அவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக அவர்களின் இந்தப் பெரிய வீட்டில் பல வருடங்களாக இருந்தனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த ஏற்பாடு தான். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் குடும்பத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்ய, இந்தப் பெரிய வீட்டை வங்கியில் வைத்து பணம் வாங்கினார்கள்.
மித்ரனின் தந்தை மாரடைப்பால் இறக்க, பணத்தைத் திருப்பிக் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. வங்கி அந்த வீட்டை கையிலெடுத்துக் கொண்டது. அனைவரும் அங்கிருந்து கிளம்ப வேண்டிய சூழலில் மித்ரனின் சித்தப்பா குடும்பம் அருகிலிருந்த அவர்களின் சொந்த வீட்டுக்குக் குடி பெயர்ந்து விட்டனர்.
இந்த வீட்டில் அவர்கள் அனைவரும் ஆரம்பத்தில் இருந்து ஒன்றாக இருந்தாலும் அந்த வீட்டைக் கட்டியது மித்ரனின் தந்தையான ராம்பிரசாத். அதன்பிறகே அவன் சித்தப்பா தொழிலில் பணம் போட்டு அப்படியே இங்கே வந்து சேர்ந்து கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் மித்ரனின் சித்திக்கு மீனாட்சி இப்படித் திடீரென்று வந்து ஒட்டிக் கொண்டது அறவே பிடிக்கவில்லை. பின்னே இத்தனை நாட்கள் ராணியைப் போல் வலம் வந்த வீட்டில் அவன் அன்னையைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டான் மித்ரன். இனி அவர் இராஜ்ஜியம் தான் மேலோங்கி இருக்கும்.
அவன் மேலிருக்கும் பயத்தில் தான் வெளியில் எதுவும் காட்டாமல் அமைதியாக இருக்கிறார். மித்ரனின் உழைப்பினால் மட்டுமே அதள பாதளத்துக்குச் செல்லவிருந்த அவர்கள் குடும்பத் தொழில் மேலெழுந்தது. பன்மடங்கு விரிவடைந்தது.
கூடவே வங்கியில் மூழ்கவிருந்த இந்தப் பெரிய வீட்டை மீட்டுக் கொடுத்தது மீனாட்சியின் பங்காக வந்த சொத்துக்களும், மித்ரன் பங்கு சந்தையில் வைத்துச் சம்பாதித்ததும். இருந்தாலும் இவ்வளவு பெரிய வீட்டை அப்படியே விட்டுவிட அவருக்கு மனமில்லை.
இப்போது நிலைமை சீராக மாறிவிட்டதே. முன்பு போல் இங்கேயே வந்து குடிபெயர வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தார் அவன் சித்தி. என்ன இருந்தாலும் இங்கே இருந்தால் அதற்குத் தனி மரியாதை அல்லவா?
ஊமையான மீனாட்சியை யாரும் கண்டுகொள்ள போவதில்லை. அதனால் அவரின் இராஜாங்கம் தான் மேலோங்கி இருக்கப் போகிறது. என்ன, இந்த மித்ரன் வாய் திறந்து, ‘நீங்களும் சித்தப்பாவும் இங்கேயே வந்துடுங்க’ என்று இன்றுவரையிலும் சொல்லவில்லை. பாட்டியும் இறந்து போய் வெகுநாட்களாகிவிட்டது. பிறகு ஏன் தயங்குகிறான் என்று புரியவில்லை.
எப்படியாவது சொல்ல வைத்துவிட வேண்டும் என மனதில் பெரிய திட்டத்துடன் அங்கே வந்தார்.
“வாங்க, சித்தப்பா.. எப்படி இருக்கீங்க?” என வத்சன் அவரைப் பார்த்து விசாரிக்க, அங்கே வந்த மித்ரனின் சித்தியோ, “நல்ல கதையா இருக்கு. எங்க வீட்ல வந்து உட்கார்ந்துட்டு எங்களையே வரவேற்கறியே” என வாயில் சிரிப்புடன் உள்ளத்தில் கள்ளத்துடன் கேட்டார்.
