உயிரைத் திருடும் அழகியே 9 – 1

அத்தியாயம் 9

 

 

வீட்டுக்கு வந்தவள் கோபத்துடன் திரும்பி விட்டதில் அவளைத் தேடிக்கொண்டு வந்தான் ஷியாம். வலியில் சுருண்டு கிடந்தவளைக் கண்டு, விசாரித்து அறிந்தவன், “லூசு, இரவுல யாராச்சும் அவ்வளவு வேகமா இந்த ரோட்டுல போவாங்களா?” என்று திட்டிவிட்டு, “இரு! ஏதாவது ஆயில்மெண்ட் கிடைக்குத்தான்னு பாத்திட்டு வரேன்!” என்றபடி, வந்த வேகத்திலேயே திரும்பி இருந்தான்.

 

சற்று நேரத்தில் மீண்டும் பெல் அடிக்க, மீனா சென்று பார்த்தாள். தனக்கு முடியாததால் அன்று மீனாவைத் தன்னுடனேயே தங்கச் சொல்லியிருந்தாள் அனன்யா. திரும்பி வந்தவள், “சேர் கொடுத்துவிட்டுருக்கார் மேம்.” என்றபடி இரண்டு பைகளை மேசையில் வைத்தாள்.

 

ஒன்றில் அவளுக்கான ஆயில்மெண்டும் நோவுக்கான மருந்தும் இருக்க இன்னொன்றில் இரவு உணவு இருந்தது. உணவைக் கண்டபிறகுதான் பசியின் ஆழம் தெரிந்தது. மீனாவின் உதவியோடு ஆயில்மெண்ட் போட்டுக்கொண்டு, உணவையும் முடித்துக்கொண்டு மாத்திரையை விழுங்கிவிட்டு உறங்கிப்போனாள் அனன்யா.

 

அடுத்தநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவளிடம் ஓடிவந்தான் ஷியாம்.

 

“ஹேய் சாரிம்மா. இரவு அம்மா ஃபோன் பண்ணி உடம்புக்கு முடியலைன்னு அழுதாங்களா, நான் உன்னை வந்து பாக்கவே மறந்துட்டேன். கோவிச்சுக்காத.” என்றான் கெஞ்சலாய்.

 

“விடுடா! ஆயில் போட்டது இப்ப எவ்வளவோ பெட்டர். அம்மாக்கு எப்படி இருக்காம் இப்ப?”

 

“காலையிலையும் பேசினேன். பரவாயில்லன்னு சொன்னாங்க.”

 

“உடம்பக் கவனமா பாத்துக்க சொல்லு, அப்படியே நான் கேட்டேன்னும் சொல்லு!”

 

அதன்பிறகு அவர்களுக்கான ஷூட்டிங் ஆரம்பித்தது.

 

 

காட்சி பதின்நான்கு

 

இப்போதெல்லாம் பிருந்தா தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்பதை நன்றாகவே உணர்ந்திருந்தான் அஜய். அவளின் அலட்சியமே அவளைத் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்கிற உந்துதலைக் கொடுத்தது அவனுக்கு.

 

அவள் அவனைக் கடக்கும் தருணங்களில் எல்லாம் அவளின் முகம் பார்த்தபடி எதையாவது பாடுவான்.

 

அப்படியே இன்றும்,

 

போனா போறா தானா வருவா

மெதப்புல திரிஞ்சேன்

வீராப்பெல்லாம் வீணா போச்சு

பொசுக்குன்னு உடைஞ்சேன்

என்று, அவனைக் கடக்கையில் பாடினான் அஜய்.

 

முகத்தில் எதையும் காட்டாமல் விலகி வந்துவிட்டாள் தான். ஆனால், ‘போடி என்று நினைச்ச அவன்ர வீராப்பு உடைஞ்சு போச்சாமா? நல்லாத்தான்டா நடிக்கிற!’ என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டாள்.

