சதிராடும் சித்திரமே 13 – 2

அப்போது திடீரென்று தன்னையும் இப்படிப் பார்த்துத் தேர்ந்தெடுப்பார்களோ எனத் தோன்றியது. ஏனோ அந்த எண்ணமே பிடிக்கவில்லை.அது எப்படிப் புகைப்படத்தில் மட்டுமே பார்த்து ஒருவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்க முடியும் ஆனால் அது அல்லவா இங்கு வழக்கமாக இருக்கிறது.

 

அவளுக்குப் பெரிதாக எந்த எதிர்பார்ப்புமில்லை. தன் மேல் அன்பும் அக்கறையும் செலுத்துவதோடு தன் தந்தை மற்றும் தம்பியைத் தங்களுக்குள் ஒருவராக எண்ணினால் மட்டுமே போதும்.

 

‘அப்படிப்பட்ட அவளுக்கான மகராஜன் எங்கே இருக்கிறானோ?’ பெருமூச்சொன்று எழுந்தது அவளுக்கு.

 

“எதுக்கு இவ்வளவு பெரிய பெருமூச்சு? எல்லாப் பொண்ணுங்களையும் பார்த்தியா? எந்தப் பொண்ணு நல்லா இருக்கா? எனக்கு எந்தப் பெண் செட் ஆகும்?” என்ற குரலில் திடுக்கிட்டு அறையின் வாயிலை நோக்கினாள்.

 

அறையின் வாயிலில் கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் மித்ரனைச் சத்தியமாக அங்கே அவள் எதிர்பார்க்கவில்லை. “நீங்க இங்க எதுக்கு வந்தீங்க?” என படபடப்புடன் கேட்ட பின்னரே அவளின் கேள்வி அசட்டுத்தனமாகப் பட்டது.

 

பின்னே இங்கே படுக்கையறை வரையில் வருகிறான் என்றால் கண்டிப்பாக உரிமையுள்ளவனாக இருப்பான். பட்டென்று அவள் மண்டைக்குள் பளீரென்று பல்பு ஒன்று பிரகாசமாய் எரிந்தது. வத்சனுக்கு இவனைத் தெரியுமல்லவா? இருவரும் சொந்தக்காரர்களோ?

 

‘அப்படியென்றால் இது இவன் வீடா?’ என அதிர்ந்து போனாள். வத்சன், மித்ரன், பணக்காரன், மித்து என்ற புனைப்பெயரில் மீனாட்சி வரைவது என அனைத்தும் சூறாவளியாய்ச் சுழன்று, உண்மையைச் சொல்லி அவளைப் பளார் பளாரென்று அறைந்து சென்றது.

 

“நல்லா இருக்கு நீ கேட்கிறது. என் பெட்ரூம்குள்ள நின்னுட்டு என்னையே கேள்வி கேட்கறியா?” எனச் சிரித்தான் மித்ரன்.

 

இதுவரையில் அவன் சிரித்து அவள் பார்த்ததில்லை. சிரிக்கையில் மனம் கொள்ளை கொள்ளும் அளவுக்கு அழகாகத் தெரிந்தான். இவன் இப்படியே சிரித்துக் கொண்டிருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். அதைவிட்டுவிட்டு அது என்ன இஞ்சி தின்ன மங்கி போல் எந்நேரமும் உர்ரென்று இருக்கிறான்?

 

சிரித்தால் அவன் சொத்துகள் கரைந்து போய்விடுமா என்ன? சரியான கஞ்சாம்பட்டியாக இருப்பான் போல.

மனம் அதன்பாட்டில் வேலை செய்ய, இதயம் டமாரம் அடிக்க, மூளையோ, ‘கொல்லுவேன்’ என்று எச்சரித்தது.

 

‘நீ எதற்காக வந்திருக்கிறாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்? விட்டால் அவன் சிரிப்பை வசூலுக்கு அனுப்பி வட்டிக் கடையை வைத்து விடுவாய்ப் போல. எதற்காக அவன் சிரிப்பில் மயங்கி போய் நிற்கிறாய்? ஈர்ப்பு கொண்டு ஏமாந்து போகாதே’ என்று கடுமையாகச் சொன்னது.

