இது தான் வாய்ப்பென்று திவ்யதர்ஷினி மடமடவென்று பேச ஆரம்பித்தாள். ஏனோ தானோ என்று கேட்க ஆரம்பித்த மித்ரனுக்கு அவளின் கட்டட கலை ஞானம் பார்த்து வியப்பில் விழுந்தான்.
அவளின் கருத்துகள் அனைத்தும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கவே அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. ஆகவே அவள் சொல்லியதை வைத்து வரைந்திருந்ததை மாற்றி அமைத்தான்.
இப்போது அவனுக்கும் திருப்தியாக இருந்தது. நேற்று இரவெல்லாம் இதை வைத்து மல்லுகட்டிக் கொண்டிருந்தான். வாடிக்கையாளருக்கு அவர்கள் நிறுவனம் தந்த வடிவமைப்பு சுத்தமாகப் பிடிக்கவில்லை.
அவன் நிறுவனத்தில் வேலை செய்யும் பலரும் ஒன்று சேர்ந்து பலவித மாற்றங்களைச் செய்தும் வாடிக்கையாளர் மறுத்துவிட்டார். கடைசி முயற்சியாக அவனே அதை எடுத்துப் பார்க்கலாம் எனக் கடந்த இரண்டு தினங்களாக அதை வைத்துப் போராடிக் கொண்டிருந்தான்.
ஆனால் பார்த்த சில நொடிகளிலேயே அதிலுள்ள குறையைக் கண்டுபிடித்துவிட்டாளே என்று மெச்சிக் கொண்டான். இத்தனைக்கும் அந்த வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு என்னவென்று கூட அவன் சொல்லவில்லை.
“தேங்க்ஸ் திவ்யா. ஒரு வாரமா இதை வச்சு திணறிட்டு இருந்தோம். ஒரு பிரியோஜனமுமில்லை” என அவன் அவளைப் பாராட்ட,
“நான் எதுவும் பெருசாப் பண்ணலை. நீங்க அதையே பார்த்துட்டு இருக்கிறதால உங்களுக்கு வேற கோணத்துல யோசிக்கத் தோணியிருக்காது. நான் புதுசா பார்க்கிறதால எனக்கு உடனே எங்கே மாத்தி அமைக்கலாம்னு தெரிஞ்சிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்களே கண்டுபிடிச்சிருப்பீங்க” என அவள் பெரிதாக எதுவும் செய்யவில்லை என்பதைப் போல் சொன்னாள்.
அவள் மேல் மரியாதை கலந்த அன்பு பெருகியது அவனுக்கு. ‘நிறுவனத்தின் முதலாளி என்ற பந்தா இல்லாமல் அவள் சொன்ன கருத்துகளை உடனே ஏற்றுக் கொண்டானே. உடனே நன்றியும் தெரிவிக்கிறானே. கொஞ்சம் நல்லவன் போல’ என அவளுக்கும் அவன் மேல் மரியாதை தோன்றியது.
“என்ன படிச்சிருக்க திவ்யா?” என அவன் கேட்க அவள் தன் படிப்பைப் பற்றிச் சொன்னாள். அவனுக்கு ஏதோ நோபல் பரிசு கிடைத்ததைப் போலிருந்தது அவள் பதில். அவர்களுக்குள் அனைத்துமே ஆரம்பத்தில் ஏழாம் பொருத்தமாய் இருந்தது.
அதுவும் அவள் மேல் தோன்றும் ஈர்ப்பென்று அவனால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை. ஆகையினால் அவளை எட்ட நிறுத்தினான். அவள் பள்ளி ஆசிரியராக இருப்பாள் என்று நினைத்திருந்தான் மித்ரன். இல்லையென்றால் ஏன் சைகை மொழியைக் கற்று வைத்திருக்கப் போகிறாள்?
இப்போது பார்த்தால் அவர்களை விட வேறு யாருக்கும் பலத்த பொருத்தம் இருக்கவே முடியாது என்று திட்டவட்டமாக நம்பினான். மனதுக்கு இதமளிக்கிறாள். உயிருக்குள் இன்னொரு உயிரைச் சுமப்பதைப் போன்ற ஆனந்தக் களிப்பை அளிக்கிறாள். தனிமையை இனிமையான பேச்சால் அழிக்கிறாள். கட்டட கலையில் புத்திசாலியாகவும் திகழ்கிறாள்.
இதைவிட அவனுக்கு வேறு என்ன வேண்டும். இது நாள் வரையில் சுவாரசியமற்ற அவன் வாழ்க்கைப் பாலைவனத்தில் ஆனந்த நீரை ஊற்ற வந்துவிட்டாள். மொத்தத்தில் தன் வாழ்க்கையில் வண்ணம் பூச வந்த சித்திரம் இவள்.
அப்போது திவ்யதர்ஷினியின் அலைபேசி சிணுங்க, அதையெடுத்து, “ஹே சந்தோஷ், எப்படி இருக்க? இப்போ தான் உனக்கு ஃபோன் பண்ணத் தெரிஞ்சதா? என்ன அங்கே போனதும் டெல்லில இருக்கிற பொண்ணுங்களைப் பிக்கப் பண்ணவே நேரம் சரியா இருக்குதா உனக்கு?” என அவள் நீண்டு கொண்டு போன ரயில் பெட்டியைப் போல் பேசிக் கொண்டே சென்றாள்.
