சதிராடும் சித்திரமே 15 – 1

அத்தியாயம் – 15

 

அன்று மதியம் மித்ரன் கோபத்துடன் வீட்டுக்கு வந்தான். பின்னே ஏதோ செய்ய வேண்டிய வேலையை ரதிப்ரியா செய்ய மறந்து போனாள். அதனால் வேலையில் சில தாமதம் ஏற்பட்டது. அத்தோடு சில பல குளறுபடிகளும் நடந்தேறியது.

 

வேலையிடத்தில் அப்படி என்ன மெத்தனம் என ரதிப்ரியாவை அழைத்துக் காய்ச்சுக் காய்ச்சென்று காய்ச்சி எடுத்துவிட்டான் மித்ரன். அதைச் சற்றும் எதிர்பார்க்காத ரதிப்ரியாவிற்கு அழுகையாய் வந்தது.

 

மித்ரனின் குணத்தை நன்கறிவாள். வேலை என்று வந்துவிட்டால் அவன் எப்பொழுதுமே தீவிரமாக இறங்கிவிடுவான். யாருக்காகவும் எதற்காகவும் பாரபட்சம் பார்க்கமாட்டான். ஆனால் அதையே அவளிடமும் கடைப்பிடிப்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

 

மித்ரன் திட்டியதுமே ரதிப்ரியா கிளம்பி அவனது அலுவலகத்திற்கே வந்து விட்டாள். ஏதோ ஒருமுறை தவறிழைத்துவிட்டாள். அதுவும் அவளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால். அதற்காக இப்படியா அவளைத் திட்டுவான் என அவள் நியாயம் கேட்டு அழ ஆரம்பிக்கவும் மித்திரனுக்கு ‘ஐயோ’ என்றானது.

 

“உடம்பு சரியில்லைன்னா சொல்ல வேண்டியது தானே? எதற்காக மெனக்கெட்டு அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கற? வேற ஆளை வச்சு வேலையை முடிச்சிருப்பேனே” என அதற்கும் கடிந்து கொண்டான்.

 

எதற்காக இப்படி அழுகிறாள் என்ற எரிச்சல் மட்டுமே அவனுக்கு மிகுந்திருந்தது. இருந்தாலும் இத்தனை நாட்கள் பழகிய தோழி என்ற முறையில் அவள் அழுவதைக் காணச் சகிக்காமல்,

 

“சரி விடு. இனிமேல் இப்படியெல்லாம் நடக்காம பார்த்துக்கோ. உன்னோட அஜாக்கிரதையினால மொத்த வேலையும் அப்படியே தடைபட்டு நிக்குது. அதனால கோபப்பட்டுட்டேன். சாரி” என அவளிடம் மன்னிப்பையும் வேண்டினான்.

 

இதுதான் ரதிப்ரியாவுக்கு அவனிடம் பிடித்த விஷயம். தைய தக்க என்று குதித்தாலும் தவறு தன் மேல் என்றால் கண்டிப்பாக அவளிடம் மன்னிப்பை வேண்டிவிடுவான். அதை வேறு யாரிடமும் கேட்க மாட்டான். அவனுக்குப் பிடித்தவர்களிடம் மட்டுமே மன்னிப்பை வேண்டுவான். அதனாலேயே அவனை மிகவும் விரும்பினாள்.

 

ஆனால் வேலையில் நடந்த குளறுபடியைப் பார்த்த சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர் தாம் தூம் என்று குதித்துக் கொண்டிருந்தார். அவரை எப்படியோ சமாதானப்படுத்திவிட்டு தலைவலியுடன் வீட்டுக்கு வந்தான் மித்ரன்.

 

அப்படி அவன் வந்த பொழுது வீட்டினுள் இருந்து கர்நாடக சங்கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது, கர்நாடக இசையென்றால் மித்ரனுக்கு அறவே ஆகாது. அவனின் குணத்துக்கு அனைத்துமே வேகமாகச் செயல்பட வேண்டும். இசை மட்டும் விதிவிலக்கா என்ன?

 

ஆகவே கர்நாடக இசை என்றால் அந்தப் பக்கம் பார்வை கூடப் போகாது. மேற்கத்திய இசையே அவனுக்கு மிகவும் பிடித்தமானது.

