அத்தியாயம் 14
அன்றைய காட்சியை அனன்யாவால் நடித்துக்கொடுக்கவே முடியவில்லை. ஒன்றில் நடிக்கவேண்டியதை மறந்தாள் அல்லது உணர்வுகளை முகத்தில் கொண்டுவர முடியாமல் திணறினாள். கைகால்களில் ஒரு நடுக்கம். ஒரு பதற்றம். பயப்பந்து ஒன்று உருண்டுவந்து தொண்டைக்குழியை அடைத்துக்கொண்டிருந்தது.
ஏதோ பாதுகாப்பற்ற உணர்வு. சனக்கூட்டத்தில் தொலைத்துவிட்ட அந்த விரலுக்காய் மனம் ஏங்கிற்று! அதனிடம் சரணடைய முடிந்தால்… மனத்திலிருப்பதை எல்லாம் கொட்டிவிட முடிந்தால்… தெளிந்துவிடுவாளே! தைரியம் கிடைத்துவிடுமே!
அவளின் கவனமோ சிந்தனையோ அன்று எடுக்கப்பட்டுக்கொண்டிருந்த காட்சியிலேயே இல்லை.
எத்தனையோ டேக் போயும் சரியாக அமையவில்லை.
“என்ன அனு? இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு?” விக்ரமனும் சற்றே சினத்துடன் கேட்டுவிட, ஏற்கனவே இப்படிச் சொதப்புகிறோமே என்று தன்னளவில் குன்றிக்கொண்டு இருந்தவளுக்கு கண்கள் கலங்கிப் போயிற்று!
கலங்கிய கண்களோடே விக்ரமனைப் பார்த்தாள். புருவங்கள் சுருங்க, அவளை நோக்கி அவர் ஓர் அடி எடுத்துவைக்க, பட்டென்று விலகி ஓடியவளை நிறுத்தி, “வா கொஞ்சத்தூரம் நடந்துட்டு வருவோம்.” என்றான் ஜேகே.
அவன் தன்னிடம் கதைக்கிறான் என்பதைக்கூட உணரும் நிலையில் இல்லை அவள். கூடவே நடந்தாள். கீழ்க்கண்ணால் அவளை எடைபோட்டவனும் அதை உணர்ந்துகொண்டிருந்தான்.
“என்ன விசயம்? இது நீயில்லையே…”
அவன் கேட்பதற்காகவே காத்திருந்தாளா? அல்லது அவனது குரல் சொல்ல வைத்ததா? அர்ஜுனைபற்றிச் சொன்னாள். கேட்டவனின் பார்வையில் ஒரு புதிர் இருந்தது. அதை உணர்ந்துகொள்ளும் நிலையில் அவள் இல்லை. தன் துன்பத்தில் மூழ்கிப்போயிருந்தாள்.
“அர்ஜுன் இங்க வந்திட்டானாம். இன்னைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாமா என்று கேட்டிருந்தான். நானும் ஓகே சொல்லிட்டன். ஆனா, பயமா இருக்கு.” என்றவளுக்குத் தன்னைக் குறித்தே அவமானமாயிருந்தது.
இத்தனை வருடங்கள் கழிந்தும் அவன் அவளைப் பாதிக்கிறானே. அதுவும் நடிக்கக்கூட முடியாத அளவுக்கு. அவமானக் கன்றலில் மூக்குநுனி சிவந்துவிட, சூடான கண்ணீர்த் துளிகள் கன்னங்களை நனைத்தது.
ஜேகேயின் முன்னே அழுகிறோம் என்பது உறைக்க, கன்னத்தை வேகமாகத் துடைத்துக்கொண்டாள். ஆனாலும் கண்கள் கலங்கிக்கொண்டே இருந்தது.
“எனக்கு அழப் பிடிக்காது. அழுகை பலவீனத்தை மட்டும் தான் தரும் எண்டு நினைப்பன்.” என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு.
“தெளிவையும் தரும்.” என்றான் அவன்.
கேள்வியாகப் பார்த்தாள் அவள்.
“அழுது முடிச்சிட்டு இருந்து யோசிச்சா, தெளிவு வரும்.” பார்வை எங்கோ இருக்கச் சொன்னான் அவன்.
இத்தனை வருடங்களில் வராத தெளிவா? அவள் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன.
