மலருமோ உந்தன் இதயம் 31 – 2

குழந்தைகளோடு சேர்ந்து அவர்களின் இழுவைக்கு ஈடுகொடுத்து அவன் கைவளைக்குள் வந்திருந்தாள் மதுரா.

அத்தனை நெருக்கத்தில் அவனை இமைக்கவும் மறந்து பார்த்தவள், சட்டென்று மோதிய அவன் பார்வையைத் தாங்கும் திறனின்றி அப்படியே அவன் நெஞ்சில் ஒன்றிக்கொள்ள, ஸ்தம்பித்து உறைந்தான் கார்த்திகேயன்.

“இக்கணம் நிஜமா?” முணுமுணுத்தவனால் சற்றும் ஒப்ப முடியவில்லை.

கனவில் கண்டு கண்டு களைத்துப் போன உறவுகள்; மீண்டும் காண வேண்டி அயர்ந்துறங்க முயன்ற கணங்கள்!

மனம் கொள்ளா அவாவோடு கைவளைக்குள் பொருத்திப் பார்த்து, அது பிரேமை என்றுணர்ந்து ஏக்கப்பெருமூச்சுடன் கலைந்து போன எண்ணிலடங்காத் தருணங்கள்!

மகிழ்வும் கலகலப்பும் வாழ்வு முழுமைக்கும் நீங்காதிருக்கும் என மனம் நிறைந்த அவாவோடு இருக்க, ‘ஏகாந்தமே உனக்கானது!’ முகத்தில் அடித்தமாதிரி உறைத்த கணங்கள்!

இவையனைத்தும் சிறு தூசென விலகி மறைய, இதோ இக்கணம், உள்ளத்து ஏக்கம் அகன்று அங்கு பூரண திருப்தி குடிகொள்ள விளைகின்றதே!

பெற்றோரின் மறைவில் கசிந்து வறண்ட அவன் விழிகள் மீண்டும் தம் இயக்கத்தை அவனுக்கு ஸ்திரமாக உணர்த்தி நின்றன!

உரமான கரமிரண்டையும் கோர்த்து மூவரையும் தன்னோடு அணைத்துக் கொண்டவன், தன் முகத்தை மதுராவின் உச்சந்தலையில் அழுந்தப் பதித்தான். அவன் உள்ளத்தில் அடைத்திருந்த உணர்வுகளின் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய வடிய அவன் அணைப்பு வலுப்பெற்றது.

முழுமையாக உணர்வுகளின் பிடியில் சிக்கிப் போயிருந்தவளோ, தன்னையே மறந்தாள். குழந்தைகளோடு போட்டி போட்டுக்கொண்டு இறுக மூடிக்கிடந்த விழிகளோடு அவன் நெஞ்சின் ஓரத்தில் அழுந்தப்பதிந்தது அவளின் சிரம்.

தம்மை மறந்த கணங்கள் கடந்திருக்க, உச்சந்தலையில் உணர்ந்த ஈரம் அவளை இவ்வுலகிற்கு இழுத்து வந்தது. குழந்தைகளோடு அவன் நெஞ்சில் ஒன்றிக் கரைந்து கொண்டிருந்தவள் உள்ளமும் உடலும் துடிக்க சட்டென்று நிமிர்ந்தாள்.

“கார்த்தி என்ன இது!?” அவன் விழிகளின் ஈரம் அவளை வதைக்க, தாமதியாது மென்மையாகத் துடைத்து விட்டது அவளின் கரம்.

அவளையே பார்த்திருந்தவனால் எவ்வளவு கட்டுப்படுத்த முனைந்தும் முடியாதிருக்கவே, “எப்படி ராது அப்படி உன்னால் செய்ய முடிந்தது? அதுவும் என்ன வார்த்தைகள் எழுதி..” தொடரவிடாது வாயை அழுந்தப் பொத்தியிருந்தாள் அவள்.

