உயிரைத் திருடும் அழகியே 16 – 1

அத்தியாயம் 16

 

அன்று, முதல் ஆளாக வந்து நின்ற அர்ஜூனைக் கண்டதும் முகம் கடுத்தது அவளுக்கு. நாடகமொன்றில் நாயகன் வேசம் போடப்போகிறவன் போலிருந்தது அவனது நடை உடை. ஆக, இரண்டு நாளா இதுதான் நடந்திருக்கிறது! சவீதா சொன்னவை பின்னணியில் ஓடின! ‘அந்தளவுக்கு என்ன பாத்தா எப்படித் தெரியுதாம் அவனுக்கு?’ புன்னகை மன்னனாக கையசைத்துப் புன்னகைத்தவனை கல்லையும் மண்ணையும் போல எதிர்கொண்டாள் அனன்யா. பதட்டமுமில்லை நடுக்கமுமில்லை. உள்ளதைச் சொல்லப்போனால் அவன் மீது எந்த விதமான மதிப்பும் இல்லை. இவனைச் சந்திக்கவா அந்தப்பாடு பட்டோம்? அவளுக்கே அவளை நினைக்கச் சிரிப்பாயிருந்தது. எவ்வளவு சின்ன விசயம்? ஆனால், அதைச் சின்னதாக்கித் தந்தவன் ஜேகே!

 

மனத்தில் பொங்கிய இதமான உணர்வுடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள். விக்ரமனிடம் அடுத்த சீனைப்பற்றி வெகு தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தான்.

 

இதில் எல்லாம் அவனைக் குறை சொல்லவே முடியாது. இதில் மட்டுமல்ல எதிலுமே! நேற்றுக் காலை இந்தியா போய் அன்று அதிகாலையில் திரும்பி இருக்கிறான். ஏதோ பிஸ்னஸ் விசயமாம். எல்லாவற்றையும் ஓடி ஓடிப் பார்க்கிறான். அவளோடு மட்டும் தான் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறான். எளியவன். அவனைத் திட்டித் திட்டி இப்போதெல்லாம் திட்டுவதற்கு கூட அவளிடம் வார்த்தைகள் இல்லை.

 

அன்று அவ்வளவு சொல்லியும் அசையவே இல்லையே! அவனைச் சீண்டவேண்டும் போலிருக்க, “உங்க பாஸுக்கு மூளை வளர்ச்சில ஏதும் குறைபாடு இருக்கா?” என்று விமலிடம் கேட்டாள்.

 

“மேம் இப்படிலாம் பேசாதீங்க. எனக்குப் பிடிக்காது!” என்று முறுக்கினான் அவன்.

 

கிண்டலாகப் பார்த்தாள் அவள்.

 

“வேற எப்படிலாம் பேசணும்னு ஒரு பேப்பர்ல எழுதித் தாங்க, அப்படியே பேசறேன்.” என்றாள் கிண்டலாக.

 

“ஓகே மேம்! நாளைக்கு கொண்டு வரேன்.” என்றான் அவன் பணிவுடன்.

 

“அடி பின்னிடுவேன்! என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும். அவன் பேசாமயே கொல்லுவான் நீ பேசியே கொல்லு!”

 

“மேம்! பாஸ மரியாதை இல்லாம பேசாதீங்க!”

 

“அப்படியா? உங்க லூசு பாஸ்கிட்ட இதை அப்படியே போய் சொல்லுங்க. அப்பவாவது கோபம் கீவம் வந்து என்கிட்ட சண்டை பிடிக்க வறாறா இல்ல பயந்துபோய் பதுங்குறாரா பாப்போம்!” என்று ஏற்றிவிட்டாள் அவள்.

 

“ஹா! எங்க பாஸூக்கு பயமா? அவரப்பத்தி உங்களுக்குத் தெரியலை. இப்ப கூட்டிட்டு வரேன் பாருங்க.” என்றுவிட்டு நடந்தான் அவன்.

 

விமல் போய் இவளைக்காட்டி அவனிடம் சொல்லுவது தெரிந்தது. உதட்டினில் சிரிப்புடன் அவள் காத்திருக்க, காதில் விழுத்தினானா என்றுகூடக் கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது அவனுடைய எதிர்வினை.

 

‘மலையை புரட்டிட்டாலும். போடா..’ விமலைப்பார்த்து வெற்றிச் சிரிப்பு ஒன்றைச் சிந்திவிட்டு திரும்பிவிட்டாள்.

 

ஷியாமுடன் அமர்ந்திருந்த அர்ஜுன் பார்வையால் அவளையே தொடர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது.

 

‘இவன் வேற..’ பொருட்படுத்தவில்லை அவள். ஆனால் அவன் அழைத்தான்.

 

“அருமையா நடிக்கிறயாம் என்று ஷியாம் சொன்னான் அனு. ரொம்பச் சந்தோசமா இருக்கு; என்னோட அனுவை இப்படிப் புகழ்பெற்ற நடிகையாகப் பாக்கிறதுக்கு.” என்றான் அவன்.

 

உன்னோட அனுவா? உதட்டோரம் வளைந்தது அவளுக்கு.

 

“தேங்க் யூ அர்ஜுன்! என்னோட ரசிகர்கள் எல்லோருமே இப்படித்தான் கொண்டாடுறாங்க. அதுக்காக அப்படியே இருக்க முடியுமா என்ன? பிழைக்கனும்னா நடிக்கணும்! உழைக்கணும்!” என்று சிரித்தாள் அவள்.

 

நீயும் என் ரசிகர்களில் ஒருவன் மட்டுமே என்று நாசுக்காக அவள் சொன்ன அழகில் ஒருகணம் பதில் சொல்லத் தெரியாமல் முழித்தான் அர்ஜுன்.

