அத்தியாயம் 7
இரண்டு வாரங்கள் சுமூகமாகக் கடந்திருந்தன. மாதங்கி இரண்டாம் முறையாக அன்னையாகியிருந்தாள். நாகேஸ்வரி அம்மாவிற்குச் சந்தோசத்தில் அழுகை வந்திருந்தது. அவருக்கு என்னவோ கணவரே மகள் வயிற்றில் வந்து பிறக்கப்போகிறார் என்பதுபோலொரு நம்பிக்கை.
அதை அவர் வாய்விட்டுச் சொன்னபோது, “அலட்டாதீங்கம்மா. பொம்பிளைப்பிள்ளை வேணுமெண்டு நான் ஆசைப்பட்டா என்ன கதைக்கிறீங்க?” என்று சுள்ளென்று விழுந்திருந்தாள் மாதங்கி.
அவருக்கு முகம் சுண்டிப்போயிற்று. ஆனாலும் எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன, மகளும் பேரக்குழந்தையும் நலமாக இருந்துவிட வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டார்.
அவருக்கு இன்னுமே கால் சரியாகக் காணோம். அவர் வயது காரணமா என்னவென்று தெரியவில்லை. மெல்ல மெல்ல அடியெடுத்து நடக்க முடிந்ததே தவிர, பழையபடி நடமாட முடியவில்லை.
கொஞ்சம் கூடுதலாக நடந்தாலும் கால் பலூன் மாதிரி வீங்கியது. வாரா வாரம் கை வைத்தியர் ஒருவரிடம் சென்று வருகிறார். அந்தச் செலவை யாமினிதான் பார்க்கவேண்டியிருந்தது.
அதைவிட வேலை முடிந்து வந்தாலே தலை சுற்றல், வாந்தி என்று படுத்தே கிடக்கும் மாதங்கியின் தேவைகளை நாகேஸ்வரியால் தீர்க்க முடியவில்லை. சின்னவனைக் கவனிக்கக் கூடச் சிரமப்பட்டார்.
அதைக் கவனித்த ஆதவன், அவர் கால் சரியாகிற வரை இருக்கட்டும் என்று ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்தினான். அதற்கும் முகத்தைத் தூக்கினாள் மாதங்கி.
கற்கண்டு ஐயா இருந்தவரை வீட்டுச் செலவுக்கு என்று மகளிடமோ மருமகனிடமோ சென்று நின்றதில்லை. உன் அப்பாவிடம் கொடு என்று ஆதவன் மாதா மாதம் ஒரு தொகை கொடுப்பான்தான். மாதங்கி அதைத் தகப்பனிடம் கொடுக்க மாட்டாள். அவரும் கேட்க மாட்டார்.
அவர் ஒரு விவசாயி. பழையமாதிரி தன்னால் விவசாயம் பார்க்க முடியாது என்று தெரிந்தபோது, அந்த நிலங்களை விற்றுவிட்டு வங்கியில் சேமிப்பாகப் போட்டிருந்தார்.
அவரின் வைத்தியச் செலவுக்கு அது எல்லாம் சேர்ந்துதான் கரைந்திருந்தன. இப்போது வீட்டுச் செலவும் தம் தலையில் விழுந்ததை மாதங்கியால் ஏற்க முடியவில்லை. இத்தனை காலமும் மொத்தமாகச் சேமிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி குறைகையில் மனம் பொறுமிற்று.
இதையெல்லாம் அன்னை மூலம் அறிந்த யாமினி, செய்வதறியாது திகைத்து நின்றாள்.
“பிள்ளப்பெத்துச் செலவு இருக்காம். பேபி ஷவர் செய்ய நினைச்சவளாம். இனி ஒண்டும் நடக்காதாம். அது போதாது எண்டு உன்ர கலியாணத்துக்குக் காசு சேக்கோணும் எண்டு மருமகன் சொன்னவராம். இப்பிடி எல்லா பக்கத்தாலயும் குடுத்துப்போட்டு, ஒண்டுக்கு ரெண்டு பிள்ளைகளை வச்சுக்கொண்டு நான் என்ன நடுத்தெருவில நிக்கிறதோ எண்டு கேக்கிறா.” என்று சொல்லிக் கவலைப்பட்டார் நாகேஸ்வரி.
“இந்தக் கால் சரியா வந்திட்டா ஒண்டும் தேவை இல்ல. நானே பாத்திடுவன். எனக்கு உண்மையாவே ஏலாம இருக்கு பிள்ளை. அத விட பயமா இருக்கு. இன்னொருக்கா விழுந்து, இன்னும் பெருசா ஏதும் நடந்தா என்ர நிலமை என்ன சொல்லுங்கோ? இப்பவே இவ்வளவு கதை.” என்றவர் பேச்சில் இன்னும் கவலையாயிற்று அவளுக்கு.
அவள் தந்தை இருந்திருக்க இப்படிப் பயந்திருக்க மாட்டாரே. பெற்ற தாயை இப்படி யோசிக்க வைக்கும் மாதங்கியை என்ன செய்வது?
“பரவாயில்ல அம்மா. வேலைக்கு வாற அந்த அக்கான்ர சம்பளத்தையும் நானே தாறனாம் எண்டு அக்காட்டச் சொல்லிவிடுங்க. வீட்டுச் செலவுக்கும் ஏதாவது பாத்து அனுப்புறன். என்ர கலியாணத்துக்கு ஒரு வருசம் போகட்டும். ஆனாம்மா அக்கா நல்லா என்னட்ட இருந்து காசை வறுக(பிடுங்க) நிக்கிறா. அது மட்டும் நல்லா தெரியுது.” என்று சொல்லிவிட்டு வைத்தவளுக்குத் தன் திருமணத்திற்காகத் தமக்கையிடம் ஒரு ரூபாய்க்கும் போய் நிற்கக் கூடாது என்று மனத்தில் வைராக்கியம் பிறந்தது.
