நீ வந்து தங்கிய நெஞ்சில் 6.1

அத்தியாயம் 6

நிரோஜனுக்குக் கோபத்தில் கண் முகமெல்லாம் சிவந்து போயிற்று. திரும்ப திரும்ப என்ன நடந்தது என்று தெரிய முதலே அவனைக் குற்றம் சாட்டினால் எப்படி? அவன் எதற்குப் பொய் சொல்லப்போகிறான்? இல்லை, இதற்கு முதல் அப்படி எத்தனை தரம் பொய் சொன்னானாம்?

காலையில் விளக்கமாகச் சொல்லியும் ‘நீங்கள் இருவரும் ஒட்டிக்கொண்டு திரிந்ததற்கு எனக்குக் கெட்ட பெயரா?’ என்று கேட்டால் என்ன அர்த்தம்? அதென்ன ஒட்டிக்கொண்டு திரிந்தான் என்று சொல்வது? முதலில் திலினிக்கு இதெல்லாம் எப்படித் தெரியவந்தது?

தன் அலுவலக அறையிலிருந்து வெளியே வந்து, “ஆர்…” என்று ஆரம்பித்தவன் அங்கிருந்த திலினியைக் கண்டுவிட்டு வாயை இறுக்கி மூடிக்கொண்டான்.

தமக்கு முன்னிருந்த திரையில் கவனமாக இருந்தபடி விசைப்பலகையில் தம் விரல்களை நடனமாட விட்டிருந்த தலைகள் அத்தனையும் அவன் வந்த வேகத்திற்கு நிமிர்ந்து பார்த்தன.

“நவீன், ஒருக்கா வா!” என்றுவிட்டு மீண்டும் தன் அறைக்குத் திரும்பினான். பின்னால் வந்த நவீனிடம், “எனக்கும் யமிக்கும் நடந்தத ஆரடா திலினிட்டச் சொன்னது?” என்றான் இன்னும் கோபம் அடங்காமல்.

“அது நான்தான்டா. ஆனா மச்சான்…”

“லூசா நீ? நீ பாத்த வேலையால அவள் என்னைக் கடிச்சுக் குதறுறாள்.” அவனைச் சொல்லி முடிக்க விடாமல் பாய்ந்தான் நிரோஜன்.

நவீன் திகைத்துப்போனான். “மச்சான். அவளிட்டச் சொல்லோணும் எண்டு சொல்லேல்ல. எனக்கு யாமினின்ர கோபத்தில் நியாயம் இருக்கு எண்டு பட்டது. அதாலதான் இனியும் இப்பிடி நடக்காத, யாமினி அதைப் பாத்திட்டுக் கோவப்பட்டிருக்கிறாள். கொஞ்சம் கவனமா இரு எண்டு நல்லதுக்குத்தான்டா சொன்னனான்.”

கண்களைக் கைகளால் மூடிக்கொண்டு அமர்ந்துவிட்டான் நிரோஜன்.

“மச்சான்.”

“அந்த அரைவேக்காடு நீ சொன்னதைக் கேட்டுக்கொண்டு போய் அவளிட்டக் கதைச்சிருக்கு. மன்னிப்புக் கேட்டு என்னைச் சந்தேகப்படாத எண்டும் சொல்லியிருக்கிறாள். நானும் நீயும் கதைச்சது அவளுக்கு எப்பிடித் தெரியும் எண்டு கேட்டுத் திரும்பச் சண்டை.”

நவீனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இன்னொரு முறை இப்படி எதுவும் நடக்கக் கூடாது என்று எண்ணித்தான் திலினியிடம் சொன்னான். கடைசியில் அதுவே அடுத்த சண்டைக்கு வழி வகுத்துவிட்டதே.

“மச்சான், யாமினியோட நான் கதைக்கவா?”

“ஏன், நானும் அவளும் போட்ட சண்டை காணாதா உனக்கு?”

“டேய்!”

“பின்ன என்னடா? இன்னும் எத்தின பேர் இதைப் பற்றி வந்து கதைக்கப்போயினம் எண்டு கேக்க மாட்டாளா?”

“வேற என்னதான் செய்றது?”

அவனுக்கும் தெரியவில்லை. “பாப்பம் விடு.” என்றான்.

“டேய்!”

“விடடா! நீ என்ன வேணுமெண்டா செய்தனி? என்ன, திரும்ப அவளிட்டக் கத்திட்டன். பின்னேரம் போய்ச் சமாதானம் செய்யோணும். நீ போ!” எனும்போது அவனும் ஒரு நிலைக்கு வந்திருந்தான்.

அப்போதுதான் எதிர்த்திசையில் அமைந்திருந்த அறையில் இருந்து இவர்களைப் பார்த்தும் பாராததுபோல் கவனித்துக்கொண்டிருந்த அசோகனைக் கண்டான். மனம் தெளிந்திருந்ததில் அவனுக்குள் இருந்த விளையாட்டுப் பையன் துள்ளி எழுந்தான்.

வெளியே செல்லப்போன நவீனை இழுத்து, அவன் கன்னங்கள் இரண்டையும் தாங்கி, உதட்டோடு உதடு வைத்து முத்தமிடுவதுபோல் செய்தான்.

அங்கே தன் அறையில் இருந்து இவர்களைக் கவனித்துக்கொண்டிருந்த அசோகன், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

“என்னடா அசோகவனம் இஞ்சயே பாக்குதா?” நவீன் குசுகுசுத்தான்.