 

எரிச்சலுடன் வீட்டினுள் நுழைய, ‘மூஷிக வாகன’ என்ற பிள்ளையாரின் பாடல் உன்னிகிருஷ்ணனின் குரலில் ஒலிக்க, வரவேற்பறையில் திவ்யதர்ஷினி பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள்.

 

பாடலுக்கேற்ப அவளின் முகமும் கண்களும் பல வகையான பாவனைகளை வாரியிறைக்க, மித்ரன் கிறங்கிப் போய் அவன் உலகம் மறந்து, தன்னிலை மறந்து அப்படியே நின்றுவிட்டான். அவளையே இமைக்காது நோக்கியிருந்தான்.

 

அவளின் நடன அசைவுகளிலும், அவளின் அபிநயத்திலும், முகபாவனைகளிலும் முற்றிலும் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தான் மித்ரன். அவன் வீட்டினுள் நுழைகையில் இருந்த தலைவலியைப் பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும் கிடைக்காது.

 

திவ்யதர்ஷினி ஆடி முடித்து இறுதியாக அவள் கருவிழிகள் உயர்த்தி ஏறிட்டுப் பார்க்க, ஒருவித மோனநிலையில் நின்றிருந்த மித்ரனே அவள் கண்களுக்குப் புலப்பட்டான்.

 

அவன் பார்வையில் தெரிந்த பிரமிப்பிலும், கருவிழிகளில் தெரிந்த மாற்றத்திலும் திவ்யதர்ஷினியும் அப்படியே சில கணங்கள் அவனைப் பார்த்தபடியே உறைந்து நின்றிருந்தாள்.

 

வத்சனின் கை தட்டும் ஓசையில் சுதாரித்து வெளிவந்தாலும் திவ்யதர்ஷினியின் பார்வை விடாமல் வெளிவாயில் அருகே நின்றிருந்த மித்ரனைத் தீண்டியது. இருவரின் விழிகளும் ஆழமாய்க் கலந்து மீண்டன.

 

மித்ரனின் பார்வையில் மெச்சுதலைக் கண்டதும் ‘இந்தா பிடி’ என அவளுக்கு என்னவோ ஆஸ்கார் பரிசைக் கொடுத்துவிட்டதைப் போல் மனம் துள்ளியது.

 

‘அடங்குடி… அவன் சாதாரணமாகப் பார்த்து வைத்திருக்கப் போறான். நீ அதைப் பார்த்து மனதைத் தறிகெட்டு ஆட விடாதே’ என மனசாட்சி அவளைக் கேலித் தீயால் பொசுக்கியது. ஆகவே மனதை இழுத்துப் பிடிக்க முயன்றாள்.

 

“தர்ஷ், நீ சும்மா பந்தா விடறன்னு நினைச்சேன். ஆனா ஐ ஆம் ரியலி இம்ப்ரஸ்ட்” என்றான் வத்சன்.

 

திவ்யதர்ஷினியின் பார்வை அவனைத் தாண்டி போவதைப் பார்த்த வத்சன் பேசியவாறே திரும்பினான். அங்கே ஒருவித பாராட்டுதல் பார்வையுடன் மித்ரன் நின்று கொண்டிருக்க, “மைக்கல் ஜாக்சனுக்கு எப்போதிலிருந்து உன்னிகிருஷ்ணன் எல்லாம் பிடிக்க ஆரம்பிச்சது?” எனக் கிண்டலாக வினவினான்.

 

“ம்ம்.. டப்பாங்குத்து ஆடறவனுக்கு பரதநாட்டியம் பிடிக்க ஆரம்பிச்சதுல இருந்து” என்றான்.

 

“ப்ப்பா.. என்னா ஃபயரு… என்னா கியரு? செம பாஸ்ட்டா போகுது” எனச் சிரித்துக் கொண்ட வத்சன், “சித்தி, எனக்குப் பசிக்குது. வாங்க சாப்பிடலாம்” என உணவறையை நோக்கிச் சென்றான்.

 

உள்ளே செல்லும் திவ்யதர்ஷினியைப் பின் தொடர்ந்து சென்ற மித்ரன், “ரொம்ப நல்லா ஆடின” எனப் பாராட்டினான்.

 

‘இவன் தன்னையா பாராட்டினான்?’ என்பதைப் போல் சுற்றும் முற்றும் பார்க்க, “உன்கிட்டே தான் பேசிட்டு இருக்கேன்” என மென்மையாக முறுவலித்தான்.

