உயிரைத் திருடும் அழகியே 16 – 2

மகா அழுத்தமாக இருந்தாலும் நல்லவன்தான்.

 

சட்டென்று திரும்பி, அங்கே ஓரமாக நின்ற விமலை அழைத்தாள்.

 

ஓடி வந்தவனிடம், “இன்னைக்கு மாலை, உங்க பாஸ மலை உச்சில இருக்கிற ஹோட்டலுக்கு கூட்டி வரணும் நீங்க.” என்றாள்.

 

“எதுக்கு மேம்?”

 

“ம்.. கீழ தள்ளிவிடப் போறேன்!”

 

“சரிங்க மேம்! ஹெல்ப் வேணும்னாலும் தயங்காம கேளுங்க, செய்றேன்.” என்றுவிட்டு அவன் போக, எங்கயாவது தலையைக் கொண்டுபோய் டொங்கு டொங்கு என்று முட்ட வேண்டும் போலிருந்தது. அவளுக்கென்று எங்கிருந்துதான் வந்து வாய்த்திருக்கிறார்களோ?

 

நன்றாக அவனை ஒரு முறைப்பு முறைத்துவிட்டு, “கண்டிப்பா அங்க காத்திருப்பன். அவர் வரலையோ நீங்க தொலைஞ்சீங்க என்கிட்டே!” என்று மிரட்டினாள்.

 

“தூக்கிட்டாவது கொண்டுவந்து விடுறேன் மேம்!” அங்கிருந்தே பதில் சொன்னான் அவன். பின்னே, அவ்வளவு தூரத்துக்கு வத்திவைத்தும் பாஸ் அசையவில்லை எனும்போதே எதிரணி பலம் மிக்கது என்று புரிந்துகொள்ள மாட்டானா அவன். அவன் பணிந்துவிடுவது தானே புத்திசாலித்தனம்.

 

அதேபோல், ஆர்வம் பாதி டென்சன் மீதியாக அவள் காத்திருக்க ரெஸ்டாரெண்டுக்கு வந்தான் ஜேகே. அதுவும் தனியாக.

 

விமலும் கூட வருவான் என்று அவள் நினைத்திருக்க இப்படித் தனியாக வந்து அவளின் படபடப்பை இன்னுமே கூட்டினான் ஜேகே. விமல் இருந்திருக்கக் கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கும்.

 

“விமல் வரலையா?” முன்னிருக்கையில் அமர்ந்தவனிடம் தன் பதட்டத்தை மறைத்துக்கொண்டு கேட்டாள்.

 

“ஓ.. அவனைத்தான் வரச் சொன்னியா?” என்றபடி அவன் எழுந்துகொள்ள, ‘அம்மாடி இவனுக்கு இருக்கிற குசும்பு இருக்கே…’ என்று, மலைத்துப்போனாள் அனன்யா.

 

“இல்ல இல்ல உங்களைத்தான் வர சொன்னேன். ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தை மாதிரி எப்பவும் அவரும் வருவார். அதுதான் கேட்டன்.” என்றாள் விளக்கம் போல்.

 

அதற்குப் பதிலோ அவளின் கேள்விக்குப் பதிலோ எதுவும் சொல்லவில்லை அவன்.

 

‘மொட்டைத் தலைல இருந்து முடியப் பிடுங்கினாலும் இவன் வாயில இருந்து எதையும் புடுங்க முடியாது!’ சுர் என்று உச்சியில் ஏறியது அவளுக்கு.

 

‘ஓம் ஷாந்தி! ஓம் ஷாந்தி! ஓம் ஷாந்தி!’ பொறுமையாக இருக்க முனைந்தாள் அனன்யா.

 

“இது உங்க பர்ஸ்ட் பிலிம் தானே ஜேகே? எப்படி இருக்கு எக்ஸ்பீரியன்ஸ்?” நட்பாகவே சம்பாஷணையை ஆரம்பித்தாள்.

 

“தெரிஞ்சு?” ஒற்றைக் கேள்வியில் அவளின் மூக்கை உடைத்தான் அவன்.

 

இதற்கு என்ன பதிலைச் சொல்வது? முழித்தாள் அவள்.

 

“சும்மா தெரிஞ்சிக்கலாம் என்றுதான்.”

 

“தெரிஞ்சு?”

 

‘உன் தலை! போடா டேய்! ஷாந்தியாவது மண்ணாவது!’ அவனின் அகம்பாவத்தை அடக்கமுடியாமல் கடுப்பாகிப்போனது அவளுக்கு.

 

நல்ல மூட்ல இருக்கவே விடுறான் இல்ல மைலாட்!

 

ஆனால், அவனால் தான் மனத்தளைகளில் இருந்து அவள் விடுதலையாகி இருக்கிறாள். அதை நினைத்து, “என்ன சாப்பிடுறீங்க? டின்னருக்கு அரேஞ்ச் செய்திருக்கிறன்.” என்று, நல்லபடியாகவே உபசரித்தாள்.

 

அவனும் வஞ்சகமே இல்லாமல் ஆர்டர் பண்ணியதைப் பார்த்து மலைத்துப்போனாள் அனன்யா.

 

‘கடைசி வந்தாலும் இவனெல்லாம் மனுச இனமா இருக்க சான்ஸே இல்ல. மன்னார் வளைகுடாவில் அறுபதுக்கு மேற்பட்ட புதிய உயிரினங்களைக் கண்டு பிடிச்சிருக்காங்களாம். கன்போர்மா அதுல ஒண்ணுதான் இவன்.”

 

அந்த மேசை முழுக்க அவனுக்கான உணவுகள் இருக்க, அவளுடைய தட்டு மட்டும் ஒற்றையாய் அனாதையாய் ஒரு மூலையில் இருந்தது.

