தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த குழாயை அவன் பக்கம் திருப்பி அவன் மேல் தண்ணீரைப் பாய்ச்சினாள். அவன் விலகிவிடுவான் என்ற நம்பிக்கையில் அவள் அப்படித் திருப்ப, அவனும் அதை ஊகித்து விலகிவிட்டான். அந்தோ பரிதாபம்!
அவர்கள் இருவருமே எதிர்பாராதது அந்த இடத்தில் நடந்தது. மித்ரன் வந்து அந்தத் தண்ணீர்த் தூறலில் சிக்கிக் கொண்டான். எப்போதும் போல் அன்று வீட்டுக்கு வந்த மித்ரனுக்கு வீடு அமைதியாக இருப்பதைப் பார்த்ததும் அறவே பிடிக்கவில்லை.
அவனை வரவேற்கும் தன்னவளின் மத்தாப்புச் சிரிப்பைக் காணவில்லை. அவள் இருந்த சுவடே இல்லை. தொணதொணவென்று பேசிக் கொண்டிருக்கும் அந்த ரம்பம் வத்சனையும் காணவில்லை. வத்சன் வந்திருக்கிறான் என்று அவன் காரைப் பார்த்துத் தெரிந்து கொண்டான். ஆனால் திவ்யதர்ஷினி எங்கே?
மனம் ஏமாற்றத்தில் படபடக்க, திவ்யதர்ஷினி வேலைக்கு வரவில்லையா என மேலோட்டமாக அன்னையிடம் விசாரித்தான். வத்சனும் திவ்யதர்ஷினியும் தோட்டத்தில் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனச் சொல்லவும் மித்ரனுக்கு நெஞ்சம் தகதகவென்று பற்றிக் கொண்டு எரிந்தது.
எப்போது பார்த்தாலும் அது என்ன இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல் ஒன்றாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என வத்சன் மேல் பொறாமை தோன்றியது. அப்பொழுது கூட அவனை அவளுக்குச் சகோதரனாக்கிப் பார்த்தான் மித்ரன்.
மறந்தும் அவளை ஜோடியாக்கவில்லை. அது அவனுக்குப் பிடிக்கவுமில்லை. மீனாட்சி அவர்களை அழைத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி நகரவும்,
“நீங்க ஏன் அலையறீங்க. இங்கேயே இருங்க. நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்” என மிடுக்குடன் மித்ரன் சொல்லிவிட்டு பின்பக்கத் தோட்டம் நோக்கி நடந்து வந்தான்.
அப்போது தான் கலீரென்ற திவ்யதர்ஷினியின் சிரிப்புச் சத்தத்தைத் தொடர்ந்து அவன் மேல் மழைச்சாரலாய் தண்ணீர் வந்து விழுந்தது.
அந்தத் தண்ணீரை வேறு யாராவது அவன் மேல் தெளித்திருந்தால் இந்நேரம் அங்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகி, பெரும் சூறாவளியை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் அவன் மேல் அதைப் பாய்ச்சியது திவ்யதர்ஷினி அல்லவா?
அவன் மேல் தண்ணீர்த் துளிகள் பனிச்சாரலாய் இறங்கியது. அதுவரையில் மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த மனப்புழுக்கம் முற்றிலும் கீழிறங்கும் தண்ணீரில் அப்படியே கரைந்து ஒழுகியது.
அவன் ஏதோ மயக்கத்தில் அப்படியே நின்றுகொண்டிருக்க, மித்ரனின் சட்டையை நனைத்த திவ்யதர்ஷினிக்கோ பதற்றம் தொற்றிக் கொண்டது. உடனே தண்ணீர்க் குழாயைக் கீழே போட்டுவிட்டுத் தண்ணீரை நிறுத்தியவள், “சாரி சார். நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கல” எனத் திக்கித் திணறி மன்னிப்பை வேண்டினாள்.
அதைப் பார்த்த வத்சன், “ஹா ஹா ஹா” எனச் சிரித்துவிட்டு, “சூரியனையே ப்யூஸ் போக வச்சிட்டியே தர்ஷ். உனக்கு செம டேலெண்ட்” எனக் கேலி செய்தான்.
‘வாயை வச்சுட்டுக் கொஞ்ச நேரம் சும்மா இரேன்டா’ என்பதைப் போல் வத்சனை முறைத்து பார்த்தாள் திவ்யதர்ஷினி.
அங்கேயே நின்று கொண்டிருந்தால் மித்ரன் ஏதாவது சொல்லிவிடுவானோ என, “ஒரு நிமிஷம் இருங்க” என வீட்டுக்குள் ஓடிச் சென்று துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு மீண்டும் ஓடி வந்தாள்.
“தர்ஷ், அவனுக்கு துண்டெல்லாம் பத்தாது. நீ மேலே அடிச்ச தண்ணிக்குப் பெரிய பெட்ஷீட் வேணும்” என வத்சன் தொடர்ந்து கலாய்க்க, ‘டேய், மேல தண்ணி விழுந்தவனே சும்மா இருந்தாலும் நீ உசுப்பி விட்டுகிட்டே இருக்கியே’ என மீண்டும் அவனைப் பார்த்து முறைத்தாள்.
