என்றும் உன் நிழலாக 1- 1

1

 

‘‘அம்மா…’’

தயக்கத்தோடு அழைத்தபடி அருகில் வந்தமர்ந்த மகனைக் கேள்வியாகப் பார்த்தார் புவனி.

‘‘சாப்பிட்டீங்களா ரஞ்சன்? அப்பாவும் தம்பியும் எங்க?’’

‘‘ம்ம்…எல்லாரும் சாப்பிட்டிட்டம், அப்பாவின்ட ஃப்ரெண்டோட கதச்சிக் கொண்டு நிற்கீனம்.’’ என்றவன், ‘‘சரியா ஸ்னோ கொட்டுதம்மா…அதுதான்…’’ தயக்கத்துடன் இழுத்தான்.

‘‘இதென்ன தம்பி உங்கட கதை? இந்த நடு வின்டரில ஸ்னோ கொட்டாமல் வேறென்ன நடக்கும்? இதெல்லாம் ஒரு புதினமா?’’

மகனின் தயக்கம் உணர்ந்தே கேலி செய்தார் புவனி.

‘எதுக்காகச் சொல்லுறன் என்று தெரிஞ்சிருந்தும் இப்பிடிக் கதைக்கிறாவே!’ சிறு கோபத்துடன் நோக்கினான், அவன்.

‘‘அதில்லம்மா…நிதி பாவம்; சைக்கிளில எப்பிடி வீட்டுக்குப் போவாள்? நான் போய், அவள வீட்டில இறக்கி விட்டுட்டு வாறனே!’’ மீண்டும் தயக்கமும் தவிப்புமாகக் கேட்டான்.

தன் பதில் தெரிந்தே வினவும் மகனில் சுறுசுறுவென்று கோபமேறியது புவனிக்கு. என்ன செய்வது? இருக்குமிடம் கருதித் தன்னுள் எழுந்த ஆத்திரத்தை வெகுவாகவே அடக்கிக்கொண்டார்.

இருந்தாலும், ‘‘என்ன தம்பி இது சின்னப்பிள்ளை போல? ஸ்னோவில கரைய அவள் என்ன குழந்தையா? அல்லது இந்த நாடு பழகாதவளா? அவளை விட்டால் ஊரையே மேச்சிட்டு வருவாள்.” அடிக்குரலில் சொன்னபடி மகனை முறைத்தார்.

“நீ இப்பப் போய் அவள ஏற்றியிறக்கத் தேவையில்ல; உன்ர வேலையைப் பார்!” கட்டளையிட்டவர், “இங்க எல்லாம் முடியவிட்டுத் தான் போக முடியும் ரஞ்சன்; இடையில் வெளிக்கிட்டுப் போனால் நம்மைப்பற்றி சரளா என்ன நினைப்பாள் சொல்லு? கொஞ்சம் கூட மரியாதை தெரியாமல் கதைக்கிற.’’ கண்டித்தார்.

தாயின் பதில் ஏற்படுத்திய கோபத்தைக் கடினப்பட்டு அடக்கிக்கொண்டான் ரஞ்சன். பெரும்பாலான நேரங்களில், அவரின் சொல்லை மீறி நடக்க விரும்பமாட்டான் இவன். அப்படி நடந்தாலும் அது அவரின் கோபத்தை அதிகரித்து விடுவதை நன்கறிந்திருந்தவன், விசுக்கென்று அவ்விடம் விட்டகன்று, திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்த மண்டபத்தை விட்டு வெளியில் வந்து வானிலிருந்து பூவாய் உதிர்ந்து கொண்டிருக்கும் பனித்துகள்களையே பார்த்திருந்தான்.

குளிர்க்கோட்டைப் போடாது வெளியில் வந்திருந்ததால், உடல், சுளீரென்று ஏறிய குளிரால் விறைத்தது. அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், ‘இந்த ஸ்னோவில நிச்சயம் சைக்கிளில போக ஏலாது; இப்ப என்ன செய்யிறது?’ என, அவன் சிந்தையெல்லாம் மைத்துனி நிதியைச் சுற்றியே சுழன்றது.

‘எப்பவும் போல வசி அண்ணாட்டத் தான் கேட்க வேணும்; இல்லாட்டி நிதி பாவம், தவிச்சுப் போவாள்.’ என மனதில் முனகியவனுக்கு, பெரியதாயாரின் மகன் வசிதான் இப்படியான நேரங்களில் கை கொடுப்பான்.

“அவளுக்கும் சரியான பிடிவாதம்; நான் தான் அவளுக்கும் அம்மாவுக்கும் இடையில கிடந்து மண்டையைப் போட்டு உருட்டிக்கொண்டு தவிக்கிறன்.” ஆதங்க முணுமுணுப்பும் தொடர்ந்தது.