 

ஒரு சில விநாடிகளில் ஓராரயிரம் முகபாவனைகளை வாரியிறைத்த அவளின் முகத்தை இரசித்த மித்ரன் முற்றிலும் கிறங்கிப் போனான். பார்க்கப் பார்க்க இன்னும் இன்னும் வேண்டும் என்ற பேராவல் அவனுள் கிளர்ந்தது. அவளை அப்படியே அருகில் வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் தோன்றியது.

 

“வீட்டில பார்த்த பொண்ணுங்களை நான் பார்க்கவேயில்லை. ஏற்கனவே நான் வேறு ஒரு பெண்ணைப் பார்த்துட்டேன்” என்ற குரலில் விழிகள் படபடக்க அவனை ஏறிட்டு நோக்கினாள்.

 

‘அதை ஏன்டா என்னிடம் சொல்கிறாய்?’ என மனம் முணுமுணுத்துக் கொண்டாலும், “சாரி சார்.. இது உங்க ரூம்னு தெரியலை. ஆன்ட்டியோட ஓவியங்கள் எல்லாம் எடுக்க வந்தேன். ஃபோட்டோவைப் பார்க்கணும்னு பார்க்கலை. அழகா மாடல் மாதிரி இருந்தாங்கன்னு பார்த்தேன்” என விளக்கம் தந்துவிட்டு அங்கிருந்து வெளியேற முயன்றாள்.

 

தன் அன்னைக்காக வத்சன் தேர்ந்தெடுத்த உதவியாளர் இவளென்று புரிந்து கொண்டான் மித்ரன்.

 

அவன் வீட்டுக்குள் வரும்பொழுதே அவன் அன்னை சைகையில் அன்று வேலைக்கு வர வேண்டிய பெண் வந்து விட்டாள் என்று சொல்லவும் அவர் முகத்திலிருந்த மலர்ச்சியை வைத்தே அவருக்கு அப்பெண்ணை மிகவும் பிடித்து போனது என்று புரிந்தது.

 

ஒரு முக்கியமான இடப் பத்திரத்தை எடுக்கவே அந்நேரம் வீட்டுக்கு வந்திருந்தான் மித்ரன். அதை அவன் தன் அன்னையிடம் சொல்லிவிட்டு தன் அறைக்குள் செல்ல எத்தனிக்க, அங்கே யாரோ ஒருவரின் அரவம் கேட்டது. உடனே துணுக்குற்றான்.

 

தன் அனுமதி இல்லாமல் யார் அவனது அறைக்குள் நுழைந்தது எனத் திட்ட வாயைத் திறந்தவனுக்கு வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டன.

 

கனவு காண்கிறோமோ எனச் சில நிமிடங்கள் அப்படியே தன்னறைக்குள் குனிந்து நின்றிருந்தவளை உற்றுப் பார்த்தான். மேஜையின் மீதிருந்த எதையோ மும்முரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படி உரிமையுடன் தன் அறைக்குள் நுழைய இவள் ஒருத்திக்கு மட்டுமே அனுமதி உண்டு என மித்ரனின் மனம் உரிமையுடன் நினைத்துக் கொண்டது.

 

சத்தியமாய் இப்படி ஒரு திருப்பத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. மனம் இறக்கையில்லாமல் அப்படியே ஜிவ்வென்று மேலேறி வானம் நோக்கி எழும்பியது. அப்படியென்றால் இவளைத் தினமும் தன் வீட்டில் வைத்துப் பார்க்கலாம் என அவன் மனம் தித்திப்பில் திளைத்தது.

 

அப்படியே அவளிடம் பேச்சையும் வளர்த்தான்.

 

குகையின் வாயிலை அடைத்துக் கொண்ட கல்லைப் போல் மித்ரன் அறையின் வாயிலை அடைத்துக் கொண்டு நின்றிருக்க, அவனைத் தாண்டி எப்படிச் செல்வது என்பதைப் போல் விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள் திவ்யதர்ஷினி.

