“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலைடா. அப்பா சொல்லுறதைக் கேளு. அவன்கிட்ட இருந்து விலகி இருடா. டாஸ்க்ல கான்சன்ரேட் பண்ணு. நீ ஜெயிக்க வேணாமா? எப்படி இருந்த நீ இப்படி மாறிப் போயிட்டியே..” என்று அவர் சொன்னபோது, “அவனை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்பா!” என்று கண்ணீருடன் சொன்னவள், அத்தனைநேரம் அவர் சொன்னவற்றை எல்லாம் ஒற்றை வரியில் அடித்துத் தூள் தூளாக்கியிருந்தாள்.
நெஞ்சு துடித்துப் போனது ராகவனுக்கு.
“கடைசில என் பொண்ணு மனசக் கலைச்சே விட்டுட்டானா.. இரு அவனை!” ஆவேசம் கொண்டு எழுந்தவர் அஜய்யிடம் விரைந்தார்.
காட்சி முப்பத்துஐந்து
“உனக்கு எத்தனை வாட்டி சொன்னேன். அவகூட பழகாத அவ மனச கெடுக்காத என்று. கேட்டியா? இப்பப் பாரு அழுதிட்டு இருக்கா. சந்தோசமா உனக்கு? சொல்லு சந்தோசமா?” அஜய்யிடம் சண்டைக்குப் போனார் ராகவன்.
“அவ மனச நான் கெடுத்தத நீங்க பாத்தீங்களா?”
“கெடுக்காமத்தான் அழுதிட்டு இருக்காளா?”
அவளை வைத்து அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொள்வது தரக்குறைவாக உணர்ந்தாள் பிருந்தா. “அப்பா பிளீஸ்..! பேசாம வாங்க!” அவளின் கெஞ்சலை அவர் காதில் விழுத்தவே இல்லை.
“அவ அழுதா எதுக்கு அழுற என்று அவகிட்ட கேளுங்க. என்கிட்டே தேவையில்லாம வராதீங்க!” இருந்த சினத்தில் சீறினான் அஜய்.
“அவ அழுறதுக்கு காரணமே நீதான். உன்னக் கேக்காம யாரை கேக்கறது? என்ன மனுசன்டா நீ. அந்த சின்னப்பொண்ணப் போட்டு இந்தப்பாடு படுத்துற?”
“அவ சொன்னாளா? நான் படுத்துறேன்னு. இங்கதான நிக்கிறா. கேளுங்க!” அவனும் பொறுமை இழந்திருந்தான் இப்போது.
அவளின் கையை பிடித்து இழுத்து, “உன்ன படுத்தறேனா நான்? சொல்லு அவர்கிட்ட…” என்று உறும, “அவளை விடு அஜய். என்கிட்டே பேசு!” என்று அவளைத் தன்புறம் இழுத்துக்கொண்டார் அவர்.
“போய்ப் பாக்கிற வேலைய பாருங்க சேர். தேவையில்லாம எங்க விசயத்துல தலையிடாதீங்க என்று எப்பவோ சொல்லிட்டேன்!” என்று விரல் நீட்டி எச்சரித்தான் அவன்.
“அவ என் பொண்ணுடா. அவ விசயம் எனக்குத் தேவை இல்லாததா? இனி அவளோட பேசவே கூடாது நீ!”என்று உத்தரவிட்டார் அவர்.
“ஆ! பிறகு? பேசினா என்ன பண்ணுவீங்க? சொல்லுங்க, என்ன பண்ணுவீங்க?” அவரை நெருங்கிக்கொண்டு வந்தான் அவன்.
பாத்திருந்த எல்லோர் முகத்திலும் கலவரம். நடுவில் போகப் பயந்தனர். அந்தளவு கோபத்தில் முகம் சிவந்துபோய் நின்றிருந்தான் அஜய்.
பிருந்தாவுக்கு அழுகையோடு கைகால்கள் எல்லாம் நடுங்கியது. அவள் சொல்வதை, கெஞ்சுவதை இருவருமே காதில் வாங்க மறுத்தனர்.