 

இப்போதெல்லாம் இவன் அடிக்கடி புன்னகைக்கிறான். இப்படியே அனுதினமும் அவன் சிரித்தாலே போதும். அந்த நாளும் இடமும் பிரகாசமாக இருக்கும். அவன் புன்னகையைச் சேர்த்து வைத்தால் மின்மினிகள் தோற்றுப் போகும் அளவுக்கு வெளிச்சம் கிடைக்கும் என அவள் எண்ணம் வளர்ந்து கொண்டே போக, திடுக்கிட்டாள்.

 

அவன் அனுதினம் சிரித்தால் உனக்கென்ன, அல்லது, அணுகுண்டு வைத்து சிரிப்பைத் தகர்த்தால் உனக்கென்ன என அவள் மூளை கேலி செய்தது.

 

“தேங்க்ஸ்” எனப் பட்டென்று சொன்னவள், உணவறையை நோக்கி நகர்ந்தாள்.

 

*****

முடங்கியிருந்த மீனாட்சியின் வேலைகள் ஒவ்வொன்றும் தங்கு தடையில்லாமல் சுழல ஆரம்பித்தது. எந்தத் தடையுமில்லாததால் மீண்டும் நிறைய வரைய ஆரம்பித்தார். பத்திரிக்கைகளிலிருந்து தொடர்பு கொள்பவரிடம் திவ்யதர்ஷினியே பேசி, அனைத்தையும் ஒழுங்குபடுத்திவிடுவதால் அவருக்கு மற்றச் சிக்கல்கள் எதுவும் எழவில்லை.

 

அவர் வரைவதில் வரும் பணம் முழுவதையும் கொடையாகக் கொடுத்துவிடுகிறார் என்று தெரிந்ததும் திவ்யதர்ஷினிக்கு மீனாட்சியின் மேல் மட்டற்ற அன்பும் நிறைந்த மரியாதையும் தோன்றின.

 

அன்று மீனாட்சி மேலிருக்கும் அழுவலக அறைக்குள் அவர் வரைந்து பாதியில் விட்டிருந்த ஓர் ஓவியத்தை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார். அங்கே அவள் சென்றபொழுது அங்கிருந்த மேஜையின் மேலே பாதி வரைந்து விடப்பட்டிருந்த ஒரு கட்டட வரைபடம் இருந்தது.

 

அவளின் ஆர்வம் தலைதூக்க அப்படியே குனிந்து பார்த்தாள். எவ்வளவு நேரம் அதிலேயே மூழ்கியிருந்தாளோ, “என்ன பார்த்துட்டு இருக்க?” என்ற குரலில் துள்ளி விழுந்தாள்.

 

மித்ரன் குளித்து முடித்துப் புத்துணர்ச்சி கலந்து நின்று கொண்டிருந்தான். “சாரி, பயமுறுத்த நினைக்கலை” என அவன் சொல்ல,

 

“இல்ல, டிசைன் நல்லா இருந்தது. ஆனா சில தப்பிருக்கு. அதான் பார்த்துட்டு இருந்தேன். மாத்தி வச்சா நல்லாயிருக்கும்” என அவள் சொல்ல, அவளைக் கூர்ந்து அளவிட்டான்.

 

‘நீ எவ்வளவு பெரிய அப்பாடக்கராக இருந்தாலும் பரவாயில்லை. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பதை போல் நிமிர்ந்து நேரான பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள் திவ்யதர்ஷினி.

 

இவளுக்கு என்ன தெரியும் என்று இப்படிச் சொல்கிறாள்? இத்துறையில் அவனை மிஞ்ச யாராவது இருக்கிறார்களா என்ன என இறுமாப்புடன் அவளை நோக்கினான். ஒருவேளை சும்மா படம் போடப் பேசுகிறாளோ என எண்ணியவாறே, “அப்படியா? என்ன தப்பு?” என மித்ரன் சற்று கடுப்புடன் வினவினான்.

 

என்ன தான் இவளை மனதிற்குப் பிடித்திருக்கிறது என்றாலும் அவள் சொல்லும் அனைத்தையும் ‘ஆவ்’ என்று பார்த்துக் கொண்டிருக்க அவன் ஒன்றும் மதி மயங்கிக் கிடக்கவில்லை. இது வேலை சம்பந்தப்பட்டது அதில் யார் குறுக்கிட்டாலும் அவனால் பொறுத்துக் கொள்ள முடியாது.

error: Alert: Content selection is disabled!!