அத்தியாயம் – 12
அன்று அதிகாலையிலேயே மித்ரனின் வீட்டிற்குச் சென்றான் வத்சன். அப்பொழுதுதான் உடற்பயிற்சியை முடித்துவிட்டு வேர்வை சிந்த வீட்டினுள் நுழைந்தான் மித்ரன்.
“வாடா பாடி பில்டர்” எனப் பரிகாசமாக அவனை வரவேற்று விட்டு, அவன் சித்தி தந்த காலை காபியை ‘சர்’ என்று உறிஞ்சி, “பேஷ் பேஷ் காபினா சித்தியோட காபி தான்” என நாடக பாணியில் சைகையுடன் சிலாகித்துவிட்டு மீண்டும் ஒரு வாய் அருந்தினான்.
அவனை வேற்று கிரகவாசியைப் போல் பார்த்த மித்ரன், “மாடு தான் இப்படி கழினித் தண்ணியைக் குடிக்கும்” என எரிச்சலுடன் மொழிந்தான்.
அப்போது அவன் அன்னை மித்ரனுக்கும் ஒரு டம்ளரில் காபியை எடுத்துக் கொண்டு வந்து நீட்ட, புன்னகையுடன் அதை வாங்கி அருந்த ஆரம்பித்தான்.
அவன் பட்டும் படாமல் அருந்துவதைப் பார்த்தவன், “எலி தான் இப்படிச் சத்தமேயில்லாம திருட்டுத்தனமாக் குடிக்கும்” என அவனைப் பதிலுக்குச் சீண்டினான். நாசூக்காகக் குடிக்கிறானாம்!
“போடா டேய்… நாங்க எல்லாம் நீ போயிட்டு வந்த அதே ஸ்கூலுக்குத் தான் போயிட்டு வந்தோம். வந்துட்டான் கிளாஸ் எடுக்க” என மீண்டும் காபியை ‘சொர்’ என்று வேண்டுமென்றே சத்தமாகக் குடித்தான் வத்சன்.
மித்ரன் அவனைப் பார்த்து முறைக்க, “இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. அம்மாவுக்கு உதவியா இருக்க ஓர் ஆள் ஏற்பாடு செய்யக் கொஞ்சமாவது மெனக்கெடறியா நீ?” என அவனைத் திட்டினான்.
மித்ரன் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு, “அதற்கு ஆள் பாக்கறேன்னு சொல்லி நீயே விளம்பரமும் கொடுத்திட்டியே. அப்புறம் என்ன என்கிட்டே வேற சொல்லிட்டிருக்க. இன்டர்வியூ வச்சி நீயே முடிவெடுத்துக்கோ.
என்னை விட அம்மாவுக்கு எப்படியும் உன்னைத் தான் ரொம்ப பிடிக்கும். நீ சொல்றதை மறுத்து எதுவும் சொல்ல மாட்டாங்க” என்றான் மித்ரன்.
கூர்ந்து கவனித்தால் உதட்டசைவுகள் வைத்து மீனாட்சி ஓரளவுக்கு விஷயத்தைக் கிரகித்துக் கொள்வார். அவன் கூறியதைக் கேட்டதும் நெஞ்சில் சுளீரென்று வலி தோன்றியது.
அவன் மனதில் இப்படி ஒரு தவறான எண்ணம் தோன்றியிருக்கிறதா? வத்சன் தன் அக்காவின் மகன் என்றாலும் அவர் வேலைக்குச் சென்றதால் அவனை வளர்த்தது எல்லாமே மீனாட்சி தான். அதனால் வத்சனுக்கு அவன் சித்தியை மிகவும் பிடிக்கும், அவரைப் பார்க்காமல் ஒரு நாளும் இருக்க மாட்டான்.
அப்படி மகனைப் போல் நினைப்பவனிடம் பெற்ற மகன் பொறமையுணர்வுடன் போட்டி போடுகிறானோ? மித்ரனின் மேலே அவர் வைத்திருக்கும் பாசத்துக்கு எந்தக் குறையும் வைக்கவில்லையே.
அவன் தான் அனைத்தையும் மூடி மறைத்துக் கொண்டு அலைகிறான். இரு கண்களில் எந்தக் கண் பெரிது எனக் கேட்பதைப் போலிருந்தது அவருக்கு.
