“சொல்லு என்ன விஷயம்? உனக்கு ரெண்டு நிமிஷம் தர்றேன்” என்றவாறே லிப்ட்டினுள் நுழைந்தான். அவன் காருக்குச் சென்று முக்கியமான ஒரு டாக்குமெண்ட்டை எடுத்து வர கார் நிறுத்தி வைத்திருக்கும் இடத்துக்குச் செல்லக் கிளம்பினான்.
எப்போதும் அந்த வேலையை அவனது உதவியாளர் செய்வான். ஆனால் இன்று மித்ரனே சென்று எடுத்து வருவதாகக் கூறினான். அலுவலகத்தினுள்ளேயே அமர்ந்து வேலை செய்ததில் அவனுக்குச் சோர்வாக இருக்க, சற்று நடந்துவிட்டு வரலாம் என்றே கிளம்பினான்.
அப்படி வந்தவன் இவளைச் சந்தித்தது மிகவும் அதிர்ஷ்டவசமானது. அதுவரையில் அவனை ஆட்கொண்டிருந்த சோர்வு அறவே பறந்தே போனது.
‘இங்கே வைத்தா?’ என்பதைப் போல் அவள் விழிகள் படபடப்புடன் மின்தூக்கியைப் பார்க்க, “ஏன் ஏசி அறையில வச்சு உட்கார்ந்து பேசினாத் தான் மகாராணி பேசுவீங்களா?” என நக்கலாக வினவினான் மித்ரன்.
இவனிடம் இருந்து ஸ்பான்சர்ஷிப் வாங்குவது மிகவும் கடினம் என்ற முடிவுக்கு அப்போதே வந்துவிட்டாள் திவ்யதர்ஷினி. பின்னே இப்படி எதிராளியை மட்டு மரியாதையில்லாமல் நடத்துபவனிடம் என்ன சொல்லிப் புரிய வைப்பது?
இவனிடம் பேசுவது நேர விரயம். இருந்தாலும் தன் தம்பிக்காக, அவனது எதிர்காலத்துக்காக முயற்சி செய்தே ஆக வேண்டும். அதுவும் தனியாக ஒன்றும் அவள் இல்லையே. யோசிக்காமல் அவளும் உடனே மின்தூக்கியினுள் சென்றாள்.
“அது…” என அவள் ஆரம்பிக்க, “உன் பேரு என்ன?” என அதிகாரத் தோரணையில் மித்ரன் வினவினான்.
“திவ்யதர்ஷினி” என அவள் தன் பெயரைச் சொல்லவும், ‘இந்தப் பேரைத் தான் தர்ஷி, அரிசின்னு அன்னைக்குக் கூட வந்தவன் அசிங்கமாக் கூப்பிட்டானா?’ என மனதிற்குள் அன்று பார்த்த சந்தோஷைக் கேலி செய்து கொண்டிருந்தான்.
‘திவி என்று அழைத்தால் எத்தனை அழகாக இருக்கும்!’ அவன் கற்பனை ஆராய்ச்சியில் விரிய, மேலே சொல்லு என்பதைப் போல் அவன் திவ்யதர்ஷினியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“சசிதரன் என் தம்பி…” என அவள் சொல்லும் பொழுதே மின்தூக்கியின் கதவுகள் மூட ஆரம்பித்தன. அவள் கதவைப் பார்த்தவாறே பேச, அவனோ பேச்சைக் கவனிக்கும் பாவனையில் அவளை அளந்து கொண்டிருந்தான்.
இத்தனை அருகில் வைத்து யாருமில்லா தனிமையில் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு அவனுக்கு மிகவும் பிடித்தது. இந்தக் கணம் இப்படியே நீண்டு கொண்டே போகாதா என்ற ஏக்கம் தோன்றியது. ஏனோ உலகமே இயங்க மறந்துவிட்டதைப் போல் உணர்ந்தான்.
இந்த நிமிடம் இப்படியே வாழ்நாளின் இறுதிவரையில் தொடராதா என மனம் எதிர்பார்த்தது. மொத்தத்தில் ஒருவித மயக்கத்தில் திளைத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.
அந்த ரம்மியமான சூழல், “மித்ரன் எங்க போறீங்க? ஒரு நிமிஷம் இருங்க” என்ற ரதிப்ரியாவின் குரலில் கலைந்து போனது. அதற்குள் தன் மாயையில் இருந்து வெளிவந்தவன் சுதாரித்து, ‘என்னடா செய்து கொண்டிருக்கிறாய்?’ எனத் தன்னையே திட்டிக் கொண்டான்.
