அது ஓரவஞ்சகச் செயலாக அவளுக்குப் பட்டது. பிற்காலத்தில் அவன் தம்பி திருமணம் ஆகையில் பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டாள்.
சரி ஆறு மாதங்கள் போகட்டும். சந்தோஷ் வேறு இப்போது தான் தொழிலை ஆரம்பிக்கப் போகிறான். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என தன் எண்ணத்தை ஒதுக்கி வைத்தாள்.
சந்தோஷ் டெல்லிக்குக் கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தான்.
சந்தோஷின் அன்னை திவ்யதர்ஷினியிடம் வந்து, “எனக்கு என்னவோ இது நல்ல சகுனமா படுது. இவன் ஏன் இப்போ டெல்லிக்குக் கிளம்பிட்டு இருக்கான் எனத் தெரியலை. பேசாம உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா நீயும் அவனும் அங்கே போங்க. இங்க சசியையும், அண்ணாவையும் நாங்க பார்த்துக்கிறோம்” என மீண்டும் முதலிலிருந்து ஆரம்பித்தார்.
“என்ன அத்தை இது? சந்தோஷ் தன் கனவுகளை நோக்கிப் போயிட்டு இருக்கான். அவனுக்குக் கொஞ்சம் டைம் கொடுப்போம் அத்தை. இப்போ என்ன அவசரம்?” எனப் பேசி மழுப்பினாள்.
அத்தோடு விட்டாரா? இல்லையே. அவரிடம் இருக்கும் நகைகளை ஒவ்வொன்றாக வந்து காட்டி அவளுக்குத் தருவதாக அறிவித்தார்.
“உன் அம்மாவோட நகைகளை அப்பா விற்க விடமாட்டார். ஆனா இதெல்லாம் பரம்பரை நகையில்லை. அதனால இதையெல்லாம் வித்து உன் சொந்த நிறுவனத்தை ஆரம்பிம்மா” என மிகவும் எளிதாக ஒரு திட்டதைப் போட்டுக் கொடுத்தார்.
அவரின் அன்பில் உண்மையில் கரைந்து போனாள் திவ்யா. அவள் எவ்வளவு மறுத்தும் கஜினி முகமதுவைப் போல் வேறு வேறு திட்டத்துடன் படையெடுத்து வந்தார்.
ஒவ்வொரு முறையும் ஏதோ சொல்லி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள் திவ்யதர்ஷினி. நல்லவேளையாக அவள் தந்தை வந்து, “இப்போவே என்ன அவசரம் தங்கச்சி. நடக்கிறப்போ பார்க்கலாம்” என அவளைக் காப்பாற்றிவிட்டார்.
அவளுக்கு ஏனோ அவள் தவறு செய்வதாகப்பட்டது. எத்தனை எதிர்பார்ப்புகளுடன் பெரியவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதைப் பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் அவளும் சந்தோஷூம் இப்படிப் பொய்ச் சொல்லி ஏமாற்றுகிறோமே என அவளுக்கு வேதனையாக இருந்தது.
ஆகவே அவன் கிளம்பும் முன்னர் சந்தோஷிடம் சென்று, “சந்தோஷ், பேசாம அம்மா-அப்பாகிட்ட உண்மையைச் சொல்லிடலாமா? எனக்கு என்னமோ அவங்களை ஏமாத்தறது கொஞ்சம் கூட பிடிக்கலை. இதனால வேற ஏதாவது பிரச்சனை வருமோன்னு எனக்குப் பயமா இருக்கு” என்றாள்.
அவள் எண்ணியது சரியே. கூடிய விரைவில் இதனாலேயே அவள் வாழ்க்கையில் பெரிய சூறாவளி வரப் போகிறது என்று அவள் உள்மனம் எச்சரித்தது. ஆனால் அதை சந்தோஷ் சற்றும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏதேதோ பேசி தட்டிக் கழித்துவிட்டான்.
“எதுக்கு இப்ப இப்படி ஃபீல் பண்ணிட்டிருக்க? எண்ணி ஆறே மாசத்துல என்னோட பயிற்சி முடிஞ்சிடும். பிசினஸ் தொடங்கி ஓரளவுக்கு டெவலப் பண்ணிடுவேன். அப்புறம் வந்து அம்மா-அப்பாகிட்டகால்ல விழுந்து உண்மையைச் சொல்லிடறேன். பிசினஸ் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அதை நிறுத்தவா சொல்லப் போறாங்க” என்றான் சந்தோஷ்.
