சதிராடும் சித்திரமே 10 – 2

“குழந்தையையும் கிள்ளி விட்டுட்டு, தொட்டிலையும் ஆட்ட வந்துட்டீங்களா? எங்களுக்கு உங்க உதவி எதுவும் தேவையே இல்லை” என சந்தோஷ் இடைப்புக, சந்தோஷை ஏனோ மித்ரனுக்கு அறவே பிடிக்கவில்லை.

 

அவனின் இந்த வெறுப்பு கூடிய விரைவில் பன்மடங்காகும் என்று இருவருமே அறிந்திருக்கவில்லை.

 

பெரும்பாலோருக்குச் சந்தோஷைப் பிடிக்கும். அதுவும் அவனின் துறுதுறு குணமும், கலகலவென்ற பேச்சும் அனைவரையும் ஈர்த்துவிடும். ஆனால் சமய சந்தர்ப்பம் அவனை மித்ரனுக்குப் பிடிக்காமல் செய்துவிட்டது. நம் அனைவரின் நிலையும் இதுவே.

 

உலகில் அனைவருக்கும் ஒருவரைப் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி நடக்க வேண்டும் என்று நினைப்பதும் வேற்று கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்று நினைப்பது போலாகும்.

 

மித்ரனின் பார்வை அங்கிருந்த குப்பைக் கூடையைத் தழுவித் தழுவி வந்தது. அது அழகான ஒரு பூங்கொத்தை விழுங்கியிருந்தது. அவன் மனதுக்குள் வேதனை மண்டியது. மித்ரனே அந்தப் பூங்கொத்தை அவளுக்கு அதிகாலையிலேயே அனுப்பி வைக்குமாறு நேற்றிரவே பணம் செலுத்திப் பதிவு செய்திருந்தான்.

 

அவன் செய்தது தவறு என்று அவளுக்கு புரிய வைத்திட முனைந்திருந்தான் . ஆனால் சத்தியமாய் அது குப்பைத் தொட்டியைத் தொட்டிருக்கும் என அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் அறைக்குள் நுழைகையில் அவர்கள் பேசிக் கொண்டதை வைத்துப் பார்க்கும் பொழுது, திவ்யதர்ஷினி அப்பொழுதே கண் விழித்திருக்கிறாள் என்று மித்ரனுக்குப் புரிந்தது.

 

ஆக மித்ரன் பூங்கொத்தை அனுப்பியிருக்கிறான் என்றறிந்ததுமே இந்த சந்தோஷ் கோபத்தில் அதைக் குப்பைத் தொட்டியில் வீசியிருக்கிறான் என நூறு சதவீதம் உறுதியாய் நம்பினான். திவ்யதர்ஷினி எதுவும் செய்யவில்லை என்பதே அவன் மனதிற்கு இதமளித்தது. அதுவே மித்ரனுக்கு நல்ல சகுனமாகப் பட்டது.

 

“தெரியாம உங்ககிட்ட உதவின்னு வந்துட்டோம் சார். இனிமேல் நீங்க இருக்கிற திசையில் தலை வச்சுக் கூடப் படுக்கமாட்டோம். இனிமேல் உங்க கண்ணுல கூட விழலை. தயவு செஞ்சு இப்போ கிளம்புங்க” எனப் பளாரென்று முகத்தில் அறைந்தது போல் பதிலளித்தாள் திவ்யதர்ஷினி.

 

இதற்கு அவள் கன்னத்தில் அறைந்தே இருக்கலாம். தாங்கியிருப்பான். நிராயுதபாணியாய் நிற்கையில் அவள் நிராகரிப்பை எப்படி எதிர்கொள்வது?

 

அவளுக்கோ எங்கே தன் தம்பி மீண்டும் திரும்பி வந்து விடுவானோ என்று படப்படப்பாக இருந்தது. எல்லாம் அவனால் நடந்தது என நேற்று முழுவதும் சசிதரன் புலம்பியதை அப்போது தான் சொல்லி முடித்திருந்தான் சந்தோஷ்.

 

இனி மித்ரனை இங்கு பார்க்க நேரிட்டால் அவன் ஏதாவது கோபப்பட்டுக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய வாய்ப்பிருக்கு. எதற்கு வேலியில் போகும் ஓணானை எடுத்து மடியில் கட்டிக் கொள்ள வேண்டும். தன் தம்பி இவனைச் சந்திப்பதைத் தவிர்க்கவே மித்ரனை அங்கிருந்து விரட்டியடித்தாள் திவ்யதர்ஷினி.

 

தேவையில்லாத பிரச்சனையை மருத்துவமனையில் வைத்து இழுத்துக் கொள்ளக் கூடாது. மித்ரனின் பண பலத்திற்கு முன்னே அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அதுவும் அவன் ஒன்றும் தன் தவறை மறைக்கவில்லையே.

