என்றும் உன் நிழலாக 3 – 2

‘‘போடா போ…நீயும் உன்ர பகிடியும்’’ என்றவாறே தன்னறைக்குள் சென்று, உடைகளைக் கூட மாற்றும் எண்ணமின்றி படிக்கும் மேசையின் அருகில் கிடந்த கதிரையில் அமர்ந்தவனின் நினைவுகள், தன் மைத்துனி நிதியையே சுற்றிச்சுற்றி வந்தது.

அவள் இங்கு வந்த அன்று, குளியலறையில் பெரிதாகக் கத்தும் சத்தம் கேட்டுச் சென்று பார்த்த போது, தான் ஏதோ பிழை செய்துவிட்டோம் என்ற பயத்துடன் குளிரில் நடுங்கியவாறே நின்றவளை என்று கண்டானோ, அன்றே அவள்…அந்தக் குட்டிப்பெண்…அவன் மனதில் நிரந்தரமாக ஒரு இடத்தைப் பிடித்து விட்டாள், பரிதாபத்தின் பெயரில்!

ஆம், அவள் இடம் பிடித்துக் கொண்டது உறவென்ற உரிமையில் இல்லை; அச்சிறுவயதில் எல்லோரையும் சமாளித்து, தன்னைத் தன்னுள்ளே அடக்கி அவள் வாழும் முறையால் அவள் மீதெழுந்த பரிதாப உணர்வாலேயே!

அவள் அவர்கள் வீட்டுக்கு வரப்போகிறாள் என்றதிலிருந்து அவன் அப்பாவும் அம்மாவும் போட்டுக் கொண்ட சண்டைகள், வாக்குவாதங்கள் எண்ணில் அடங்காது. அப்போதெல்லாம் அந்தச் சிறுமியில் ரஞ்சன், ரதீஷுக்கு அனுதாபமே தோன்றியது.

‘ஐய்யோ பாவம்! இந்தச் சின்ன வயசில வீட்டைப் பிரிந்து எப்பிடி இருப்பாள்?’ என்றே தோன்றியது.

அதுவே இங்கு வந்த பின்னும், அவள் தன் தாயிடம் அப்பப்போ வாங்கும் பேச்சு ஏச்சுக்களையும், அவை எல்லாவற்றுக்கும் கண்களில் நீர்த்திரையுடன் தலைகுனிந்து அவள் நிற்கும் நிலையையும் கண்ட சகோதரர்கள் இருவருமே, அவளைத் தங்களில் ஒருத்தியாக பாசமுடன் சேர்த்துக் கொண்டாலும், ரஞ்சன் கொஞ்சம் கூடுதலாகவே தாயிடம் வாதாடவும் செய்தான்.

புவனியும் அப்பப்ப சுடும் வார்த்தைகளால் வறுத்தெடுத்தாலும், பழக்கவழக்கம் கட்டுப்பாட்டில் மூன்று பேரையுமே மிகவும் கண்டிப்புடனேயே வளர்த்தார்

அவரும், தாம் இருக்கும் இடத்தின் ‘சிட்டிஹவுஸ்’ என்று சொல்லப்படும் பிரதேசசபைச் செயலகத்தில் பகுதி நேரமாகப் பணிபுரிந்து வந்தவர், வேலை நேரம் போக மிகுதி நேரங்களில் பிள்ளைகள் மூவரையும் மிகவும் கண்காணிப்பு, கண்டிப்புடனேயே வளர்த்தார்.

தன் மூத்தமகன் ரஞ்சன், நிதிக்காகத் தன்னையே எதிர்த்துக் கதைக்கும் போது ஆரம்பத்தில் அவனை வெகுவாகக் கண்டிப்பதுடன், ‘‘பொம்பளப்பிள்ளைக்கு வேலைகள் தெரிஞ்சிருக்க வேணும் ரஞ்சன்; பிறகு, இவளச் சரியா வளர்க்கேல்ல என்று என்ர தலையில தான் கேட்ட பெயர் வந்து விடியும்! பார், ஒரு நல்ல பழக்க வழக்கம் இருக்கா? எல்லாம் நான் தான் சொல்லித் தரவேண்டிக் கிடக்கு! எல்லாமே அவள் நல்லதற்குத் தானே? ஆனால் நீங்க, நான் அவளக் கொடுமைப்படுத்துறன் என்று நினைக்கிறீங்க.’’ என்று, எப்போதும் அவன் வாயை அடைத்து விடுவார்.

வளர வளர அவன் முன்னால் நிதியைத் திட்டுவதைத் தவிர்த்து, கேள்வி கேட்கும் சந்தர்ப்பத்தை வழங்காவிடினும், தாய், அவளை எப்போதும் போலவே நடத்துவது அவனுக்கு மிகவும் நன்றாகத் தெரியும்.

ஆனாலும், பெரியவனாக ஆக, தங்களுக்காகப் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்யும் தாயின் மனத்தை நோகச் செய்யவோ, நிதியிடம் கூடத் தங்கள் தாயை விட்டுக் கொடுக்கவோ ரஞ்சனோ, ரதீஷோ ஒரு போதும் விரும்பவில்லை. அதனால் தான், தாங்களே முயன்று அவளுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்துச் செய்யத் தொடங்கினர்.