அவன் சொல்வதும் சரி என்றே பட்டது. ஆனாலும் அவளுக்குத் தயக்கமாக இருந்தது. “ஆனா சந்தோஷ், நீ பிசினஸ் டெவலப் பண்ணிட்டு வர்றதுக்குள்ள உன் வீட்ல இருக்குற சொத்தெல்லாம் என் வீட்டுக்கு இடம் மாறிடும். பரவாயில்லையா?” என எரிச்சலுடன் கேட்டாள் திவ்யதர்ஷினி.
அவளைக் கேள்வியாக அவன் பார்க்க, “அத்தை ஒவ்வொரு தடவையும் எங்கேயாவது வெளில போயிட்டு வந்தா உனக்காக அதை வாங்கினேன், இதை வாங்கினேன்னு தங்க நகைகளாகக் கொண்டு வந்து எனக்குத் தர்றாங்க” என்றாள் திவ்யதர்ஷினி.
“கொஞ்சம் கூடப் பிழைக்கத் தெரியாதவளா இருக்கியே தர்ஷி. அம்மா நகையை வாங்கிக் கொடுத்தா பேசாம போடுறதை விட்டுட்டு இப்படி வந்து கவலைப்பட்டுட்டு இருக்கியே” என அவளையே வாரினான் சந்தோஷ்.
“இப்படியே விளையாட்டுத்தனமா பேசிட்டு இரு. ஒரு நாள்ன்னா ஒரு நாள் உன்னை நல்லா மொட்டையடிக்கப் போறேன்” எனக் கோபத்துடன் சொல்ல,
“என்ன தர்ஷி இது? நகையைத் தானே கொடுத்தாங்க. நீ என்ன அதை அப்படியே தூக்கிட்டு ஓடிடவா போற. நான் திருப்பி வந்து கேட்டா என்கிட்டே கொடுக்க மாட்டியா என்ன? இல்லை, உனக்கு வேணும்னாலும் நீயே வச்சுக்கோ. எனக்கு என் உழைப்பு இருக்கு” என அவன் சொன்னதும் திவ்யதர்ஷினிக்குக் கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் வந்துவிட்டது.
“ஏய் தர்ஷி, எதுக்கு இப்போ அழற? நகையை வச்சுக்கத் தானே சொன்னேன். உன்கிட்ட இருக்குற நகையைக் கேக்கலையே. ஏம்மா இப்படிச் சோதிக்கிற?” என அவனும் அழுவதைப் போல் பாவனை செய்ய,
“உனக்கு என் மேல நிறைய நம்பிக்கையிருக்கு. தேங்க்ஸ் சந்தோஷ். நீயும் என் ஃபிரண்டு மாதிரி என்னை ஏமாத்திடாத” என்றாள் கலங்கிய கண்களைத் துடைத்தவாறே.
“உன்னை அப்பிடியே ஏமாத்திட்டாலும்” என நொடித்துக் கொண்டவனுக்குத் தெரியவில்லை அவன் தன் தோழியைக் கூடிய விரைவில் ஏமாற்றப் போகிறான் என்று. அதனால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பேசாமல் இருக்கப் போகிறார்கள் என்று இருவருமே அறியவில்லை.
“இன்னும் கொஞ்ச நாள் தானே தர்ஷி, பிளீஸ், அதுக்கப்புறம் நானே சொல்லிடறேன்” என அவளைச் சமாதானப்படுத்தினான்.
அதன்பின்னர் சில நாட்களிலேயே அவன் டெல்லிக்குப் பயணமானான். அவன் டெல்லிக்குச் செல்கையில் அவன் அன்னை ஒரு பாட்டம் அழுது தீர்த்தார்.
திவ்யதர்ஷினி அவரைச் சமாதானப்படுத்தினாள். சந்தோஷ் ஓரளவுக்கு போய்ச் சரி செய்ததும் அவர்கள் இருவரும் டெல்லிக்குச் செல்லலாம் எனத் திட்டம் போட்டு பயண டிக்கெட்டை பதிவு செய்தாள். அதன்பின்னரே அவர் அமைதியானார்.