அதைக் கேட்ட மித்ரனுக்குக் குளுமையாக இருந்தது. பின்னே அவனுக்கு சந்தோஷை நினைத்து பயமாக இருந்ததே. எங்கே இவள் அவனை விரும்புகிறாளோ, அல்லது, சந்தோஷுக்கு அவளைப் பிடித்திருக்கிறதோ எனக் குழப்பிக் கொண்டிருந்தானே.
ஆனால் இவள் பேசுவதைப் பார்த்தால் அப்படியெல்லாம் அவர்களுக்குள் இருப்பது போல் தெரியவில்லை. வெறும் நண்பர்களாகவே பழகுகிறார்கள் என மித்ரனின் உள்ளம் உல்லாசத்தில் திளைத்தது.
“நீ வேற தர்ஷ், வேலை, ட்ரைனிங்ன்னு சரியா இருக்கு. இதுல எங்கே பொண்ணுங்களைப் பார்க்கிறது? பொண்ணுங்க என்னைப் பார்த்துப் பேசினாக் கூட பதில் சொல்ல முடியலை” என அவன் மறுமுனையில் பாவமாகச் சொன்னது மித்ரனின் செவிகளிலும் விழுந்தது.
குற்றால அருவியாய் மனதில் சாரலடித்து குளுகுளுவென்று இருந்தது அவனுக்கு.
அன்றிலிருந்து மித்திரனும் திவ்யதர்ஷினியும் இணக்கமாகப் பழக ஆரம்பித்திருந்தனர். அடிக்கடி பேசிக் கொண்டனர். அவன் மிகவும் இயல்பாக நிறுவனத்தில் நடக்கும் வேலைகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டான். அவளுக்கும் அதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.
அவளாக வந்து பேசவில்லை என்றாலும் அவன் வேலையைச் சாக்காக வைத்துக் கொண்டு அவளிடம் அடிக்கடி பேசச் சென்றான். அவளும் கட்டடக் கலையைப் பற்றி பேச ஆரம்பித்தால் பேச்சை நிறுத்தவே மாட்டாள். மொத்தத்தில் அவர்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை.
திவ்யதர்ஷினிக்குத் தானே சொந்தமாக ஒரு கட்டட நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது என்பதை அறிந்து கொண்டான் மித்ரன். என்ன பணம் சற்று பற்றாக்குறையாக இருக்கிறது என்பதால் தாமதமாகிறது என்று சொன்னாள்.
கூடிய விரைவில் தொடங்கப் போவதாக அவள் சொல்லவும், அவளுக்கு உறுதுணையாக அவன் முற்றிலும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதற்குள் அவன் மனதில் உள்ளதை அவளிடம் சொல்லி அவளை நெருங்கிவிட வேண்டும் எனத் திட்டமிட்டுக் கொண்டான் மித்ரன்.
மித்ரனிடமிருந்து கற்றுகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன அவளுக்கு. இப்படியே நல்லவிதமாக கிட்டதட்ட நான்கு மாதங்கள் கடந்திருந்தன.
மித்ரனும் திவ்யதர்ஷினியும் ஒருநாள் தொழில் சம்மந்தப்பட்ட விஷயம் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில் வத்சன் அங்கே வந்தான். “தர்ஷ், ஒரு நிமிஷம் இங்க வா, உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்” என அவளை அழைக்க, மித்ரனுக்குக் கோபம் வந்துவிட்டது.
‘என்னவோ அவளுக்குச் சொந்தமானவள் போல் அழைக்கிறானே’ என வத்சனை முறைத்துப் பார்த்தான்.
திவ்யதர்ஷினியும் அவன் அழைத்தவுடனே கிளம்பியதும் மித்ரனின் கோபம் அதிகரித்தது . வத்சன் அவளிடம் கிசுகிசுப்பான குரலில் இரகசியம் பேசிவிட்டு கிளம்பிவிட்டான். திரும்பி வந்த திவ்யதர்ஷினியிடம், “அவன்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு” என்றாள்.
‘யாரிடமிருந்து ?’ என்பதைப் போல் முழித்தவளிடம், “அவன் என்னை விட ரொம்ப நல்லவன். எனக்கு ரொம்பப் பயமா இருக்குது” என்றான் மித்ரன்.
அப்படிப் பார்த்தால் இவனிடமிருந்து தானே விலகியிருக்க வேண்டும். இது என்ன லாஜிக் என அவனையே புரியாமல் நோக்கினாள். அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்று கூடிய விரைவிலேயே அவளுக்குப் புரிந்தது.
வத்சன் இரண்டு வாரம் வெளியூர் பயணமாக மும்பை செல்லவிருப்பதாகவும், அவன் சித்தி மீனாட்சியின பிறந்த நாள் வரப்போகிறது என்றும் சொன்னான். அவன் திரும்பி வருவதற்கு மறுநாள் தான் மீனாட்சியின் பிறந்தநாள்.
ஆகவே அவன் திரும்பி வரும்பொழுது வீட்டைத் தன் சித்திக்குச் சந்தேகம் வராத வகையில் சற்று அலங்கரித்து வைக்குமாறு கேட்டுக் கொண்டான். அதற்கு உதவுவதற்கு அவள் சம்மதம் தெரிவித்தே அப்படி ரகசியம் பேசிக் கொண்டிருந்தார்கள். அது புரியாத மித்ரனுக்கு எரிச்சல் சுரந்தது.
வத்சன் இரண்டு வாரங்கள் அங்கே வரமாட்டான் எனத் தெரிந்ததும் மித்ரனுக்குக் குதூகலாமாக இருந்தது. கூடவே நிம்மதியாகவும். அவன் வருவதற்குள் இவள் மனதில் இடம்பெற வேண்டும் என்று நினைத்தான் மித்ரன்.

