உயிரைத் திருடும் அழகியே 8 – 3

ஆனால், அவளிடம் இளம் புன்னகை ஒன்றைச் சிந்தியபடி பார்வையால் அவளைத் தொடர்ந்துகொண்டே மேசையில் தாளமிட்டபடி ‘ஆகா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்’ என்று மெய்யாகவே தன் காந்தக் குரலில் அவன் பாடியபோது, அவள்தான் உண்மையிலேயே நடிக்கச் சிரமப்பட்டுப்போனாள். என்ன குரல் அது. அப்படியே சுண்டி இழுத்தது!

 

அவன் திரைக்கு வேண்டுமானால் புதுமுகமாக அறிமுகமாகலாம். நடிப்பு அவனுக்குப் புதிது அல்ல என்று அந்த ஒரு காட்சியே அடித்துச் சொல்லியது!

 

இத்தனை அழகாய் உணர்வுகளைக் காட்டத் தெரிந்தவன் அவளை மட்டும் ஏன் புறம் தள்ளுகிறான். யோசனையோடு அவளின் விழிகள் அவன் மீது படிந்தது.

 

 

காட்சி பதின்மூன்று

 

அதன்பிறகு அஜய்யைப் பிருந்தா பொருட்டாகவே மதிக்கவில்லை. அப்படி ஒருவன் இருக்கிறான் என்று கூட காட்டிக்கொள்ளவில்லை. அழுத்தமாகப் பார்ப்பதைக்கூட விட்டுவிட்டாள்.

 

அதை அவனும் உணர்ந்திருக்க வேண்டும்!

 

அன்று மதிய உணவின்போது,

 

“அடியே அழகே

என் அழகே அடியே

பேசாம நூறு நூறா

கூறு போடாத

வலியே வலியே

என் ஒளியே ஒளியே

நான் ஒன்னும் பூதம் இல்ல

தூரம் ஓடாத”

 

அவன் பாடியபோது எரிச்சல், ஆத்திரம், சினம் என்று எந்த உணர்வும் அவளைத் தாக்கவில்லை. அருகிலிருந்த சாந்தினியோடு கதைத்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். மறுபக்கம் அமர்ந்திருந்த ராகவன், “முடிவெடுத்திட்ட போல!” என்றார், உணவிலேயே கவனமாக.

 

வேகமாகத் திரும்பியவள், உதட்டில் பூத்த பளீர் சிரிப்புடன் கண்ணடித்துத் தலையசைத்தாள்.

 

“நாட்டி கேள்!” என்றவர், தன் தட்டிலிருந்து கோழி வறுவலை அவளுக்கு எடுத்துப் போட்டார்.

 

வியப்புடன் அவள் பார்க்க, “உனக்கு பிடிக்கும்ல. சாப்பிடு!” என்றார், கனிவோடு!

 

“தேங்க்ஸ் சேர்!” இனம்புரியாத நெகிழ்வு ஒன்று அவர்பால் அவளுக்குள் உருவாகி இருந்தது.

 

அன்று ஷூட்டிங் முடிந்ததும் விறுவிறு என்று காட்டேஜுக்கு வந்துவிட்டாள் அனன்யா. எத்தனை அழகாகப் பாடுகிறான். அதைவிட மிகுந்த ரசனைக்குரியது அவனுடைய நடிப்பு. உணர்வுகளைக் காட்டும் கண்கள், இளம் சிரிப்பில் மலர்ந்தே கிடக்கும் உதடுகள். வாலிபன் ஒருவனுக்கே உரித்தான உற்சாகத்தோடு கூடிய துள்ளலான நடிப்பு என்று அசத்துகிறவன் ஏன் அவளை மதிப்பதில்லை.

 

‘கட்’ சொன்ன அடுத்தகணம் அவளிடமிருந்து பார்வையை அகற்றுகிறவன், அதன்பிறகு அப்படி ஒருத்தி அங்கு இல்லவே இல்லை என்பதுபோல்தான் நடந்துகொள்வான்.

 

அப்பட்டமாக, ‘உன்னை நான் ஒதுக்குகிறேன்’ என்று காட்டித் தவிர்க்கும் அளவுக்கு அவனுக்கும் அவளுக்கும் என்ன சண்டை சச்சரவு?

 

மனம் அவனையே சுற்றிச் சுற்றி வந்தது. தன்னை மதிக்காதவனைப் பற்றித் தான் சிந்தித்துக்கொண்டு இருக்கிறோம் என்பது அவளுக்கே பிடிக்கவில்லை. காட்டேஜில் இருக்கப் பிடிக்காமல் குளித்து ஒரு ஜீன்ஸ் டாப்பில் தயாராகி ஷியாமிடம் சென்றாள்.

