சதிராடும் சித்திரமே 7 – 1

அத்தியாயம் – 7

 

பணம் பறிபோனது ஒரு பக்கம் இருக்க, தன்னை இப்படி அவமானப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டானே என இன்னொரு புறம் திவ்யதர்ஷினியின் தன்மானமும், சுயமரியாதையும் சீண்டப்பட்டன.

 

மனம் செந்தணலாய் கனன்றது. அவனை இன்னொரு முறை பார்க்க நேரிட்டால் அவன் என்ன ஏதுவென்று யோசிக்கும் முன்னர் அவனை நன்றாகக் கன்னத்தில் அறைய வேண்டும் என்ற மிதமிஞ்சிய கோபம் துளிர்ந்தது.

 

ஆனால் அடுத்தமுறை அவனைச் சந்திக்கையில் அவளால் எதையும் செய்ய முடியாத நிலையில் அவள் கைகள் கட்டப்பட்டிருக்கும் என்று அவளுக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை.

 

அழுகை வரும் போல இருந்தது திவ்யதர்ஷினிக்கு. கண்களில் கண்ணீர் தளும்ப, நடு ரோட்டில் நின்று அனைவருக்கும் காட்சிப் பொருளாக விரும்பவில்லை. என்ன செய்வது எனச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

 

அருகில் ஒரு கோவிலிருக்க, விடுவிடுவென்று போய் அங்கே வண்டியை நிறுத்திவிட்டு கோவிலின் உள்ளே சென்று ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டாள். இரு முழங்கால்களையும் கட்டிக்கொண்டு தூணின் மேல் சாய்ந்து மெதுவாக விசும்ப ஆரம்பித்தாள்.

 

கண்களில் நீர்த்துளிகள் திரண்டு, கன்னங்களில் வழிந்து கோலம் வரைய ஆரம்பித்தன. எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவளால் அழுகையை நிறுத்தமுடியவில்லை. இதுவரைக்கும் அவள் யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லையே. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியே செயல்படுவாளே.

 

அப்படி அனைவரின் நலன் பற்றி அக்கறை கொள்ளும் அவளுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? அதுவும் வேறு வேறு ஆட்கள் என்றாலும் பரவாயில்லை. அவளிடம் தவறு இருக்கிறது என உணர்ந்து திருத்திக் கொள்ளலாம். ஆனால் அவன் ஒருவனிடம் மட்டுமே மீண்டும் மீண்டும் அகப்பட்டு அவளின் தன்மானம் மிதிபடுகிறது. வெகுநேரமாகியும் அழுகை நின்றபாடில்லை.

 

தெரியாமல் நடந்த விஷயத்திற்கு இப்படித் தன்னிடமிருந்து பணத்தைப் பறிப்பான் என்று அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. சசிதரனுக்கு அந்தப் பணம் மிகவும் உதவியாக இருந்திருக்கும்.

 

அவன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அப்பணம் முதல் படிக்கட்டாக இருக்கும் என்று எண்ணினாளே. பேசாமல் அது வங்கியிலேயே இருந்திருக்கலாம். பணம் பத்திரமாகவாவது இருந்திருக்கும்.

 

‘இவனுக்கு இரக்கமே இருக்காதா? சரியான இராட்சசன்’ என மித்ரனைக் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாள்.

 

அடுத்து, ‘என்ன செய்வது, ஏது செய்வது?’ என அவள் மண்டைக்குள் எதுவும் ஓடவில்லை. அப்படியே பிரமை பிடித்துப் போய் அமர்ந்து கொண்டிருந்தாள். நாழிகைகள் அமைதியாய் விடைபெற்றுக் கொண்டு போயின.

 

அவள் கைபேசியின் சத்தத்தில் தன்னுணர்வு பெற்று அழைப்பை எடுத்தாள். சந்தோஷ் அழைத்திருந்தான்.

 

அவள் அழைப்பை எடுத்ததுமே, “தர்ஷி எங்க இருக்குற? என்ன பண்ணிட்டு இருக்குற?” என சந்தோஷ் கேட்க, “கோவில்ல இருக்கிறேன் சந்தோஷ். இதோ கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன்” என்றாள் திவ்யதர்ஷினி.

