அத்தியாயம் – 17
நாட்கள் வேகமாக நகர, சசிதரன் இரண்டு மூன்று நாட்களில் நன்றாகத் தேறிவிட்டிருந்தான். மறுநாள் மருத்துவமனைக்கு வந்தவுடனே சந்தோஷை அழைத்து நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டாள் திவ்யதர்ஷினி.
அவன் உடனே கிளம்பி வருவதாகச் சொல்லவும், அவள் மறுத்துவிட்டாள்.
“சமாளிக்க முடியாம எல்லாம் இல்லை சந்தோஷ். நான் வேலை செய்யற மீனாட்சி ஆன்ட்டியோட பையன் மித்ரன் உதவினார். உனக்கும் அவரைத் தெரியுமில்லை” என அவனைச் சமாதானப்படுத்தினான்.
“அவனோட தான் உனக்கு அடிக்கடி பிரச்சனை ஆகிட்டு இருக்கே. அங்கே வேலைக்குப் போக வேண்டாம்னு ஆரம்பத்திலேயே சொன்னேன். நீ கேட்கவேயில்லை” என சந்தோஷ் அப்போதும் சமாதானம் ஆகவில்லை.
சசிதரன் ஒருவழியாக அவனிடம் பேசி, ஒன்றும் பிரச்சனையில்லை என்றும் மாநில அளவில் தேர்வானால் அடுத்தக் கட்டப் போட்டிக்கு அவன் புதுடெல்லி வரவேண்டி இருக்கும் எனப் பேச்சை மாற்றிவிட்டான்.
அதன்பின்னர் வந்த நாட்களில் சசிதரன் மிகவும் ஈடுபாட்டுடன் பயிற்சியில் கலந்து கொண்டான். பயிற்சிப் பள்ளியிலிருந்து மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகி, அந்தப் போட்டியில் பங்கேற்று அனைத்துச் சுற்றுகளிலும் வெற்றி பெற்று அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தான் சசிதரன்.
இனி அடுத்த மாதம் டெல்லியில் பத்து நாட்கள் தொடர்ந்து தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது. சசிதரன் அதற்குத் தேவையானவற்றை ஒழுங்குப்படுத்த ஆரம்பித்தான்.
பத்து நாட்கள் விடுமுறை வேண்டும் என்று கல்லூரியில் பேசி அனுமதி பெற்றான். பின்னர் முடிக்க வேண்டிய மற்ற வேலைகளை முடித்து, சந்தோஷைத் தொடர்பு கொண்டு அனைத்துக்கும் ஏற்பாடு செய்தான்.
சந்தோஷ் அனைத்தையும் பார்த்துக் கொள்வதாகச் சொன்னான். அத்தோடு சந்தோஷின் பெற்றோர்களும் அங்கே சென்றிருந்தனர். அதனால் சசிதரனை நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும் எனச் சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னான் சந்தோஷ்.
சந்தோஷ் இருக்கிறான் என்ற தைரியத்தில் முரளிதரன் பெரிதாக எந்த முட்டுக்கட்டையும் போடவில்லை. திவ்யதர்ஷினிக்கு அதுவே நிம்மதியளித்தது.
சசிதரன் டெல்லி செல்லும் விஷயத்தை அவள் முதல் முதலாக மித்ரனிடம் தான் பகிர்ந்து கொண்டாள். உண்மையில் மித்ரனின் குணம் மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. பின்னே அன்று உதவி என்று கேட்டதுமே செய்தானே.
முதல் முதலில் பார்க்கையில் இருவரும் மோதிக் கொண்டதில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போலாகிவிட்டது. அதன்பிறகு அவனிடம் பழகப் பழக அவன் குணமறிந்து கொண்டாள். அவனுக்கும் அப்படியே இருக்கும் போல என எண்ணிக் கொண்டாள்.
இப்போதெல்லாம் மீனாட்சியின வீட்டுக்கு வேலைக்குப் போவதென்றால் அவளுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. அதுவும் மித்ரன் மதியவேளையில் வீட்டுக்கு வந்தால் அவளுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பானது.
வத்சனும் இரண்டு வாரப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினான்.
*****
அன்று மதிய உணவுக்கென்று மித்ரன் வீட்டுக்கு வந்த பொழுது, வத்சன் ஆர்ப்பாட்டமாக சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தான். அன்று மீனாட்சியின் பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்தநாளன்று வத்சன் ஏதாவது செய்து தருவேன் என்று சமையலறையில் புகுந்து களேபரம் செய்வான்.