 

“என்னை ஏன் சார்னு கூப்பிடற? மித்ரன்னு சொல்லு” எனச் சின்ன அதட்டலுடன் சொல்ல, “அது… சரிங்க மித்ரன் சார்” என்றாள்.

 

“மறுபடியுமா? நான் என்ன சொன்னாலும் கேட்கக் கூடாதுன்னு இருக்கியா? நீ ஒன்னும் எனக்குக் கீழே வேலை செய்யலை” என்றதும், “எப்படியும் உங்க அம்மாவுக்கு உதவியாளரா வேலைக்கு இருக்கேன்” என்று நியாயம் பேசினாள்.

 

‘நீ என்னவோ பேசிக் கொள். நான் அதைக் கவனிக்கவில்லை’ என்பதைப் போல் பேச்சை மாற்றினான்.

 

“ஆமா, கேட்கணும்னு இருந்தேன். உன் தம்பிக்கு ஸ்பான்சர் கிடைச்சதா? இல்லைன்னா, என் நிறுவனம்…” என முடிக்கும் முன்னரே,

 

“கிடைச்சிடுச்சு. ரொம்ப நன்றிங்க சார்” என இடையிட்டுப் பட்டும் படாமல் பேசினாள்.

 

முதலில் இவன் வீட்டில் வேலைக்கு வந்திருக்கிறாள் எனத் தெரிந்தால் அவள் தம்பியும், சந்தோஷூம் போர்க்கொடியை உயர்த்துவார்கள். பேசாமல் வேலையைவிட்டு நின்றுவிடலாமா என்று யோசித்தாள்.

 

ஆனால் முடியாதே. ஆறு மாதங்களாவது வேலை செய்கிறேன் என நேற்று அழகாகக் கையொப்பமிட்டாளே. அதுவுமில்லாமல் மீனாட்சியின் எதிர்பார்ப்புகளை நசுக்கிவிட்டுப் போகவும் மனம் முன்வரவில்லை.

 

அமைதியாக அவன் முன் நிற்கும் அவளை ஆராய்ச்சிப் பார்வையுடன் பார்த்திருந்தான் மித்ரன்.

 

‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என அவள் அன்று மருத்துவமனையில் சொன்னது செவிகளில் ஒலித்தது. அவனைத் துஷ்டனாக எண்ணி தூர விலக்கி நிறுத்துகிறாளே என அவன் மனம் துவண்டது.

 

அவனுக்குத் தன்னிடம் மல்லுக்கு நிற்கும் திவ்யதர்ஷினியைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. சண்டைக் கோழியாய்ச் சிலிர்த்துக் கொண்டு நிற்பவளை ஆழியில் சிக்கிய மனம் ஆர்ப்பரித்துத் தேடியது.

 

அவளின் இந்த ஒதுக்கத்துக்கானா பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்தவன் அவனே. அவளை மாற்ற வேண்டும். அதுவும் அவன் செய்கையால். எப்படியும் ஆறு மாதங்கள் இங்கேயே தன் வீட்டிலேயே இருப்பாள். அவளை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கை விதை அவன் மனதில் விழுந்தது.

 

“கொஞ்சம் தள்ளறீங்களா? ஆன்ட்டி வரைஞ்சு வச்சதை எடுக்கணும்” என அவனுக்கு மீண்டும் நினைவூட்டினாள். பின்னே பிடித்து வைத்தப் பிள்ளையாரைப் போல் அப்படியே நின்றால் அவள் எப்படி அங்கிருந்து போவது?

 

“தேங்க்ஸ் திவி…யா. அம்மாவோட முகத்துல ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத் தான் சந்தோசத்தைப் பார்க்கிறேன். அவங்களுக்கு உதவியா இருக்கறதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” என மனமார நன்றி தெரிவித்தான் மித்ரன்.

 

அவளை ‘திவி’ என்று அழைத்தானா, அல்லது, திவ்யா என்றானா என பெண்ணின் மனம் அதிலேயே சிக்கிக் கொண்டு தவித்தது.

 

“என் மேலே இருக்கிற கோபத்துல உடனே இந்த வேலையை விட்டுட்டுப் போயிடாத. அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க” என அவள் மனதைப் படித்தவன் போல் சொல்ல, அவன் குரலிலிருந்தே தன் அன்னையின் மேல் வைத்திருக்கும் பாசம் புரிந்தது.