அப்படி அவளிடம் என்ன இருக்கிறது என இப்படியே உலகையே மறந்து போகும் அளவுக்கு மெய்மறந்து போய் நின்றிருந்தான்? அதுவும் ஒரு நான்கு முறை மட்டுமே பார்த்த ஒரு பெண்ணிடம். தன் மேலேயே அவனுக்குக் கோபம் வந்தது.
உடனே மூளை அதிவேகத்தில் செயல்பட, மூடிக் கொண்டிருந்த மின்தூக்கியின் கதவுகளைக் கை கொண்டு தடுத்தான் மித்ரன். குரலைத் தொடர்ந்து அங்கே மின்தூக்கியின் முன்னே வந்து நின்றாள் ரதிப்ரியா.
கையில் ஒரு பெரிய கேக்கை வைத்தவாறே புன்னகையுடன் அவள் நின்றிருக்க, அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மேலும் இரண்டு பேர், “பிறந்தநாள் வாழ்த்துகள் சார்” எனக் கூறினர்.
அதற்குள் கதவைத் தடுத்து நிறுத்திய மித்ரன், வெளியில் சென்று, “ஹே ரதி, தேங்க் யூ. உனக்கு ஞாபகம் இருக்கா? நான் கூட நீ மறந்துட்டேன்னு நினைச்சேன்” என வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான்.
அவனுக்கு அன்று பிறந்தநாள். ஆனால் அன்று முழுவதும் ஏனோ வெறுமை சூழ்ந்திருந்தது. இந்த வருடம் மட்டுமல்ல, அவன் தந்தை இறந்ததிலிருந்தே அப்படித் தான். அவர் இருந்த வரையில் அவன் பிறந்தநாளன்று எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவார்.
அவன் லண்டனில் படித்துக் கொண்டிருக்கையில் அங்கே ஓடிச் சென்று அவனை ஆச்சயர்ப்படுத்தினார். தன் தந்தை அவன் அன்னைக்கு நியாயம் செய்யவில்லை என்றாலும் ஒரு தந்தையாக அவனுக்கு எதையும் குறை வைத்ததில்லை.
ஏனோ அவன் தந்தையின் இழப்பு அவனை அன்று மிகவும் பாதித்தது. ஆனால் அதுவரையில் விரவியிருந்த தனிமையும், விரக்தியும் திவ்யதர்ஷினியைக் கண்டதும் காணாமல் போகும் அளவுக்கா அவன் மயங்கிக் கிடக்கிறான்?
கூடாது. அவன் யார்? மித்ரன். அனைவரையும் ஆட்டிப்படைக்க வேண்டியது அவனே. அவன் மற்றவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளக் கூடாது. மனதில் ஒரு பிரளயம் நடந்து கொண்டிருக்க, அதை வெளிக்காட்டாமல் பேசினான்.
அதுவும் திவ்யதர்ஷினியிடமிருந்து தப்பவே மின்தூக்கியில் இருந்து வெளியில் வந்தான் என்றா சொல்ல முடியும்? தேர்ந்த தொழிலதிபன் அல்லவா! அனைத்தையும் மறைத்தவாறு நின்று கொண்டிருந்தான்.
“உங்க பிறந்தநாளை மறக்க முடியுமா மித்ரன்?” என ரதிப்ரியா கொஞ்சலாகச் சொல்லி, “வாங்க, உங்களுக்காக ஸ்பெஷல் கேக் ஆர்டர் பண்ணினது” என்றவாறே அவனைக் கையைப் பற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.
ரதிப்ரியாவின் உள்ளுக்குள் ஆயிரம் பிரளயம் நடந்து கொண்டிருந்தன. பின்னே எத்தனை மகிழ்ச்சியுடன் அவனைப் பார்க்க ஓடி வந்தாள். எல்லாம் தயார் நிலையில் வைத்துவிட்டு அவனை அழைக்க வந்தால் அவன் அந்தப் பிச்சைக்காரியுடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறான்.
அவள் திட்டமிட்டு இவனைத் தொடர்ந்து வந்து கவர முயல்கிறாளோ என்ற சந்தேகம் இப்போது ரதிப்ரியாவுக்கு வலுத்தது.
அவளுக்குப் பல வருடங்களாக மித்ரனைத் தெரியும். அவன் இத்தனை வருடங்களில் எந்தப் பெண்ணைப் பார்த்தும் தன்னிலை மறந்து போனதில்லை. ஆனால் இவளைப் பார்க்கையில் எல்லாம் அவன் முகத்திலும் உடல்மொழியிலும் தோன்றுகிற மாற்றங்களுக்கு என்ன விளக்கம் தர முடியும்? அவன் மயங்கிப் போயிருக்கிறான் என்ற ஒன்றைத் தவிர.
