அத்தியாயம் 12
‘எனக்கு ஒன்றுமில்லை’ என்று அவள் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் வைத்தியரிடம் காட்டி, அவர் ஒன்றுமில்லை என்று சொன்னபிறகே நுவரெலியாவுக்குத் திரும்பினார் விக்ரமன்.
அதற்குமேல் அவளைத் தனியாகப் பிடித்து, “என்ன பண்ணிட்டு இருக்க அனு? அன்னைக்கே உன்கிட்ட சொன்னேன், தேவையில்லாத வேலையெல்லாம் பாக்காதன்னு. உனக்குப் புரியுதா இல்லையா? என்னாலயே ஒரு அளவுக்கு மேல அவன்கிட்ட பேச முடியாது. இதுல நீ வேற இன்னுமின்னும் உன் லைஃப சிக்கலாக்கிக்காத!” என்று அவர் சொல்லி முடிக்க முதலே,
“போதும் கொஞ்சம் நிறுத்தறீங்களா? என்னவோ நான் பண்ணக்கூடாததை பண்ணிட்ட மாதிரி என்ன கற்பனை இது? செத்துட்டேன்னு நினச்சேன். கண்ணைத் துறந்து பாத்தப்போ, அப்படி இல்ல உயிரோடதான் இருக்கேன்னு ஒருத்தர் சொன்னப்போ கட்டிப்பிடிச்சு அழணும் போல இருந்தது. அது அந்த நேரத்து எமோஷன். அதுக்குக் கைகால் எல்லாம் வச்சுப் பேசாதீங்க!” என்றாள் அவள் கண்ணீருடன்.
மனதுக்குள் மிகப்பெரிய போராட்டம் வெடித்துக் கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு அவன் ஒரு பக்கம் இவர் ஒரு பக்கம் அவளைச் சாகடிக்கிறார்கள்.
அவரோ மறுத்துத் தலையசைத்தார். அதற்குமேல் எதையும் கேட்கும் மனநிலையற்று, “பிளீஸ் என்ன விட்டுடுங்க! என்னால முடியல.” என்று அவள் அழுதுவிட, பரிதாபமாகிப்போயிற்று அவருக்கும்.
“சரிசரி! அழாத. உன் நல்லதுக்குத்தான் நானும் சொன்னேன். நீ தெளிவா இருந்தாச் சரிதான்.” என்றார் சமாதானமாக.
அவள் தெளிவாகவா இருக்கிறாள்? அதற்குப் பதில் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டாள்.
காட்டேஜ் வந்து சேர்ந்த சற்று நேரத்திலேயே யாரோ ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தான் விமல். “மேம்! இவங்க ஆயுர்வேதா ஸ்பெஷலிஸ்ட். அன்னைக்கு சைக்கிளால விழுந்தது, பிறகு கடல்ல விழுந்தது எல்லாத்துக்கும் ஒருமுறை நல்லா செக் பண்ண வந்திருக்காங்க.” என்றவன், “மேம் வேணாம்னு சொன்னாலும் விடாம கட்டாயம் பாருங்க டாக்டர்.” என்றுவிட்டு, அவளின் முறைப்பையும் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டான்.
அன்று, அத்தனை கேட்டும் வாய் திறக்காதவனின் எந்த உதவியையும் பெற்றுக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.
“டாக்டர், சீரியஸாவே எனக்கு ஒண்ணுமில்ல. பிளீஸ், நீங்க போங்க!” என்றாள் பிடிவாதக் குரலில்.
“நீங்க சொல்லுறதையே ஒருமுறை செக் பண்ணி நான் சொல்லிட்டுப் போறேன். எதுக்குக் குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறீங்க.” என்று கேட்டவர், செய்ய வேண்டியத்தைச் செய்துவிட்டுத்தான் சென்றார்.
அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது. அவனுடைய ஆட்களும் அவனைப்போலத்தான். தாங்கள் நினைத்ததைத்தான் செய்வது, அடுத்தவர்களை மதிப்பதேயில்லை.
அடுத்தநாள், ஜேகேக்கும் ஷியாமுக்கும் மட்டுமே ஷூட்டிங் என்று அவளை ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தார் விக்ரமன். இவர்கள் திருகோணமலை சென்றபோது, விசா விசயமாக ஷியாம் கொழும்பு சென்று அன்று காலையில் தான் திரும்பியிருந்தான்.