“ப்ளீஸ் கார்த்தி, இப்போ எதுவுமே பேச வேண்டாம்!” சொன்னவளின் பார்வை, பெரியவர்களின் கலக்கத்தை ஒருமாதிரிப் பார்க்கும் குழந்தைகளில் படிந்து அவனை நோக்கியது.

மீண்டும் பெரியவர்களின் விழிகள் நான்கும் மோதிக் கொண்டன!

சற்று முன்வரை, இதயம் முட்டிய அன்பையும் மீறி மனஸ்தாபத்தை வெளிப்படையாகக் காட்டியவனின் பார்வையோ, இக்கணம், தன் மொத்த நேசத்தோடும் அவள் விழிகளைக் கவ்வி நின்றது!

வார்த்தைகளால் உணர்த்தப்படாத அவள் மனதை, இம்மியளவும் குறையாது வாசித்ததன் ஆத்மதிருப்தியை சற்றும் மறையாது வெளிப்படுத்தி நின்றது அது!

பரிதாபத்திலும் பச்சாத்தாபத்திலும் மட்டுமே தன்னைப் பொருத்தி, நிறுத்தி, உண்மை நேசத்தை உணர மறுத்து விலகியவள், தனக்கான அவன் காத்திருப்பில், அன்று காட்டிய அன்பில் அணுவும் குறையாது அவன் காட்டிய நேசத்தில் உள்ளம் களிக்க முக்கியெழுந்தாள்.

அவன் பார்வையின் வீரியத்தைத் தாங்கும் திறனின்றி மெல்ல விழிகளைத் தழைத்துக் கொண்டவள், “இப்போ உங்களுக்கு லஞ்ச் பிரேக் தானே?” சட்டென்று பாதை மாறினாள்.

“கொஞ்ச நேரம் இவர்களோடு இருங்க; நான் ஏதாவது சிம்பிளா செய்கிறேன்.” மெல்ல விடுபட்டு எழுந்தாள்.

“இப்போதைக்கு கடையில் வாங்கி வாரேன் ராது; இரவைக்கு சமைக்கலாம்.” தானும் சுதாகரித்துக் கொண்டான்.

“இல்ல, இருப்பதில் சமைக்கிறேன்; நீங்க இவர்களோடு இருங்க.” விரைந்து நகர்ந்தாள் அவள்.

ஹாலில் கலகலத்த சந்தோஷ ஒலிகள், சட்டென்று பழகிவிடும் குழந்தைகளும் தந்தையும் நன்றாக நெருங்கிவிட்டதை உணர்த்த, நிறைந்த மனதோடு, அன்றொருநாள் அவன் தயாரித்திருந்த குழைசாதம் மாதிரியே எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு சமைத்தவள், பழைய நினைவுகள் முட்ட முட்ட அவன் உண்பதற்கு ஏற்ப மேசையில் எடுத்து வைத்தாள்.

“உங்களுக்கு நேரம் போய்ட்டுது; சாப்பிட வாங்க; நான் இவர்களுக்கு தீத்துறேன்.” தட்டில் குழந்தைகளுக்கு பரிமாறி வைத்துவிட்டு, “ஆரணி ஆரபி நீங்களும் ஓடிவாங்கோ!” அழைத்தாள்.

“இங்கே கொண்டு வா ராது; இதில் வைத்தே தீத்திவிடு!” என்றவன், குழந்தைகளை மடியிலிருந்து இறக்கிவிடும் எண்ணமின்றி இருந்தான்.

“நீங்க திரும்பிப் போகத் தேவையில்லையா?” கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே கேட்க, “அது போகலாம், நீ சாப்பாட்டைக் கொடு!” என்றவன், “உங்கம்மா என்னைக் கலைப்பதிலேயே குறியாக நிற்கிறாள்டா!” குழந்தைகளிடம் கொஞ்சினான்.