“அதுக்காக கட்டாயம் அழுதே ஆகவேணும் என்றில்லை.” என்றான் அவன்.
“இப்ப என்ன அழச் சொல்லுறீங்களா இல்ல அழவேணாம் என்று சொல்லுறீங்களா?” கேட்கும்போதே உதட்டினில் சிரிப்பு மலர்ந்தது. மனமும் இலேசாவதை உள்ளூர ஒரு அதிசயத்துடன் உணர்ந்தாள்.
“உனக்கு எப்படி இருந்தா உன்ன பிடிக்குமோ அதச் செய்!”
“எனக்கு அழப்பிடிக்காது.”
“பிடிக்காததை ஏன் செய்ற?”
“அது…” என்று அவள் ஆரம்பிக்க, “இந்த ப்ளா ப்ளா எல்லாத்தையும் நிப்பாட்டு.” என்றவனை முறைத்தாள்.
அவளின் வேதனை அவனுக்கு ப்ளா ப்ளாவா? அவனோ அவளின் முறைப்பை உணர்ந்துகொண்டதாகவே இல்லை.
“அவன் உன்னை ஏமாத்தி இருக்கான். உன்னை நோகடிச்சு இருக்கிறான். அதையெல்லாம் நினைக்கிறப்போ உனக்குக் கோபம் தான் வரணும். அழுகை இல்ல. அவனுக்கு முன்னால போய்நின்று உன்னைவிட நான் நல்ல பெயரும் புகழுமா இருக்கிறன் பாருடா என்று காட்டணும். நீ உன்னோட தொழில்லையும் சாதிக்கல, வாழ்க்கையையும் வாழல. ஆனா என்ன பாருடா என்று காட்டிட்டு வா! அவனோட முகம் கறுக்கிறதை நல்லா பாத்து ரசிச்சிட்டு வா. நானா இருந்தா இவ்வளவு நேரத்துக்கு அவன் முன்னால போய் நின்னு சொல்லிட்டு வந்திருப்பேன். உன்ன மாதிரி இப்படி அழுதிட்டு நிக்கமாட்டன். உன்ன மாதிரி பெண்களின்ர இந்தப் பலகீனம் இருக்கிற வரைக்கும் அவனை மாதிரி ஆக்கள் ஏமாத்திட்டே தான் இருப்பாங்க. பட்டும் தெளியலயே நீ!” என்றான் கடினமான குரலில்.
‘உண்மைதானே!’ என்று மனம் தெளிந்தாலும் அவனது கடுமையில் முகம் சுண்டிப்போயிற்று அவளுக்கு.
கொஞ்சம் தன்மையாகச் சொன்னால் தான் என்னவாம்?
“நானும் சொல்லுவேன். சொல்லிட்டு வந்து உங்ககிட்ட சொல்லுறேன் பாருங்க. நீங்களும், என்னைப்பத்தி அவ்வளவு மோசமா நினைக்காதீங்க. எனக்கும் ரோசம் இருக்கு!” என்று பார்வையால் அவனை வெட்டிவிட்டு விறுவிறு என்று நடந்தவள் நின்று திரும்பினாள்.
“நீங்க இன்னைக்கு என்கூட பேசிட்டிங்க!” என்றாள் ஒரு வெற்றிச் சிரிப்புடன்.
“உனக்காக நாள் முழுக்க ஒரே சீனை நடிச்சிட்டு இருக்க என்னால முடியாது. எனக்கு என் வேலை ஆகணும். நம்ம வேலை ஆகணும்கிறதுக்காக பிடிக்காட்டியும் சில வேலைகளை நாம பாத்துத்தான் ஆகணும்!” சொல்லிவிட்டு அவளைக் கடந்து போய்விட்டான் அவன்.
‘இவன.. கட்டிவச்சிட்டு கடிச்சுக் கடிச்சுத் துப்பனும். அப்பத்தான் என் ஆத்திரம் அடங்கும்!’
அடங்காத கோபத்துடன் நடையைக் கட்டினாள் அனன்யா.