அப்படியே ஷூட்டிங் போய்விட்டதால், “ஷூட் முடிஞ்சதும் பாக்க வரேன் சிட்டு” என்று டெக்ஸ்ட் செய்திருந்தான்.
அவளுக்கும் வீட்டில் இருக்க அலுப்புத் தட்ட, ஃபிரீ கிடைக்கையில் ஷியாமுடனாவது எதையாவது அலட்டலாம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றாள்.
அங்கே ஜேகேயைக் கண்டதும், மீண்டும் மனம் அலைபாயத் தொடங்கியது. நேற்று அவ்வளவு நடந்ததே. இன்று எப்படி இருக்கிறாய் என்று ஒரு வார்த்தை கேட்க மாட்டானா? சாதாரண மனிதாபிமானம்… அதைக்கூட அவளிடம் காட்டக்கூடாத அளவுக்கு என்ன கோபம் அவளோடு? பலகீனப்பட்டிருந்த மனது கண்ணீரைச் சொரியவிட முயன்றது.
எல்லோரும் சுற்றியிருக்கிறார்கள் என்று உணர்ந்து ஃபோனைப் பார்ப்பதுபோல முகத்தைக் குனிந்துகொண்டாள்.
‘நேற்று டாக்டரை அனுப்பி இருந்தானே. நன்றி சொல்ல வேண்டுமோ?’ என்று தோன்றினாலும், ஒன்றுமே சொல்லவில்லை அவள். ஒருமுறை சொல்லப்போய்ப்பட்டது போதாதா?
ஆனாலும், வந்தவர் பார்த்துப் பார்த்து வலி இருந்த இடங்களுக்கு எண்ணெய் போட்டு நன்றாகத் தேய்த்துவிட்டது வலியிலிருந்து விடுபட பெரிதும் உதவியது என்பதை விருப்பம் இல்லாதபோதும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டி இருந்தது.
‘ஆனாலும் உனக்கெல்லாம் நன்றி சொல்ல முடியாது போடா!’ என்றுவிட்டு நடந்துகொண்டிருந்த ஷூட்டிங்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
விமல் ஓடிவந்து விசாரித்தான்.
“இப்ப எப்படி இருக்கு மேம்?”
“தெரிஞ்சு?” தன் பகுதியை நடித்துக்கொடுத்துவிட்டு அப்போதுதான் வந்து அமர்ந்தவனிடம் மின்னலாய் பார்வை சென்று மீளக் கேட்டாள் அனன்யா.
“இல்ல மேம். இன்னும் மாறலைனா ஹார்லிக்ஸ் கொண்டு வருவம் என்று நினைச்சேன்.”
‘அவன்ர அடிதடி தானே நீ! அவனைப்போலத்தானே இருப்ப!’
“ஓ..! அப்போ நாங்கல்லாம் ஒரு ஹார்லிக்ஸ் வாங்கக்கூட வழியில்லாம இருக்கோம்னு சொல்லுறீங்களா?”
அங்கே அவனோ ஃபோனுக்கு பதில் டேப்லட்டுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதைக் கண்டதும், ‘ஏதாவது ஒரு கருமாந்திரத்தக் கட்டிக்கொண்டு அழுடா கடப்பாரையை விழுங்கினவனே!’ என்று திட்டிக்கொண்டாள்.
“சே சே! அப்படிலாம் இல்ல மேம். சும்மா வெறும் கையை வீசிட்டு வரமுடியுமா சொல்லுங்க?”
“அப்போ நாலு சிங்கத்தை கூட்டிட்டு வாராது. ரெண்டு புலி… இல்ல கரடினாலும் ஓகே!” என்றாள் நக்கலாக.
“உங்களைப் பாத்ததும் அதெல்லாம் பயந்து ஒட்டிடாதா மேம்?” வார்த்தைகளில் மட்டுமே பணிவு. மற்றும்படி உங்கவீட்டு எங்க வீட்டு குசும்பு அல்ல இவனுக்கு. உலகத்தை மிஞ்சின குசும்பு!
அவள் பார்வையில் நெருப்புப் பறந்தது! “போடா டேய்!” என்றாள் சினமேற.
“மேம்!” அதிர்ந்துபோய் அவன் பார்க்க, “உங்க ரெண்டுபேரையும் பாக்கவே பிடிக்கல எனக்கு. இன்னும் கொஞ்சநேரம் என் கண்ணுமுன்னால நின்ன, அந்தக் கல்லாலேயே உன் மண்டையப் பிளப்பன். ஓடிப்போயிரு!” என்றாள், கடித்த பற்களுக்கிடையில்.