அவர் வருத்தத்துடன் மித்ரனையும் வத்சனையும் மாறி மாறிப் பார்க்க, “என்ன சித்தி, லைட்டா ஏதோ கருகற வாசம் வருதே” என மூக்கை மூன்று முறை உறிஞ்சியவாறு மூக்கின் முன்னால் இருக்கும் வாடையை கையைக் கொண்டு விசிறி விலக்க முயன்றான் வத்சன்.
வத்சன் எப்போதுமே இப்படித் தான். எந்தச் சூழ்நிலையையும் இலகுவாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவன். மீனாட்சியின் முகம் புன்னகையில் விரிய, படக்கெனத் தன் இருக்கையிலிருந்து எழுந்து காபியுடன் மாடியை நோக்கி நகர ஆரம்பித்தான் மித்ரன்.
“அம்மா மேலே பாசம் இருந்தா, உன் பர்த்டே அன்னைக்கு எண்ண பண்ணின? ஆசையா உனக்காகச் சமைச்சு வச்சுட்டுக் காத்திருந்தாங்க. ஆனா நீ அவங்க சாப்பிட்டாங்களானு கூட கேக்கவே இல்ல” என வத்சன் சொல்லவும், மேலே செல்ல ஏறிக் கொண்டிருந்த மித்ரனின் கால்கள் பட்டென நின்றன.
அன்னையின் அருகில் விடுவிடுவென்று சென்று, “நிஜமாவாம்மா… ரியல்லி சாரிம்மா. அன்னைக்கு நம்ம ஆபிஸ்ல ஒரு எமர்ஜென்ஸி. அதைச் சரி செஞ்சுட்டு வர்றதுக்குள்ள நேரமாயிடுச்சு. அதனால நான் கவனிக்க கூட இல்ல” என்றான் மித்ரன்.
“இதைக் கூட வேற வீட்ல இருக்குற நான் வந்து சொல்ல வேண்டி இருக்குது. இதுல என்னை விட உன்னைத் தான் ரொம்பப் பிடிக்கும்னு பொறாமை வேற” என நொடித்துக் கொண்ட வத்சன்,
“ஆமா, யாரோ ஒரு பொண்ணை லிப்ட்குள்ள வச்சு க்ளோஸ் பண்ணப் பார்த்தியாமே. பேசிக்கிட்டாங்க” எனக் கேலியாகக் கேட்க மித்ரனின் கோபம் எல்லைக் கோட்டைத் தாண்டியது.
சந்தோஷ் அவனிடம் சொன்ன அதே வார்த்தைகள். அவன் என்ன வேண்டும் என்றா அதைச் செய்தான்?
நடந்த விபத்துக்கும் அவனுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. இருந்தும் அதை நினைத்து அவன் மருகாத நாளில்லை. இப்போது இவனும் அதைச் சொல்லியே குற்றம் சாட்டுகிறான்.
“இப்படியே அறைஞ்சிடுவேன்” என விடுவிடுவென்று வத்சனின் அருகில் கையை உயர்த்திக் கொண்டு அவனை அடிக்கச் சென்றான்.
“பார்த்து… காபி கீழே கொட்டுது பாரு. வேஸ்ட் பண்ணாத” என அவன் கோபத்தை தண்ணீர் ஊற்றிய பட்டாசாக்கிவிட்டான் வத்சன்.
“இன்னைக்கு இன்டர்வியூக்கு ஒருத்தங்க வர்றாங்க. நானும் அம்மாவும் பேசறோம். நீயும் கூட இருந்தா நல்லா இருக்கும்” என வத்சன் அவனைத் தடுத்து நிறுத்த,
“நீயே பேசிக்கோ. திடீர்னு சொன்னா எப்படி? எனக்கு இன்னைக்கு வேற வேலை இருக்கு. நேத்தே சொல்லறதுக்கு என்னவாம்?” என எரிச்சலுடன் முணுமுணுத்தான் மித்ரன்.
“நீ பெரிய லார்ட் லபக்கு தாஸ்னு எங்களுக்குத் தெரியலையே” எனச் சொல்லிவிட்டு கலகலவென்று வத்சன் சிரித்தான். எல்லாம் அன்று திவ்யதர்ஷினி அழைத்த லார்ட் லபக்கு தாஸ் என்ற பெயர் தான். அவனுக்குப் பட்டென்று வாயில் வந்துவிட்டது.