“வேணாம் அஜய்! அவளுக்கு இதெல்லாம் பழக்கமில்லை. அவளை விட்டுடு! அவ வாழ்க்கையை நாசமாக்காத. பிறகு நான் மனுசனாயிருக்க மாட்டேன். இது ஒரு ஷோன்னு கூட பாக்காம அறைஞ்சிடுவேன்.” என்று அவர் சொல்லிக்கூட முடிக்கவில்லை, எட்டி அவரின் ஷர்ட்டை பிடித்திருந்தான் அஜய்.
“எங்க அறைங்க பாக்க, அறைங்க சார் அறைங்க.”
நடுங்கிப்போனாள் பிருந்தா.
“அஜய் என்ன பண்ணுற நீ. விடு அவரை!” என்று பதறினாள்.
“ரதன் பிளீஸ், அஜய்யை அந்தப்பக்கமா கூட்டிட்டுப் போ!” என்று சத்தமிட்டாள்.
அவனும் ஓடிவர, “இது என் பிரச்சனை. நான் பாத்துப்பேன். யாரும் நடுவுக்க வரக்கூடாது!” என்று கர்ஜித்தான் அஜய்.
ரதன் அப்படியே தேங்கிவிட, வைதேகி பொறுமையாக விடச்சொல்லி அவனிடம் மன்றாட, சாந்தினி இவர்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் குரலிடம் முறையிட ஓடினாள்.
“அவர் என்னவோ உன் வழிக்கே வரக்கூடாதுன்னு சொல்லுறார். வரக்கூடாதா? சொல்லு, உன் கூட பேசக்கூடாதா? நான் பழக்கக்கூடாதா? நீ சொல்லு. இப்பச் சொல்லணும்!” அவரை விட்டுவிட்டு அவளிடம் உறுமினான் அவன்.
“நீ சொல்லுடா கண்ணா. எதுக்கும் பயப்படாம சொல்லுமா!” கண்ணீருடன் கெஞ்சினார் ராகவன். “உன் நல்லதுக்குத்தானமா சொல்லுறேன். சொல்லுடா கண்ணம்மா…”
அவள் கண்ணீர் மட்டுமே உகுத்தாள். அவளால் எதையுமே சொல்ல முடியவில்லை. யாருக்காகப் பேசுவாள்? யாரை நோகடிப்பாள்? அப்படியே மடிந்து தரையில் விழுந்து கதறினாள் பிருந்தா.
ராகவனை வெற்றிப் பார்வை பார்த்துவிட்டுப் போனான் அஜய்.
தோற்றுப்போன வலியோடு அப்படியே அமர்ந்துவிட்டார் ராகவன்.
ஒவ்வொரு காட்சியிலும் தன்னைப் புதிதாக அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான் ஜேகே. நடிப்புத்தான்; ஆயினும் அந்தக் கோப முகத்தைக் கண்டதும் அவளுக்குள் சில்லிட்டுப் போனது. மெய்யாகவே இப்படி ஒரு கோபத்தை அவன் காட்டினால் அவள் தொலைந்தாள்.
‘அவனை சீண்டாம எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இருக்கணும்..’ அவன் பிடித்து இழுத்த கையைத் தடவிக்கொடுத்தாள். அந்தளவில் வலித்தது.
முரடன்; மெல்லப் பிடிக்க வேண்டியதுதானே? அவனைத் திட்டினாலும் விழிகள் அவனிடமே இருந்தன. விமலிடம் தீவிரமாக என்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். அவன் பேச்சில் கவனம் களைந்து புருவங்களைச் சுருக்கிக்கொண்டு இவள் பக்கமாக திரும்புவது தெரிய ஷியாமிடம் ஓடிவிட்டாள்.
அன்று ஷூட்டிங் முடிந்தபிறகு கண்டியில் இருக்கும் நீர்வீழ்ச்சியைப் பார்க்க வந்திருந்தனர் ஷியாமும் அனன்யாவும்.
மலை உச்சியில் இருந்து சோ என்கிற இரைச்சலோடு கொத்துக் கொத்தாக கொட்டிக்கொண்டிருந்தது தண்ணீர் பூக்கள். பாறையில் விழுந்து நுரை தள்ளிக்கொண்டு ஒரு பெரும் ஆற்றினைப்போல பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நீரின் உற்சாகம் அவளுக்கும் தொற்றிக்கொண்டிருந்தது.