 

“நீ இங்க, இப்படி சும்மாவே எத்தனை நாளைக்கு இருக்கப்போற அர்ஜுன்? ஏதாவது வேலை பாத்து பிழைக்கிற வழிய பாரு!” சிரித்துக்கொண்டு சொன்னவள், அவன் முகம் கன்றிக் கருப்பதை ரசித்துக்கொண்டே,

 

“ஓகே அர்ஜுன்! வரேன், என்னோட பார்ட் வரப் போகுது!” என்றுவிட்டு எழுந்துபோனாள்.

 

அப்படியே, அவர்கள் இருவருக்கும் தனிமையை உருவாக்கித்தர முயன்ற ஷியாமைக் கூப்பிட்டுப் பேசினாள்.

 

“ஒரு நண்பனா நீ நினைக்கிறது எனக்குப் புரியுது ஷியாம். அதுக்காக எதையும் திணிக்க நினைக்காத. எனக்குத் தேவையா இருந்தா, உன்னைக்கூட கூப்பிடாம அவனை நேராப்போய் சந்திச்சிட்டு வந்தமாதிரி சந்திச்சுப் பேச முடியும். சோ பிளீஸ்… நாலுபேர் இருக்கிற இடத்துல எனக்கு சங்கடத்தை உருவாக்காத!” என்றாள், கண்டிப்பான குரலில்.

 

தன் தவறு புரிந்தவனாக, “சாரி சிட்டு!” என்றவனிடம், “இட்ஸ் ஓகேடா!” என்று முடித்துக்கொண்டாள்.

 

“இவன எதுக்கு இங்க கூப்பிட்ட?” தனிமையில் கர்ஜித்த விக்ரமனிடம், “காட்டேஜுக்கு வரவா என்று கேட்டான். அங்க கூப்பிடவா?” என்றாள் கிண்டல் குரலில்.

 

“ஓ!” அவர் புருவங்கள் சுருங்கிற்று! அதன்பிறகு அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை அவர். தோள்களைக் குலுக்கிக்கொண்டு போய்விட்டாள் அவளும்.

 

சற்று நேரத்திலேயே விக்ரமன் கோப முகத்தோடு அர்ஜுனிடம் என்னவோ சொல்வது கண்ணில் பட்டது. அருகில் நின்ற ஷியாமை அழைத்து விசாரித்தாள்.

 

“இங்க எதுக்கு வந்தன்னு அர்ஜுனை திட்டிட்டு இருக்கார்” என்றவனிடம், “அவனை நான் பாத்துக்கறேன்னு அவர்கிட்ட சொல்லுடா. முக்கியமா அவர் பயப்படுற மாதிரி எதுவும் நடக்காதுன்னு சொல்லு. மனுசன் நிம்மதியா வேலைய பாக்கட்டும்!” என்றாள் சிரித்துக்கொண்டு.

 

“அவர் எதுக்கு பயப்படுறார்?” புருவங்களை சுருக்கிக்கொண்டு அவன் கேட்க, “அது எதுக்குடா உனக்கு? சொன்னதை மட்டும் செய். முக்கியமா தனியா கூட்டிட்டு போய்ச் சொல்லு!” என்று அனுப்பிவைத்தாள்.

 

ஷியாமும் அர்ஜுனும் நல்ல நண்பர்கள். அதற்குள் அவள் ஏன் விரிசலை உருவாக்க. எனவே சவீதா சொன்னவைகளை அவள் அவனிடம் சொல்லவில்லை.

 

ஷியாம் சொன்னபிறகு அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்த விக்ரமனும், அதோடு விட்டுவிட்டார்.

 

அன்று அந்த கேம் ஷோவின் வின்னர் யார் என்று அறிவிக்கும் ஷூட் நடந்துகொண்டிருந்தது. அவளின் முகபாவங்கள் மட்டுமே தேவையாக இருந்ததில் ஓரிடத்தில் அமர்ந்தபடி, அவ்வப்போது அவர் சொல்லும் பாவங்களைக் காட்டிக்கொண்டிருந்தாள் அனன்யா. ஷியாமுக்கும் ராகவனுக்கும் அஜய்க்கும் தான் காட்சிகள் அதிகமாக இருந்தன.

 

அஜய்யாக நடித்துக்கொண்டிருந்த ஜேகே மீதே அவள் பார்வை இருந்தது. அவன் அத்தனை அலட்சியங்கள் செய்தும் ஒருவித நல்லபிப்பிராயம் அவன்மீது அவளுக்குள் உருவாகி விட்டிருந்தது.

 

ஆனால், அவனுக்கிருக்கும் திமிருக்கு மட்டும் அளவேயில்லை. அதை எண்ணியதும் உதட்டில் முறுவல் மலர்ந்து போயிற்று! அன்றைக்கு அவளோடு அவன் வந்ததெல்லாம் உலகமகா அதிசயம். அவள் அழுவதைப் பார்த்துவிட்டு வந்திருப்பானாயிருக்கும். இல்லாவிட்டால் அவனாவது அவளோடு வருவதாவது.

 

ஆனால், அவள் லாபியில் அர்ஜூனுடன் பேசிக்கொண்டிருக்க, கஃபேடேரியாவில் வந்திருந்ததெல்லாம் அவனது நல்ல மனதைத்தானே காட்டுகிறது. ஃபோன் நம்பரைக்கூடத் தந்தானே. ஆரம்பித்திலும் அவள் நடிக்கமுடியாமல் சிரமப்படுவதைக் கவனித்துத் தானே, என்ன பிரச்சனை என்று அழைத்துக் கேட்டான்.

 

error: Alert: Content selection is disabled!!