தான் எப்படியும் தன் மாமியின் மனதில் இடம் பிடித்திட வேண்டும் என்ற ஒரே நோக்கில், தன்னால் முடியாத வீட்டு வேலைகளையெல்லாம் அவள் செய்யும் போதெல்லாம் அவளுக்கு வெகுவாய் உதவும் ரஞ்சன், அவள் துன்பங்களை எல்லாம் போக்கி, எப்பவும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என்று அப்போதிருந்தே நினைத்துக் கொள்ளுவான்.

வளர வளர அவனின் இந்த எண்ணம் வளர்ந்தாலும், சமீப காலமாக, தான் அவளுக்கு உதவ முனையும் போதெல்லாம் நிதியிடம் காணப்படும் ஒதுக்கம் வெளிப்படையாகவே அவனுக்குப் புரிந்து அவன் மனதில் வேதனையை உருவாக்கியது.

தன் படிப்பு முடிந்ததும், தாய் தந்தையிடம் நேரடியாகவே சொல்லி, நிதியைத் திருமணம் செய்து, அவளையும் அவள் வெகுவாய் விரும்பும் அவள் குடும்பத்தையும் மிக நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இன்று ரஞ்சனின் முழுவிருப்பமாக உள்ளது .

ஆனால், தன் தாய், இன்று திருமண வரவேற்புக்குச் சென்றிருந்த அவரின் நெருங்கிய தோழி சரளாவின் ஒரே மகளைத் தனக்குத் திருமணம் செய்ய நினைத்துள்ளதையும், அதையும் சாடைமாடையாகப் பேசுவதையும், தான் அதற்கு வெளிப்படையாக மறுத்தும் அவர் அதைப் பற்றிக் கவலைப்படாததையும் அவன் கண்டிருந்தும், ‘‘இல்ல…நான் நிதியைத் தான் கலியாணம் செய்வன்.’’ என்று உறுதியாய் அவரிடம் சொல்ல நினைத்தவன், ‘நிச்சயம் நிதி தரப்பில் இதற்கான பதில் எதிர் மறையாகத் தான் இருக்கும்.’ என்ற தவிப்பில் மௌனம் காக்கிறான்.

சகோதரன் ரதிஷிடமும் தமையன் வசியிடமும், “நிதியை நான் விரும்புறன்.’’ என்று சொன்னவனால், அவளிடம் துணிந்து சொல்ல முடியவில்லை.

இப்படி, ரஞ்சன் தன் அறையில் நிதியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அதேவேளை, அவன் வந்தபோது நித்திரை போல கண்களை மூடிப்படுத்திருந்த நிதியும் ரஞ்சனையும் தன் வாழ்வையும் தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

தான் இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து இன்று வரை முழுமையாய் பாசத்தையும் கவனிப்பையும் வழங்கி வரும் ரஞ்சன், எப்போதுமே நிதியின் பார்வையில் தனிப்பட்டவனாகத் தனக்கு மிகவும் வேண்டியவனாகத் தான் தெரிந்தான்.

ஆரம்பத்தில் இருந்தே எந்தச் சின்ன விடயத்துக்கும் அவனின் உதவியையே நாடியவளுக்கு, அவனும் முகம் சுழிக்காமல் பாசமாய் அவற்றைச் செய்து கொடுக்க, அவர்கள் இடையேயான உறவு மேலும் இறுகினாலும், சமீபகாலமாக இவளுக்குத் தன்னையறியாமல் ஒரு விதப் பயம்! ஒருவிதத் தயக்கம்! பல வேளைகளில், அது தன் கற்பனையோ என்றும் போட்டுக் குழம்பித் தவித்திருகிறாள்.

ஆமாம், இப்போதெல்லாம் வர வர ரஞ்சன் அவளை விசேசமாகக் கவனிப்பதாகவே அவளுக்குத் தோன்றியது!

தான் இழந்த தன் ஆசை அண்ணாவை ரஞ்சனில் கண்டு வந்தவள், அவன் தன்னை விட்டுப் பிரியாது ரஞ்சன் உருவில் கூடவே இருப்பதாகவே உணர்கின்றாள்.

ஆனால், ரஞ்சன் காட்டும் அதீத அக்கறையும், உரிமையுடன் கூடிய பாசமும், அவனை விட்டுத் தள்ளி நிற்பதே தனக்கும் மாமா வீட்டுக்கும் நல்லது என அவளுக்கு உணர்த்துவதால் அவனிடமிருந்து இயன்ற மட்டும் விலகத் தொடங்கினாள்.

தான் அவனிடம் இருந்து தள்ளிச் செல்வதை, அவனைத் தவிர்ப்பதை, கூடவே அவன் உதவிகளை மறுப்பதை அவன் நன்றாகப் புரிந்து கொண்டாலும், இன்று போல் பிடிவாதமாய் வந்து அவனுக்கு முடியாவிடினும், ‘தன்ர அண்ணா மூலமோ, தம்பி மூலமோ உதவுறதை அவர் நிப்பாட்ட இல்ல’ என நினைத்துக் கொண்டவள், ஒரு நெடிய மூச்சை வெளியேற்றியவாறே, மறுநாள் காலை பத்துமணிக்கு வேலைக்குப் போக வேண்டும் என்பதால் தூங்க முனைந்தாள்.

 

 

error: Alert: Content selection is disabled!!