அவன் லண்டனில் இருக்கையில் மட்டுமே அவன் எதையும் செய்து கொடுக்கவில்லை.
மித்ரன் தன் அன்னைக்குக் காலையிலேயே வாழ்த்துத் தெரிவித்துப் பட்டுப்புடவை, நகை எனப் பரிசுப் பொருட்களை வாங்கிக் குவித்துவிட்டான். கிளம்பி அலுவலகம் சென்றவன் மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்திருந்தான்.
இப்போதெல்லாம் தினமும் மதிய உணவு வீட்டிலேயே சாப்பிடுகிறான். அதை நினைத்து அவன் அன்னைக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இல்லையென்றால் காலையில் சென்றால் இரவு தான் வருவான். இடையில் ஒன்றிரண்டு முறை அலைபேசியில் பேசுவதோடு சரி. ஆனால் இப்போது அப்படியல்ல.
வத்சன், அவன், திவ்யதர்ஷினி மற்றும் அவர் எனப் பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். வத்சன் ஏற்கனவே கலகலப்பான பேர்வழி. அதில் திவ்யதர்சினியும் சேர்ந்து கொள்ள கலகலப்புக்குக் பஞ்சமே இருக்காது.
அதுவும் இப்போது மித்ரன் வேறு வரவும் அவர் மதிய உணவு வேளையை மிகவுமே எதிர்நோக்கிக் காத்திருப்பார்.
மித்ரன் வீட்டுக்குள் நுழைகையில் திவ்யதர்ஷினி அவன் அன்னையை சோபாவில் அமர வைத்து கீழே அமர்ந்து அவர் காலில் ஏதோ தைலத்தைத் தடவி மசாஜ் செய்து கொண்டிருந்தாள்.
அவர் அன்று காலையில் மாடியிலிருந்து இறங்கி வருகையில் படிகளில் கால் தவறி பிசகிவிட்டது. மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் என்று மித்ரன் எவ்வளவோ கூறியும் அவர் மறுத்துவிட்டார்.
அவரை எதற்காகவும் இதுவரையில் அவன் கட்டாயப்படுத்தியது இல்லை. ஏனோ ஒருவித தயக்கம் அவனுள் குடிகொண்டிருந்தது. பின்னே இத்தனை வருடங்களாக அவன் அன்னையைத் தவறாக நினைத்துக் கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டிருந்தானே. அவன் செய்தது அவன் மனதை உறுத்திக் கொண்டிருக்க அவன் எதற்கும் தன் அன்னையை கட்டாயப்படுத்த விரும்பவில்லை.
ஆகவே அவர் மருத்துவர் வேண்டாம் என்று சொன்னதும் அதற்குமேல் அழுத்திக் கூறாமல் அலுவலகத்திற்கு சென்றுவிட்டான். ஆனால் வந்த உடனேயே அதைக் கேள்விப்பட்ட திவ்யதர்ஷினியோ அவரை வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அமரச் செய்து களிம்பு எடுத்து தடவி நீவிவிட்டாள். மீண்டும் மூன்று மணி நேரம் கழித்து அதையே செய்து கொண்டிருந்தாள்.
அதைத் தான் வீட்டுக்குள் நுழைந்த மித்ரன் பார்க்க நேரிட்டது. ஏனோ இனம் புரியா இதம் அவன் நெஞ்சை ஆட்கொண்டது. எங்கே அவன் மனதில் உள்ளது வெளியில் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் முகத்தைச் சற்று இறுக்கமாக வைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.
அதுவும் இந்த வத்சனின் கண்களிலிருந்து எதுவும் தப்பாது. அவன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
திவ்யதர்ஷினி மீனாட்சியின் காலை நீவிவிட்டவாறே, “ஆன்ட்டி, உங்களைப் பாராட்டி நடத்தற விழாவுக்குப் போக ஏன் ஒத்துக்க மாட்டேங்கறீங்க? பிளீஸ் ஆன்ட்டி. ஒத்துக்கோங்க.. நாங்க எல்லோரும் உங்களோட வர்றோம். மாற்றுத் திறனாளிகளுக்கு நீங்க முன்னோடியா இருப்பதா அவங்க நினைக்கறாங்க” என திவ்யதர்ஷினி சொன்னது மித்ரனின் காதுகளில் கேட்டது.