அவன் கண்களில் அதிர்ச்சி. பொத்துக்கொண்டு வந்த கோபத்தோடு விறுவிறு என்று ஜேகேயிடம் வந்து நின்றான். அவள் ஷியாமிடம் சென்றுவிட்டாள்.
“பாஸ் நீங்க கூட டா போட்டதில்லை. அவங்க போடுறாங்க. சொல்லிவைங்க பாஸ், இது சரியில்லைன்னு.” முகத்தை சுருக்கிக்கொண்டு சொன்னான் அவன்.
ஜேகேயின் உதடுகளில் இளநகை அரும்பியது.
“நான் சொன்னா கேப்பாளா அவ? சொன்னதுக்காகவே இன்னும் ஆயிரம் டா போடுவா.” லாப்டாப்பில் இருந்து பார்வையை அகற்றாமலேயே சொன்னான்.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. முறைச்சுக்கொண்டு அவங்க கிட்ட சொல்லுங்க பாஸ்! கேப்பாங்க.” அடம் பிடித்தான் அவன்.
“சொல்ல முடியாது, போடா!” என்றான் அவனும்.
“பாஸ்!” அழுதே விடுவான் போலானான் விமல்.
வாய்விட்டுச் சிரித்தான் ஜேகே.
“என்ன பாஸ் இதெல்லாம்? நான் உங்க பிஏ பிளஸ் கராத்தே பிளாக் பெல்ட்!” முரடன் குழந்தையாக மாறிச் சொல்லிக்கொண்டிருந்தான்.
“அவளே சொல்லிட்டா, நான் எதுக்குடா சொல்லாம இருக்கணும்?”
“இதெல்லாம் ரொம்பத் தப்பு பாஸ்!”
“முடிஞ்சா உன்னோட பிளாக் பெல்ட்ட அவளுக்குக் காட்டு. சும்மா வந்து என்னத் தொந்தரவு செய்யாத!” என்றான் அவன் குறுநகையோடு.
“ம்கூம்! பிறகு என்னை உயிரோட விடுவீங்களா நீங்க?”
வாய்விட்டுச் சிரித்தான் அவன். விழிகள் தானாக அவளிடம் ஓடியது.
“அவளுக்கு என்னப் பிடிக்காதாமா?” பார்வை அவளிடமே இருக்கக் கண்களில் சிரிப்போடு கேட்டான்.
“அப்படித்தான் சொல்லுறாங்க.”
“சொல்லுவா சொல்லுவா. விட்டா அவ இன்னும் சொல்லுவா! நீ போய் இந்த மெயில் எல்லாத்தையும் அப்பாவுக்கு ஒன்னு அவுஸ்திரேலியாக்கு ஒன்னுன்னு அனுப்பிவிடு. டைம் கிடைச்சா ஒருவாட்டி இந்தியா போய்வரணும். விக்ரமன் சேர்கிட்ட அதைப் பத்தியும் கேட்டுக்கோ! போடா!” என்றான் ஜேகே.
“வரவர டா கூடிட்டே போகுது பாஸ்!” அவனுக்கு அவனுடைய மரியாதை முக்கியமாகப் பட்டது!
“அதுக்கு இப்ப என்னடா?” அதட்டினான் ஜேகே.
“குறைங்க பாஸ்!” சிறுவனைப்போல் சிணுங்கினான் விமல்.
அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“போடா டேய்!”
“அவங்கள மாதிரியே சொல்லுறீங்க பாஸ்!” வியப்புடன் அவன் சொல்ல, சிரிப்பில் மலர்ந்த உதட்டை கடித்துக்கொண்டான் ஜேகே.
அவளின் அத்தனை மேனரிஸமும் அவனுக்கு அத்துப்படியாயிற்றே!
காட்சி இருபத்திஐந்து
அந்த வார இறுதியில் அந்த வீட்டிலிருந்த ஒற்றைத் தொலைகாட்சி வழியே மக்களின் பிரதிநிதி அவர்களைச் சந்தித்தார். அவர் வரும் வார இறுதிகளில் மட்டுமே அது இயங்கும்.