“குளிப்பமா ஷியாம்?” அந்தக்கணமே நீருக்குள் பாய்ந்துவிட துடித்துக்கொண்டிருந்தாள் அவள்.
“குளிரும் சிட்டு!”
“பரவால்லடா! இந்த சான்ஸ் இனி கிடைக்குமா தெரியாது!” என்றவள், ஓடிப்போய் அருகிலிருந்த கடையில் கண்ணுக்கு அகப்பட்ட மாற்றுடைகளை வாங்கிக்கொண்டு வந்து வைத்துவிட்டு நீருக்குள் பாய்ந்துவிட்டாள்.
அவள் போட்ட கும்மாளத்தைப் பார்த்துவிட்டுத் தானும் இறங்கினான் ஷியாம்.
ஆசை தீரக் குளித்துவிட்டு வந்தவர்களுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது. சூடாக, பால் அப்பமும் நெஸ்டமோல்ட்டும் அமிர்தமாக வயிற்றுக்குள் இறக்கிக்கொண்டு காட்டேஜுக்குப் புறப்பட்டனர்.
“ஹேய்! சொல்ல மறந்துட்டேன். அர்ஜுன் மண்டே வறானாம். அவனுக்கும் ஸ்ரீலங்காவை சுத்திப் பாக்கணுமாம்.” காரை நுவரெலியா நோக்கிச் செலுத்தியபடி நினைவு வந்தவனாக ஷியாம் சொல்ல, அத்தனை நேரமிருந்த சந்தோசம் வடிந்துபோயிற்று அவளுக்கு.
ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பதுபோல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், கைகால்கள் எல்லாம் படபடக்கத் தொடங்கிற்று!
வருகிறான் என்கிற செய்தியைக் கேட்டதுமே நெஞ்சு பதறுகிறதே, அவனை எப்படி எதிர்கொள்ளப் போகிறேன்?
“என்ன அமைதி ஆகிட்ட? அப்படி என்னதான் மனசுக்குள்ள வச்சிருக்க. என்கிட்ட கூட சொல்லமாட்டியா?” அவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு மனத்தாங்கலோடு கேட்டான் அவன்.
அவளும் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் என்றுதான் நினைக்கிறாள். ஆனால் வாயும் வராது; வார்த்தைகளும் வராது. காரணமும் புரியவில்லை.
இப்போதும் அதேதான்.
வேகமாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு திரும்பி, “இல்லடா, தண்ணில நல்லா ஆடினதும் இல்லாம வயிறு முட்ட சாப்பிட்டது கண்ணைச் சுழட்டுது.” என்று பொய்யாக ஒரு கொட்டாவியை கை மறைவில் விட்டுவிட்டு, “சொல்லுறதுக்கு ஏதாவது இருக்கணுமே. இல்லாததை என்ன என்று சொல்லச் சொல்லுற?” என்று முடித்தாள்.
அவளின் காட்டேஜும் அதற்குள் வந்துவிட, காரிலிருந்து இறங்கப்போனவளிடம், “நீயும் என்னோட பிரென்ட் தான். அவனும் நல்ல பிரென்ட் தான். நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கணும் என்கிறதுதான் என்னோட ஆசை. அதுல தப்பில்லையே.” என்று, அவளை நோகடிக்கும் செயலைச் செய்கிறோமோ என்கிற தயக்கத்துடன் கேட்டான் ஷியாம்.
சின்னப்புன்னகை இதழினில் மலர, “உன்னைத் தெரியாதாடா?” என்றாள் அவள்.
“இல்லடா. சிலநேரம் உன்னைப் பாக்குறப்போ மனசுக்குச் சங்கடமா இருக்கு. அதான், என்னால முடிஞ்சதை நான் ட்ரை பண்றேன். பட், உன்னோட மனசுக்குச் சரின்னு பட்டதை மட்டும் நீ செய். எதையும் கண்டிப்பாக் கட்டாயப்படுத்த மாட்டேன்.” என்று தன் மனத்தைச் சொன்னான் அவன்.
“உன்னைப்பத்தி எனக்குத் தெரியும். நீ சும்மா மனசப் போட்டுக் குழப்பாம நிம்மதியாத் தூங்கு!” என்றுவிட்டு வந்தவளுக்கு, அன்றைய இரவு உறங்கா இரவாகிப் போயிற்று!