“போகலாமே அம்மா. நானும் வர்றேன்” என மித்ரன் சொன்னதும், மீனாட்சி மறுப்பாரா என்ன? மகன் உடன் வருகிறேன் என்று சொன்னதே அவருக்கு விருது கிடைத்ததைப் போலிருந்தது. அதனால் உடனே சம்மதித்துவிட்டார்.
“கால் இப்போ எப்படி இருக்கும்மா?” என அன்னையின் நலன் பற்றி விசாரித்தான் மித்ரன்.
“தர்ஷினி தைலம் போட்டு நீவி விட்டாப்பா.இப்போ பரவாயில்லை” என அவர் பதில் சொல்ல, “தேங்க்ஸ் திவ்யா” என்றான். கீழே அமர்ந்து அவனை ஏறிட்டுப் பார்த்தவளை அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தாபம் மித்ரனுள் எழுந்தது.
தன் வீடு போல் அவள் தரையில் அமர்ந்து உரிமையுடன் தன் அன்னையின் கால்களைப் பற்றியிருந்த நிலையா, அல்லது, அவளது அமைதியான அழகா, என்று தெரியவில்லை. அவன் ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்கையில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய்த் தன்னை அவளிடம் தொலைத்துக் கொண்டிருந்தான்.
“இதுல என்ன இருக்கு” என முணுமுணுத்துக் கொண்டு அவன் பார்வையின் வீரியத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலையைக் குனிந்து கொண்டாள் திவ்யதர்ஷினி.
அவன் ஏன் இப்போதெல்லாம் அப்படியே அவளை விழுங்கிவிடுவதைப் போல் பார்க்கிறான் என்று அவளுக்குப் புரியவில்லை. இல்லை, அவள் தான் அதிகமாகக் கற்பனை செய்து கொள்கிறாளோ என்று தெரியவில்லை.
ஆரம்பத்தில் இவன் தான் அவளைத் திட்டி, இம்சை படுத்தியிருக்கிறான் என்று சொன்னால் அவளே நம்பமாட்டாள். எது எப்படியோ இங்கே வேலை செய்யும் வரையில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் அவளுக்கு அதுவே போதும்.
திவ்யதர்ஷினியின் மனதில் இப்படி ஓடிக் கொண்டிருக்க மித்ரனின் மனமோ பந்தயத்தில் ஓடும் குதிரையைப் போல் இரைச்சலுடன் ஓடிக் கொண்டிருந்தது.
அங்கேயே இருந்தால் அவன் தன் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்று நினைத்தான். கூடிய விரைவில் தன் கட்டுப்பாட்டை இழக்கப் போகிறான் என்று அறியாமல் கை கால் கழுவிக்கொண்டு வருகிறேன் எனத் தன் தாயிடம் சொல்லிவிட்டு தன் அறையை நோக்கித் தப்பிச் சென்றான்.
அவன் அங்கிருந்து நகர்ந்ததும், காலை நீவிவிட்டவாறே திவ்யதர்ஷினி, “என்ன ஆன்ட்டி கிச்சன்ல இருந்து, ‘ஐயோ, அம்மா’ன்னு அலறல் சத்தம் வருது. பைனாப்பிள் கேசரி குற்றுயிரும் குலையுயிருமா இருக்கோ என்னவோ? நம்ம போய்த் தான் அதற்கு ஆப்ரேஷன் செய்யணும் போல?” என அபிநயத்துடன் வத்சனை வம்புக்கு இழுத்தாள்.
“நீங்க என்னைக் கலாய்க்கிறது நல்லாவே கேட்குது. அஞ்சே நிமிஷம். அப்புறம் பாருங்க ஐயாவோட திறமையைப் பத்திக் கலகலப்பாப் பேசுவீங்க” என வத்சன் அங்கிருந்தவாறே கத்த, மீனாட்சியிடம் அவன் சொன்னதைச் சைகை மொழியில் தெரிவித்துவிட்டு மீண்டும் நீவிவிடுவதைத் தொடர்ந்தாள்.
சொன்னதைப் போலவே, “ஜோரா வந்திருக்குது. டேஸ்ட் பாருங்க” என்ற வத்சன் தன் சித்தியிடம் கொண்டு வந்து கொடுத்தான். அவர் கைகளில் புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்க, அவனே கேசரியை ஸ்பூனில் எடுத்து அவருக்கு ஊட்டிவிட்டான்.
