31
உஷாவும் மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றபின் சட்டென்று சூழ்ந்து விட்ட அமைதியில் வெறிச்சென்றானது வீடு.
புதிய இடத்தில் இன்னமும் இலகுவாக உணராத ஆரணி, ஆரபி சோஃபாவின் ஒருமூலையில் ஒருவரோடு ஒருவர் அணைந்திருந்த விதம் மதுராவின் வதனத்தில் அழகிய முறுவலைத் தோற்றுவித்தது என்றால், மனதில் ஸ்திரமாக ஒட்டிக்கொண்ட அமைதியும் நிம்மதியும் அவள் வதனத்துக்கு எல்லையற்ற பொலிவு சேர்த்தது.
தன் உள்ளத்தைத் தெள்ளெனப் புரிந்தவளின் நயனங்கள் தான் பெற்ற செல்வங்களில் இருந்து மெதுவாக உயர்ந்து சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தில் நிலைத்தது.
அதில் பளிச்சென்றிருந்த குழந்தைகளையும் கார்த்திகேயனையும் மீண்டும் மீண்டும் இமைக்க மறந்து பார்த்திருந்தாள் அவள்.
‘என் குடும்பம்!’ இந்த இருவருடங்களில் அவள் உணர மறுத்த அற்புதமான இதம் வந்து ஆவேசமாக ஆரத்தழுவ, மனம் விம்ம, விழிகள் கலங்க மெல்ல மெல்ல குழந்தைகளை நோக்கி நகர்ந்தன அவள் கால்கள்!
“செல்லங்கள், இரண்டு பேரும் ஏன்டா இப்படி இருக்கிறீங்க?” கேட்டவாறே, அவர்களோடு அணைந்து அமர, அடுத்தநொடி, அவள் மடியில் தள்ளுப்பட்டு ஏறியமர்ந்து, மனதில் வேறு சிந்தனைகளுக்கு இடமில்லாது செய்து, போட்டிபோட்டு தம் சேஷ்டைகளால் ஆக்கிரமித்தார்கள் இருவரும்.
குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டே நேரத்தைப் பார்த்தவள். “பன்னிரண்டு ஆகப் போகுதா?! குட்டிம்மாக்களுக்குப் பசிக்கப் போகுதே! இரண்டு பேரும் கொஞ்ச நேரம் டிவி பாருங்க; அம்மா ஓடிப் போய் சாப்பாடு செய்துவிட்டு வாறேன்.” கொஞ்சிய தாயை மறுப்போடு பார்த்தார்கள் குழந்தைகள்.
“ம்மா, வீட்ட போவோம்.” ஆரணி சிணுங்க, “போவோம்மா!” ஆரபி பின்பாட்டு போட்டாள்.
இருவரையும் திருப்பி, தன் முகம் பார்க்கும் வண்ணம் மடியில் இருத்தியவள் தன் செல்வங்களை அன்பு கனியப் பார்த்தாள்.
“இதுதான்மா நம்ம வீடு; இனி இங்குதான் இருக்கப் போகிறோம்.” என்றவள், “அம்மா, ஆரபி, ஆரணி..” குழந்தைகளின் கன்னத்தை மென்மையாக வருடியவாறே கூறியவளின் முகம் கனிந்திருந்தது.
“அப்பாவோடு ஒன்றாக இருப்போம்!” இதழ்கள் உதிர்த்த செய்தியின் அற்புத உணர்வில் அகமும் புறமும் இதமாய்ச் சில்லிட அதனுள் மூழ்கத் தொடங்கியவள், “அப்பா? எதம்மா?” சுட்டி ஆரணியின் சந்தேகக்குரலில் தன்னுணர்வு பெற்றாள்.
அவள் விழிகளிரண்டும் தானாக மூடிக்கொண்டன!