 

“என்னாச்சு தர்ஷி. குரல் ஒரு மாதிரி இருக்கு, அழுதியா?” என அவள் குரலிலிருந்த மாற்றத்தை வைத்தே கண்டு பிடித்துவிட்டான் சந்தோஷ்.

 

“அதெல்லாம் இல்லை சந்தோஷ். லயன் சரியா இல்ல அதுனால இருக்கும்” என்றாள் திவ்யதர்ஷினி.

 

“லயன் சரி இல்ல, ஓகே. அப்போ புலி மட்டும் சரியா இருக்குதா?” எனக் கிண்டலடித்துவிட்டு “ஒழுங்கா உண்மையைச் சொல்லு?” என சந்தோஷ் கேட்க, அதற்குமேல் அவளால் மறைக்க முடியவில்லை.

 

நடந்ததைச் சொன்னவள், “சசிகிட்ட அந்தப் பணத்தைக் கொடுத்து அவன் முகத்தில் வர்ற சந்தோசத்தைப் பார்க்க ரொம்ப ஆசையா இருந்தேன் சந்தோஷ். கடைசில இப்படி ஆயிடுச்சு” என அவள் மீண்டும் அழுகையில் வெடிக்க,

 

“யாரவன்? என்கிட்ட சொல்லு அவனை ஒரு வழி செஞ்சிடறேன்” என சந்தோஷ் கோபமாகக் கத்தினான்.

 

அவன் கோபக் குரலைக் கேட்டதும் தேவையில்லாமல் சந்தோஷை இதில் மாட்டிவிடக் கூடாது என்று எண்ணினாள் திவ்யதர்ஷினி. மித்ரனைப் பார்த்தால் அதிக வசதி படைத்தவன் போல் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சரியான திமிர் பிடித்தவனும் கூட. தேவையில்லாமல் அவள் காரணமாக சந்தோஷ் மித்ரனிடம் ஏன் பகைமை பாராட்ட வேண்டும்?

 

அந்த மித்ரன் நினைத்தால் சந்தோஷை என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடும். சந்தோஷ் புதிதாக தொழிலில் காலடி எடுத்து வைக்க நினைக்கையில் எதற்கு வீண் வம்பு என்று எண்ணி அழுகையை நிறுத்தினாள்.

 

“யாருன்னு எனக்குத் தெரியலை சந்தோஷ். விடு எப்படியும் தப்பு என் பேர்லேயும் இருக்கும். என்ன பணம் போனதை நினைச்சு என்னால தாங்க முடியலை. சரி, தர்மம் பண்ணினதா நினைச்சிக்கிறேன்” என அவனோடு சேர்த்து தன்னையும் சமாதானம் செய்து கொண்டாள்.

 

“அதுவும் சரி. நம்ம அப்படியே நினைச்சுக்குவோம். ஆமா, வந்து சமைக்கிற ஐடியா இருக்கா, இல்லையா? பயங்கரமா பசில இருக்கோம்” என அவன் பேச்சை மாற்ற, “அச்சச்சோ மறந்தே போயிட்டேன். இதோ கிளம்பறேன்” என அங்கிருந்து உடனே எழுந்தாள்.

 

“சந்தோஷ், இதைப் பத்தி நீ எதுவும் சசிகிட்டேயும் அப்பாகிட்டயும் சொல்லாத. அத்தை- மாமாகிட்டயும் மூச்சு விடாத” என ஞாபகப்படுத்திவிட்டு அழைப்பை வைத்தாள்.

 

*****

இரண்டு வாரங்கள் கழிந்திருந்தன. மெள்ள பண இழப்பிலிருந்து வெளியில் வந்துவிட்டாள் திவ்யதர்ஷினி. அத்தோடு உடைந்திருந்த தன் இருசக்கர வாகன கண்ணாடியையும் பழுது பார்த்து விட்டிருந்தாள். தேவையில்லாத தண்டச் செலவு என முணுமுணுத்தவாறே அதை செய்து முடித்தாள்.