“ஓம் மச்சான். இன்னும் கொஞ்ச நேரத்தில ப்ராஜெக்ட் எந்த லெவல்ல இருக்கு எண்டு கேட்டு பிங்க் பண்ணுவான். அதுக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம் குடுக்கோணும்.”

நவீனுக்கும் விடயம் புரிந்துபோயிற்று. நிரோஜன் விட்டபோது நாணிக்கோணிக்கொண்டு தன் உதடுகளை இரண்டு கைகளாலும் துடைத்துக்கொண்டான்.

அது போதாது என்று இங்கிருந்து வெளியேறி அவன் அறைக் கதவைத் திறந்து, “ஒரு காதலனும் காதலியும் காதலிக்கிறத வச்ச கண் எடுக்காமப் பாக்க வெக்கமாயில்லையா உங்களுக்கு? ஒண்டுக்கு ரெண்டா பிள்ளைகளை பெத்து வச்சுப்போட்டுத்தானே இருக்கிறீங்க. இன்னும் காணாதா? சேச்சே! இந்த ஒபீஸ்ல ஒருத்தன் நிம்மதியா காதலிக்கக் கூட வழியில்லை!” என்று பொரிந்துவிட்டு வந்து, மறுபடியும் நவீனைத் தன் நெஞ்சில் போட்டு, அவன் நெற்றியில் உதடு பதித்துத் தட்டிக்கொடுத்தான்.

நவீனும் காதலில் மயங்கிப்போனான். பலத்த காற்றுக்கு அடிபடும் கதவு போன்று அவன் உதடுகள் உணர்ச்சிக் குவியலில் படபடவென்று அடித்துக்கொண்டன. நிரோஜன் முகத்தையே அள்ளிப் பருகுவதுபோல் பார்த்துவைத்தான்.

இந்தக் கன்றாவியைப் பார்த்துக் கண்கள் வெந்துபோன அசோகன், படக்கென்று அவர்களுக்கு முதுகுகாட்டித் திரும்பிக்கொண்டான்.

“இனி மெயில் வரும்?” சிரிப்பை மடக்கியபடி கேட்டான் நிரோஜன்.

“ரெண்டு நாளைக்கு பிக் நோ!” என்றுவிட்டுப் போனான் நவீன்.

ஊர் சுற்றுகிற பொழுதுகளில் எல்லாம் தமக்குச் சமமாக நிற்கிறவன் அலுவலகம் வந்தால் மட்டும் முற்று முழுதான மேலதிகாரி ஆகிவிடுவான். அந்தக் கடுப்பில் நண்பர்கள் இருவரும் இப்படித்தான் எதையாவது செய்து வைப்பார்கள்.

*****

அன்று மாலை வேலை முடிந்ததும் நேராக யாமினியின் வீட்டுக்குத்தான் வந்தான் நிரோஜன். காலையில் நடந்த சண்டைக்கே வருவான் என்று தெரியும். இதில் மாலை வேறு சண்டையாயிற்றே. வராமல் எப்படி இருப்பான்? அப்படி அவன் வந்து நின்றது அவளுள் இதத்தைப் பரப்பாமல் இல்லை. ஆனாலும் மனத்தாங்கல் அடங்கவில்லை.

அவனுக்குக் கதவைத் திறந்து விட்டுவிட்டு அவள் பாட்டுக்கு உள்ளே போகவும், “இப்பிடித்தான் எவன் வந்தாலும் திறந்து விட்டுட்டுப் போவியா?” என்றான் அவன்.

வேகமாகத் திரும்பி அவன் வாயிலேயே ஒன்று போட்டாள் யாமினி.

“வீட்டுக்கு வந்தவனத் திரும்பியும் பாக்காம போனா வேற என்ன கேக்கிறது?” என்று அவளைப் பின்னிருந்து வளைத்தான் அவன்.

“நிரோ விடுங்க!” அவள் திமிறினாள்.

“அப்பிடி எல்லாம் விடேலாது.” என்று இழுத்து வந்து சோபாவில் அமர்த்தி, தானும் அவளைப் பார்ப்பது போல் ஒற்றைக் காலை மடித்து வைத்துக்கொண்டு அமர்ந்து, நடந்ததை முழுமையாகச் சொன்னான்.

“அவளுக்கு தெரியும் எண்டு எனக்குத் தெரியாது. இதில நீ நான் பொய் சொல்லுறன் எண்டு சொன்னா எப்பிடி இருக்கும்? விடிய அவ்வளவு விளக்கம் தந்தும் அவளோடு ஒட்டிக்கொண்டு திரிஞ்சிருக்கிறன் எண்டுறாய். அந்தக் கோவத்துல கொஞ்சம் கத்திட்டன்.”

“என்ன வேணுமெண்டாலும் நடந்திருக்கட்டும் நிரோ. நடந்த ரெண்டு சண்டைலயும் என்ர பிழை என்ன எண்டு சொல்லுங்க? ஆனா காயப்பட்டு நிக்கிறது நான். இல்ல, நீங்க என்ன செய்தாலும் உங்களை எந்தக் கேள்வியுமே கேக்கக் கூடாது எண்டா சொல்லுங்க, நானும் அப்பிடி இருக்க ட்ரை பண்ணுறன்.”

error: Alert: Content selection is disabled!!