 

“மச்சி! எனக்கும் சேத்துப் பொண்ணு பாருடா! ஒன்னுக்க மண்ணா பழகின நாம ஒரே வீட்டுல குடும்பம் நடத்தலாம்! ஹாஹா…” அந்தக் குரலில் அப்படியே நின்றாள் அனன்யா.

 

இது அர்ஜுனின் குரல்! இத்தனை வருடங்கள் கழித்தும் அவளால் வெகு தெளிவாக இனம் காண முடிந்தது. செவி வழி நுழைந்த குரல் தேகமெங்கும் நுழைந்து கைகால்களில் நடுக்கத்தை உருவாக்க, அப்படியே கதவைப் பற்றிக்கொண்டு நின்றுவிட்டாள்.

 

“எதுக்குடா ரெண்டு..” என்று சொல்லிக்கொண்டு திரும்பிய ஷியாம், அனன்யாவைக் கண்டுவிட்டு, “எதுக்கு அங்கேயே நிக்கிற? உள்ள வா!” என்று அழைத்தான்.

 

“யாருடா?” அந்தப் பக்கமிருந்து அர்ஜுன் கேட்டான்.

 

“நம்ம சிட்டுடா!” சொல்லும்போதுதான் நிகழ்காலத்தை உணர்ந்து தடுமாற்றத்தோடு அவளைப் பார்த்தான் ஷியாம்.

 

“ஓ..! எப்படிடா இருக்கா? எங்கிட்ட பேசச் சொல்லு மச்சி! என்ன மறந்திட்டாளாமா?” ஸ்பீக்கர் போடப்பட்டிருப்பது தெரியாமல் பரபரத்தது அர்ஜுனின் குரல்.

 

ஷியாமினால் பதிலளிக்க முடியவில்லை. ‘பேசுறியா?’ என்று கண்ணசைவில் கேட்டான். அவனை முறைத்துவிட்டு விறுவிறு என்று திரும்பி வந்துவிட்டாள் அனன்யா.

 

கண்கள் கலங்கிப் போயிருந்தது! இத்தனை வருடங்கள் கழிந்தும் அவன் என்னைப் பாதிக்கிறானா? அவமானமாய் உணர்ந்தாள். மனதில் ஒருவித ஆத்திரம், ஆவேசம், அவமானம் பொங்கியது!

 

அதற்கு ஒரு வடிகால் வேண்டும்! மனம் உந்த, தெருவோரம் இருந்த சைக்கிள் கடை கண்ணில் படவும் ஒரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டாள். மனத்தில் இருந்த ஆத்திரத்துக்கு ஏற்ப சைக்கிள் அவள் கையில் பறந்தது!

 

எங்கெல்லாம் சுத்தினாளோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். ஒருவழியாக மனம் சமநிலைக்கு வர, சீதை அம்மன் கோவிலுக்குச் சென்றாள். அம்மனை வணங்கிவிட்டு, அனுமன் சீதையிடம் ராமனின் கணையாழியை வழங்கிய இடத்தின் அருகில் அப்படியே அமர்ந்துகொண்டாள்.

 

எத்தனை அருமையான காதல்? அது ஏன் அவளுக்கு வாய்க்கவில்லை? ஏமாந்து போனாளே! நம்பிய எல்லோரிடமும்! மனம் துடித்தது.

 

‘நீ திரும்பத் திரும்ப ஏமாந்து போறன்னா இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும்னு அர்த்தம். வாழ்க்கையை படிச்சிட்டு இருக்கன்னு அர்த்தம் அனு! அதுக்கு நீ சந்தோசப்படணும். வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கிறப்போ எல்லாத்தையும் அனுபவிச்சிடனும். அது நல்ல விஷயமா மட்டும் இருக்கணும்னு நினைக்கிறது சராசரி மனுஷனோட பேராசை. நீ கடவுளோட குழந்தை. அதுதான், எல்லாவிதமான அனுபவத்தையும் ‘அனுபவி ராஜா’னு உனக்குத் தரார். நீயும் அனுபவிச்சு தெளிஞ்சு வெளில வா!’

 

சவீதாவின் வார்த்தைகள் இவை. உண்மைதானே! இன்றைக்கு அவள் இத்தனை திடமாக இந்தச் சினிமா உலகில் ஒற்றைப் பெண்ணாக நிமிர்ந்து நிற்கிறாள் என்றால், வாழ்க்கை அவளுக்குக் கற்பித்த பாடங்கள் தான் காரணம். இல்லாவிட்டால் பத்தோடு பதினொன்றாக அவளும், படிப்பு, வேலை, கணவன், குழந்தை என்று ரெடிமேட் வாழ்க்கை ஒன்றை வீட்டுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பாள்.