 

‘ஆனா இதுக்கெல்லாம் மசியிறதுக்கு நீ வேற ஆளைப் பாக்கவேணும் தம்பி!’ ஏளனமாக நினைத்துக்கொண்டாள்.

 

 

காட்சி பதினைந்து

 

அன்று போட்டியாளர்களுக்கான டாஸ்க் வழங்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் பச்சை மஞ்சள் நீலம் என்று ஒவ்வொரு நிறம் வழங்கப்பட்டிருந்தது. அதோடு ஒவ்வொரு கூடைகளும். அந்தக் கூடைகளுக்குள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த நிறங்களிலான பந்துகள் கலந்து போடப்பட்டிருந்தது.

 

தங்களின் கூடையில் இருக்கும் மற்றவர்களின் நிறப் பந்துகளை அவர்களை எடுக்கவிடாமல் பாதுகாத்துக்கொண்டே, தங்களின் நிறப் பந்துகளை மற்றவர்களின் கூடைகளில் இருந்து சேகரிக்க வேண்டும். இருக்கிற இடத்திலிருந்து கூடைகளை நகர்த்தக்கூடாது. போட்டி முடிவில் மற்றவர்களின் பந்துகள் எத்தனை இவர்களிடம் இருக்கிறதோ அதற்கு பிளஸ் பாயிண்டும் இவர்களின் பந்து மற்றவர்களிடம் எத்தனை இருக்கிறதோ அதற்கு மைனஸ் பாயிண்டும் வழங்கப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவர்.

 

போட்டி ஆரம்பித்தது. தமது கூடைகளைப் பாதுகாத்துக்கொண்டே ஒருவர் மற்றவரிடம் ஓடும் பொழுது இன்னொருவர் அவரின் கூடைக்குள் இருக்கும் தன்னுடைய நிறப் பந்தைச் சேகரிப்பது என்று வலு முனைப்பாக விளையாடிக்கொண்டிருந்தனர். போட்டி போட்டியாக இருந்தாலும் சிரிப்பும் பேச்சுமாக மிகவுமே உற்சாகமாக நடந்துகொண்டிருந்தது கேம்.

 

இவளுக்கு அடுத்த பக்கமாக நின்றிருந்த அஜய் மற்றவர்களின் கூடைப் பக்கமாக இவள் ஓடும்போதெல்லாம்,

 

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்

போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

 

என்று, என்னவோ அவள் அவனைவிட்டு விலகி எங்கேயோ போவதுபோல பாடிக்கொண்டிருந்தான்.

 

சினத்தோடு சிரிப்பும் சேர்ந்து வந்தது அவளுக்கு.

 

மீண்டும் அவள் பந்துகள் சேகரிக்க ஓடப்பார்க்க,

 

உயிரே உயிரே பிரியாதே

உயிரை தூக்கி எறியாதே

உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

ஒ ஹோ ஒ

 

என்று பாடினான்.

 

“டேய்! இதுக்குமேல எதையாவது பாடின, அடிச்சு மண்டைய உடைச்சு விட்டுருவன்!” என்றாள், தன்னை மறந்து பிருந்தா.

 

ஒருகணம் அசந்து நின்றுவிட்டு பொங்கிச் சிரித்தான் அஜய்.

 

சொல்லிட்டாளே அவ காதல

சொல்லும் போதே சுகம் தாளல

இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல

இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல

அவ சொன்ன சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

 

என்று அடுத்த பாட்டும் பறந்து வந்தது.

 

தலையில் அடித்துக்கொண்டாள் பிருந்தா. “கடுப்பேத்துறீங்க மை லாட்! ப்ளீஸ்டா! தொல்லை பண்ணாத!” என்றாள் கெஞ்சலாக.

 

“சரி சரி! நீ விளையாட்டுல கான்சன்ரேட் பண்ணு. நான் உன்னுல பண்ணுறேன்!”