 

“என் வேலையையும் சொந்த விருப்பு வெறுப்புகளையும் போட்டுக் குழப்பிக்க மாட்டேன்” என ஒரு வேகத்தில் அவள் சொல்ல, “அப்போ என் மேலே இன்னும் வெறுப்பு மாறலை இல்லை?” என இறங்கிப் போன குரலில் வினவினான்.

 

“சார், நடந்ததை எல்லாம் மறந்துட்டேன். இப்போ நேரமாச்சு. கீழே ஆன்ட்டி தேடுவாங்க” என அவள் சொல்லவும், அதற்கு மேல் அவளை அங்கேயே இழுத்துப் பிடித்து நிறுத்தி வைக்க விழையவில்லை மித்ரன்.

 

ஒரேநாளில் அவன் மேலிருக்கும் அவளது அபிப்ராயத்தை அவள் மாற்றிக் கொள்ளப் போவதில்லை. அவளைத் தினமும் பார்க்கப் போகிறோமே . அவனது மற்ற பக்கத்தையும் காட்டி அவளை மாற்றிவிடலாம்.

 

அதுமட்டுமல்லாது அருகில் நிற்பவளின் வாசம் சுவாசம் தீண்டி அவனை மோசக்காரனாக்கத் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது. லட்சம் கோடி உயிரணுக்கள் மொத்தமும் அவள் அருகாமையை மட்டுமல்ல அவளது தீண்டலையும் தூண்டில் போட்டு இழுக்கப் பார்க்கின்றன. ஏற்கனவே அவன் சொதப்பி வைத்தது போதும் என்றே வழிவிட்டு விலகி நின்றான்.

 

அவளைத் தினமும் பார்க்கப் போகிறோம் என்ற பூரிப்பில் எதிர் அறைக்குள் நுழைபவளையே விழியகலாது பார்த்தான் மித்ரன். அவனையுமறியாமல் உதடுகள் லேசாக வளைந்து குறுஞ்சிரிப்பை உதிர்த்தன.

 

அவள் வாசத்திலும், அவள் சுவாசத்திலும் வாசம் செய்யத் துடித்தான். முற்றிலும் அவன் முகவரியை அவளிடம் பறிகொடுத்தான் மித்ரன். அவனுக்கே அது விந்தையிலும் விந்தையாக இருந்தது.

 

திவ்யதர்ஷினிக்கு அதன்பிறகு அன்று முழுவதும் படபடப்பாக இருந்தது. முதல் வேலையாக பணியிலிருந்து வீடு சேர்ந்ததும் சந்தோஷை அழைத்து துஷ்டனின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்ததைப் பற்றிச் சொன்னாள்.

 

அவனோ உடனே தைய தக்க என்று குதிக்க ஆரம்பித்துவிட்டான். உடனே வேலையை விடுமாறு சொல்லவும்,

 

“சந்தோஷ், உடனே நிற்க முடியாது. நேத்து தான் காண்ட்ராக்ட் ஸைன் பண்ணினேன். சாணக்கிய தந்திரம் தெரியுமில்லை. எதிரியைச் சமாளிக்க, எதிரியைப் பத்தி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும். இது அப்படிப்பட்ட வாய்ப்பா நினைச்சு ஜாக்கிரதையா இருந்துக்கிறேன்” என்றாள்.

 

அதைக் கேட்டதும் கலகலவென்று சிரித்த சந்தோஷ், “செம புத்திசாலி போ…” என மெச்சுதலாய்ச் சொன்னாலும் “பத்திரமா இரு. எதுன்னாலும் கூப்பிடு” என அக்கறையுடன் சொல்லிவிட்டு அழைப்பை வைத்தான்.

 

அவள் மட்டும் இப்படிப் பேசியது மித்ரனுக்குத் தெரிந்தால் அவன் நெஞ்சம் சில்லு சில்லாக நொறுங்கிப் போயிருக்கும்.

error: Alert: Content selection is disabled!!