“எப்படி இருக்கு இந்தப் புது வாழ்க்கை?” என்று கேள்வி எழுப்பியவர், “நான் குழந்தையா இருந்த காலத்துல டீவி எல்லாம் எங்க வீட்டுல கிடையாது. எல்லாரும் நாடகம் போடுவாங்க, நாங்க எல்லாம் குந்தி இருந்து பாப்போம். அப்போல்லாம் போன் இல்ல, இப்ப இருக்கிற எந்த நவீன வசதியும் இல்ல. ஆனாலும் விடியறதை விட வேகமா பொழுது போய் இரவு வந்திடும். அவ்ளோ சந்தோசமாத்தான் வாழ்க்கை போனது. அதே மாதிரி ஒரு வாழ்க்கை, உங்க வேலைகளை நீங்களே செய்துட்டு மனத்தை ஒருமுகப்படுத்தி, அறிமுகமே இல்லாத புது மனுசங்க கூட ஒரு இடத்துல இருக்கிறது சாதாரண காரியமில்லை. எப்படி இருக்கு இந்த வாழ்க்கை? உங்க அனுபவங்களை நீங்க சொல்லுங்க..” என்றவர், அங்கிருந்தவர்களில் பார்வையை ஓடவிட்டு, “பிருந்தா நீங்க சொல்லுங்க!” என்றார்.
“வணக்கம் சேர்!” என்றபடி அவள் எழுந்துகொண்டதுமே மக்களின், “பிருந்தா பிருந்தா பிருந்தா!” என்கிற ஆரவாரக் கூச்சல் காதைப் பிளந்தது.
“கேக்குதா சத்தம்?” கண்ணில் சிரிப்புடன் காதருகில் கையைப் பிடித்துக் காட்டிக் கேட்டார் மனிதர்!
“கேக்குது சேர்! தமிழ் நாட்டு மக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!” அவள் முகத்திலும் மலர்ந்த சிரிப்புப் பூத்திருந்தது.
“இங்க வரும்போது நிறையப் பயம் இருந்தது. இந்த வீடு, இந்த ஷோ, இங்க என்னோட வரப்போற ஆட்கள் எண்டு எல்லாமே புதிது எனக்கு. என்னால முடியுமா எண்டு யோசனை வேற. பிழையான முடிவு எடுத்திட்டேனோ எண்டு ஆரம்பத்தில நிறைய யோசிச்சு இருக்கிறன். அதைவிட, என்னைத் தமிழ் நாட்டு மக்கள் தங்களில் ஒருத்தியா ஏற்றுக்கொள்ளுவாங்களா எண்டுற பயம் நிறைய இருந்தது. ஆனா, என்னை ஏற்றுக்கொண்டதும் இல்லாம அவங்க தார ஆதரவுக்கு மிக்க மிக்க நன்றி!” என்று சொன்னவள்,
“ஆரம்பம் சிறை மாதிரித்தான் இருந்தது இந்த வீடு. இப்ப எல்லாரும் பிரெண்ட்ஸ் ஆகிட்டோம். எங்களுக்கு தரப்படுற டாஸ்க் எல்லாமே எங்களை இன்னுமே ஜாலியா வச்சிருக்கு. சோ… அந்தக்காலம் மாதிரி நாங்களும் வாழப்பழகிட்டோம் சேர்!” என்றாள் பிருந்தா உற்சாகமாக.
அவளின் ஒவ்வொரு அசைவுகளிலும் அத்தனை அழகு. இயற்கை கொட்டிக்கொடுத்த கொள்ளை அழகி அவள்.
“ஓ! எல்லாரும் பிரெண்ட்ஸ் ஆகிட்டாங்களாம்!” கள்ளச் சிரிப்புடன் மக்களிடம் போட்டுக்கொடுத்தார் அந்தக் குறும்புக்கார மனிதர்.
“அஜய்! அஜய்! அஜய்!” உரத்த குரல் மக்களிடமிருந்து சத்தமாக வந்தது.
“அஜயும் உங்களுக்கு நண்பன் தானா இல்ல அதுக்கும் மேலயா?” என்று அவர் கேட்டதும் வெளியே மட்டுமல்ல உள்ளேயும் கரகோஷம் பெரிதாக எழுந்தது.
“நண்பன் தான் சேர்!” என்றாள், முகம் முழுக்கச் சிரிப்புடன் அவளை பார்த்துக்கொண்டிருந்தவனைத் தானும் பார்த்தபடி.