மித்ரன் அவனையே உறுத்து விழிக்க, “நேத்து அப்ளை பண்ணினாங்க. பேக்கிரவுண்ட் செக் பண்ணினேன். திருப்தியா இருந்தது. அதனால் என் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வச்சுட்டு இன்னைக்கே வரச் சொல்லிட்டேன்” என்றான் வத்சன்.
அவள் வேலைக்கு விண்ணப்பித்ததுமே நேற்று துப்பறிவாளர் ஒருவரை வைத்து அவளைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கச் சொன்னான் வத்சன். விவரங்கள் அனைத்தும் காலையிலேயே அவனிடம் வந்துவிட்டன. விசாரணையில் எந்த எதிர்மறைத் தகவலும் இல்லை.
தன் சித்தியின் வீட்டில் நம்பி விட வேண்டும் என்றால் அவன் அதைச் செய்தாக வேண்டும்.
“மித்ரன், நான் சொல்றதைச் சொல்லிட்டேன். இன்டர்வியூ பண்ணி ஆளை செலக்ட் பண்ணினதுக்கு அப்புறம் எனக்கு அந்த ஆளைப் பிடிக்கலை… ஆட்டுக்குட்டி வால் ஆட்டலைன்னு சொன்னா எதுவும் பண்ண முடியாது. அதனால நீ கூட இருந்து முடிவு செய்துக்கோ. இல்லையா, நான் எடுக்கற முடிவை மனசார ஏத்துக்கோ” என்றான் வத்சன்.
“என்னவோ எனக்குப் பொண்ணு பார்க்கிற மாதிரி ரொம்பவும் அலட்டிக்கிற. வேலைக்குத் தானே ஆள் எடுக்கிற… பிடிக்கலைன்னா மாத்திடலாம்… போவியா?” என முணுமுணுத்தவாறே மளமளவென்று மேலேறிச் சென்றுவிட்டான் மித்ரன்.
“சித்தி, இவன் ரொம்ப ஓவராப் பண்ணறான். இவனுக்குப் பொண்ணு பார்த்துட்டாலும்…. அந்தப் பொண்ணு ரொம்பப் பாவம்” என முகமறியா அந்தப் பொண்ணுக்காகப் பரிதாபப்பட்டுக் கொண்டான்.
மேலே ஏறிக் கொண்டிருந்த மித்ரனின் கண் முன்னால் திவ்யதர்ஷினி தோன்றினாள். இந்நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள்? தன்னைப் பற்றி யோசிப்பாளா? எப்படியாவது அவளைச் சந்திக்க வேண்டும். எப்படி, முடியுமா? என ஒருவித மயக்கம் அவனை உடனே ஆட்கொண்டது.
தொடர்ந்து, “ஒரு நாள் என்கிட்ட வந்து கண்டிப்பா கெஞ்சுவான் சித்தி. அப்போ இவனை என் காலில் விழ வைக்கிறேன். யூ டோன்ட் வொர்ரி” என மாடியை நோக்கி முறைத்துவிட்டு, “வாங்க சித்தி, நம்ம போய்ச் சாப்பிடலாம்” என அங்கிருந்து எழுந்தான்.
அவன் சித்தியிடம் சைகையில் சொன்னாலும் கத்தியே பேசினான். விழ வேண்டியவன் காதில் விழ வேண்டும் அல்லவா?
அதே சமயத்தில் மித்ரனின் சித்தியும் சித்தப்பாவும் வீட்டினுள் நுழைந்தனர். அவர்கள் அமெரிக்காவுக்குச் சென்று மகள் வீட்டில் இருந்துவிட்டு சில நாட்களுக்கு முன்னரே திரும்பி வந்திருந்தனர். அவர்களுக்கு ஒரு மகளும் மகனும் இருந்தனர்.
மகள் திருமணம் முடிந்து அமெரிக்கா சென்றுவிட்டாள். மகன் வினோத், மித்ரனுடன் சேர்ந்து இப்போது தொழிலைக் கவனித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறான். அவனும் பெற்றோர்களுடன் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பியிருந்தான்.