 

தவறுணர்ந்து நேராகவே வந்து மன்னிப்பு கேட்டுவிட்டான். போதும். இத்தோடு இவனுடனான அத்தியாயத்தை முடித்துக் கொள்ளலாம் என அவள் நினைக்க, மித்ரனோ தொடரும் போடுவதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டான்.

 

அவன் மேலிருக்கும் கோபத்தில் அப்படி நடந்து கொள்கிறான் என மித்ரன் நினைத்துக் கொண்டான். உரிமையுடன் கோபித்துக் கொள்கிறாள் என அவன் மனம் குளுமையைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. அவர்கள் மேற்கொண்டு பேசும் முன்னர் அறைக்குள்ளே நுழைந்தார் மருத்துவர்.

 

வந்தவர் அவளைப் பரிசோதித்து, நேற்றுக் கொடுத்த பரிசோதனைகளின் முடிவெல்லாம் திருப்திகரமாக இருக்கிறது என்றார். தொடர்ந்து அவள் பூரணமாகத் தேறிவிட்டாள் என்றும் மறுநாள் அவள் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர் சொன்னார்.

 

மித்ரன் அதுவரையில் எங்கும் நகரவில்லை. அவளையே விழியசைக்காமல் நோக்கியிருந்தான்.

மருத்துவர் இறுதியாக வெளியேற அங்கே நின்று கொண்டிருந்த சந்தோஷை நோக்கி வெறுப்பு பார்வை ஒன்றை உதிர்த்துவிட்டு மித்ரனும் அவரைத் தொடர்ந்து வெளியில் சென்றான்.

 

திவ்யதர்ஷினி நேற்று பேசியதில் அவனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. அவள் ஏதோ உதவி வேண்டும் என்றே அவனது நிறுவனத்திற்கு வந்திருக்கிறாள். உடனே அவன் ஏன் நேற்று வந்தாள் எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது அவனுக்கு.

 

அங்கேயே இருந்து திவ்யதர்ஷினியிடம் பேச்சை வளர்த்து மேலும் சண்டை போட சற்றும் மனம் இடம் கொடுக்கவில்லை. அதுவும் சந்தோஷை வைத்துக் கொண்டு அவளிடம் பேசினால் அவள் சற்றும் இறங்கி வரப் போவதில்லை என்பது திண்ணம்.

 

கிளம்பிவிட்டான் மித்ரன்.

 

மருத்துவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நடந்ததைச் சொல்லி அவளின் சிகிச்சை மொத்தத்துக்கும் அவன் நிறுவனமே பொறுப்பேற்றுக் கொள்ளும் என்றான் மித்ரன். பணத்தைத் தர மாட்டேன் என்பவர்களுக்கு மத்தியில் தானே முன்வந்து அனைத்தையும் பொறுப்புடன் ஏற்றுக் கொள்கிறான் எனமருத்துவருக்கு அவன் மேல் மரியாதை வந்தது.

 

சற்றுநேரம் மருத்துவரிடம் பேசி, மருத்துவச் செலவுக்குக்குரியக் கட்டணத்தையும் முன்பணமாகச் செலுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினான். காரில் ஏறி அமர்ந்த அடுத்த நொடி தன் உதவியாளரை அழைத்தான் மித்ரன்.

 

திவ்யதர்ஷினி நேற்று தங்கள் நிறுவனத்திற்கு ஏன் வந்தாள் என்பதை விசாரித்துக் சொல்லச் சொன்னான். அவன் உதவியாளரும் ஆவன செய்து அவள் வந்ததற்கான காரணத்தைத் தெரிவித்தான்.

 

உடனே சசிதரனைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரச் சொன்னான். அது ஒன்றும் சிரமமான காரியமல்ல. ஏற்கனவே அவனைப் பற்றிய விவரங்கள் தந்தே மித்ரனைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான்.

 

மித்ரன் அலுவலகம் வந்தடையவும் சசிதரனின் விவரங்கள் மட்டும் அவனுக்காக அவன் அறையில் காத்துக் கொண்டிருக்கவில்லை. ரதிப்ரியாயும் அவள் அண்ணன் கிஷோரும் சேர்ந்து அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

 

அடிக்கடி கிஷோர் அவனைச் சந்திக்க வருவதால் அவன் எதுவும் வித்தியாசமாக எண்ணவில்லை. ஆனால் ரதிப்ரியாவின் முகம் வீங்கிப் போயிருக்க, “என்ன ஆச்சு ரதி?” என அக்கறையுடன் விசாரித்தான்.