முன்னரும் அவன் இப்படித்தான், குழந்தைகளை மையமாக வைத்து அவளை பேச்சில் இழுத்து விடுவான். பழைய நாட்களும் சம்பவங்களும் நினைவில் மின்ன, அப்படியே அசையாது நின்றாள் அவள்.

“பிள்ளைகளுக்குப் பசிக்குது ராது, முதல் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு கனவு காணலாம்.” சீண்டியவனை முறைக்க முயன்ற விழிகளோ, கனிவிலும் நேசத்திலும் பளபளத்தன!

அவர்களின் அருகில் சென்றமர்ந்து பிசைந்த உணவைச் சிறு சிறு உருண்டைகளாக குழந்தைகளுக்கு ஊட்ட, “ராது எனக்கு…” தானும் ‘ஆ’வென வாய் திறந்தான் கார்த்திகேயன்.

உணவுத் தட்டில் விரல்கள் அலைய, அவள் விழிகளும் மனதைப் போலவே அங்குமிங்குமாக அவஸ்தையோடு தத்தளித்தன!

“பாருங்கடா செல்லங்கள், அப்பா பசிக்குது என்று கேட்டால் உங்கம்மா ஒருவாய் தரமாட்டாவாம்!” நகைக்கும் விழிகளோடு இரசனையாக அவளை வருடியவாறே அழுகைக் குரலில் முறையிட்டான் கார்த்திகேயன்.

“ம்மா..அப்பாக்கும் அப்பாக்கும்..சோச்சி குடுங்கம்மா!” அவன் மடியில் இருந்தவாறே எம்பி எம்பிக் குதித்தாள் ஆரணி; ஆர்வமாகச் சேர்ந்து கொண்டாள் ஆரபி.

மதுராவின் மனவுணர்வுகளில் வர்ணஜாலமாக மினுங்கியது அவள் வதனம்!

‘எவ்வளவு அற்புத தருணமிது! என் வாழ்வில் இது வருமா என்று கூட நான் ஏங்கவில்லை; அந்தளவுக்கு எனக்கும் என் குழந்தைகளுக்கும் இல்லவே இல்லையென வரையறுத்த தருணமிது!’ மனம் தழுதழுக்க, அடுத்த வாய் உணவை குழந்தைகளுக்கு ஊட்டினாலும், விழிகளோ, ‘உன்னவன் நான்!’ வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவளுக்கு ஐயமற உணர்த்தியவனை ஆரத் தழுவி ஆனந்தித்தது.

“ராது எனக்கும் ஒருவாய் தாருமப்பா!” கனவுலகில் அமிழ்ந்தவளை நனவுலகைப் பார்க்க வைத்தது அவன் குரல்.

அடுத்த தடவை ஆரபியை நோக்கி நகர்ந்த கரத்தை மெல்லத் திருப்பி அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

அதுவரை, விழிகளில் தாண்டவமாடிய குறும்பும் கேலியும் மகிழ்வும் கலந்து வழிவிட, கலங்கிக் கசிந்தன அவன் விழிகள்.

“ஒன்று இரண்டு…நாட்கள் இல்லை; இரண்டு வருடங்கள்…ராது!” உணவு நிறைந்த வாயால் நின்று நிதானித்துச் சொன்னவன், உணவை மென்று விழுங்கிவிட்டு, “எவ்வளவை இழந்துவிட்டேன்; இல்லையே ராது, நீ இழக்க வைத்தாய் அல்லவா?” அவளைக் கலங்கடித்தான்.

“அதற்கெல்லாம் ஒவ்வொரு கணமும் ஈடு செய்ய வேண்டும்; நீ ஈடு செய்தே ஆக வேண்டும் ராது!” என்றவன், கண்ணடித்து அவள் விழிகளைத் தழையச் செய்தான்.

