சிறுபிராயத்திலிருந்து வாழ்வில் சந்தித்துக்கொண்ட பிரிவுகளாலும் இழப்புக்களாலும் தன் நிஜத்தன்மையை, இயல்பை இழந்து ஒரு இறுக்கத் தன்மை உடையவளாக மாறிய இளம் குருத்து இவள்!
சிரிப்பையும் கலகலப்பான பேச்சையும், இளவயதுக்காரருக்கே உரிய சந்தோச ங்களையும், பொழுதுபோக்குகளையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுபெண் அவள்!
இவற்றையெல்லாம் மறந்து எனச் சொல்வதை விட, அவள் இவற்றையெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை என்பதே உண்மையாகும்.
இவற்றுக்கெல்லாம் அவள் ஒருபோதும் ஆசைப்பட்டதுமில்லை; அதற்கு அவளுக்கு நேரமுமில்லை!
தான் உயிராய் நேசித்தத் தமையனை, தம்பி தங்கைகளை, அம்மா அப்பாவைப் பிரிந்து, என்றைக்குத் தன் மாமா இந்திரனுடன் நெதர்லாந்துக்கு வந்தாளோ, அன்றிலிருந்து அவள் புன்னகையைத் தொலைத்து விட்டாள்; தன்னைத் தன்னுள்ளே அடக்கி ஆளப் பழகிக்கொண்டாள்.
இலங்கையில், அவர்களின் சின்னஞ்சிறு ஒட்டு வீட்டில் வசிக்கையில், மூன்றுவேளையும் உண்பதற்குப் போதியளவு உணவு கிடைக்காதிருந்தது; வறுமையின் கரங்களின் இறுகிய பிடிக்குள் பிணைக்கப்பட்டிருந்தார்கள் தான்; ஆனாலும், உவகையும் நிம்மதியும் உறவு பாராட்டி மகிழ்ந்திருந்தது; குறும்புப் புன்னகையும் சந்தோசமும் இவளை விட்டுப் பிரியாது கூடவே இருந்தன.
இன்றோ, வசதி வாய்ப்புகள் இருக்கின்றன; மகிழ்வும் மலர்வும் இவளருகிலும் வரேன் என்கின்றதே!
அதை, அவளிடம் திரும்பக்கொண்டு வர, அவள் மீது மிகுந்த நேசம் கொண்ட, கூடவே இருக்கும் மாமாவின் மகன்களும், அவள் முகம் திருப்பினாலும் வலியச் சென்று இழுத்து வைத்துக் கதைக்கும் வசியும், எவ்வளவோ முயன்றாலும் கிடைத்த பலன் தான் பூச்சியமாக இருக்கின்றது.
அவளை விட்டுப் பல வருடங்களுக்கு முன் மறைந்து விட்டாலும், இன்றும் அவள் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவள் தமையன். அவன் அடிக்கடி, ‘‘ஏன் நிதி உனக்குச் சிரிக்காமல் கதைக்கத் தெரியாதா? இது என்ன எல்லாத்துக்கும் சிரிக்கிறாய்மா? பேசினாலும் ஏசினாலும் (திட்டினாலும்) சிரிக்கிற!’’ என்று கேலி செய்வது, அடிக்கடி அவள் நினைவில் மின்னி மறையும்.
இந்த நினைவு வந்து போகும் போதெல்லாம் அவள் விழிகள் பனித்துவிடும்.
மனமோ, ‘அண்ணா…நீ போகும் போது அந்தச் சிரிப்பையும் கொண்டு போய்ட்ட!’ என்று, இயலாமையுடன் கூவிச் சொல்லும்.
தன்னருகில் வந்து நின்ற தன் நெதர்லாந்து நாட்டுத் தோழியும் ஒன்றாகப் படிப்பவளுமான சனாவைப் பார்த்துத் தலையாட்டியபடியே, ‘டிரைவ் துறு’வில் வந்து நின்ற காரிலிருந்து என்னென்ன தேவை என்று கேட்டுப் பதிந்து கொண்டிருந்த நிதி, அந்தப் பில்லைப் போட்டு முடித்து அருகில் நின்ற டேமியனிடம் கொடுத்தவள், ஹெட்போனைக் கழட்டிச் சனாவிடம் கொடுக்க, அவளும் அதை வாங்கிப் போட்ட படி, ‘‘எப்படிப்பா போகப் போறாய், பனி சரியாக் கொட்டுது; இப்ப சைக்கிள் எல்லாம் ஓட்ட ஏலாது.’’ என, நெதர்லாந்து மொழியில் சொன்னவளின் குரலில், தோழி பத்திரமாய் வீடு போய்ச் சேர வேண்டுமே என்ற ஆதங்கமும் அக்கறையும் காணப்பட்டது.
‘‘ஓட ஏலாட்டி உருட்டிக்கொண்டு போக வேண்டியதுதான்!’’ சாதாரணமாய்ச் சொன்னவளை ஆச்சரியப் பார்வை பார்த்தாள், சனா.
‘‘சொன்னாக் கேள் நிதி; பொறு, நான் என் பப்பாவுக்கு(அப்பாவுக்கு) ஃபோன் செய்து உன்னக் கூட்டிக்கொண்டுபோய் விடச் சொல்லுறன்.’’ கரிசனையாகத் தொடர்ந்தாள்.
‘‘வேணாம் …வேணாம்.” சட்டென்று மறுத்த நிதி, “நீ உன்ர வேலையைப் பார்; நான் பார்த்துக் கொள்ளுறன்.’’ என்றவாறே அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.