அதைப் பார்த்தவாறே கீழே இறங்கி வந்த மித்ரனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நன்றாக இருக்கிறது என்பதைப் போல் சிரித்து அவர் தலையை அசைக்க, “நான் செய்யறது எல்லாமே தேவாமிர்தமா இருக்கும்னு தர்ஷினிகிட்டே எடுத்துச் சொல்லுங்க. இந்தா தர்ஷ் நீயும் டேஸ்ட் பாரு” எனத் திவ்யதர்ஷினியின் பக்கம் திரும்பி அவளின் முன் பைனாப்பிள் கேசரியை நீட்டினான்.
அவள் கைகளில் மருந்தை வைத்துக் கொண்டு எப்படிச் சாப்பிடுவது என்பதைப் போல தோளைக் குலுக்கி, “இருங்க முடிச்சுட்டு, கையைக் கழுவிட்டு வரேன்” என்றாள்.
“ஒன்னும் பிரச்சனை இல்ல. வாயைத் திற” என மற்றொரு கரண்டியில் கேசரியை எடுத்து, ‘ஆ’ என்றான் வத்சன். திவ்யதர்ஷினியும் எதுவும் யோசிக்காமல் ஆவென வாயைத் திறக்க அந்த ஸ்பூனை வைத்து அவளின் வாய்க்குள் பைனாப்பிள் கேசரியைப் போட்டான்.
அதைப் பார்த்த மித்ரன் அப்படியே சிலை போல் நின்றுவிட்டான். உள்ளுக்குள் திகுதிகுவென்று தீ பற்றிக் கொண்டு எரிந்தது. என்னவோ அவன் உடைமையை யாரோ பறித்துக் கொண்டதை போல் உள்ளம் காந்தியது.
கூடவே வெப்பமானியில் விர்ரென்று ஏறும் பாதரசத்தைப் போல் அவன் கோபம் மேலேறியது.
திவ்யதர்ஷினி சாப்பிட்டுவிட்டு, “பராவாயில்லை… சும்மா ஒன்னும் வாயில் வடை சுடலை நீங்க. உண்மையிலேயே நல்லாயிருக்கு” எனப் பாராட்டு பத்திரம் வாசித்ததும் தன் சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டான் வத்சன்.
“இப்போதாவது என் அருமையைப் புரிஞ்சிக்கோ” என அவள் தலையை தட்டினான் வத்சன்.
மித்திரனுக்கு இவை எதுவும் சகிக்கவில்லை. வரும் ஆத்திரத்துக்கு வத்சனை இரண்டு குத்து குத்த வேண்டும் போலிருந்தது.
“போய் எடுத்து வைக்கிறேன். சித்தி வாங்க. நீ போய்க் கை கழுவிட்டு வா தர்ஷ்” என அவளிடம் சொல்லிவிட்டுத் தன் சித்தியை எழுப்பி தன்னோடு அழைத்துச் சென்றான்.
திவ்யதர்ஷினியும் கையிலிருந்த மருந்தை கழுவுவதற்கு அருகேயிருந்த குளியலறை நோக்கிச் சென்றாள். குளியலறைக்குள் அவள் நுழைந்த அடுத்த நிமிடம் யாரோ அவளைப் பின் தொடர்ந்து நுழையும் அரவம் கேட்டது.
யார் வருகிறார்கள் என அவள் திரும்பிப் பார்த்து அதிர்ந்து போனாள். மித்ரன் உள்ளே நுழைந்து குளியலறைக் கதவைத் தாளிட்டான்.
எங்கே அவன் தன்னை கவனிக்கவில்லையோ என்ற எண்ணத்தில், “சார்… நான் உள்ளே இருக்கேன்” என உளறினாள் திவ்யதர்ஷினி.
அவன் எதுவும் சொல்லாமல் அவளை இழுத்துப் பிடித்துத் திருப்பினான். அவள் முகத்தைக் கூர்ந்து கவனித்தவாறே, “நான் உனக்கு சார். அவன் மட்டும் வத்சனா? எத்தனை தடவை மித்ரன்னு கூப்பிடச் சொன்னேன். ஏதாவது தேவைன்னா மட்டும் மித்ரன். இல்லைன்னா சார் ” எனக் கடுகடுவென்று கேட்டான்.