“அப்பா சொல்லுங்க; அப்பா சொல்லுடா செல்லம். முதல் முதல் அப்பா தான் சொல்ல வேண்டும்; அதற்குப் பிறகுதான் அம்மா, அத்தையெல்லாம்.” பச்சைக் குழந்தைகளுக்குப் புரிந்துவிடும் என்கிற பாவனையில் இருவரிடமும் மாறி மாறிக் கொஞ்சுபவனின் முகமும், சற்றுமுன் அவனின் வெறித்த குற்றச்சாட்டுப் பார்வையும், குழந்தைகளைக் கண்டுகொள்ளாமல் அவன் சென்ற விதமும் நினைவில் வர, தன் பிரிவை நியாயப்படுத்த முயன்றவளுக்கு அதையும் மீறி மனம் வெகுவாக வலித்தது.
‘அப்பா என்றால் புரியாது வினவும் நிலைக்கு உங்களையும் உங்கள் மகள்களையும் வைத்துவிட்டேன் கார்த்தி; என்னைப் புரிந்து கொள்வீர்களா?’ அரற்றிய மனதின் கலக்கத்தை மறைத்து, “அம்மா!” ஆரணியின் குரலிலும் அவளின் பட்டுக் கரத்தின் ஸ்பரிசத்திலும் விழிகளைத் திறந்தாள்.
“ஹ்ம்…அப்பா என்றால் ஆரணி ஆரபியின் பப்பா!”
‘பப்பா’ எனும் நெரத்ர்லாந்து சொல் மட்டுமே அறிமுகமான குழந்தைகளுக்கு விளக்க முயன்றாள்.
“அதோ! அது யார் தெரியுதா? அப்பாவோடு இரண்டு பக்கத்தில் இருக்கும் குட்டி பேபிகள் இரண்டு பேரையும் தெரியுதா? சொல்லுங்க பார்ப்போம்!” தாய் சுட்டிய இடத்தை, கழுத்தை வளைத்து, நெற்றி சுருக்கி அதீத யோசனையோடு பெரியவர்கள் போல் பார்த்தார்கள் குழந்தைகள்.
“ம்மா! அது…நான்; ஆரணி பேபி!” சில நொடிகள் உற்றுப் பார்த்த ஆரணி சந்தோசத்தில் கூவினாள்.
அவர்களது குழந்தைப் பருவ புகைப்படங்களைப் அடிக்கடி பார்த்திருந்தவர்களால் அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.
“ஹ்ம்…கெட்டிக்காரக் குட்டி. மற்றப்பக்கம் இருப்பவள் ஆரபிம்மா. ஆரணி, ஆரபி, அப்பா மூன்று பேரும் அழகாக இருக்கிறார்கள் இல்லையா?” தாய் சொல்லச் சொல்ல அப்படத்தையே பார்த்திருந்த குழந்தைகள், இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே வந்த கார்த்திகேயனைக் கண்டதும் சட்டென்று தாயின் நெஞ்சில் தலையைப் புதைத்துக் கொண்டார்கள்.
சொல்லில் சரி ‘அப்பா’ என்கின்ற உறவுக்கு இவர்கள் அறிமுகமானவர்கள் அல்லவே!
இப்போதும், அச்சிறு குழந்தைகளில் அது பெரிதாக தாக்கம் எதையும் ஏற்படுத்த வில்லை தான். இந்த சில மணிநேரத்தில் அடிக்கடி எதிர்ப்பட்ட புதியவனை, தாய், அப்பா என்று சுட்டியவனை அறிந்து கொள்ளத்தான் முயன்றார்கள்; ஆனாலும், தயக்கம் ஒருபுறம் அவர்களை இழுத்துப் பிடித்தது.
அவர்களின் பேச்சு காதில் மோத வந்த கார்த்திகேயனின் உள்ளமோ, தன்னுள் அடைத்திருந்த அதிருப்தியையும் ஆத்திரத்தையும் விரட்ட முயன்றாலும், அவையோ, அவ்வளவு சுலபத்தில் போய்விடுவோமா என அசையாது நின்றன!
