எதிரிலிருந்த பெண் மித்ரனை இளக்காரமாகக் கிண்டலடிக்கவும் அவனுக்குப் பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. ‘அசிங்கப்பட்டான்டா குமாரு’ என உள்ளுக்குள் மித்ரனை நக்கல் செய்யவும் மறக்கவில்லை.
“என்ன சார் சிரிக்கிறீங்க? ஓனர்னு சொல்லிட்டு அன்னைக்கு இந்தக் காரை ஓட்டிட்டு வந்தாரே ஒரு லார்ட் லபக்கு தாஸ், உங்களுக்குப் பதில் சொல்லனும்னு பயந்து போய் என்கிட்ட ஏற்கனவே காசு வசூல் பண்ணிட்டாரே”
‘லார்ட் லபக்கு தாஸா?’ என அவன் மனதுக்குள் சிரிக்க, “எதுக்கும் அவர்கிட்ட ஜாக்கிரதையா இருங்க சார். என்னவோ அவர் தான் காருக்கு ஓனர் மாதிரி அப்பாடக்கரா எப்பப் பார்த்தாலும் நடந்துக்கறாரு” எனப் படபடவென்று திவ்யதர்ஷினி பொரிந்து தள்ளினாள்.
சிவனே என்று இருந்த மித்ரனிடம் அவன் தான் போய் தன் காரைக் கொடுத்து இதில் திறப்புவிழாவுக்கு வந்திறங்கு என்று சொல்லியிருந்தான். அவன் ஏதோ மனமிரங்கி அவ்வாறு செய்தான்.
ஆனால் இவள் பேசுவதை மட்டும் மித்ரன் கேட்க நேர்ந்தால், ‘எரிமலை நானே எரிமலை நானே எதிரே நிற்காதே’ என வத்சனின் மேல் தீப்பிழம்பைக் கக்கிவிடுவான்.வத்சனுக்கு அடிவயிற்றில் பீதி கிளம்பியது.
“நீங்க நினைக்கற மாதிரி…” என அவன் மேற்கொண்டு பேசும் முன்னரே வழியில் சென்ற ஒரு பெண் அங்கே நின்று திவ்யதர்ஷினியின் கைகளில் ஒரு காகிதத்தைக் காட்டி, அதிலிருந்த முகவரி எங்கே இருக்கிறது எனச் சைகை மொழியால் கேட்டாள்.
அதனால் வத்சன் சொல்ல வந்த, ‘நீ நினைக்கிற மாதிரி எல்லாம் மித்ரன் மோசமானவன் இல்லை’ என்ற வாக்கியம் அப்படியே தடைபட்டுப் போனது.
முகவரி கேட்டவளின் முகத்தையும் உடல்மொழியையும் வைத்தே அவளுக்குப் பேசவும் வராது காதும் கேட்காது என்று புரிந்து கொண்டாள் திவ்யதர்ஷினி. அந்த முகவரி அருகிலேயே இருந்தது.
முகவரி இருக்குமிடத்தை சைகை பாசையில் சொன்னவள், தானும் அந்த வழியே போகப் போவதாகவும், அவளை அங்கே இறக்கி விடுவதாகவும் தெரிவித்தாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த வத்சன் ஆச்சர்யத்தில் விழுந்தான்.
“உங்களுக்குச் சைகை மொழியெல்லாம் தெரியுமா? சூப்பர்… டீச்சரா நீங்க? என்கிட்டே ஒரு வேலை காலியா இருக்கு. அந்த வேலையை உங்களுக்குத் தர்றேன். வந்து சேர்ந்துக்கறீங்களா? நீங்க இப்போ வாங்குற சம்பளத்தை விட அதிகமாவே கொடுக்கிறேன்” என வத்சன் உற்சாகமாகப் பேசிக் கொண்டு சென்றான்.
அவன் அந்த வேலையாகவே அப்போது அங்கே வந்திருந்தான். அவன் சித்திக்கு, அதாவது மித்ரனின் அன்னைக்கு உதவவென்று ஏற்கனவே இருந்த ஆள் தங்கள் குடும்பத்தில் ஏதோ பிரச்சனை என்று சொந்த ஊருக்கே கிளம்பிவிட்டாள்.
அதனால் உடனே அவருக்கு மாற்று ஆள் ஏற்பாடு செய்ய முனைந்திருந்தான் வத்சன். அந்தப் பெண்ணுக்கு சைகை மொழி தெரிந்திருப்பது மிகவும் அவசியம். அத்தோடு படிப்பறிவும் முக்கியம்.
அவன் சந்திக்க வந்த பெண்ணை அவனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. மிகவும் அலட்டிக் கொண்டாள். அதனால் வேறு ஆள் தேட வேண்டும் என நினைத்தவாறே தன் காரை நோக்கிச் சென்றான்.
அந்தச் சமயத்தில் திவ்யதர்ஷினியின் வண்டியின் எண் கண்களில் பட்டது. மெனக்கெட்டு மனப்பாடம் செய்திருந்தான். பின்னே புத்தம் புதிய காரில் யுத்தம் செய்து வைத்திருந்தாளே. உடனே அவளை நிறுத்திப் பேசவும் செய்தான்.
ஆனால் அந்தப் பெண் சைகை மொழியில் பேசவும் அவன் அடைந்த மகிழ்ச்சியை அளவிட முடியாது. அறிமுகமற்ற பெண்ணிடம் அவள் நிலையுணர்ந்து மிகவும் அனுசரணையாகப் பேசி, அவளைத் தன் வண்டியில் கொண்டு போய் விடுவதாகச் சொல்லி உதவுபவளை அவனுக்கு மிகவும் பிடித்துப் போனது.
