சதிராடும் சித்திரமே 8 – 3

அதற்குள் சத்தம் மின்தூக்கியில் இருந்து வருகிறது என அனைவரும் புரிந்து கொண்டனர். ஆகவே சத்தம் வந்த மூன்றாம் தளத்தை நோக்கி வேகமாகச் சென்றனர். மித்ரனும் அரக்கப் பறக்க ஓடினான்.

 

அவர்கள் செல்லும் முன்னரே அந்த அலுவலகக் கட்டடத்தை மேற்பார்வை பார்க்கும் ஆள் வந்திருந்தார். “உள்ளே யாரோ மட்டிக்கிட்டாங்க சார். ரெண்டு நாளாவே லிப்ட் கொஞ்சம் மக்கர் பண்ணிட்டு இருந்தது” எனத் தலையை சொறிந்தார்.

 

“உள்ளே யார் இருக்காங்க?” எனக் கேட்ட மித்ரனின் நெஞ்சம், ‘கடவுளே அவளாக இருக்கக் கூடாது’ என அவசர விண்ணப்பம் வைத்தது.

 

“யாரோ ஒரு பொண்ணு மாட்டிக்கிட்டாங்க போல. அவங்க பயந்து அலர்ற சத்தம் கேட்டது. அத்தோடு அலாரத்தை அமுக்கியிருக்காங்க. கதவு திறக்க மாட்டேங்குது. ஆனா மேலேயும் கீழேயும் நிக்காம போயிட்டு இருக்கு” என்றவர்,

 

அதனால் மின்தூக்கிக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிட்டுத் தீயணைப்புப் படைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

 

“உள்ளே லைட் இல்லாததால் பயந்துட்டாங்க போல” எனச் சொல்ல, முதலில் ஒரு பெண் எனக் கேட்டதும் ‘அவளாக இருக்குமோ?’ என அவன் இதயம் முரசொலி கொட்டுவதைப் போல் பலமாக அடித்துக் கொள்ள ஆரம்பித்திருந்தது.

 

அப்போது திடீரென்று மின்தூக்கியில் இருந்தவள் வீல்லென்று அலறுவது கேட்டது. மித்ரன் அவன் உயிரே போய்விட்டதைப் போல் துடித்தான்.

 

“ரிப்பேர் பண்ண வேண்டியது தானே. மக்கர் பண்ணிட்டு இருந்ததுன்னு இப்படிப் பொறுப்பில்லாம சொல்லறீங்க? அதுக்குத் தான் சம்பளம் வாங்கறீங்களா?” எனத் திட்டினான் மித்ரன்.

 

“நேத்தே கூப்பிட்டோம் சார். நாளைக்கு வர்றதா சொன்னாங்க” எனச் சொல்லவும், “அப்போ ரிப்பேர்ன்னு எழுதி ஒட்ட வேண்டியது தானே” எனச் சரமாரியாகக் கடிந்து கொண்டான். அவனுக்குச் சக்தியிருந்திருந்தால் கதவை இரண்டாகப் பிளந்திருப்பான்.

 

மித்ரன் திட்டுவதைக் கேட்டு பம்மியவாறே கீழே சென்று பார்த்துவிட்டு வருவதாக கீழே இறங்கிச் சென்றார் மேற்பார்வையாளர்.

 

அந்தக் கட்டடத்தில் மொத்தம் ஐந்து தளங்கள் இருந்தன. ஐந்து மற்றும் நான்காவது தளங்களில் மித்ரனின் அலுவலகம் இருந்தது. மற்ற தளங்களில் வேறு வேறு நிறுவனத்துக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். அந்த மொத்தக் கட்டடமும் மித்ரனின் நிறுவனத்தையே சாரும். ஆகவே அனைத்துப் பொறுப்பும் அவனதே.

 

அதற்குள் அவன் பலரையும் அழைத்து இப்படிப் பொறுப்பில்லாமல் செயல்படுவதாகக் காய்த்தெடுத்துவிட்டான். சற்றுநேரத்திலேயே தீயணைப்புப்படை வீரர்கள் வர, அவர்கள் ஒருவழியாகக் கதவைத் திறந்தனர்.