“ஏன், அயன் பாக்ஸ் எடுத்துட்டு வந்து அப்படியே சட்டையோட அயர்ன் பண்ணிவிட்டுடலாமே?” என வத்சனைப் பார்த்து மித்ரன் கடுப்புடன் கேட்க, திவ்யதர்ஷினி பக்கென்று சிரித்துவிட்டாள்.
அவளின் சிரிப்பு சத்தத்தில் மித்ரனால் அதற்குமேல் பொய்யான கோபத்தைக் கூட இழுத்துப் பிடிக்க முடியவில்லை.
“அதுவும் சரி. நீ சூரியனாச்சே. எந்தச் சூடும் எதுவும் பண்ணாது. இதோ போய் எடுத்துட்டு வரேன்.” அவன் சொன்னதை வைத்தே அவனைக் கலாய்த்தான் வத்சன்.
மித்ரனும் அவர்களுடன் சேர்ந்து, “இதை மனசுல வச்சுக்குறேன். கண்டிப்பா இதுக்காக ஒருநாள் உங்க ரெண்டு பேரையும் பழி வாங்குவேன்” எனச் சிரித்தவாறே சொன்னான்.
“என்னடா இது ரியாக்ஷன் கொஞ்சம் வேற மாதிரி இருக்குது? நான் இங்க இப்போ ஒரு எரிமலையே இல்ல எதிர்பார்த்தேன். ஆனால் இது என்ன சபரிமலைக்கு போற சாமி மாதிரி ஆயிட்ட?” என அப்போதும் வத்சன் அவனை விடவில்லை.
“அம்மா உங்க ரெண்டு பேரையும் உள்ள வரச் சொன்னாங்க. சாப்பிடாம உட்கார்ந்து இருக்காங்க. வெட்டியாப் பேசி நேரத்தைக் கடத்தாம வந்து சேருங்க” எனச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றான் மித்ரன்.
“தர்ஷ், எனக்கு ஒரு டவுட்? நீ அவன் மேலே அடிச்ச தண்ணியில அவன் மூளையும் சேர்ந்து கரைஞ்சிடுச்சோ?” என அவளிடம் சத்தமாகவே இரகசியம் பேசினான் வத்சன்.
திவ்யதர்ஷினி, “ஷ்” என அவனை அமைதியாக இருக்கச் சொன்னது மித்ரனின் காதுகளில் விழுந்தது. அதைக் கேட்டவாறே புன்னகையுடன் வீட்டினுள் நுழைந்தான் மித்ரன்.
மீண்டும் அவன் காதுகளில் விழுமாறு திவ்யதர்ஷினியைப் பார்த்து, “கொஞ்சம் நல்லவன் தான் போல. பார்த்ததும் பிடிக்காது. ஆனா பழகப் பழக பிடிக்கும் போல” என ரகசியம் பேசினான் வத்சன்.
‘இவன் சொல்வது உண்மையோ’ என்பதைப் போல் வீட்டினுள் செல்லும் மித்ரனையே நோக்கியிருந்தாள் திவ்யதர்ஷினி.
ஆரம்பத்தில் பார்த்த மூன்று-நான்கு முறையும் அவளிடம் முட்டிக் கொண்டாலும், எப்போது அவனது தவறினால் அவள் மின்தூக்கியில் சிக்கிக் கொண்டு மூர்ச்சையானாளோ அன்றிலிருந்து அவளிடம் இணக்கமாகவே நடந்து கொள்கிறான் மித்ரன்.
எது எப்படியோ, இங்கே வேலை செய்யும் வரையில் எந்தப் பிரச்சனையும் வராமல் சுமூகமாக அவள் இங்கிருந்து கிளம்பினாலே போதும்.
வீட்டினுள் சென்ற மித்ரன் பட்டென்று திரும்பி அவளைப் பார்க்க, திவ்யதர்ஷினி அவனையே வெறித்துக் கொண்டிருந்தது கண்களில் பட்டது. ‘ஏன் அப்படிப் பார்க்கிறாய்?’ என்பதை போல் ஒற்றைப் புருவம் உயர்த்தி அவளைக் கேள்வியாய் நோக்கினான்.
பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை பார்த்ததைப் போல் அவனையே வெறித்துக் கொண்டிருந்தது புத்திக்கு எட்டியது. அதுவும் அதை அவன் வேறு பார்க்க நேர்ந்ததும் அவளுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.
அவள் ஒன்றும் அவனை ரசித்துக் கொண்டெல்லாம் இருக்கவில்லை. சற்று நல்லவன் போல என்று மட்டும் பார்த்தாள். அதை அவனிடம் எப்படி விளக்குவது என்ற எண்ணத்தில் ஒன்றுமில்லை என்பதைப் போல் தலையைக் குலுக்கிக் கொண்டு பார்வையை விலக்கிக் கொண்டாள்.
அவளது அந்தச் செய்கை மயிலிறகைப் போல மித்ரனின் மனதை இதமாய் வருடிச் சென்றது.