 

அன்று வேலை முடித்து மாலை நேரத்தில் தன் தந்தைக்கு வாங்க வேண்டிய மருந்துகளை வாங்கி வர எண்ணி ஒரு மருந்தகத்திற்கு சென்றாள் திவ்யதர்ஷினி. வேண்டிய மருந்துகளை வாங்கிக் கொண்டவள் அதைத் தள்ளுவண்டியில் வைத்து பூட்டிவிட்டு வாகனத்தை கிளப்பினாள்.

 

அப்போது அவள் அருகில் வந்த யாரோ ஒருவன், “எக்ஸ்க்யூஸ் மீ, இந்த வண்டி உங்களுதா?” என மிகவும் மரியாதையாகக் கேட்டான்.

 

“ஆமாங்க.. ஏன்?” எனக் கேள்வியாக இழுத்து நிறுத்தி அவனைப் பார்த்தாள்.

 

“இந்தக் குட்டி வண்டியை வச்சா அவ்ளோ பெரிய காருக்கு அவ்ளோ பெரிய டேமேஜ் பண்ணினீங்க?” என அவன் கையை விரித்து ஆச்சரியப்பட்டு கேட்க, “யாரு சார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என மிரட்டலாகக் கேட்டாள் திவ்யதர்ஷினி.

 

“என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதோ அங்கே நிக்குது பாருங்க பளபளன்னு ஒரு கார். அதாவது ஞாபகம் இருக்கா?” எனக் கேட்டான்.

 

‘மறக்க கூடிய காரா அது?’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டாலும் வெளியில் தெரியாதவாறு அவனைப் புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

 

“தெரியாத மாதிரியே நடிக்கிறீங்க. சரி, நானே ஞாபகப்படுத்துறேன் உங்களுக்கு. சுமார் இரண்டு வாரத்துக்கு முன்னாடி இந்தக் காரை வந்து ஆசையா உங்க வண்டியால முத்தமிட்டுப் போனது ஞாபகம் இருக்கா?” எனக் கேட்க, ‘அதுக்கு இப்போ என்னாங்கிற?’ என்ற பாடல் வரிகள் அருகிலிருந்த கடையிலிருந்து ஒலித்தது.

 

‘பக்கென’ திவ்யதர்ஷினி சிரிக்க, “பாட்டு கூட டைமிங்கா ரைமிங்கா என்னைக் கிண்டல் பண்ணுது. எல்லாம் என் நேரம்” என அந்த இளைஞன் அசடு வழிந்தான்.

 

தொடர்ந்து, “இங்க பாருங்க, நீங்க அவ்ளோ பெரிய டேமேஜ் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி நிக்காதீங்க. எவ்ளோ கஷ்டப்பட்டு அதை சரி செஞ்சேன் தெரியுமா. நிறைய செலவாச்சு அதற்கு முதல்ல காசை கையில் எடுத்து வைங்க” என வத்சன் கையை நீட்டினான்.

 

“நீங்களா ஓனர்?” என ஆச்சர்யத்துடன் வினவினாள் திவ்யதர்ஷினி.

 

“என்னைப் பாத்தா அந்தக் காருக்கு ஓனர் மாதிரி தெரியலையா? விட்டா ஆதார் கார்டு வரைக்கும் கேட்பீங்க போல. வேணா, அதோ பாரு காரு… காரு ஓனர் யாரு? காரு ஓனர் நானு எனப் பாட்டுப் பாடறேன்” என வத்சன் சொல்ல, திவ்யதர்ஷினி கலகலவென்று சிரித்தாள்.

 

பேசிக் கொண்டிருந்தவனை அவளுக்குப் பிடித்துப் போனது.

 

“அப்போ அன்னைக்குக் கார்ல வந்த சாரு ஓசி ஓனரா?” எனக் கேட்டுவிட்டு, “ஓசி காருக்கா அத்தனை பந்தா விட்டுட்டுப் போனார்?” என நொடித்துக் கொண்டாள் திவ்யதர்ஷினி.

 

அதைக் கேட்டதும் வத்சனுக்குச் சிரிப்பு வந்தது. இது வரையில் அவனைத் தவிர மித்ரனை யாரும் கிண்டலும் கேலியுமாகப் பேசி அவன் பார்த்ததில்லை. அதற்கு மித்ரன் இடம் கொடுத்ததும் இல்லை என்பது வேறு விஷயம்.

error: Alert: Content selection is disabled!!