 

“அது..” என அவள் தயங்க, “வேற என்ன, அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னேன். நம்மளை விட்டு எங்கேயும் போகமாட்டேன்னு நேத்திலிருந்து ஒரே அழுகை” என்ற கிஷோர் எதிரிலிருந்த மித்ரனை அளவிட்டான்.

 

“நல்ல விஷயத்தை ஏன் தள்ளிப் போடணும் ரதி” என மித்ரன் பட்டென்று ரதிப்ரியாவிடம் சொல்ல, அதுவரையில் அவளிடம் தொற்றிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச உற்சாகமும் வடிந்து போனது.

 

“பக்கத்துல யாரையாவது பார்க்கலாமே” என கிஷோருக்கும் ஆலோசனை வழங்கினான் மித்ரன். விட்டால் அவனே அவளுக்கு மாப்பிள்ளைகளை வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிடுவான் என அண்ணனும் தங்கையும் பயந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

‘அதான் பக்கத்துல நீ இருக்கியே’ எனச் சொல்ல வாயைத் திறந்தான் கிஷோர். அதற்குள் மித்ரனின் உதவியாளர் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்து, அமெரிக்காவில் இருக்கும் கிளையண்ட் ஒருவருடன் மீட்டிங் இருக்கிறது எனத் தெரிவித்தான்.

 

ஆகவே கிஷோரும் ரதிப்ரியாவும் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. அவர்கள் கிளம்பும் முன்னர், “சாரி ரதி, நேத்து என்னென்னவோ நடந்திடுச்சு. உனக்கு ஒரு தாங்க்ஸ் கூடச் சொல்லலை. என் பிறந்தநாளை ஞாபகம் வச்சுக்கிட்டதற்கு தேங்க்யூ” என்றான் மித்ரன்.

 

பின்னர், தன் மீட்டிங்கில் மூழ்கிவிட்டான்.

 

மீட்டிங் முடிந்தவுடன் முதல் வேலையாக சசிதரனை அழைத்தான் மித்ரன். அவன் தேசிய அளவு மற்றும் ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்பதற்குரிய பயிற்சிக்கான தொகையையும் பயணம் செய்வதற்கான தொகையையும் தன் நிறுவனம் தரத் தயாராக இருக்கிறது என்றான் மித்ரன்.

 

அதைக் கேட்ட சசிதரனுக்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதுவும் மித்ரனே நேரடியாகவே அழைத்துப் பேசுகிறான் எனத் தெரிந்ததும் அவனின் கோபத்திற்குத் தூபம் போட்டதைப் போலானது.

 

“என்ன சார் பண்ணறதையும் பண்ணிட்டு, பணத்தால நீங்க செஞ்ச தப்பை மூடி மறைக்கப் பார்க்கறீங்களா? வந்து ஹாஸ்பிடல் பில்லையும் கட்டிட்டுப் போயிருக்கீங்க.

 

உங்களை மாதிரி ஆளோட பணம் எங்களுக்குத் தேவையே இல்லை. என் அக்காவுக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தது நடக்கறதே வேற. முதல்ல உங்ககிட்ட பணம் கேட்டு வந்ததே தப்பு” எனப் பட்டாசைப் போல் பொரிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டான் சசிதரன்.

 

இதையே வேறு யாராவது செய்திருந்தால் தன்னை உதாசீனப்படுத்தியதற்கு அவர்களை வேறு வழியில் ஓங்கி அடித்திருப்பான். ஆனால் பேசியது திவ்யதர்ஷினியின் தம்பியல்லவா?

 

‘பாசக்காரத் தம்பியாக இருக்கிறானே’ என சசிதரனை அவனுக்கு உடனே மிகவும் பிடித்துப் போனது. ‘அக்காவைப் போலவே இவனும் கோபக்காரனாக இருப்பான் போலவே’ என மெச்சிக் கொள்ளவும் மறக்கவில்லை.

 

இவை அனைத்தையும் விட, இவர்கள் பணத்தைப் பறிக்க நினைக்கவில்லை என்ற எண்ணம் இன்னும் தித்தித்தது.

 

மேலும் ஒரு நாள் மருத்துவமனையில் இருந்து ஒரு வழியாக உடல்தேறி பழைய தெம்புடன் வீட்டிற்குத் திரும்பினாள் திவ்யதர்ஷினி.

 

அத்தோடு அவளைப் பிடித்திருந்த அனைத்து கெட்ட நேரமும் விலகி விட்டதாக அவள் நினைத்திருக்க, அவள் பணிபுரியும் இடத்திலிருந்து வந்த செய்தி அவளைத் திகைக்க வைத்தது.

 

error: Alert: Content selection is disabled!!