தோழியின் பிடிவாதம் தெரிந்த சனா, ‘‘கவனம்பா…கவனம்; வீட்டுக்குப் போய்க் கால் பண்ணு சரியா?’’ என்றுவிட்டு, அடுத்து வந்து நின்ற காரிலிருந்து ஆர்டரை எடுக்கத் தொடங்கினாள்.
தலையாட்டியவாறே அங்கிருந்து அகன்றவள், தங்கள் ஓய்வறைக்குச் சென்று தனது குளிர் ஆடைகளை அணிந்து, கைப்பையையும் எடுத்துக்கொண்டு மேற்பார்வையாளரிடம் விடைபெற்று வெளியில் வரும் போது மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.
‘மக்’இன் முன் பகுதியில் மிகச் சொற்பமானவர்களே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, தன்பாட்டில் நுழைவாயிலை நோக்கிச் சென்றவளை வேகமாக நெருங்கினான் வசி.
‘‘ஹாய் மேடம்! எப்படி இருக்கிறீங்க? என்ன இவ்வளவு வேகமாகப் போறீங்க? அவசரமோ!’’
எப்போதும் போலவே அவன் குரலில் சீண்டலும் கேலியும் கலந்து கிடந்தன!
அவனை அங்கு எதிர்பார்த்திராததில் சற்றே திடுக்கிட்டவளின் நடை மெதுவாகியிருந்தது.
அவனது கிண்டல் புரிந்தும் வழமைபோல கண்டு கொள்ளவில்லை. ‘‘ஹாய்.’’ சிறு முறுவலோடு உதிர்ந்த வார்த்தை, ‘‘நீங்க இங்க?’’ என்றதையும் சேர்த்துக் கொண்டது.
‘‘நானா? இங்கயா? அது வந்து மேடம்…எனக்கு வேலையே இல்லை பாருங்க! வெட்டியாப் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறன் என்று என்ர ஆசைத் தம்பி டிரைவர் வேலை பார்க்கச் சொன்னான்; அதுதான் மேடத்தை கூட்டிக்கொண்டு போக வந்தனான்!’’
இப்போது வசியின் குரலில் கிண்டலுடன் இலேசான கோபமும் கலந்திருந்தது,
‘அய்யோ கடவுளே! எனக்கு இருக்கிற தலைவலி போதாதா? இந்த ரஞ்சனுக்கு எப்பிடி விளங்க வைக்கிறது?’ மனதில் குமைந்தாள் நிதி.
இங்கு வாழும் அவர்கள் உறவுகள் அனைவருமே மிகுந்த மரியாதை வைத்திருக்கும் வசியோடு, எப்போதுமே, அவன் எவ்வளவுதான் கிண்டல் கேலியாகக் கதைத்தாலுமே தேவையில்லாமல் கதைக்காதவள், இன்றும் அதே ஒதுக்கத்துடன் பதில் சொல்ல முனைந்தாள்.
‘இல்லை..நான்…நா…எனக்குப்பிரச்சனை இல்ல; நான் போய்க் கொள்ளுவன். நீங்க ஏன் வீணா…’’ மாறிமாறித் தடுமாறிக் கதைத்தவளை முறைத்தான், அவன்.
‘‘இங்க பாரும் நிதி, நீர் சொல்லுறதுக்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டுறதுக்கு நான் ரஞ்சன் இல்ல சரியா? நான் இன்னும் சாப்பிடவும் இல்ல. களைச்சுப் போய் வீட்டுக்குப் போனவன் திரும்பி வந்திருக்கிறன்.” என்று சொல்லி முறைத்தவன், “உம்மட இந்த அலட்டலைக் கேட்கவா வந்தன்? வாயை மூடிக்கொண்டு பேசாமல் வாரும்.’’ முடிவாகச் சொல்லிவிட்டு முன்னே நடக்கத் தொடங்கினான்.
‘‘இந்தப் பனியில சைக்கிளில போவாவாம்! பெரிய இவ என்ற நினைப்பு!’’
அவனின் முணுமுணுப்புத் தெளிவாகவே இவளின் செவிகளை உரசியது.
ஒருகணம் நிதானித்தாள் நிதி. அவனுடன் மறுத்துப் பேசுவதில் பலனிருக்காது என்பது தெரிந்ததால், ‘‘கொஞ்சம் நில்லுங்க, சைக்கிளை ஷெட்டில் விட்டுட்டு வாறன்.” என்ற வேகத்தில் ஓடிச்சென்று சைக்கிளை எடுத்து ஷெட்டில் விட்டுவிட்டு வந்தாள்.
அதற்குள் காரை இயக்கி வைத்திருந்தவன், இவள் அருகில் வரவும் முன் புறக்கதவைத் திறந்து விட அமைதியாக ஏறி அமர்ந்துவிட்டாள்.
மீண்டும் ஒரு முறைப்பு! அவள் திரும்பிப் பார்த்தால் தானே? மிகக் கவனமாக வெளிப்புறமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இதில மட்டும் கவனமாக இருப்பாள்; நேருக்கு நேரக் கதைச்சால் பதில் சொல்ல மாட்டாள்; பார்த்தால் எங்காவது பார்ப்பாள்; மற்றவே என்ன சொன்னாலும் காதிலும் வாங்கிறதில்லை; தான் நினைக்கிறதைத்தான் செய்வாள்; இவள என்ன செய்யிறது?’
மனம் முணுமுணுக்க, இந்திரன் வீடு அமைந்துள்ள ‘’டென்ஹெல்டர்’’ நோக்கி காரைச் செலுத்தினான், வசி.

