ!’ ஒரு கணம் அரண்டு விட்டான் அவன்.
சட்டென்று நகர்ந்து, அருகிலிருந்த சிங்கில் நீரைத் திறந்து முகத்தை அலம்பியவன் அங்கிருந்த பேப்பர் டவலால் அழுந்தத் துடைத்துவிட்டு அவளைத் திரும்பியும் பாராது ஹாலை நோக்கிச் சென்றான்.
அவனது சினமும் பாராமுகமும் கூட்டுச்சேர்ந்து இவளின் நயனங்களில் கசிவைக் காண ஏங்கியும், அதற்கு அனுமதியாது தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டாள் மதுரா.
தானும் அவனைப் பின் தொடர்ந்து சென்று, உஷாவின் கணவனோடு பேச்சில் ஆழ்ந்தவனிடம் காஃபியை கொடுக்க, “எனக்கு இப்போது வேண்டாம்!” அவளைப் பாராமல் சொல்லி அவள் முகத்தைச் சுண்டச் செய்துவிட்டு உஷாவின் கணவரோடு பேச்சைத் தொடர்ந்தான் கார்த்திகேயன்.
அத்தனை பேரின் முன்னிலையிலும் அவனின் ஒதுக்கத்தில், மறுப்பில் உள்ளம் தளம்பினாலும் வெகுவாகச் சுதாகரித்துக்கொண்டவள், “ட்ரிங்க் குடித்துவிட்டீர்களா?” குழந்தைகளிடம் கப்புகளை வாங்கி அதை வைக்கும் சாட்டில் சமையலறைக்குள் சென்று மறைந்தாள்.
சிறிதுநேரம் அங்கு நின்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டு வந்தவளின் விழிகளின் கலக்கத்தில் அவள் மனநிலை புரிந்து ஆதரவாகப் பார்த்த உஷா,
“அண்ணா ஸாரிணா. நீங்க வேலையில் இருந்திருப்பீங்க; சொல்லாமல் கொள்ளாமல் வந்து கலாட்டா செய்திட்டோம்; எல்லாம் நீங்க இரண்டு பேரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான்.” சமாளிப்பாக இடையிட்டாள்.
“எல்லாம் இந்த மாடு செய்யும் கூத்து இல்லையா அண்ணா; இப்போதும் என்ன சொன்னாள் தெரியுமா?” மறந்தும் தோழியைப் பாராது தொடர்ந்தாள் உஷா.
“அவள் பிள்ளைகளுக்கு அப்பா இல்லை என்று தன் வாயால் சொல்ல முடியாதாம்.”
“உஷா!” தோழியின் மறுப்புக் குரலை காதில் வாங்காது தொடர்ந்தாள்.
“அப்பா நீங்க இருக்கும் போது எப்படிச் சொல்வேன் என்று என்னிடமே கேட்கிறாள். அதே, நீங்கள் கல்யாணம் குழந்தைகள் என்று வாழ மேடம் தள்ளி நின்று ஆசீர்வாதம் செய்வாங்களாம். உங்களின் மனைவியாக வாழ அவங்களுக்கு தகுதி போதாதாம் அண்ணா.” கார்த்திகேயனின் பார்வை அவளைத் துளைக்க, தலையைக்குனிந்து கொண்டவளை தானும் சேர்ந்து முறைத்தாள் உஷா.
“இவள் அப்படிச் சொன்ன பிறகுதான் இங்கே அழைத்து வர நினைத்தேன் அண்ணா. இங்கு வாசலில் வந்து நிற்கும் வரை உங்களுக்குப் போலவே அவளுக்கும் இங்கு வருவது பற்றி ஒன்றுமே தெரியாது.”
“ம்ம்…அது எனக்குத் தெரியும். தெரிந்திருந்தால் இங்கெல்லாம் உங்க ஃப்ரெண்ட் வந்திருக்க மாட்டா.” இறுக்கமாக வந்தது கார்த்திகேயன் குரல்.
வலியோடு ஏறிட்டாள் மதுரா. அவனோ, அதைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவே இல்லை.
“அப்படியெல்லாம் இல்லை அண்ணா. ஏதேதோ நடந்துவிட்டதுதான். இனி அதையே பிடித்துக் கொண்டிருப்பதில் என்ன பயன்? அதோடு, அது அது நடக்க வேண்டிய நேரத்தில் தான் நடக்கும். என் மாமி அடிக்கடி சொல்வார்; அப்படித்தானே மாமி.” அவரை வேறு பேச்சில் நுழைத்தாள்.
“உங்க அக்கா, நித்தி, இவள் அம்மா, சுதா மிஸ் எல்லோருக்கும் இவளை இங்கு அழைத்து வருவது தெரியும் அண்ணா. அக்கா அடுத்த கிழமை வருவதாக வேறு சொன்னார். கதைத்துப் பேசி சமாதானம் ஆகி…இரண்டொரு கிழமைகளில் வருகின்ற மாதிரி கல்யாணத்துக்கு நாள் பாருங்க.” மூச்சு விடாது சொன்னபடி எழுந்தவள்,
“உன் மிகுதிப் பொருட்களை பிறகு கொண்டு வந்து தாறேன்டி.” என்றதும், “என்ன கிளம்பியாச்சா? இருங்க சாப்பிட்டுவிட்டுப் போகலாம்.” கார்த்திகேயன் குறுக்கிட, “நான்…நாங்க..” கார்த்திகேயனை ஒருதரம் பார்த்துவிட்டு, “வந்து எடுக்கிறோம் உஷா.” என்றாள் மதுரா.
“சாப்பாடு சாப்பிடுவது என்றால் எங்களுக்கு கல்யாணச் சாப்பாடுத்தான் வேண்டும் அண்ணா. மூன்றுவேளையும் விருந்து வைங்க; வயிறு முட்டச் சாப்பிடுகிறோம்.” என்ற உஷா, “இப்போதைக்கு உன்னிடம் இருக்கின்ற உடுப்புகள் போதும் தானே மது?. பொறுமையாக வா; அல்லது கொண்டு வந்து தாறோம்.” என்றபடி விடை பெற்றார்கள்.
அவர்களை அனுப்பிய வேகத்தில், அவளையோ குழந்தைகளையோ திரும்பியும் பார்க்காது க்ளினிக் நோக்கிச் சென்றுவிட்டான் கார்த்திகேயன்.
“உங்கப்பா என்னோடு கதைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை; உங்களோடும் கதைக்கவில்லையே!” வருத்தத்தோடு முணுமுணுத்துக் கொண்டாள் மதுரா.