காட்சி முப்பத்தியாறு
அடுத்தநாள் சேலை அணிந்துகொண்டிருந்தாள் பிருந்தா. அவளைக் கண்டதும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே நின்றுவிட்டான் அஜய். இந்த ரியாக்ஷனை எதிர்பாராத பிருந்தாவும் அப்படியே நிற்க,
ஹே ஹே ஹே , போர்க்கப்பல் போல இரு இமை
மீன் தொட்டி போல இரு விழி
பால் சிப்பி போல இரு இதழ்
சேர்ந்த அழகி அவள்தான்
மின்காந்தம் போல ஒரு முகம்
ஊசிப்பூ போல ஒரு இடை
தந்தத்தூண் போல ஒரு உடல்
கொண்ட மங்கை அவள்தான்
அவள் அழகென்ற வார்த்தைக்கு அகராதிதான்
நான் சொல்கின்ற எல்லாமே ஒரு பாதிதான்
என்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு அவன் பாடியதில் ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து விழிகள் விரிய அவனையே பார்த்தபடி நின்றுவிட்டவளின் முகம் மலர்ந்து விகசித்தது.
அவள் மீதிருந்த கோபம் போய்விட்டதா அவனுக்கு? அவளைப் பார்த்துப் பாடுகிறானா? கேலி செய்கிறானா? கண்ணால் கண்டு காதால் கேட்டதை நம்ப முடியாமல் அவனையே பார்த்தவளிடம் கண்ணைச் சிமிட்டிவிட்டுக் குறும்புடன் சிரித்தான் அவன்.
அவளால நம்பவே முடியவில்லை. எப்படி? என்று கண்ணால் கேட்டாள்.
“அதுதான், உங்க அப்பா கேட்டப்போ ஒண்ணுமே சொல்லாம நின்னியே. அதுவே உன் மனசை எனக்கு சொல்லிடிச்சு டார்லிங்!” என்று அவன் கண்ணடிக்க, அவள் அறிந்துகொண்டிருந்த இரகசியத்தை அவனும் கண்டுபிடித்திருக்கிறான் என்று அறிந்ததும் அப்படியே முகம் சிவந்து போயிற்று அவளுக்கு.
பதினெட்டு வயது வரை பெரும்
மாற்றங்கள் அத்தனையும் அவள்
அழகை கூட்டி விடுதே
பார்வைக்கு பட்ட இடம் அங்கும்
பார்க்காமல் விட்ட இடம் எங்கும்
பாதாமின் வண்ணம் அது பொங்கும்
கண்களுக்குள் சுடுதே -ஏ -ஏ
ஒரு ஐநூறு நாளான தேன் ஆனது
அவள் செந்தூரம் சேர்கின்ற இதழ் ஆனது
ஷாபப்ப …..
ஆஹா என்பார்கள் அடடா என்பார்கள்…
சற்றே ஆபத்தான வரிகள். அவளின் காதருகில் கிசுகிசுப்பாக அவன் பாடிவிட்டுப் பார்த்த பார்வையில் முகம் குங்குமமாய்ச் சிவந்துவிட ஓடிவிட்டாள் பிருந்தா.
காட்டில் தொலைந்துபோன குழந்தையின் உருவகத்தைக் கொடுத்த அதே வீடுதான் இன்று அவளுக்கு உலகமாக மாறிப்போயிற்று! அஜய் மாற்றியிருந்தான்.
மாலையாக ஆக அனன்யாவுக்குள் மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டிருந்தது. இதுவே சாதாரண நாளாக இருந்திருக்க ஜேகேயின் நடிப்பில் தன்னை மறந்து இலயித்திருப்பாள். இன்று அது முடியாமல் அர்ஜுன் வந்துநின்று அவளைப் பாடாய் படுத்தினான்.
ஜேகேயிடம் தைரியமாகச் சொல்லிவிட்டாள் தான், காலையில் இருந்ததற்கு இப்போது எவ்வளவோ பரவாயில்லை தான். என்றாலும் ஒரு நடுக்கம் இருந்துகொண்டே இருந்தது.
ஜேகே புறப்படுவது தெரிய, ஓடிப்போய் அவன் முன்னால் நின்று, “நீங்களும் என்னோட வாறீங்களா?” என்று கேட்டுவிட்டாள்.
கேட்டபிறகுதான், கேட்டதையே உணர்ந்து முகம் கன்றிப் போயிற்று. “சாரி சாரி. அது.. யோசிக்காம அவசரத்துல கேட்டுட்டேன்.” வேகமாகச் சொன்னவள் குன்றிப்போனாள்.
