இப்படி நடிக்கிறவன் இதே மாதிரி ஏன் என்னுடன் கதைப்பதில்லை என்கிற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் சும்மா இருக்கும் பொழுதுகளில் எல்லாம் அவள் விழிகள் அவனையே தேடி ஓடி அவனைப் படிக்க முயன்றுகொண்டே இருந்தன.
அதைக் கவனித்துவிட்டு முகம் இறுக அவளைத் தனியாக அழைத்துக் கண்டித்தார் விக்ரமன்.
“அவன் உன்னோட வேக் பண்றவன் மட்டும் தான். புரிஞ்சுதா? சும்மா சும்மா அவனப் பாக்காத!” என்றார் கடினமான குரலில்.
திடுக்கிட்டாள் அனன்யா. முதலில், மற்றவர்கள் கவனிக்கும் அளவுக்கா அவனைப் பார்க்கிறோம் என்பது ஒருவித அதிர்ச்சி என்றால், அவள் எதற்குப் பார்க்கிறாள் என்று அறியாது வேறுவிதமாக இந்த மனிதர் எடுத்துக்கொண்டிருக்கிறாரே என்பது அடுத்த அதிர்வாக இருந்தது.
இருந்தாலும், ‘அதைப்பற்றி நீங்க என்ன கேக்கிறது?’ என்பதாக கோபத்தோடு பார்த்தாள் அவள்.
“ப்ச்! சொன்னா புரிஞ்சிக்கோ! அவன் இண்டஸ்ட்ரில ரொம்பப் பெரிய குடும்பத்துப் பையன். அவனுக்குலாம் நடிக்கிற இன்ட்ரெஸ்ட் இருந்ததா நான் கேள்விப்படவே இல்ல. அரசியலுக்குப் போகப்போறான்னுதான் கேள்விப்பட்டேன். திடீர்ன்னு ஒருநாள் வீட்டுக்கே வந்து, இந்தப் படத்துல நான்தான் நடிப்பேன்னு என்கூட மல்லுக்கட்டினான். அவனையும் அவங்க குடும்பத்தைப் பகைக்க முடியாமத்தான் நானே சம்மதிச்சேன். இதுல நீ வேற அவனையே பாத்து, தேவையில்லாத வம்ப விலைகொடுத்து வாங்கிடாத. கவனமா இரு!” என்றார் அவர்.
“இதுக்குப் பதில் ஏற்கனவே சொல்லிட்டேன்! என்ன பாத்துக்க எனக்குத் தெரியும்!” அவர் முகம் பாராது சொல்லிவிட்டு அவள் திரும்ப, அவளின் கரம் பற்றி நிறுத்தினார் அவர்.
விழுக்கென்று திரும்பியவள் பார்த்த நெருப்புப் பார்வையில் கையை விட்டவர், “பாத்து நடந்துக்கோ!” என்று குரல் அடைக்கச் சொல்லிவிட்டுச் சென்றார்.
தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள் அனன்யா.
அவரோடு மல்லுக்கட்டி நடிக்க வரவேண்டிய அவசியம் என்ன? அப்படி வந்து அவளிடம் முகம் திருப்பக் காரணம் என்ன? புதிர் போட்டுக்கொண்டிருந்தான் ஜேகே.
காட்சி பதினாறு
அன்று இரவு பிருந்தாவால் உறங்கவே முடியவில்லை. கால்கள் இரண்டும் அப்படி வலித்தது. விளையாட்டின்மீது தெரியாமல் ஒருவர் மற்றவரின் காலை மிதித்ததும், மோதுண்டு விழுந்ததும் என்று நன்றாகவே உடல் வலியை வாங்கிக்கொண்டிருந்தாள் பிருந்தா.
ரதனோடு நேருக்கு நேராக மோதுண்டு கீழே விழுந்தும் இருந்தாள். விளையாட்டின்போது வலி தெரியவே இல்லை. இப்போதோ உயிர் போனது.
என்னதான் ஒன்றாக ஒரு வீட்டில் இருந்தாலும் இதையெல்லாம் அவர்களிடம் சொல்ல ஒருமாதிரி இருக்க, கால்களை மடித்தும் நீட்டியும் என்று மாற்றி மாற்றிச் செய்துகொண்டு இருந்தவளுக்கு அப்பாவின் மடி வேண்டும் போலிருந்தது. அவர் இருந்திருக்க எண்ணெய் போட்டுத் தேய்த்து விட்டிருப்பார். ஆனால் இங்கே அநாதை போல்… நினைத்த மாத்திரத்தில் கண்ணீர்த் துளிகள் இரண்டு தலையணையை நனைத்தது.
“அப்பா…! மிஸ் யூ சோ மச் பா!” உதடுகள் முணுமுணுத்தபோது, கால்மாட்டில் யாரோ வந்து அமரும் அரவத்தில் விழுக்கென்று எழுந்து பார்த்தாள். ராகவன் அமர்ந்திருந்தார்.
“கால நீட்டு.”
அவள் திகைப்புடன் பார்க்க, “நீட்டுமா!” என்றார் கனிவுடன்.
“நோ சேர்!” சங்கடத்துடன் மறுத்தாள் பிருந்தா. வயதில் மூத்தவர் அவர் அவளின் காலைப் பற்றுவதா?
“என்ன நோ? உன்னோட அப்பா செய்ய வந்தா மறுப்பியா? இல்ல தானே. நீட்டு கண்ணா!” என்றவர், அவளை படுக்கவைத்து கால்களை நன்றாகத் தேய்த்துவிட்டார்.