“வெளில போயிட்டு வர்றவங்களை வரவேற்கனும் சித்தி. அது நம் தமிழர்கள் பண்பாடு” என்றான்.
“ஹி.. ஹி..” என அவர் வாய் சிரித்தாலும், உள்ளத்தில் அவனைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.
‘வாங்க சாப்பிடுங்க’ என மீனாட்சி அவர்களிடம் சைகையால் சொல்லிவிட்டு உணவறை நோக்கி நகர்ந்தார்.
அவர்கள் அனைவரும் அமர்ந்து உணவருந்தினார்கள். சற்றுநேரத்தில் மித்ரனும் வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டான். அவனுக்காகப் பார்த்து பார்த்து அமெரிக்காவில் வாங்கி வந்த பொருட்களை அவனிடம் தந்த அவன் சித்தி, அவனுக்குப் பெண் பார்க்க என்று சில புகைப்படங்களை எடுத்து நீட்டினார்.
“கல்யாணம் வேண்டாம்னு சொல்லாத. உனக்கு வயசு ஏறிட்டே போகுது” என அவன் சித்தப்பா சொல்ல, “இல்லை, இல்லை, கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் மித்ரன்.
அவனின் இந்தத் திடீர் மாற்றத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. போராட வேண்டும் என்று எண்ணியவர்களுக்கு அது வியப்பாக இருந்தது.
“என்னாடா பொண்ணு பார்த்துட்டியா? அந்த ரதியா?” என வத்சன் வம்புக்கு இழுக்க, மித்ரனுக்கு கண் மண் தெரியாமல் கோபம் வந்துவிட்டது.
“இன்னைக்கு என்கிட்ட அடி வாங்காம போக மாட்டியா? ஃப்ரெண்ட்ஸா பழகறது ஒரு தப்பா. சும்மா சும்மா கிண்டல் பண்ணிட்டு இருக்க. இனிமேல் இப்படிப் பேசின வீட்டுக்குள்ள விடமாட்டேன்” என வள்ளென்று விழுந்தான் மித்ரன். ஏனோ அவனுக்கு அவனை யாரோடும் இணைத்து வைத்துப் பேசுவது பிடிக்கவில்லை.
அவனுக்கு இப்போது மனம் முழுவதும் திவ்யதர்ஷினியின் மேல் அல்லவா இருக்கிறது?
“அதுக்கு எதுக்குடா மகாபாரத போர் உருவாகற மாதிரி கத்தற. நல்லவேளை, அவளைப் போய் நான் அண்ணின்னு கூப்பிடனுமோன்னு நினைச்சேன். உனக்கு அவ கண்டிப்பா செட் ஆக மாட்டா” என்றான் வத்சன்.
“அப்போ இந்த ஃபோட்டோக்களைப் பாரு” என அவன் சித்தப்பா சமயம் பார்த்து காய் நகர்த்த, மித்ரனோ அந்தப் புகைப்படங்களைக் கையால் தீண்டக் கூட இல்லை.
“நானே சொல்லறேன் சித்தப்பா” எனச் சொல்லவும், “யாருடா அது? நீயே ஆளைப் பார்த்துட்டியா? அப்போ இந்த ஃபோட்டோ எல்லாம் என்ன பண்ணறது?” என வத்சன் கேலியாகக் கேட்டான்.
“நீயே பார்த்துக்கோ” என அவனுக்கு இடக்கு மடக்காகச் சொன்ன மித்ரன், “எனக்கு நிறைய வேலையிருக்கு. நான் கிளம்பறேன் சித்தி-சித்தப்பா” என எழுந்தான்.
“சித்தப்பா, வினோத் எப்போ கம்பெனிக்கு வர்றான்?” எனக் கேட்டவாறே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தான் மித்ரன்.
“ரெண்டு நாள்ல வருவான்” என சித்தப்பா பதில் தந்தார். அவரின் மகன் வினோத்தும் அந்த நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிக்கிறான். அவனுக்கு மித்ரனைப் பார்த்தால் அவ்வளவு பயம். அதனால் முடிந்தவரையில் அவன் இருக்கும் திசையில் பார்க்கவே மாட்டான்.