“இனிமேல், என் செல்லங்களுக்குப் போல் அப்பாவுக்கும் தீத்தி விடவேண்டும்; ஒ.கேவா செல்லங்கள்!” அவர்களின் பலத்த தலையாட்டலை ஆரவாரத்தோடு பெற்றுக்கொண்டே மிகவும் ஆர்ப்பாட்டமாக உணவை மூவருக்கும் ஊட்டிவிட வைத்தவன், மதியவுணவின் பின், க்ளினிக் செல்லும் எண்ணமில்லாது குழந்தைகளோடு லூட்டி அடித்துக் கொண்டிருந்தான்.

தானும் உண்டுவிட்டு சமையலறையை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களோடு இணைந்து கொண்டவள், “இனி கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துவிட்டு பிறகு விளையாடலாம்.” என்றதும், கார்த்திகேயனின் நெஞ்சில் முகத்தைப் புதைத்து அமைதியாகத் தம் விருப்பமின்மையைத் தெரிவித்தார்கள் குழந்தைகள்.

“ஒருநாளைக்கு பகல் தூங்கவில்லை என்றால் பரவாயில்லை ராது விடு; நாங்க கொஞ்ச நேரத்தில் வெளியே போயிட்டு வருவோம்.” அவர்கள் தூங்கச் செல்வதில் அவனுக்குமே இஷ்டமில்லை.

மூவரையும் செல்லமாக முறைத்தவள், “பிறகு ஐந்து மணிக்கே நின்ற இடத்தில் தூங்கி விழுவார்கள் கார்த்தி; இரவைக்கும் சாப்பிடமாட்டார்கள்; பேசாமல் இறக்கி விடுங்க!” கண்டிப்பாகச் சொல்ல, அவர்களோ, “அப்பாவும் வாங்க.” புதிதாக அறிமுகமான, இனிய உறவின் கதகதப்பை விட்டு விலகும் எண்ணமில்லை அவர்களுக்கும்.

“ம்ம் சரி, அப்பாவும் வாறேன்.” அவர்களோடு குழந்தைகள் முன்னர் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

வந்ததிலிருந்து அதனுள் செல்லும் தேவை இவளுக்கு வரவில்லை. இப்போது நுழைகையில் அவள் உடல் நடுங்கியது. அங்கு தானும் குழந்தைகளும் கழித்த நாட்களின் நினைவில் விழிகள் கலங்கின!

நித்தி, கார்த்தி, தாய் என வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் எத்தனை எத்தனை அழகிய தருணங்கள்! அன்று உணர முடியாது போனவை எல்லாம் இன்று பளிச்சென்று அவளுக்குப் புரிந்தது.

மிக மிக அருகில், தன்னோடு உராய்ந்து கொண்டு நித்தி நிற்கும் உணர்வில் சற்றே திடுக்கிட்டவள், தன்னை இங்கு கண்டதும் அவள் என்னென்ன பாவங்களைக் காட்டுவாள் என்ற எண்ணத்தில் முகம் மலர்ந்தாள்.

பரிதவித்து நின்றபோது அன்னையாய் அரவணைத்தவளின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாது போனாலும், இனிமேல்சரி அவளைத் தன் கைக்குள் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இவளுள் மிகையாகத் துளிர்த்தது.

அதோடு, ‘இதையெல்லாம் விட்டு விட்டு எப்படி இருந்தேன்? என் மனதை நானே திரையிட்டு வாழ்ந்து வந்தேனா? உஷா வரவில்லை என்றால்..’ கலங்கியது மனம்.

‘நிச்சயம் எங்களைத் தேடி இவரும் வந்திருக்க மாட்டார்.’ இவ்வெண்ணத்தோடு அவனை நோக்க, அவனோ இவளைத்தான் பார்த்திருந்தான்.

“கார்த்தி..நான்..நாங்க இங்க இருப்பது, அதுதான் உஷாவின் மாமி வீட்டில் இருப்பது முன்பே உங்களுக்குத் தெரியுமா?” ஓரளவுக்கு விடை தெரிந்தே கேட்டாள்.