சிடுசிடுப்பு மறையாது நெருங்கியவன், “குழந்தைகள் என்ன சாப்பிடுவார்கள்? உனக்கு என்ன வேண்டும்? இன்னும் ஏதாவது அவசரமாக வேண்டுமென்றால் சொல்; கடைக்குப் போகிறேன்.” முகம் பாராது கூற, சட்டென்று வந்து ஒட்டிக் கொண்ட இளமுறுவலோடு எழுந்தாள் மதுரா.
“அப்பா குட்டிமாக்களோடு கதைக்க வெட்கப்படுகிறார்டா; நீங்க அப்பாவுக்கு ஹாய் சொல்லுங்க; ம்ம்…வாங்க.” குழந்தைகளைப் பிடித்துக்கொண்டு அவன் முன்னால் நகர்ந்து நிற்கவும் செய்தாள்.
அவள் வார்த்தைகளைக் கேட்டவனோ விழிகள் இடுங்க உறுத்து விழித்தான்.
“இங்க பார் மதுரா, என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரியுது? பாவம், பிள்ளைகளுக்குப் பசிக்குமே என்று கேட்க வந்தேன் பார்; என்னைச் சொல்ல வேண்டும்.” சீறலோடு நகர முயன்றவன் கரத்தை கெட்டியாகப் பற்றிக் கொண்டவள்,
“ஆரணி, ஆரபி அப்பாவின் காலைப் பிடித்துக் கொள்ளுங்கடா!” தாய் சொல்லைத் தட்டாது, விளையாட்டுப் போல் தம் தளிர்க் கரங்களால் அவன் கால்களை கட்டிக்கொள்ள முயன்ற குழந்தைகள் இருவரும் அவனோடு இறுக ஒட்டிக் கொண்டனர்.
இயல்பிலேயே மிகவும் துடிதுடிப்பான கலகல குழந்தைகள், “ம்ம்ம் பிடித்திட்டோம் மா!” கோரஸாகச் சொல்லவும் செய்தனர்.
காலைக் கட்டிக்கொண்ட குழந்தைகளையும், குழந்தைகளோடு குழந்தையாக கரம் பற்றி நின்றவளையும் விழிதட்டாது நோக்கினான் கார்த்திகேயன்.
அவ்வளவு இயல்பாக, ஆத்மார்த்தமாக ‘அப்பா அப்பா’ என அவளின் இதழ்கள் உச்சரிக்க உச்சரிக்க, அவை தன்னைக் கட்டி இழுத்து அவர்களோடு இறுகப்பிணைப்பதை துல்லியமாக உணர்ந்தவன், மிகுந்த அயர்வோடு, “கையை விடு ராது!” கரத்தை விடுவிக்க முயன்றான்.
தன்னையுமறியாது அவன் உதிர்த்த ‘ராது’வில் குபுக்கென்று ஊறிய விழிகளோடு, மறுகரத்தாலும் அவன் கரத்தைப் பற்றிக் கொண்டாள் அவள்.
அக்கணம், ஊடல் கொண்டு பிரிந்த துணையோடு இணையும் தருணம் எவ்வாறு ஒரு மனநிலை இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தாள் மதுரா.
அவனையுமறியாது மன ஆழத்திலிருந்து தெறித்து விழுந்த ‘ராது’வுக்கும் அவன் விழிகளின் பார்வைக்கும் சிறிதும் சம்பந்தம் இருக்கவில்லை. முகமோ, சற்றுமுன் கடந்து சென்ற கணம் வரை அனுபவித்ததைப் பட்டவர்த்தனமாகப் பிரதிபலித்து நின்றாலும், அதையும் கடந்து, அவனில் தனக்கான இடத்தை, இவளால், தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
“கார்த்தி ப்ளீஸ்! என்னில்…என்னில் கோபமில்லையே? இல்லையென்று ஒருவார்த்தை மட்டும் சொல்லி விடுங்களேன்!” துடிக்கும் அதரங்களும் தத்தளிக்கும் விழிகளும் யாசகமாக அவனை ஊடுருவ, அவள் வதனத்தில் பதிந்த விழிகளை கணநேரம் விலக்காது நின்றான் அவன்.