இதை இப்படியே வளர விடக் கூடாது என்று எண்ணியே ஓரக் கண்ணால் அந்தப் பெண்ணைப் பார்த்தவாறே அவனைக் கைப்பிடித்து அங்கிருந்து அழைத்துச் சென்றாள் ரதிப்ரியா.
மின்தூக்கியினுள் நின்று கொண்டிருந்த திவ்யதர்ஷினியோ குழப்பமான மனநிலையில் நின்று கொண்டிருந்தாள்.
‘எல்லாம் சரி, இப்போது அவனைத் தொடர்ந்து அவளும் வெளியில் செல்வதா, அல்லது,…’ என திவ்யதர்ஷினி யோசித்து முடிவெடுக்கும் முன்னரே மின்தூக்கியின் கதவுகள் மூட ஆரம்பித்தன. உடனே கீழ்தளம் நோக்கிப் பயணிக்கவும் ஆரம்பித்தது.
‘ஐயோ, இப்போது என்ன செய்வது?’ என சுயநினைவுக்கு வந்தவள், அங்கிருந்த கதவைத் திறக்கும் பட்டனை அமுக்கினாள். அதற்கு மேல் உனக்கு அடிபணிய மாட்டேன் என்று அந்த மின்தூக்கி கங்கணம் கட்டிக் கொண்டது போல.
கதவுகள் திறக்கவில்லை. சரி, அடுத்த தளத்தின் எண்ணை அழுத்தலாம் என்று நினைத்து அழுத்தினாள். அதுவும் வேலை செய்யவில்லை. திவ்யதர்ஷினிக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
அதுவும் நான்காவது தளத்தை கடக்கையில், மின்தூக்கி கடகடவென்று ஆடவும் அவளுக்கு வேர்த்துக் கொட்டத் தொடங்கியது. மின்தூக்கியில் அமுக்கியிருந்த எண்ணைப் பார்த்தாள்.
மித்ரன் ஏற்கனவே அண்டர்கிரவுண்ட் பார்க்கிங் தளத்துக்குப் போக அதை அமுக்கியிருந்ததால் மின்தூக்கி நிற்காமல் விர்ரென்று கீழ் நோக்கிச் சென்றது.
‘கடவுளே நடுவில் யாராவது மின்தூக்கிக்காகக் காத்திருக்க வேண்டும்’ என அவசர வேண்டுதலை வைத்துவிட்டு கீழே செல்லும் தளத்தின் எண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள். மூன்றாம் தளத்தைக் கடக்கவே ஒரு யுகம் ஆனதைப் போலிருந்தது. கடகடவென்ற சத்தத்துடன் மெதுவாகவே சென்றது.
அவள் தன்னைத் தொடர்ந்து வருவாள் என மித்ரன் தவறாக எண்ணிவிட்டான். அவள் அங்கே அலுவலகத்தின் வரவேற்பறையில் இருக்கிறாள் என்று கணக்குப் போட்டுவிட்டான். ஆகவே நேராக ரதிப்ரியா அழைத்துச் சென்றதும் திரும்பியும் பார்க்காமல் அங்கே பணியாளர்கள் உணவருந்தும் அறைக்குச் சென்றான்.
அவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துப் பாடி, கேக் வெட்டி எனச் சற்றுநேரம் கழிய மித்ரனின் கண்கள் அறையின் வாசலை அவ்வப்பொழுது தழுவித் தழுவி அகன்றன. எல்லாம் அவள் தென்படுகிறாளா என்று நோட்டம் விடுவதற்கே. கேட்டால் இல்லவே இல்லை என்று சாதிப்பான்.
அப்போது திடீரென்று பயங்கரச் சத்தத்துடன் அந்த கட்டடத்தில் அலாரம் அடிக்க ஆரம்பித்தது. எங்கிருந்து வருகிறது என அனைவரும் அவசரமாக வெளியில் வந்தனர். மித்ரன் உடனே ஓடிச் சென்று வரவேற்பறையில் பார்க்க, அங்கே திவ்யதர்ஷினி இருந்த சுவடே இல்லை.
அவன் இதயம் தாறுமாறாய் அடிக்க ஆரம்பிக்க, ‘எப்போப் பார்த்தாலும் பிரச்சனையை இழுத்துட்டு வருவா போல’ என மனதுக்குள் திட்டிக் கொண்டான். என்னவோ அவள் தான் அந்தப் பிரச்சனையை இழுத்து வைத்தாள் என்பதைப் போல்.