தன் காரியம் ஆகவேண்டும் என்பதற்காக மட்டுமே பேசினேன் என்றவனிடம் போய் எதற்குக் கேட்டாள்? அன்றானால் ஏமாற்றியவனை நம்பித்தொலைத்தாள். இன்றானால், வெறுக்கிறவனை துணைக்கு வா என்கிறாள். அவன் முன் நிற்கவே வெட்கி ஓடிவிடத் திரும்பியவளிடம், “வா போவோம்!” என்றுவிட்டு, நடக்கத் தொடங்கியிருந்தான் அவன்.
இன்னுமே அவமானமாக உணர்ந்தாள் அனன்யா. ‘இல்ல வேண்டாம்’ என்று மறுக்கமுடியாமல் உள்ளுக்குள்ளே குன்றியபடி அவன் பின்னால் நடந்தாள்.
ஒருகணம் நின்று, “விமல், உன்கிட்ட இருக்கிற கார் கீயத்தா.” என்று தன்னதை அவனிடம் கொடுத்துவிட்டு அவனிடம் இருப்பதை வாங்கிக்கொண்டு நடந்தான்.
‘இவன் எதுக்கு அந்தக் கீயை பொத்திப் பொத்தி வச்சிருக்கான்..’ அந்த நிலையிலும் புருவங்கள் சுளிக்க எண்ணம் ஓடியது அவளுக்குள். அதோடு அதை மறந்தும் போனாள்.
அவளையும் ஏற்றிக்கொண்ட ஜேகேயின் கார் அர்ஜுன் தங்கியிருந்த ஹோட்டலின் முன் நின்றபோது, நடுங்கிய விரல்களை ஒன்றுடன் ஒன்று பற்றியபடி இறங்காமல் அமர்ந்திருந்தாள் அனன்யா.
மனதுக்குள் ஓராயிரம் குமுறல்கள். கொட்டிவிட யாருமே இல்லாத அநாதரவான நிலை. குஞ்சுகளைத் தன் சிறகுகளுக்குள் பொத்திக்கொள்ளும் தாய்க்கோழியாய் பாதுகாக்க எனக்கு யாருமில்லையே என்கிற எண்ணத்தால் உண்டான நடுக்கம் அருகில் இருக்கிறவனிடம்,
“பயமா இருக்கு..” என்று சொல்ல வைத்தது.
கலங்கிவிட்ட விழிகளோடு நேரே நோக்கியபடி அமர்ந்திருந்தவளைப் பார்த்தான் ஜேகே. இதோ இதோ என்று கண்ணீர் துளிகள் விழத் தயாராகிக்கொண்டிருந்தது.
“நீங்களும் வாங்க.. பிளீஸ்!” குரலின் நடுக்கத்தில் அவளின் பயத்தின் அளவை உணர்ந்தான் அவன்.
உடனேயே பதிலிருக்கவில்லை அவன். மெல்லிய இருளும் பனியும் படிந்துகொண்டிருப்பதை பார்த்தபடி சொன்னான்.
“நான் வாறதால எனக்கு ஒண்ணுமில்ல. ஆனா, அவனுக்கு முன்னால நீ சுயமா நின்னு காட்டணும்! நீ நீயா நிமிந்து நிக்கணும்! துணைக்கு நான் கூட வேணாம் உனக்கு. ஒரு பொண்ணு தன்னந்தனியா எத்தனையோ பேர் காணாம போன திரைத் துறைல உச்சம் தொடுறது ஒன்னும் அத்தனை சாதாரண காரியம் இல்ல. அத நீ சாதிச்சு இருக்க. அவ்வளவு தைரியசாலியான உனக்குப் பயமா?” அவன் நிதானமாகக் கேட்டபோது, அதுதானே என்று தோன்றியது அவளுக்கும்.
“முதல் எதுக்காக பயப்படுற? ‘நீ அன்னைக்குப் பாத்த அப்பாவிப் பொண்ணு இல்லடா நான்’ என்று காட்டிட்டு வா! அவன் கண்ணை மட்டுமே பாத்துப் பேசிட்டு வா! இறங்கு போ!” என்றவன், அவளது ஃபோனை எடுத்துத் தன் இலக்கங்களை அழுத்திவிட்டுக் கொடுத்தான்.