“பிள்ளைகளுக்கு உடுப்புகளை மாற்றவில்லையா?” கேட்டுக்கொண்டே அவளை நெருங்கியவன், “நீ இங்கிருந்து போய் பத்து நாளைக்குப் பிறகு தெரிய வந்தது; ஆனால், அது அஷோக் அண்ணாவின் வீடு என்று தெரியாது.” அவனையுமறியாமல் இறுகிய குரலும் கூர்பார்வையுமாக உறுத்து விழித்தான்.

இவன் சொன்ன தொனியில் அவள் முகம் அதிர்வைப் பிரதிபலித்தும் அதைப் பொருட்படுத்தாது, “என்ன ராது, அப்போ ஏன் தேடி வரவில்லை என்று யோசிக்கிறாயா? என்னை வேண்டாம் என்று போனவளை நான் ஏன் தேடி வரவேண்டும்? அதுவும் என்னவெல்லாம் எழுதியிருந்தாய்…”

தொடர்ந்து நித்தி பற்றி கேட்க நினைத்தவள், அதை மறந்து, குழந்தைகளை நோக்கி நகர்ந்தாள்.

“அப்படியே நான் வந்திருந்தாலும் நீ என்ன பதில் தந்திருப்பாய் என்று எனக்குத் தெரியும்!” சொன்ன கார்த்திகேயனும் அலைபேசி மணியடிக்கவே விருட்டென்று வெளியேறினான்.

அவன் சொன்னதை உள்வாங்கிக் கொண்டவளின் மனமும் விழிகளும் ஏனோ கசியவில்லை! ‘அவர் சொல்வது சரிதானே?’ மனதுள் ஆமோதிக்கவே செய்தாள்.

“அப்பா..” அவன் பின்னால் நகர முயன்றவர்களை ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்துக் கொண்டவள், “அப்பாவுக்கு கால் வந்திருக்கு கதைத்து விட்டு வருவார்; வாங்க உடுப்பு மாற்றிவிட்டுப் படுக்கலாம்; பிறகு அப்பாவோடு பார்க் போவோம்!” பயணம் செய்து வந்த உடுப்புகளை மாற்றி அவர்களை படுக்க விட்டவள், தானும் அவர்களருகில் சாய்ந்திருந்தாள்.

தாய் அருகில் இருந்தால் அவளையே பார்த்திருந்து உறங்கிப் பழக்கப்பட்டிருந்த குழந்தைகள், இன்றும் அவ்வாறே மெல்ல மெல்ல உறக்கத்தின் பிடியில் அகப்படத் தொடங்கினார்கள்.

அவள் விழிகளோ அந்த அறையை ஆற அமரச் சுற்றி வந்தன.

அன்று தான் போகும் போது இருந்த மாதிரியே இன்றும் இருந்ததைக் கண்டவள் மனம் விம்மாமல் இல்லை. கூடவே, கார்த்திகேயன் இந்த அறையை பாவிக்கிறான் என்பதை அங்கு குடிவந்திருந்த அவன் பொருட்களும் சுட்டி நின்றன. புதிதாக, கட்டிலின் தலைப்பக்கச் சுவரில் அன்று குழந்தைகள் பிறந்த போது எடுத்த புகைப்படம் பெரிய அளவில் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தது.

‘அன்றே அவர் மனதின் தீர்மானத்தை தெள்ளத் தெளிவாக சொன்னவர் அதிலிருந்து சற்றும் விலகவில்லையே! ஒருவேளை, நானும் குழந்தைகளும் வராது இருந்திருந்தால் இப்படியே இருந்திருப்பாரா?’ மீண்டும் துணுக்கிடலோடு எண்ணியவளுக்கு அந்நினைவே கசந்து வழிந்தது.

error: Alert: Content selection is disabled!!