ஆனால், இப்போது இருக்கிற இந்தச் சிக்கல்களை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்று மலைத்தாள்.
அந்த வருடம் வெளியான ஆப்பிள் கைப்பேசி, கிளிநொச்சிக்குச் சென்றால் ஓடுவதற்கு என்று வாங்கிய ஸ்கூட்டி என்று அவள் பக்கமும் மாதத் தவணையாகப் பணம் கட்டும் நிலையில் இருக்கிறாளே.
அதைவிட, தானே ஒரு சேமிப்புக் கணக்கை ஆரம்பித்து, தந்தைக்கு மாதம் மாதம் அனுப்பியதுபோல் சேமித்து வரவேண்டும், அவர் ஆசைப்பட்டது போல் அவள் திருமணத்திற்கு அதை எடுக்க வேண்டும், அதுவரை என்ன கஸ்டம் வந்தாலும் தொடக்கூடாது என்று எண்ணியிருந்தாள். இப்போது நடப்பவற்றைப் பார்த்தால் அது நடக்கும் போல் தெரியவில்லை.
நிரோஜனுக்கு வேறு பணம் கொடுக்க வேண்டும். அவன் அவசரமாகக் கொண்டுவா என்று கேட்க மாட்டான். இன்னும் சொல்லப்போனால் திருப்பிக் கொடுக்கையில்தான் நிச்சயம் கோபிப்பான். வாங்க மாட்டான். அதற்கென்று அவள் கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன? என்ன, அவசரமாகக் கொடுக்கத் தேவையில்லை.
அன்று மாலை அவள் அறைக்கு வந்தான் நிரோஜன்.
“காவ்யான்ர கலியாணப் பேச்சு எந்த நிலைல இருக்கு நிரோ?” இலகுவான முக்கால் காற்சட்டையும் மேற்சட்டை ஒன்றும் அணிந்து அவள் அமர்ந்திருக்க, அவள் மடியில் ஒரு தலையணையைப் போட்டுப் படுத்திருந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தவனிடம் அவன் தங்கை குறித்து வினவினாள் யாமினி.
“அவளுக்கு ரகுவப் பிடிச்சிருக்காம். ரகுக்கும் விருப்பமாம். பொருத்தம் பாத்து எல்லாம் ஓகே. என்ன, ரகு வீட்டில கலியாணத்த ஒரு வருசம் தள்ளி வைக்கக் கேட்டவையாம். அப்பாக்கு அது கொஞ்சம் அதிருப்திதான். நல்ல சம்மந்தம், கவிக்கும் பிடிச்சிருக்கு எண்டுறதால ஓம் எண்டு சொல்லியிருக்கிறார்.” என்று சொன்னான் அவன்.
“ஒரு வருசம் கழிச்சா?” என்றாள் அவள் கொஞ்சம் அதிர்ச்சியாக.
அவளும் ஒரு வருடம் போகட்டும் என்றுதான் நினைத்தாள். இங்கே காவ்யாவிற்கு அவசரமாக அவர்கள் பார்த்துக்கொண்டிருப்பது தெரியும். குறைந்தது ஆறு மாதத்திற்குள் முடித்துவிடுவார்கள் என்று சொல்லியிருந்தான் நிரோஜன். இதையும் மனத்தில் வைத்துத்தான் தன் திருமணத்திற்கு ஒரு வருடம் போகட்டும் என்று சொல்லியிருந்தாள்.
ஆனால் இப்போது காவ்யாவிற்கே ஒரு வருடம் கழித்துத்தான் என்றால் இவர்களுக்கு உடனேயே நடக்காதே. குறைந்தது இன்னும் ஒரு வருடமாவது தள்ளி வைக்கத்தான் நினைப்பார்கள்.
“ஏன் என்ன?” என்றான் அவன் விளங்காமல்
“அப்ப எங்கட கலியாணம்? கவிய விட எனக்கு ஒரு வயது கூட நிரோ.”
“இப்பவே கூட நான் ரெடி!” என்றான் அவன் கண்ணடித்து
“நிரோ!” அவளால் அவன் விளையாட்டில் பங்குகொள்ள முடியவில்லை.
“என்ன செய்யச் சொல்லுறாய்? கவிக்கு முடியாம நாங்க எப்பிடிக் கட்டுறது?” எழுந்து அமர்ந்துகொண்டு கேட்டான் அவன்.
“அது சரிதான். ஆனா, அம்மா இப்பவே என்ர கலியாணத்தப் பற்றிக் கதைக்க ஆரம்பிச்சிட்டா. அப்பா இருந்திருந்தா கூட வேற. இப்ப அத்தான்தான் எல்லாம் பாத்துச் செய்யோணும். அவரும் இப்பவே பாக்க ஆரம்பிச்சாத்தான் சரியா இருக்கும் எண்டு சொன்னவராம். நான் அப்பாக்கு ஒரு வருசம் முடியட்டும் எண்டு சொன்னனான். நல்லது நடக்கிறதுக்கு அப்பிடிக் கட்டாயம் ஒரு வருசம் வெய்ட் பண்ணோணும் எண்டு இல்லை எண்டு அம்மா சொல்லிப்போட்டா”
“அப்ப எங்களைப் பற்றிச் சொல்லு. சொல்லிப் பொறுக்கச் சொல்லு.”
“சொன்னா இஞ்ச வேலை பாக்க விடுவினமா? அப்பாவே விட்டிருக்க மாட்டார். அத்தான் விடவே மாட்டார்.”