திடீரென்று, சற்றும் எதிர்பாராத தருணத்தில் அவளையும் பிள்ளைகளையும் கண்டதும் கொதித்துப் போனான் தான். வார்த்தைகளால் சாடவில்லையென்றாலும் பாராமுகத்தாலும், எதிர்பார்ப்பும் ஆசையுமாக அவள் தந்த காஃபியை மறுத்ததிலும் அதை அவளுக்கு உணர்த்தவும் செய்தான்.
உயிரான குழந்தைகளையும் நாடாது க்ளினிக் சென்றவனால் சில நிமிடங்களையும் அங்கு கழிக்க முடியவில்லை. நிலையற்றுத் தவித்த மனதோடு செய்வதறியாது நின்றவன், உணவுவேளையை கருத்தில் வைத்து திரும்பி வந்திருந்தான்.
ஆனால் இவர்களோ?! அதிலும் அவனுள்ளத்தில் உறைந்து அவனையே அவனிடமிருந்து பிரித்து, தனியாளாக்கி, ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் மதுரா!?
‘சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிலிருந்து போனதை, இடைப்பட்ட காலத்தை மறந்தது போலல்லவா நடந்து கொள்கிறாள்?!’ எனக் கொந்தளித்தாலும், அவளின் உரிமையான செயல்களும் பேச்சுக்களும் அவனை ஆட்டிப் பார்க்காமலும் இல்லையே!
மனதுள் பிரளயமாக எழுந்த உணர்வுகளைக் கொட்ட இது ஏதுவான சமயமல்ல என்றுணர்ந்து கொண்டவன், “கையை விடு; பார், குழந்தைகள் பார்க்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் வைத்து இந்தப் பேச்சு வேண்டாம்!” அப்போதும் ஒட்டாமல் தான் சொன்னான்.
குழந்தைகளின் பார்வை தன்னில் இருப்பதைப் பார்த்தவள், கரத்தை மெல்ல விலக்கிக்கொள்ள, மெதுவாக அவர்களை நோக்கிக் குனிந்தவன், “என் செல்லக் குட்டிகள்!” இருவர் கரங்களையும் பிரித்து முன்னால் நிறுத்திவிட்டு, பின்னிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, வெட்கமும் தயக்கமும் அகலாத பார்வையோடு கடைக்கண்ணால் பார்க்கும் குழந்தைகளை நோக்கிக் கரங்களை அகல விரித்தவன்,
“வாங்கடா…அப்…பாவிடம் வாங்க.” அவன் குரல் கரகரத்து ஒலித்தது.
அவர்களோ, இன்னமும் நன்றாகத் தாயில் ஒன்றிக் கொண்டார்கள்.
சட்டென்று மாறிய முகத்தோடு, குற்றம் சாட்டும் பார்வையைச் சிந்தினான் அவன்.
“இப்போ உனக்குச் சந்தோஷமா? இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்!” சீறலோடு எழ முயன்றவனின் அருகில் இடித்துக்கொண்டு அமர்ந்தாள் மதுரா.
மீண்டும் அவளின் அடாவடியான செய்கையில் எழுந்த வியப்பையும் மீறி அவளின் அருகாமையில் மயங்க முனைந்தது அவன் மனம்.
அவள்தான் வாழ்வின் துணையென வரையறுத்து, அது இல்லையென்றாகும் நிலை உருவான போதும் அந்நினைவை அறவே ஒழிக்க முடியாது திண்டாடி, உள்ளத்து உணர்வுகளுக்கு கடினமான கடிவாளமிட்டு நாட்களைக் கடத்தியவன், அக்கடிவாளம் மெல்ல மெல்ல பலமிழப்பதை உணர்ந்து கொண்டான்.