 

காத்திருந்த கணங்கள் அவனுக்கு யுகங்களாகத் தெரிந்தன. ஏனோ அவளைப் பார்க்காமல் அவன் மூர்ச்சையாகி விடுவான் என்பதைப் போல் மூச்சு வாங்கினான்.

 

போராடிக் கதவைத் திறந்ததும் மித்ரனின் கண்கள் அவளைத் தேட, அவளோ மயங்கிப் போய் தரையில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தாள்.

 

‘ஓஹ் காட்… திவி’ என மனதுக்குள் மித்ரன் பதறிப் போய் ஓர் அடி எடுத்து வைப்பதற்குள், “எல்லோரும் தள்ளி நில்லுங்க. மூச்சடைச்சுப் போயிருக்காங்க. காத்து வரட்டும்” என அவளை வெளியில் தூக்கி வந்து முதலுதவி தந்தனர் தீயணைப்புப் படை வீரர்கள்.

 

அவளின் மூச்சு ஓரளவுக்குச் சீரானதைப் போலிருந்தது. தண்ணீர் தெளித்துப் பார்த்தனர். ஆனால் அவள் கண் விழிக்கவில்லை. அவள் கண்விழிப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

 

“உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகணும். மயங்கி விழுந்துட்டாங்க போல” என ஒருவர் சொல்ல, மித்ரனின் உயிர் பதறியது. அவளை எங்கே இழந்துவிடுவோமோ எனத் தவித்தது.

 

அவளை அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓட எண்ணி அவளருகில் செல்ல மித்ரன் மீண்டும் அடியெடுத்து வைக்க, அப்போது யாரோ பின்னாலிருந்து ஒரே தள்ளாக அவனைத் தள்ளிவிட்டு முன்னே சென்றனர்.

 

தள்ளிய வேகத்தில் மித்ரன் தூரப் போய் நின்றான். நல்லவேளை திடகாத்தரமாக இருந்ததால் கீழே விழவில்லை. இல்லையென்றால் வேறு யாராக இருந்தாலும் தள்ளிய வேகத்தில் சத்தியமாகக் கீழே விழுந்திருப்பார்கள். இந்த உதாசீனத்தை இதுவரையில் யாரும் அவனிடம் காட்டியதில்லை.

 

அவனுக்குக் கண் மண் தெரியாமல் கோபம் வர, தள்ளியவனைத் திட்ட வாயைத் திறந்தான். அதற்குள் வந்தவன், “தர்ஷி” எனக் கீழே குனிந்து திவ்யதர்ஷினியைக் கையில் ஏந்தியிருந்தான்.

 

‘இவனா?’ என அவன் மேற்கொண்டு செயல்படும் முன்னர், அவனைத் தொடர்ந்து வேறொரு இளைஞனும் , “அக்கா..” என அவளிடம் சென்றான்.

 

தன் தமக்கையை அந்த நிறுவனத்துக்குப் போகச் சொல்லிவிட்டு சசிதரன் உடனே அங்கே வந்துவிட்டான். ஆனால் அவன் வந்த வேளையில் யாரோ ஒரு பெண் மின்தூக்கியின் உள்ளே மாட்டிக் கொண்டதாக அவனுக்குத் தெரிந்தது.

 

அது தன் தமக்கையாக இருக்கக் கூடாது என அவன் வேண்டாத கடவுள் இல்லை. ஆனால் கடவுள் அவன் வேண்டுதலுக்குச் சற்றும் செவி சாய்க்கவில்லை. அவளுக்கு இருட்டு என்றால் பயம். அதுவும் அடைத்து வைத்த இருட்டறைக்குள் இருந்தால் இன்னும் விசேஷம்.

 

மின்தூக்கி என்றால் கேட்கவே வேண்டாம். பயந்து போவதோடு மட்டுமல்லாமல் மூர்ச்சையாகிப் போவாள். அதனால் மின்தூக்கியில் ஏறக் கூட மாட்டாளே. அப்படியிருக்கையில் எப்படி இதில் ஏறி மாட்டிக் கொண்டாள்?

 

அனைத்திலும் தைரியமாக இருப்பவள் பலவீனமடையும் ஒரே இடம் மின்தூக்கியும் இருட்டும். இன்று இரண்டும் ஒன்று சேர்ந்து கொள்ள, அவள் மயங்கி சரிந்துவிட்டாள்.

