அத்தியாயம் – 14
மித்ரன் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அருங்காட்சியகம் போல் மிகவும் அமைதியாகவே இருக்கும். அவன் அன்னை தொலைக்காட்சி கூட பார்க்க மாட்டார்.
மதியம் சில சமயங்களில் உணவு அருந்த வீட்டுக்கு வருவான். அப்போது மட்டும் வத்சனின் வளவளவென்ற பேச்சு அவன் காதுகளில் விழுந்து அவனது எரிச்சலைக் கிளறும். பின்னே அவன் ஒன்றும் தன்னிடம் உண்மையாக வந்து பழகவில்லையே. ஒற்றன் போலல்லவா வந்து பழகியிருக்கிறான். அதனால் அவனை எக்காலத்திலும் உடன் சேர்த்துக் கொள்ளவே கூடாது.
கடந்த ஒருவாரமாக அவன் மதியம் வீட்டுக்கு வந்தால் கலகலவென்ற பேச்சுச் சத்தம் அவன் செவிகளை நிறைக்கிறது. அதுவும் கலீரென்று சில்லறையைச் சிதறவிட்டதைப் போல் திவ்யதர்ஷினியின் சிரிப்புச் சத்தம் மனக்குகையின் இருட்டைப் போக்கும் வல்லமை கொண்டது.
மனம் இனிமையாய் உணரும். அப்படியே வீட்டினுள் நுழைந்தால் அவனைப் பார்த்த நொடியில் சிக்கனலில் சிக்கிக் கொண்ட வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்பதைப் போல் அப்படியே முடங்கி நின்றுவிடும்.
அவன் அடிக்கடி உணவுவேளையில் வீட்டுக்கு வருவதைப் பார்த்து ஒவ்வொருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். மீனாட்சிக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. இத்தனை நாட்களும் இத்தருணத்துக்காக அல்லவா ஏங்கிக் கொண்டிருந்தார்.
சிறுவயதிலிருந்தே வத்சனை அவர் வளர்த்ததால் அவன் எப்பொழுதுமே அவர் மேல் பாசத்தை பொழிந்து வருவான். அதுவும் அவன் படித்து முடித்துச் சென்னைக்குத் திரும்பி வந்து இங்கேயே வேலை செய்தபொழுதும் சரி இப்பொழுதும் புதிதாக ‘ஷோரூமை’ திறந்த பின்னரும் சரி மதிய உணவுவேளையில் சாப்பிடவில்லையென்றாலும் இங்கே வந்து மீனாட்சியுடன் சற்று நேரம் செலவழித்துவிட்டுச் செல்வான்.
தன் மகனும் அப்படி அவருடன் வந்து நேரத்தைச் செலவழிக்க மாட்டானா என வெகு நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தார் மீனாட்சி. அது இப்போது நிறைவேறவும் அவருக்கு மிகவும் நிறைவாக இருந்தது.
வத்சனோ அவனைக் கிண்டல் செய்யும் மனநிலையில் இருந்தான். “என்னடா அடிக்கடி மித்ரனின் சூறக் காத்து இந்தப் பக்கம் வீசுது? என்ன பொறாமையா?” என அவனை வம்புக்கிழுத்தான்.
வத்சன் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தான். தன் அன்னையுடன் அவன் நெருக்கமாகப் பழகுவதும் மீனாட்சியும் அவன் மேல் அன்பைப் பொழிவதும் மித்ரனுக்குக் காணச் சகிக்கவில்லை போல. ஆகவே இருக்கும் வேலையெல்லாம் விட்டுவிட்டு அடிக்கடி உணவருந்த வீட்டுக்கு வந்துவிடுகிறான் என எண்ணினான்.
“சூரியனைப் பார்த்து நாய் வேணா குரைக்கும். நாயைப் பார்த்துச் சூரியன் குரைக்காது” என மித்ரன் சொல்லவும், “டேய் நீ சுட்டெரிக்கிற சூரியன். அதைக் கண்டிப்பா ஒத்துக்கறேன். அதுக்காக என்னை ஏன்டா நாய்னு சொல்ற?” என வத்சன் சிலிர்த்தெழுந்தான்.
வத்சன் பேசுவதைக் கேட்ட திவ்யதர்ஷினி அவளின் பிரத்தியேகச் சிரிப்பை உதிர்க்க, “உனக்கும் என்னைப் பார்த்துக் கிண்டலா இருக்குதா?” என அவளை முறைத்தான்.
மித்ரனுக்குத் தன் தாய் அவனிடம் மட்டும் பாசத்துடன் பழக வேண்டும் என்ற ஏக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் சிறுபிள்ளையெனப் போட்டி போடும் அளவுக்கு அவன் ஒன்றும் குழந்தையல்ல. தன் அன்னை அவன் மேல் வைத்திருக்கும் பாசமும் அன்பும் அவனுக்கு நன்றாகவே தெரியும். அதை மறுப்பதற்கில்லை.
அவன் பயமே வேறு. மதியவேளையில் அங்கே வருவதற்கான முழுக் காரணமும் திவ்யதர்ஷினியையே சாரும். எப்படியாவது தன்னைப் பற்றிய அவளது அபிப்பிராயத்தை மாற்றி அவனிடம் இணக்கமாகப் பேச வைக்க வேண்டும் என்றே அடிக்கடி அவள் கண்களில் பட்டுக் கொண்டிருந்தான் மித்ரன்.