“சைக்கிளை எடுக்கும் போதே, வேணாம் பஸ்சில போ என்று எத்தனை தரம் சொன்னன். இப்ப எல்லாம் நான் சொல்லுறது எதுவும் அவள்ட காதில விழுறதே இல்லை.” சலிப்பாகக் கோபப்பட்டவாறே, தமையனும், சுமி ஜீவானந்தம் தம்பதிகளின் மகனுமான வசிகரனுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

அதேநேரம், பெயரைப் போலவே உருவமுடைய இருபத்தியைந்து வயது இளைஞனான வசிகரன், நெதர்லாந்து நாட்டின் வடபகுதியில் ‘ஸ்காகன்’ என்ற இடத்திலுள்ள தம் அலுவலக அறையைப் பூட்டிவிட்டு வெளியேறி, இடைவிடாது பொழிந்த பனித்தூவல்களில் நனைந்தவாறே கார் நிறுத்தத்தை வந்தடைந்தவன், காரை மூடியிருந்த பஞ்சுப்பனியை அதற்குரிய வளிப்பானால் அகற்றிவிட்டு, “அப்பாடா… இந்தமுறை நல்லாத்தான் கொட்டுது!” முணுமுணுத்துக்கொண்டே காரிலேறி, ‘ஜூலியானா டொரப்’ என்ற இடத்திலிருக்கும் தன் வீட்டை நோக்கிப் பயணப்பட்டான்.

இவன், பல்கலையில் முகாமைத்துவப் படிப்பை(மனேஜ்மன்ட்) படித்துக் கொண்டிக்கும் போதே, தந்தையின் ‘வாகன ஓட்டுனர்’ பயிற்சிப் பாடசாலையை அவருடன் சேர்ந்து கவனித்துக்கொண்டவன், தற்போது, அதோடு இணைந்ததாக நான்கு டாக்ஸிகள், இரண்டு மினிவான்கள், இரண்டு பஸ்கள் என, நிறுவனத்தை விரிவுபடுத்தி வெற்றிகரமாக நடத்தி வருகிறான்.

இவன் அக்கா, திருமணம் முடித்து இரு குழந்தைகள் கணவன் என்று இலண்டனில் வசித்து வருகிறாள்.

தங்கை நிர்மலா, திருமணம் முடித்து இவர்கள் வீட்டிற்கு அருகிலேயே வசித்து வருகிறாள்.

இவனுக்கெனத் தமக்கையின் மைத்து னியைப் பெண் பார்த்து வைத்திருக்கும் பெரியவர்கள், இலண்டனில் வாழும் அப்பெண்ணின் படிப்பு முடிவடைவதற்கு இன்னமும் ஒருவருடம் இருப்பதாலும், இவனும் நேரகாலம் பார்க்காது தம் நிறுவன விரிவாக்கத்தில் ஈடுபட்டிருப்பதாலும், அவன் திருமணத்தைக் காணும் ஆவலைக் கட்டுப்படுத்திப் பொறுமையாகக் காத்திருக் கின்றனர்.

அலுவலகத்திலிருந்து அரைமணி நேரக் காரோட்டத்தில், ‘ஜூலியானா டொரப்’ இல் உள்ள மூன்று தளங்களைக் கொண்ட அழகிய பெரிய மாளிகையின் முன்னால் வந்து காரை நிறுத்தியவன், வீட்டின் கேட்டைத் திறந்து, பெரிய தோட்டத்தைக் கடந்து கராஜில் காரை விட்டுவிட்டு, கராஜ் வாயிலை மூடி விட்டு உள்பக்கமாக நடந்து வீட்டினுள் நுழையவும், அவன் கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது.

மிகவும் களைத்துப் போய் வந்திருந்தவன், சிறு சலிப்புடன் தான் யார் அழைப்பதென்றே பார்த்தான்.

‘இவன் ஏன் இப்ப எடுக்கிறான்? எல்லாரும் கலியாண வரவேற்புக்குத்தானே போயிருக்கீனம்! என்னவா இருக்கும்?’ நினைத்தபடி சகோதரனின் அழைப்பை ஏற்றவன், மறுபுறம், கெஞ்சல் குரலில் ரஞ்சன் சொன்னதைக் கேட்டதும் சலிப்பில் முகம் சுழித்தான்.

‘‘சரிடா…சரி…இப்பத்தான் உள்ளுக்கு வந்தன், ம்ம்…திரும்பிப் போறன். நீ வை!’’ என்று சொல்கையில், முகம் பிரதிபலித்த சலிப்பு குரலிலும் வந்திருந்தது. இருந்தாலும் சற்றும் தாமதிக்கவில்லை.