உதவும் மனப்பான்மையுடன் இருப்பவர்கள் மானசீகமாக வேலையும் செய்வார்கள் என்று நம்புபவன் அவன். அதனால் அவன் மண்டைக்குள் பளீரென்று பல்பு எரிந்தது.
தன் காரைப் பழுது பார்க்க அவள் எந்தப் பணத்தையும் தர வேண்டாம் என்றும் ஏற்கனவே மித்ரனிடம் தந்த பணத்தையும் அவன் தந்து விடுவதாகச் சொல்லி அவளை அந்தப் பணிக்கு வரச் சொல்லலாமென்ற எண்ணத்தில் ஆச்சரியத்துடன் அவளிடம் வினவினான்.
‘வேலை தருகிறேன்’ என்றதும் எதிரில் இருந்தவனைச் சந்தேகத்துடன் முறைத்துப் பார்த்தாள் திவ்யதர்ஷினி.
“ஊஹ்ஹூம்.. என்னை அப்படியெல்லாம் தப்பாப் பார்க்காதீங்க. புரியுது.. என்னடா இப்படி வீதியில பார்த்த உடனேயே உங்களை வேலைக்கு வரச் சொல்லறேன்னு உங்களுக்குத் தப்பா தோணும். ஆனா நான் இப்போ ஒரு அவசரத் தேவையில இருக்கிறேன். எனக்காக இல்லை. என் சித்திக்காக வாங்க” என்றவன்,
“இந்தாங்க, இது என்னோட பிஸினஸ் கார்ட்” என ஒரு அட்டையை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டினான். அத்துடன், ‘ஆள் தேவை’ எனச் சில வாரங்களுக்கு முன்னர் விளம்பரம் தந்ததைப் பற்றிய விவரங்களையும் சொன்னவன், அதை அட்டையின் பின்னாடி அவசரமாக எழுதித் தந்தான்.
“போய் செக் பண்ணிட்டு, சந்தேகம் தீர்ந்ததுன்னா கண்டிப்பா இந்த நம்பருக்குக் கூப்பிடுங்க” என்றான்.
எங்கே அவள் மறுத்துக் கூறி விடுவாளோ என்ற எண்ணத்தில், “கார் ரிப்பேருக்குன்னு உங்ககிட்ட வாங்கின பணத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துடறேன். பிளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” என வேண்டுதலாக முடித்தான் வத்சன்.
அவன் பேசிய விதத்தில் அவன் மேல் மதிப்பெழுந்தது. ஆனால் உடனே அவனை நம்பிவிடவில்லை அவள். அவன் தந்த அட்டையை வாங்கி, அவன் பெயர் வத்சன் என்று தெரிந்து கொண்டாள்.
அதைக் கைப்பைகக்குள் வைத்துக் கொண்டவள், “கண்டிப்பா வத்சன் சார். வேலை வேணும்னா கண்டிப்பா உங்ககிட்டே வரேன். இப்போ கிளம்பறேன்” என அவனிடமிருந்து விடைபெற்றாள்.
“உங்க பெயரையாவது சொல்லிட்டுப் போங்க. ஒருவேளை நீங்க கூப்பிட்டா யாருன்னு தெரியாம நான் முழிக்க வேண்டாம் பாருங்க” என்றான்.
“திவ்யதர்ஷினி… ஃப்ரெண்ட்ஸ் தர்ஷின்னு கூப்பிடுவாங்க” என வாகனத்தில் அந்த வழி கேட்ட பெண்ணை அமரச் செய்து கிளம்பினாள். சில அடி தூரங்கள் சென்றுவிட்டு அப்படியே வண்டியை நிறுத்தி தலையை மட்டும் திருப்பி, வத்சனிடம்,
“உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” என வினவினாள்.
“என் நல்ல மனசைப் பார்த்து அதற்குள்ள முடிவு செஞ்சுட்டீங்களா? உங்களுக்கு அந்த வேலை வேணுமா?” என அவன் சொல்ல, கலகலவென்று சிரித்தாள்.
அவளின் அந்த அழகான சிரிப்பை இரசித்தவன், “உங்க சிரிப்பு அழகா இருக்கு” என்றான்.
உடனே சிரிப்பதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்து முறைக்க, “தப்பா எல்லாம் சொல்லலைங்க. அழகை இரசிக்கும் ஒரு கலைஞன் நான். சொல்லுங்க என்ன கேட்கணும்” என்றான்.
“என் வண்டி நம்பரை யார் உங்ககிட்ட கொடுத்தாங்க?” எனக் கேட்டாள்.
“வேற யாரு, அன்னைக்குப் பார்த்தீங்க இல்ல, லார்ட் லபக்கு தாஸ், அந்த மித்ரனே உங்க வண்டி நம்பரைத் தந்தான். ஆனா பாருங்க உங்ககிட்ட பணத்தை வாங்கினதை என்கிட்டே சொல்லவே இல்லை. அவனுக்கு இருக்கு இன்னைக்கு. பணத்தை வாங்கிட்டு உங்ககிட்ட மாட்டிவிடப் பிளான் பண்ணியிருக்கான்” என அவன் தன் அதிருப்தியைக் காட்டினான்.
அவன் வேண்டுமென்றே இந்தப் பெண்ணிடம் மாட்டிவிட எண்ணியிருக்கிறான் என வத்சன் நினைக்க, அவளை வேண்டுமென்றே சீண்ட இப்படிச் செய்திருக்கிறான் என திவ்யதர்ஷினி எண்ணிக் கொண்டாள்.
கூடவே, மித்ரன் என்ற பெயருக்கும் அவனின் செயல்களுக்கும் சற்றும் சம்மந்தமில்லை எனமனதில் முகத்தைச் சுழித்தவாறே அங்கிருந்து கிளம்பினாள் திவ்யதர்ஷினி.