அவளின் பேச்சில் சற்று தெம்பு கூட அவருக்கும் அதுவே சரி என்று பட்டது. முன்னேறத் துடிக்கும் மகனின் எதிர்காலத்தை அவர் தன் பாசத்தால் கட்டிப் போட விரும்பவில்லை.
*****
அன்று வேலைகளை முடித்துவிட்டு தன் தம்பியின் வருகைக்காகக் காத்திருந்தாள் திவ்யதர்ஷினி.
சசிதரன் இப்போதெல்லாம் தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று சுற்றிக் கொண்டிருந்தான். சதுரங்கம் பற்றிய பேச்சை அவன் எடுப்பதே இல்லை.
என்ன நடக்கிறது என அவனை அழைத்து திவ்யதர்ஷினி விசாரிக்க, “கவலப்படாதீங்க அக்கா. டி. டி. கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ன்னு ஒரு நிறுவனம் எனக்கு ஸ்பான்ஸர் செய்யறதா சொல்லியிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்ல முடிவு தெரியும். அவங்க ஸ்பான்ஸர் செஞ்சா நான் போய்ப் பயிற்சியில் சேர்ந்துக்கிறேன்” எனத் தெளிவுடன் பேசினான்.
அதற்குமேல் அவளும் தோண்டித் துருவவில்லை. அப்படி எதையாவது பேசி வைத்து அவன் மீண்டும் அவளுக்கு நடந்த விஷயத்தை எண்ணி புலம்ப ஆரம்பித்தால் அவனைச் சமாதானம் செய்வது பெரும் பாடாகிவிடும் அவளுக்கு. சந்தோஷ் வேறு அருகிலில்லை அவளுக்குத் துணை நிற்க.
மீண்டும் கட்டடக்கலையில் வேலை தேட திவ்யதர்ஷினிக்கு ஏனோ பிடிக்கவில்லை. அந்தச் சமயத்தில் அவளுக்குத் திடீரென்று அந்த யோசனை பிறந்தது. கிட்டதட்ட மூன்று வாரங்களுக்கு முன்னால் வத்சன் என்றொருவன் வேலை கொடுப்பதாகச் சொன்னானே.
உடனே தன் கைப்பையைக் குடைந்து வத்சன் தந்த அவனது அட்டையை எடுத்துப் பார்த்தாள். அதில் மற்ற விவரங்களையும் குறிப்பிட்டிருந்தான். அட்டையின் பின்னால் இருந்த விவரங்களை வைத்து அந்த வேலைக்கு விண்ணப்பித்தாள்.
வத்சனை அழைத்து, அவள் அந்த வேலைக்கு விண்ணப்பித்து இருப்பதாகச் சொல்லவும், “அப்பாடி, இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு. நிறையப் பேரைப் பார்த்துட்டோம். சித்திக்கு யாரையும் பிடிக்கலை” என்றவன்,
“ஆமா, தீடிர்னு எப்படி இந்த வேலைக்கு வரத் தோணுச்சு?” எனக் கேட்டான்.
வேலைப் போய்விட்டது என உண்மையைச் சொல்லவும், “உங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனால் வேலைக்குச் சேர்ந்ததும் கண்டிப்பா ஒரு ஆறு மாசமாவது வேலையில இருக்கணும்” என்றான்.
ஆறு மாதங்கள் தானே. கடகடவென்று போய்விடும். அதற்குள் அவளும் தன் கட்டட நிறுவனம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என எண்ணி சம்மதித்தாள்.
ஆனால் சேர்ந்த மறுநாளே அங்கிருந்து ஓடி வரவேண்டும் என்று எண்ணுவாள் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“அப்புறம் இன்னொன்னு. உங்களுக்கு இன்டர்வியூ வச்சு, என் சித்திக்கு உங்களைப் பிடிச்சிருந்தா மட்டுமே வேலை. முதல்ல அவங்களை வந்து நீங்க மீட் பண்ணுங்க” என நேரத்தையும் இடத்தையும் சொல்லி முடிவு செய்தான் வத்சன்.