 

தன்னதைச் சாப்பிடுவதைக் காட்டிலும் அவ்வளவையும் அவன் எப்படிச் சாப்பிடுகிறான் என்பதைத்தான் கீழ்க் கண்ணால் கவனித்துக்கொண்டே இருந்தாள் அனன்யா.

 

ஒவ்வொரு தட்டாக அவன் எடுக்க எடுக்க அவள் ஆடித்தான் போனாள். வயிறா இல்ல வேற எதுவுமா? நல்லகாலம் காசோடு கார்ட்டையும் சேர்த்துக் கொண்டுவந்தாள்.

 

அவளொருத்தி பார்த்துக்கொண்டு இருக்கிறாளே என்று சங்கோஜம் இல்லாமல் வெக்கம் சூடு சுரணை எதுவுமின்றி உண்மையிலேயே நல்ல வெட்டு வெட்டினான் ஜேகே.

 

‘மனுசனாடா நீ? மரமண்டையா?’

 

சாப்பிட்டு முடித்ததும், கைகளைத் தலைக்குப் பின்னே கோர்த்தபடி பார்வையைப் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு, “வேற.. ஏதாவது சொல்லனுமா?” என்றான்

 

கடவுளே.. டாக்டர் பேசண்ட விசாரிக்கிற மாதிரியே கேக்கிறான்.

 

இவனோட கதைக்க முதல் நாலு ரெமி மார்ட்டின் ரெண்டு ஜக்டானியல் ஒரு ரம் எல்லாத்தையும் கலந்து ராவா அடிச்சிட்டு வந்தாத்தான் முடியும். ஷப்பா முடிலடா!

 

அவள் மறுத்துத் தலையசைக்க, “தென்.. பாய்!” என்றுவிட்டு எழுந்து நடந்தான் அவன்.

 

அவளின் பொறுமை பறந்தே போயிற்று!

 

“எக்ஸ்கியூஸ்மி!” இருந்த இடத்திலிருந்தே அழைத்தாள்.

 

நின்ற இடத்திலிருந்தே அவன் திரும்பிப் பார்த்தான்.

 

“நீங்க ஒரு அம்மாவும் அப்பாவும் சேர்ந்து பெத்து எடுத்த மனுசக் குழந்தை தானே!” அடக்கவே முடியாது கேட்டுவிட்டாள் அனன்யா.

 

அவளையே பார்த்தவன் நிதானமாகத் திரும்பி வந்தான்.

 

“இல்லாட்டி என்னை மாதிரியே ஒரு மனுசக் குழந்தையைப் பெத்துத் தரப்போறியா?” என்றான் அவள் காதருகில் குனிந்து.

 

விழிகள் இரண்டும் வெளியே தெறித்துவிடும்போல் விரிந்து போயிற்று அவளுக்கு.

 

கணத்தில் காதுமடல் வரை சூடாகிப்போக, வேகமாக முகத்தைத் திருப்பி உதட்டைக் கடித்தவளுக்கு பதில் சொல்ல வாயும் வரவில்லை. பதிலும் தெரியவில்லை.

 

எத்தனையோ இடக்கான காட்சிகளையெல்லாம் வெகு நளினமாக நடித்துவிட்டுப் போனவள் அந்த இறுமாந்தவனின் பேச்சுக்குப் பதிலடி குடுக்க முடியாமல் தடுமாறினாள்.

 

அவன் பார்வை இன்னுமே அவள் மீதிருந்ததில் முகம் சிவந்துவிட, வேகமாக எழுந்து நடந்தவளின் கையைப் பற்றிப் பிடித்தான் அவன்.

 

திடுக்கிட்டுத் திரும்பினாள் அனன்யா.

 

“பதில் சொல்லாம போனா எப்படி? பெத்துத் தாறியா?”

 

“கைய விடுங்க முதல்ல!” சீறினாள் அவள்.

 

அவளின் சீறல் அவனுக்கு யானை மீது கட்டெறும்பு ஏறியது போல் இருந்தது போலும். லட்சியமே செய்யவில்லை.

 

மாறாக, “நான் ரெடி! உன்னை மாதிரி ஒருத்தி என் பசங்களுக்கு அம்மாவா இருந்தா நல்லதுதான். உனக்கும் நான் மனுசகுழந்தையா இல்லையான்னு தெரிஞ்சிடும். ரெடியா நீ?” என்று கேட்டான்.

 

‘நல்லா சொல்லுறான் விளக்கம்.’ பல்லைக்கடித்துவிட்டு, “ஆள விடுங்க சாமி! தெரியாம கேட்டுட்டேன். நீங்க செய்த ஹெல்ப்புக்கு சின்ன தேங்க்ஸ் சொல்ல ஆசைப்பட்டேன். அதுக்குத்தான் டின்னர். அவ்வளவுதான்!” என்றவள், அவனிடமிருந்து கையைப் பறித்துக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்.

 

“என்ன பாஸ் சொன்னீங்க? மேம் ஒலிம்பிக் வேகத்துல போறாங்க.”

 

“நான் எதுவுமே பேசலடா. அவ கேட்டதுக்குத்தான் பதில் சொன்னேன். அதுக்கு ஓடுறா. சரி நீ வா!” என்றவனை, ‘நீங்க அந்தளவு நல்ல மனுசனா பாஸ்?’ என்று நம்பாமல் பார்த்தான் அவன்.

 

அடக்கப்பட்ட சிரிப்பில் உதடுகள் துடிக்க, “வாடா!” என்றுவிட்டு, நடந்தான் ஜேகே.

error: Alert: Content selection is disabled!!