தகப்பனின் நினைவும், ராகவனின் பாசமும் ஒன்றாகச் சேர்ந்து கண்ணீர் சுரப்பிகளைத் திறந்துவிட்டன அவளுக்கு.
“கண்டதையும் நினச்சு அழாம தூங்கு!” அவள் விழிகளும் மெல்ல மூடிக்கொண்டன.
அன்றைய ஷூட்டிங் அதோடு முடிந்திருந்தது.
அன்று இரவு டின்னருக்கு அவளைத் தனியாக அழைத்திருந்தான் ஷியாம். அவளும் புறப்பட்டுச் சென்றிருந்தாள்.
“படம் அருமையா வந்திட்டு இருக்குல்ல?” அவளுக்குப் பிடித்தமான இடியப்பமும் பால் சொதியும் போட்டு அவள் புறமாகக் கொடுத்தபடி சொன்னான்.
“பின்ன! தி கிரேட் கிரேட் விக்ரமனோட பிலிம் வேற எப்படி வரும்?”
சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் சட்டென்று விழிகளை உயர்த்திப் பார்த்தான்.
“நக்கலடிக்கிறியா?”
அவள் சிரித்தாள். “நிஜமாவே சீரியஸாத்தான்டா சொன்னேன். நானும் நடிக்கறேன் இல்லையா? கண்டிப்பா நல்லா வரும்!” என்றாள், கண்ணடித்து.
“அதானே பாத்தேன். ஒரு நிமிசம் உனக்கு நல்ல புத்தி வந்திருச்சோன்னு பயந்துட்டேன்.” என்றான் அவன், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு.
அவள் சிரிக்க, “பிறகு உன் லைஃப் பத்தி என்ன முடிவு எடுத்திருக்க சிட்டு?” என்று மெல்லக் கேட்டான் ஷியாம்.
அவளின் சிரிப்பு நின்றது. “என் லைஃப்க்கு என்ன?”
“கல்யாணம்? அது எப்போ?”
“நோ ஐடியா.”
அதிர்வோடு பார்த்தான் அவன்.
“ஏன் சிட்டு. எதுக்கு இப்படி உன்னையும் தண்டிச்சு அவனையும் தண்டிக்கிற. தான் தப்பு பண்ணிட்டேன்னு அவனும் ரொம்பவே கவலைப்படுறான். அவனைப் பத்தியும் யோசி பிளீஸ். இன்னும் கல்யாணம் ஆகாமத்தான் அவனும் இருக்கான்.”
ஒன்றும் சொல்லவில்லை அனன்யா. உணவில் கவனம் செலுத்தினாள்.
“அவன் பண்ணினது தப்புத்தான். இன்னும் சொல்லப்போனா, நல்ல பிரெண்டா இருந்தும் நான் உனக்குப் பண்ணினதும் தப்புத்தான். என்னை மன்னிச்ச உன்னால ஏன் அவனை மன்னிக்க முடியல?”
அர்ஜுனின் அன்றைய நடவடிக்கைகளை ஓரளவுக்கு ஊகித்தபோதும் அவளிடம் அதைப்பற்றிச் சொல்லாமல் இருந்துவிட்ட குற்ற உணர்ச்சிதான் அதன்பிறகு அவர்கள் எல்லோரிடமும் இருந்து அவனை விலக்கி வைத்தது. விக்ரமன் அழைத்திருக்காவிட்டால் மீண்டும் இப்போதும் வந்தே இருக்க மாட்டான். அவனையே மன்னித்தவள் அர்ஜுனை ஏன் மன்னிக்கக் கூடாது?
சாப்பிட்டு முடித்து கையையும் அலம்பிக்கொண்டு வந்தவள் அமைதியாகவே இருக்க, “இப்படி எதுவுமே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம் சிட்டு. ஏதாவது சொல்லு. அவன் இங்க வரவான்னு கேக்கறான். உன்ன பாக்கணுமாம், உன் கூட பேசணுமாம்.” என்றபோது, இப்போது அவள் முகத்தில் அதிர்வு தெரிந்தது.
“என்கிட்ட பேச என்ன இருக்கு?”
“ஏதோ இருக்கப்போய்த்தானே கேக்கறான்?”
ஒன்றும் சொல்லாமல் இருந்தவளிடம், “வரச் சொல்லவா?” என்று கேட்டான். “இல்ல பயப்படறியா?”
அந்தக் கேள்வி அவளைச் சீண்டியதில் முறைத்தாள்.
“எனக்கு என்ன பயம்? அவன் வர்றதும் வராததும் அவனோட முடிவு ஷியாம். இதுல நான் சொல்ல என்ன இருக்கு?” நிதானமாகக் கேட்டாள் அவள்.
“அப்போ அவன் வந்தா உனக்கு ஒண்ணுமில்ல. அவன்கூட உன்னால பேச முடியும்.” கண்களில் கூர்மையுடன் கேட்டான்.
அவனோடு பேச முடியுமா? மனம் குலுங்கினாலும், “தேவையில்லாம யார்கூடவும் பேச நான் விரும்பறது இல்ல. ஆனா, தேவைன்னு வந்தா..” என்று முடிக்காமல் தோள்களைக் குலுக்கிவிட்டுச் சொன்னாள். “கண்டிப்பாப் பேசுவேன்!”
இந்தப் பதிலை அவளிடமிருந்து வாங்கத்தானே இந்த டின்னரையே ஒழுங்கு செய்தான். அது வெற்றியடைந்ததில் தனக்குள் புன்னகைத்துக்கொண்டான் ஷியாம்.