சட்டென்று திரும்பி, தன்னருகில் இருந்தவளை உற்று நோக்கினான்.
அவளோ, அது புரிந்திருந்தும் அவனைப் பாராது குழந்தைகளை நாடினாள்.
“ஆரணிம்மா, வாங்க வாங்க; அப்பா மடியில் இப்படி இருங்க; ம்ம்… எங்க ஆரணி அச்சாப்பிள்ளையே!” மகளைத் தூக்கி அமர்த்தியவள், “நீங்களும் வாங்கோ; ஹப்பப்பா ஆரபிம்மாவும் வந்தாச்சு; இப்படி அப்பாவோடு இருங்க!” குழந்தைகள் இருவரையும் அவன் மடியில் இருத்தியவளின் பார்வை ஒருகணம் அவனையே உற்றுப் பார்த்தது.
கலங்கிய விழிகளோடு அவளையே பார்த்திருந்தான் அவன்.
“இடைப்பட்ட இருவருடங்கள், எதுவுமே இல்லை என்பது போலல்லவா நடந்து கொள்கிறாய்!” அடிக்குரலில் சீறினான்.
“இப்போதானே அந்தப் பேச்சு வேண்டாம் என்றீங்க!” சொன்னவள், இதழ்கள் துடிக்க, மனமும் விழிகளும் கலங்க அவனையே பார்த்தாள்.
“இந்த இரண்டு வருடங்கள், இந்தப் பிரிவு தான்…என்னை…இத்தனை நெருக்கத்தில் உங்களிடம் வரவைத்திருக்கு கார்த்தி.” தழுதழுத்தவள், உருண்டோடிய விழிநீர் முத்துக்களை, குழந்தைகள் பாரா வண்ணம் அவசரமாகத் துடைத்துக் கொண்டாள்.
‘எத்தனை நிஜம் அது! அது ஏன் எனக்குப் புரியவில்லை!? இதுவரை நானாகவே இவளை அணுகி இருக்கிறேன். அப்படியான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் எட்டவே நின்று என்னையும் நிறுத்தியவள், இன்று!?’ கண்கள் கசிய அவளைப் பார்த்தவனின் உதடுகள் மெல்ல அசைந்தன!
“ரா…து!” அவன் இதய அடி ஆழத்திலிருந்து வந்திருந்தது அந்த அழைப்பு!
இதுவரை, அவளின் வதனம் தாங்கி நின்ற கலக்கம் மெல்ல மெல்ல விலக, அவனில் பதிந்த விழிகளை விலக்காது, “ம்ம்…இப்போ அப்பாவுக்கு ஆய் கொடுங்க பார்ப்போம்!” அவள் சொல்லி முடிக்க முன், குழந்தைகளை அப்படியே வளைத்துக் கொண்டவன், இருவரையும் தன் அன்பினால் திணறடித்துவிட்டான்.
ஒருகட்டத்தில், இருவரும் கிளுகிளுத்து கிண்கிணியாகச் சிரித்தவாறே, துள்ளி நெளிந்து தாயின் கழுத்தை வளைத்து இழுத்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
இதுவரையிலும், அன்னையோடு மட்டுமே அனுபவித்த அன்புப் பரிமாறல்கள், இன்று இன்னொருவனிடமிருந்து கிடைத்த மகிழ்வு அவர்களுள் அப்படியே விரவிப் பாய்ந்தது.
அக்கணம், அந்த ஹாலை நிறைத்திருந்த மழலைகளின் பேச்சொலியும் நகைப்பொலியும், சேர்ந்தொலித்த கார்த்திகேயனின் கம்பீரக்குரலும் மதுராவின் உலகை, தேவலோகமாக மாற்றி அசரடித்தன!