‘‘இவனுக்கு இதுவே வேலையாப் போச்சு!’’ என்ற முணுமுணுப்போடே காரை வெளியில் எடுத்து, ‘’ஸ்காகன் மக்டொனால்ட்ஸ்’’(McD) நோக்கிச் செலுத்தத் தொடங்கினான்.

இது இவர்களிற்கிடையில் அடிக்கடி நடப்பது தான்! ரஞ்சன் இவ்வாறு உதவி கேட்கும் போதெல்லாம் அதுவும் நிதிக்காக என்றால், எவ்வளவு வேலைகள் இருந்தாலும் களைத்துப் போயிருந்தாலும் வெளியில் சலிப்பைக் காட்டிக்கொள்பவன் ஒரு போதும் மறுப்புச் சொல்வதில்லை; உடனே புறப்பட்டுவிடுவான்.

காரிருளில், வீசியடிக்கும் பனித்துகள்களைத் தன்னில் தாங்கியவாறே விரைந்தது, அவன் கார்.

ஆங்காங்கே மாநகரசபை வாகனங்கள் உப்பைத் தூவி தூவி பாதைகளைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தன. ஆனாலும், அருகிலுள்ள சிறுசிறு வீதிகள், சைக்கிள் பாதைகள் என்பன தடித்த பனிபோர்வை போர்த்தே காணப்பட்டன.

நெதர்லாந்து வாழ் மக்கள் எவ்வளவு வசதி இருந்தாலும், ஆளுக்கொரு கார் வைத்திருந்தாலுமே சைக்கிளைப் பயன்படுத்தக் கூடிய போது அதற்கே முன்னுரிமை வழங்குவார்கள். இங்கு சைக்கிள் பாவனை அதிகமாக காணப்படுவதால் இப்போக்கு வரத்துக்கெனத் தனியாகப் பாதைகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. ஆனாலும், கடும் பனிப்பொழிவில் அவற்றையெல்லாம் சுத்தப்படுத்துவது என்பது இலகுவானதல்லவே! அதனால், சைக்கிள் பாவனை என்பது கடினமானதாகவே இருக்கும்.

‘இதுவே பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்னென்றால், மார்கழியில் இருந்து பங்குனி வரையிலும் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்; இப்ப, குளிர் இருந்தாலும், மார்கழிக் கடைசியில அல்லது தை, மாசி மாதங்களில சில நாட்கள் தொடர்ந்து கொட்டுவதோட பனியும் அமைதியடைந்து விடும்.’ என எண்ணியவனுக்கு, நிதியை நினைக்கையில் எரிச்சல் தான் வந்தது.

‘‘முட்டாள்…முட்டாள்! பனி கொட்டும் என்று தெரிஞ்சும் சைக்கிளில வந்திருக்கிறாள் என்றால், அவளுக்கு என்ன மூளை குழம்பீட்டுதா? இல்ல கேட்கிறன். மனசில என்ன நினைச்சுக்கொண்டு இப்பிடியெல்லாம் செய்யிறாளோ! சித்தப்பாவும் எதிலும் தலையிடாமல் பார்த்துக்கொண்டிருக்க, இவன் ரஞ்சன் தான் பாவம்!’’ என, ஆசை தீரும் மட்டும் அவளுக்கு அர்ச்சனைகள் செய்தபடி, ரஞ்சன் சொன்ன நேரத்துக்கு இருபது நிமிடங்கள் முன்னதாகவே மக்டொனால்ட்சை வந்தடைந்தவன், காரை நிறுத்திவிட்டு ‘மக்’கினுள் சென்று அங்கு ஓரமாயிருந்த மேசையொன்றில் அமர்ந்தவனின் விழிகளோ, நிதி எங்காவது தென்படுகிறாளா என, ஒருமுறை சுற்றிச்சுழன்று ஏமாற்றத்துடன் திரும்பின.

வயிறு வேறு ‘என்னில் கருணை காட்டேன்’ என்று முனகியதில், குளிருக்கு இதமாக ஒரு கறுப்புக்கோப்பியை வாங்கிப் பருகியவாறே அவள் வரும்வரை காத்திருக்கத் தொடங்கினான்.

தன் மைத்துனர்களான ரஞ்சன் மற்றும் அவன் சகோதரன் ரதீஷ் என்போரின் பரிவான அதட்டல்களுக்கும், வசியின் அக்கறையில் வரும் கோபங்களுக்கும் உரித்தானவளான நிதி என்பவள், பத்தொன்பது வயது நிரம்பிய பருவ மங்கை!

error: Alert: Content selection is disabled!!