அதுவே இமயமலை ஏறும் செயல் என்றால் இந்த வத்சன் அடிக்கடி வந்து திவ்யதர்ஷினியுடன் நெருக்கமாகப் பழகுவது இமயமலை ஏறுகையில் வரும் பனிப்புயலைப் போல் அவன் மனதைச் சூழ்ந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தது.
அவனுக்கு அன்னையின் பாசம் மேல் எவ்வித சந்தேகமுமில்லை. அது மாறவும் மாறாது. ஆனால் திவ்யதர்ஷினி அப்படி அல்லவே. அவன் மேல் ஆரம்பத்தில் இருந்தே கோபத்தையும் வெறுப்பையும் அல்லவா பொழிந்து கொண்டிருக்கிறாள்.
வத்சன் அவளிடம் கலகலப்பாகப் பழகினால் எங்கே அவள் மனம் அவன் பக்கம் சாய்ந்துவிடுமோ என்று அவனுக்கு உள்ளூர உதறலாகவே இருந்தது. ஆகையினால் அத்தனை வேலைக்கிடையிலும் அரைமணி நேரமாவது வீட்டுக்கு வந்து போக அவன் மறப்பதில்லை.
அன்றும் அப்படித்தான். திவ்யதர்ஷினி தோட்டத்தில் நின்று செடிகளுக்குத் தண்ணீர்ப் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். அன்று தோட்டக்காரர் வரவில்லை என்று மீனாட்சி தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றச் சென்றார்.
திவ்யதர்ஷினி அவளே செய்கிறேன் எனச் சொல்லி அவரைச் சற்றுநேரம் ஓய்வாக அமருமாறு அன்புக் கட்டளையிட்டுவிட்டுத் தோட்டத்தின் பின்பக்கம் சென்றாள்.
அந்தச் சமயத்தில் வத்சனும் அங்கே வந்து சேர்ந்தான். திவ்யதர்ஷினி தோட்டத்து பின்பக்கம் செல்லவும், அவளைப் பின்தொடர்ந்து அவனும் அங்கே சென்றான். அவளிடம் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்க வேண்டும் என்று சொன்னான்.
அதாவது அவனது நண்பன் ஒருவன் தன் காதலியைச் சந்தேகப்பட்டு சற்று தடித்த வார்த்தைகளை விட்டுவிட்டானாம். உடனே அவன் செய்த தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பும் வேண்டிவிட்டான்.
ஆனால் அந்தப் பெண் சரியான ரோஷக்காரியாக இருப்பாள் போல். மசிவதாக இல்லை. ஆகவே என்ன செய்யலாம் என அவளிடம் ஆலோசனை கேட்க வந்தான் வத்சன்.
திவ்யதர்ஷினியோ அதைக் கேட்டதும் வெகுண்டாள். “அது எப்படி உண்மையா நேசிக்கிறவாங்களைச் சந்தேகிக்க முடியும்? அப்போ அது என்ன உண்மையான லவ்?” எனப் படபடவென பொரிந்தாள்.
“தர்ஷ்… அவன் ஏதோ தெரியாமப் பண்ணிட்டான். எல்லோரும் ஒன்னும் பெர்பெக்ட் கிடையாது. ஏதாவது ஐடியா கொடுன்னு கேட்க வந்தா நீயும் இப்படித் திட்டிட்டு இருக்க. முதல்ல தப்பு பண்ணினது நானில்லை. என் ஃப்ரெண்ட்” என வத்சன் சொல்ல,
“எல்லோரும் பெர்பெக்ட் கிடையாது வத்சன். இல்லைன்னு சொல்லலை. அப்படி உங்க ஃப்ரெண்ட் நினைச்சிருந்தா இத்தனை தூரம் வந்திருக்கவே வேண்டாம். என்ன ஏதுன்னு விசாரிக்கக்கூட முடியாதா?
இதெல்லாம் ஒரு பெண் மனசு சம்மந்தப்பட்ட விஷயம். அதனால் கோபம் குறையற வரைக்கும் மன்னிப்புக் கேட்டுட்டே இருக்கச் சொல்லுங்க. இது ‘கிப்ட்’ வாங்கி கொடுத்தா எல்லாம் மாறாது. நம்பிக்கை சம்மந்தப்பட்டது. திரும்பவும் நம்பிக்கை வர்ற மாதிரி நடந்துக்கச் சொல்லுங்க. அதுவரைக்கும் பொறுமையாக் காத்திருக்கணும்” என்றாள்.
“இந்தப் பொண்ணுங்க மனசு கல்லுன்னு சொல்லறது சரியாத் தான் இருக்கு” எனச் சலித்துக் கொண்ட வத்சன், “ஆனாலும் தர்ஷ் உன் மனசு சரியான பாறாங்கல். இந்தப் பாறாங்கல்லை நகர்த்திக் கூட்டிட்டுப் போற ‘புல் டோசர்’ யாரோ, எங்கிருக்கானோ?” என வத்சன் அவளைக் கிண்டலடித்தான்.
“என்னைப் பாறாங்கல்லுன்னு சொல்லறதே தப்பு. இதுல எனக்கு வரப் போற பெட்டர் ஹாஃபை ‘புல்டோசர்’னு வேற சொல்லறீங்களா? இப்படியே கிண்டல் பண்ணிட்டு இருந்தீங்க இந்தத் தண்ணியை உங்க மேல அடிக்கப் போறேன்” எனச் சொன்னவள், அத்தோடு விடவில்லை.