 

மெல்லிய இருட்டு கவிழத் தொடங்கவும் காட்டேஜுக்கு சைக்கிளை விட்டாள். மலையில் இருந்து சரிவை நோக்கிச் சென்றதாலா அல்லது பனிப்புகார் படியத் தொடங்கியிருந்ததில் வழுக்கிவிட்டதாலா தெரியவில்லை, எதிர்பாராமல் சறுக்கிப் பள்ளத்தில் அப்படியே விழுந்துவிட்டிருந்தாள் அனன்யா.

 

“அம்மா!” இடுப்பு ஓடிந்தே போய்விட்டது போல்தான் இருந்தது அவளுக்கு. அதுவும் கால்கள் கிடந்த இடத்தைக் காட்டிலும் தலை கிடந்த இடம் இன்னுமே பள்ளமாக இருக்க, அவளால் எழக்கூட முடியவில்லை. இருள் வேறு இன்னும் கவியத் தொடங்கி இருந்தது.

 

“கடவுளே.. யாராவது ஹெல்ப் பண்ணுங்க!” அவள் கொடுத்த குரலுக்கு இரண்டு சைக்கிள்கள் வந்து பிரேக்கிட்டு நின்றன.

 

யார் என்று பார்த்தால் ஜேகேயும் அவனது காவலனும். ‘இவனா?’ அவளை மதிக்காதவன் முன்னா இப்படிக் கிடக்கிறோம் என்று அவமானமாக இருந்தாலும் இவர்களாவது வந்தார்களே என்று, தூக்கிவிடச்சொல்லி ஜேகேயின் புறமாகக் கையை நீட்டினாள்.

 

அவன் அசையவே இல்லை. வாகாக சைக்கிள் சீட்டில் அமர்ந்தபடி இயற்கையை இரசித்துக் கொண்டிருந்தான். போதாததுக்கு, உதவி செய்ய முன்வந்த விமலிடம், “சிங்கம் சிங்கிளாத்தான் வருமாம். நீ விடு. சிங்கம் தானே எழும்பி நிக்கும்.” என்றான்.

 

‘அடப்பாவி! இந்த நேரம் பாத்து பழி வாங்குறானே! அம்மா… பின்பக்கம் புல் டேமேஜ் தான் போல இருக்கே!’ தன்னையே நொந்தபடி மெல்ல எழுந்துகொள்ளும் வரை அங்கேயே நின்ற இரண்டு தடிமாடுகளும் அப்படியே நின்றன. ஒரு சின்ன உதவியும் செய்யவில்லை.

 

எழுந்துநின்று அவனை நன்றாக முறைத்துவிட்டு, “பன்னிக்குப் பன்னிக்குணம் தானே இருக்கும்! பன்றியோட சேர்ந்த கன்றும் என்னவோ தின்னுமாம்.” என்றாள் அவனுடைய காவலனுக்கும் சேர்த்து.

 

அதற்குள் விமல் சைக்கிளைத் தூக்கப்போக, “நோ! எவனும் தொடக்கூடாது! எனக்கு என் வேலையப் பாக்கத் தெரியும். இங்க நின்னு ஷோ காட்டாம நடங்க ரெண்டுபேரும்!” என்று, ஆத்திரத்தில் படபடத்தாள்.

 

பின் பக்கம் புண்ணாக நொந்தாலும், அவர்கள் முன்னால் எதையும் காட்டிக்கொள்ளாமல் ஏறி அமர்ந்தவள், புறப்பட முதல் நின்று திரும்பி, “உங்க பாஸ் என்ன ‘பாட்டி சுட்ட வடையா?’ காகம் தூக்கிட்டு போகாம இருக்க எப்பப் பாத்தாலும் காவலுக்கு இருக்கீங்க. அதுசரி என்ன மாதிரி..” என்றவள் விரல்களால் ஒன்று, இரண்டு என்று காட்டிவிட்டு, “இதுக்குப் போகும்போதும் பக்கத்திலேயே நிப்பீங்களோ? நாறாது?” என்று மூக்கைச் சுழித்துவிட்டுச் சென்றுவிட, ஒருகணம் அதிர்ந்து, விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கியிருந்தான் அவனின் விமல்.

 

ஜேகே முறைத்தும் அவனால் அடக்க முடியவில்லை.

 

“என்ன பாஸ்! இந்த ரேஞ்சுக்கு கேவலப்படுத்திட்டுப் போறாங்க.” ஜேகேக்கும் அடக்கிய சிரிப்பில் உதட்டின் மேலிருந்த மீசை ஒருமுறை அசைந்து அடங்கியது.

error: Alert: Content selection is disabled!!