 

சசிதரன் அங்கே வந்த பொழுது திவ்யதர்ஷினியை அவன் பலமுறை அழைத்தவாறே மூன்றாம் மாடியை அடைந்தான். அவளின் கைப்பேசி சத்தம் உள்ளே மின்தூக்கியில் இருந்து வந்தது. அவனுக்குப் பயம் பற்றிக் கொண்டது.

 

உடனே சந்தோஷை அழைத்துக் கடகடவென்று அனைத்தையும் சொல்லிவிட்டுக் காத்திருந்தான். அதற்குள் தீயணைப்புப் படை வீரர்கள் வந்துவிட்டனர். அவர்கள் ஒதுங்கச் சொன்னதும் அப்படியே பிரமைப் பிடித்துப் போய் அவர்கள் திவ்யதர்ஷினியை மீட்கும் வரையில் அப்படியே நின்றிருந்தான்.

 

சந்தோஷ் வந்ததும் சசிதரனுக்குச் சற்று தைரியம் கூடியது.

 

“என்ன சார் இது, இவ்வளவு நேரமா பார்க்காம இருப்பீங்க? பாருங்க மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்குறாங்க. சீக்கிரம் வாங்க ஹாஸ்பிடல் போலாம்” என சந்தோஷ் அவளை கைகளில் ஏந்தியவாறே அங்கிருந்து நகர்ந்தான்.

 

“அக்கா எதுக்கு லிப்ட்குள்ள ஏறினாங்கன்னு தெரியலையே அண்ணா” என சசிதரனும் அவனைப் பின்பற்றி அழுதவாறே அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

 

என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருக்க அவர்களுக்கு நேரமில்லை. முதலில் அவன் தமக்கையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனையே முதன்மை பெற்றிருந்தது.

 

அதைக் கேட்டதும் மித்ரனுக்குக் குற்றவுணர்வு தலைதூக்கியது. அவள் உள்ளே வரத் தயங்கியது இப்போது அவன் கண் முன்னே படமாக ஓடியது. அவன் அல்லவா அவளை ஏளனமாகப் பேசி வலுக்கட்டாயமாக உள்ளே வரவழைத்தான். அதை நினைத்து அவன் மேலேயே வெறுப்பு வந்தது.

 

அத்தோடு தன் இயலாமையை நினைத்து அவனுக்கு ஆத்திரம் மூண்டது. அவன் இதுவரையில் இப்படி ஒரு நிலையில் நின்றதில்லை.

 

யாரோ ஒருவன் வந்து திவ்யதர்ஷினியைக் கையில் ஏந்திக் கொண்டு போவதைப் பார்க்க பார்க்க ஏனோ அவன் வாழ்க்கையை யாரோ அவனிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டதைப் போல் உணர்ந்தான்.

 

ஏன் இப்படி உணர்கிறான் என்று அவனுக்கே புரியவில்லை. அதுவும் அவளைத் தூக்க எண்ணுகையில் அவளைத் தொடக் கூட அவன் விடவில்லையே. அவனை உதாசீனப்படுத்திவிட்டுச் சென்று விட்டானே.

 

அவளைத் தொட்டு தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல அவனுக்கு என்ன உரிமை இல்லையா? நெஞ்சில் கோபம் கனன்றது. உடனே அவன் மூளை, ‘முதலில் உனக்கு என்ன உரிமை இருக்கிறது என நீ கோபப்படுகிறாய்?’ எனச் சாடியது.

 

கைப்பேசியை எடுத்து, அந்த கட்டடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் மேற்பார்வையாளரை பிடி பிடி என்று பிடித்துக் கொண்டான். அவன் போட்ட அதட்டலில் உடனே ஆட்களை வரவழைத்து இரவோடு இரவாக மின்தூக்கியைச் சரி செய்ய ஏற்பாடு செய்தார்.

 

இனி ஒருமுறை இப்படி நடந்தால் அவர் வேலையிலிருந்து தூக்கப் படுவார் என்ற எச்சரிக்கையுடன் மித்ரன் அன்றிரவு வீட்டுக்குச் சென்றான். அந்தோ பரிதாபம்… அவன் அப்படியே தன் பிறந்தநாள் என்பதையும் மறந்து போனான். ரதிப்ரியாவையும் மறந்து போனான்.

 

error: Alert: Content selection is disabled!!