இத்தனைக்கும் மித்ரன் ஒன்னும் அவனிடம் தன் அதிகாரத்தைக் காட்டியதில்லை. அவன் தந்தை சொல்லியதாலா, அல்லது, மிதத்ரனின் ஆளுமையைப் பார்த்தா என்று தெரியாது மித்ரன் என்றால் சற்று விலகியே நிற்பான் வினோத்.
“சரி, நான் கிளம்பறேன்” என அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான் மித்ரன்.
அவன் சென்ற சிறிதுநேரம் அவர்கள் அமெரிக்கா சென்று வந்த கதையை வத்சனின் காதில் ரம்பம் வரும் அளவுக்கு அறுத்துவிட்டே கிளம்பினார்கள் சித்தியும்-சித்தப்பாவும்.
காலை பத்து மணியளவில் திவ்யதர்ஷினி மித்ரனின் வீட்டிற்கு வந்தாள். வந்தவளை ஆரவாரத்துடன் வரவேற்று, “என்ன இன்னைக்கு மேக்கப் எல்லாம் தூள் பறக்குது?” எனக் கேட்டான் வத்சன்.
“இத்தனை நாள் சான்ஸ் கிடைக்கலை. போடலை. இப்போ கிடைச்சிருக்கு போட்டிருக்கிறேன்” என்றாள். கட்டுமான பணியில் அவளால் அலங்கரித்துக் கொண்டு போக முடியாது. சில சமயம் வெயிலில் நின்று உழைக்க வேண்டும். அனைத்தும் கலைந்து போகும்.
இன்று சற்று சிரத்தை எடுத்து அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள். அதற்காக ஏதோ விழாவுக்குச் செல்லும் அளவுக்கு இல்லை. அதுவும் அந்த ரதிப்ரியா அளவுக்குச் சத்தியமாக இல்லை.
“உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லாம, உண்மையைப் பேசறீங்க” எனக் கூறி, அவளை மீனாட்சியிடம் அறிமுகப்படுத்தி வைத்தான் வத்சன்.
அவளின் பாந்தமான பேச்சினாலோ, அல்லது, அலட்டலில்லாத செயலினாலோ அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே மீனாட்சிக்கும் பிடித்துப் போனது. அவள் முகத்தைப் பார்த்தால் ஒருவித அமைதி தோன்றுவதாக அவருக்குப் பட்டது.
அதுவும் கேட்கும் திறன் மற்றும் வாய்ப் பேசும் திறன் இல்லாதவர்கள் மற்றவர்களின் முக பாவங்களை நன்றாகவே கணிக்க முடியும். அப்படிப் பார்க்கையில் கள்ளமில்லாதவள் என்று அவளை எடை போட்டுக் கொண்டார்.
அலட்டிக் கொள்ளாமல் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவளிடம் சைகையால் சில கேள்விகளைக் கேட்டார். அதைப் புரிந்து கொண்ட திவ்யதர்ஷினியும் செய்கையாலேயே அவரிடம் பதில் தந்தாள்.
மீனாட்சி சற்றுநேரம் அவளுடன் சைகை மொழியில் பேசிக் கொண்டிருக்க அவருக்கு நேரம் போனதே தெரியவில்லை. திவ்யதர்ஷினியும் சளைக்காமல் அவர் கேட்கும் ஒவ்வொன்றுக்கும் பொறுமையாகவும் நிதானமாகவும் பதில் தந்தாள். முக்கியமாக சுவாரசியமாகப் பேசினாள்.
மீனாட்சி முழுதிருப்தியுடன் வத்சனைப் பார்க்க, பார்வையிலிருந்த செய்தியைப் புரிந்து கொண்டவன், “உங்க பயோடேட்டாவைப் பார்த்தேன். பி. ஆர்க்கு படிச்சிட்டு எப்படி சைகைப் மொழியெல்லாம் கத்துக்கிட்டீங்க?” எனக் கேட்டான்.