 

“கடவுளே!” என்று பல்கலைக் கடித்தவள், அவனுடைய சிரிக்கும் கண்களைக் கண்டு இன்னுமே கடுப்பானாள். தன் கூடைக்குள் கிடந்த மற்றவர்களின் நிறப் பந்துகளை அவர்கள் எடுத்துவிடாமலிருக்க, தன் கையிலேயே வைத்திருந்தவள், அவற்றை, “டேய்! உன்ன கொல்லப்போறன் இப்ப!” என்றபடி அவனை நோக்கி எறிந்தாள்.

 

அழகாக அவற்றைப் பிடித்தவன், “நன்றிங்கோ டோலி!” என்றபடி தன் கூடைக்குள் போட்டுக்கொண்டான்.

 

அப்போதுதான் பார்த்தாள்; அவள் எறிந்தவை அனைத்தும் அவனது நிறப் பந்துகள்.

 

“உன்ன!” என்றவள் நேரம் போவதை உணர்ந்து, “பிறகு இருக்கு உனக்கு!” என்றபடி விளையாட்டில் கவனம் செலுத்தினாள்.

 

அந்த விளையாட்டில் பிருந்தா தான் மற்றவர்களின் நிறப் பந்துகளையும் தன் பந்துகளையும் அதிகமாக வைத்திருந்து முதலிடத்தைப் பிடித்திருந்தாள்.

 

“சூப்பர் டா கண்ணா!” என்று தோளோடு அணைத்துப் பாராட்டிவிட்டுப் போனார் ராகவன்.

 

“ஹேய்! நான் பாட்டுப் பாடி உற்சாகம் செய்ததால தான நீ விளையாடின!” என்றபடி வந்து கை தந்தான் அஜய்.

 

அவளுக்குச் சிரிப்புப் பொங்கிக்கொண்டு வந்தது. “உதவி செய்தியா உபத்திரவம் செய்தியா எண்டு யோசிச்சுப்பாரு விளங்கும்!” என்றபடி கைகொடுத்தாள் அவள்.

 

ஷூட் முடிந்ததும் மனதளவில் களைத்துப் போயிருந்தாள் அனன்யா. காரணம் ஜேகேதான். வேறு யாரால் அவளுக்குத் தலைவலியைக் கொடுத்துவிட முடியும்?

 

இத்தனை வருடங்களில் எத்தனையோ பேரோடு நடித்துவிட்டாள். அவர்களை எல்லாம் ஒற்றைப் புன்னகையோடு கடந்தவளால் இவனை அப்படிக் கடக்க முடியவில்லை. காரணம் அவனது உதாசீனம். அதனாலேயே அவனில் சிக்கிக்கொண்டு உழன்றது அவள் மனது.

 

உதாசீனமும் அவமதிப்பும் ஒருவரைப் பலமாக காயப்படுத்தும் ஆயுதங்கள்! அவை சரியாக தமது வேலையைப் பார்த்ததில் மிகவுமே நொந்துபோயிருந்தாள் அனன்யா.

 

அதுவும் மற்றவர்களுடன் இன்முகமாக கலகலப்பாக அவன் கதைப்பதைக் கண்டுவிட்டால் என்னை மட்டும் ஏன் தவிர்க்கிறான் என்று எண்ணி உள்ளூரக் கவலைப்பட ஆரம்பித்துவிடுவாள்.

 

இப்போதெல்லாம் அவனோடு நடிக்கும் பொழுதுகளை அவள் மனம் ஆவலாக எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தது. அப்போது மட்டுமே அவன், அவள் முகம் பார்த்தான், சிரித்தான், பேசினான், சீண்டினான்.

 

அது நடிப்பு என்று தெரிந்தாலும், அந்த முகத்தில் தென்படுகிற நட்புணர்வு அத்தனை ஆழமாக அவள் இதயத்தைத் தீண்டும். துள்ளும் குரல், மனதை அள்ளும் சிரிப்பு என்று அவள் இரசிக்கும் அத்தனையையும் அப்போதுதான் அவனிடம் காணமுடியும்.

 

error: Alert: Content selection is disabled!!